கருணாநிதியின் இயற்கையான குரூர குணம் அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2010 15:59
'தானும் செய்யார் பிறரையும் செய்ய விடார்' என்பது ஆன்றோர் வாக்கு. இதற்கு முழுமையான எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் முதலமைச்சர் கருணாநிதி ஆவார்.
ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் அவர்களுக்கு உதவியாக எதுவும் செய்வதற்கு இவர் துணிவதில்லை. வேறு யாரானும் செய்ய முன்வந்தாலும் அதை எப்படியாவது தடுப்பதற்கு முழுமுயற்சி செய்வார்.
இலங்கையின் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர்கள் இந்தியா வந்து பிரதமரையும் மற்றவர்களையும் சந்திப்பதற்குப் பெருமுயற்சி செய்தார்கள். 2006ஆம் ஆண்டில் இதற்கான முயற்சி நடைபெற்றபோது முதலில் அவர்கள் பிரதமரைச் சந்திக்க உதவும்படி தமிழக முதல்வர் கருணாநிதிக்கு வேண்டுகோள் கடிதம் எழுதி அனுப்பினார்கள். ஆனால் அவரிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அவரை நேரில் சந்தித்துப் பேசினால் ஒருவேளை ஏற்பாடு செய்துதரக்கூடும் என்ற நம்பிக்கையில் சென்னைக்கு வந்து முதல்வரைச் சந்திக்க பல முயற்சிகள் செய்தார்கள். எந்த முயற்சிகளுக்கும் பயனில்லை.
இதற்கிடையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் டில்லி சென்று பிரதமரிடம் முறையிட்டார். சிங்கள அதிபரும் பிரதமரும் மற்ற அதிகாரிகளும் நினைத்தபோதெல்லாம் தில்லி வந்து இந்தியப் பிரதமரைச் சந்திக்க முடிகிறது. ஆனால் இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாண்டு காலமாக எவ்வளவோ முயற்சி செய்தும் சந்திக்க முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி சந்திப்புக்கு நேரம் ஒதுக்கும்படி வேண்டிக்கொண்டார். அவருடைய முயற்சியின் விளைவாக பிரதமர் மன்மோகன்சிங் ஈழ நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க ஒப்புக்கொண்டார்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவுக்குச் செய்தி தெரிவிக்கப்பட்டு அவர்களும் புறப்பட்டு டில்லி வந்தார்கள். 1990ஆம் ஆண்டுக்குப் பிறகு 16 ஆண்டுகாலமாக ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளைச் சந்திக்க மறுத்துவந்த இந்தியப் பிரதமர் இறுதியாக ஒப்புக்கொண்டது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது.
பொறுப்பாரா கருணாநிதி? தன்னை மீறி இவர்கள் செல்வதும் அங்கு பிரதமரைச் சந்திக்க இருப்பதும் கண்டு எரிச்சலடைந்தார். அதுவும் வைகோவின் முயற்சியினால் இச்சந்திப்பு நடைபெறுவது அவருக்குக் கொதிப்புணர்வை ஏற்படுத்திற்று. டில்லியுடன் தொடர்புகொண்டு அவர் பேசியதின் விளைவாக பிரதமர் சந்திப்பு இரத்து செய்யப்பட்டது. ஆவலுடன் டில்லி சென்ற ஈழத்தமிழர் பிரதிநிதிகள் சில அதிகாரிகளை மட்டுமே சந்தித்துவிட்டு திரும்ப நேர்ந்தது.
இந்நிகழ்ச்சி தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே மட்டுமல்ல, உலகத்தமிழரிடையே பெரும் எதிர்ப்பை உருவாக்கிவிட்டது. முதல்வர் கருணாநிதிக்கு உலகெங்குமிருந்து மிகக்கடுமையான கண்டன கடிதங்கள் வந்துகுவிந்தன. இதைக் கண்ட அவர் மிரண்டார். அதை எப்படி சரிசெய்வது எனத் திண்டாடினார்.
அதற்குள் தில்லி சென்ற தமிழ்ப் பிரதிநிதிகள் தங்கள் நாட்டிற்குத் திரும்பிச் சென்றுவிட்டனர். அவர்களுக்கு செய்தி அனுப்பி மீண்டும் வரவழைப்பதற்கு படாதபாடு பட்டார். தமிழகமுதல்வரின் அழைப்பை ஏற்க மறுப்பது பண்பாடு அல்ல என்ற காரணத்தினால் அவர்கள் திரும்ப வந்தனர். வந்தவர்களிடம் அவர்களின் முந்திய வருகைக் குறித்து தனக்கு ஒன்றுமே தெரியாது எனப் பசப்பினார். அவருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் எதுவுமே கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
தமிழ்ப் பிரதிநிதிகள் மனதிற்குள் சிரித்துக்கொண்டனர். ஏனென்றால் முதல்வருக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோள் கடிதங்களை ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே நேரில் கொண்டுபோய் முதலமைச்சரின் செயலாளரிடம் கொடுத்தார். மேலும் மின்னஞ்சல் மூலமும் தொலைநகலி மூலமும் அவருக்கு அந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன. எனவே எந்தக் கடிதமும் கிடைக்கவில்லை என்று அவர் சொல்வதில் கொஞ்சமும் உண்மையில்லை என்பது அவர்களுக்கு புரிந்தாலும் நனிநாகரிகம் கருதி வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
பிறகு பிரதமரைச் சந்திக்க இவரே ஏற்பாடு செய்து டில்லிக்கு அனுப்பிவைத்தார் என்பது சுவையான தனிக்கதை.
யாழ் உதவிப் பொருட்கள் அனுப்பத் தடை
யாழ்ப்பாண மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்பாமல் சிங்கள அரசு தடை செய்தபோது, பட்டினியால் வாடிய அந்த மக்களுக்கு உதவுவதற்காகத் தமிழகத்தில் உணவு, மருந்து மற்றும் பொருட்கள் மக்களிடம் திரட்டப்பட்டன. இரண்டு மாத காலத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்களை மக்கள் அள்ளி அள்ளிக்கொடுத்தார்கள் இந்தப் பொருட்களை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் யாழ் மக்களுக்கு அனுப்பிவைக்க முடிவுசெய்தோம். செஞ்சிலுவைச் சங்கமும் அவ்வாறே செய்வதற்கு முன்வந்தது. ஆனால் வெளிநாடு ஒன்றிற்கு அனுப்ப வேண்டியிருப்பதால் இந்திய அரசின் அனுமதியைப் பெறவேண்டியிருந்தது. செஞ்சிலுவைச் சங்கமும் இந்திய அரசுக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பிற்று. பல நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்பிய பிறகும் பதில் எதுவும் இல்லை.
இதற்குப் பிறகு தமிழக முதல்வருக்கும் இந்திய பிரதமருக்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் வேண்டுகோள் தந்திகள் அனுப்பப்பட்டன. பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. எதற்கும் பயனில்லை.
எனவே இராமேசுவரம், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து இப்பொருட்களைப் படகுகள் மூலம் அனுப்புவதற்கான போராட்டமும் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தையும் தடைசெய்து, போராட்ட வீரர்களையும் கருணாநிதி கைதுசெய்தார்.
எல்லா வகையான முயற்சிகளுக்கும் எவ்விதப் பயனும் இல்லாத நிலைமையில் இதற்காக சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை நான் மேற்கொண்டேன். அனைத்துக் கட்சித் தலைவர்களும் மக்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாகக் கிளர்ந்தெழுந்தார்கள். இதற்குப் பின்னால் முதல்வர் கருணாநிதி மறுசிந்தனைச் செய்யத் தொடங்கினார். அவசரஅவசரமாக 13#09#2007 அன்று எனக்கு அவர் கைப்பட வேண்டுகோள் ஒன்றை எழுதி உயர்ப்போலிசு அதிகாரிகள் மூலம் கொடுத்தனுப்பினார். அக்கடிதத்தில் இந்தப் பொருட்களை யாழ் அனுப்புவதற்கான முயற்சிகளில் தாமும் ஈடுபடுவதாகவும் உண்ணாவிரதத்தை நிறுத்துமாறும் வேண்டிக்கொண்டார். மறுநாள் மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் உண்ணாவிரதப் பந்தலில் என்னை நேரில் சந்தித்து முதலமைச்சரின் உறுதிமொழியை மீண்டும் கூறி போராட்டத்தை நிறுத்தும்படி வேண்டிக்கொண்டார். அதற்கிணங்க நான்கு நாள்கள் கழித்து உண்ணாவிரதப் போராட்டத்தை நான் நிறுத்தினேன். அதற்குப் பிறகு இப்பொருட்களை அனுப்புவது குறித்துப் பேசுவதற்காக முதலமைச்சரைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டு நான் எழுதிய கடிதத்திற்கு இன்றுவரை எந்தப் பதிலையும் அவர் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டினிக் கிடக்கும் யாழ் மக்களுக்கு அவரும் உதவ முன்வரவில்லை. நாங்கள் செய்த உதவியையும் அவர் தடுத்தார். இது அவரது இயற்கையான குரூரமான குணமாகும்.
தமிழக மக்கள் தங்களின் சகோதர ஈழத்தமிழர்களின் பசிப்பிணியைப் போக்க அன்போடு திரட்டித் தந்த ஒருகோடி ரூபாய்க்கும் அதிகமான பெருமானமுள்ள உணவுப் பொருட்களும் மருந்துகளும் வீணாகிவிட்டன. இதற்கு முழுமையானப் பொறுப்பாளி கருணாநிதியே ஆவார்.
அன்னை பார்வதிக்கு இழைக்கப்பட்ட அநீதி
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்றெடுத்த அன்னை திருமதி பார்வதி அம்மையார் தன் கணவரை இழந்து சிங்கள இராணுவச் சிறையில் பலமாத காலம் கொடுமைகளுக்கு ஆளாகிய உடல் நலிவுற்ற நிலையில் தமிழகம் வந்து சிசிச்சைப் பெற அவரை அழைத்தோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டு கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி விமானத்தில் சென்னை வந்தபோது அதே விமானத்தில் அவர் திருப்பியனுப்பப்பட்ட கொடுமை நிகழ்ந்தது. விமான நிலையத்தில் அவரை வரவேற்று அழைக்கச் சென்ற சகோதரர் வைகோ அவர்களையும் என்னையும் விமான நிலையத்திற்குள்ளேயே அனுமதிக்க கருணாநிதியின் போலிசு படை மறுத்தது. பெரும் போராட்டத்திற்கிடையேதான் நாங்கள் உள்ளே செல்ல முடிந்தது.
எண்பது வயதைத் தாண்டிய அந்த மூதாட்டியை இரக்கமேயில்லாமல் திருப்பியனுப்பிய அரக்கத்தனமான செயலுக்குப் பொறுப்பாளி யார்? இந்தக் கேள்வியை உலகத் தமிழர்கள் எழுப்பிக் கொந்தளித்தார்கள். அதைக் கண்டவுடன் வழக்கம்போல கருணாநிதி பல்டி அடித்தார். மாறி மாறி முன்னுக்குப்பின் முரணாக பொறுந்தாத காரணங்களை கூறினார்.
விடிந்து பத்திரிகைகளைப் பார்த்தபிறகே தனக்கு செய்தி தெரியவந்தது என்று சட்டமன்றத்திலேயே கூசாமல் பொய் சொன்னார்.
விடிந்துதான் இவருக்குச் செய்தி தெரியவந்தது என்று சொன்னால் இரவு 10 மணிக்கு எங்களை விமான நிலையத்தில் அனுமதிக்க இவரது காவல்படை மறுத்தது ஏன்? இவரது உத்தரவு இல்லாமல் அந்த உயர் போலிஸ் அதிகாரிகள் எங்களைத் தடுத்திருக்க மாட்டார்கள். பொய்யைச் சொன்னாலும் பொறுத்தமாக சொல்லவேண்டும்.
2003ஆம் ஆண்டில் செல்வி செயலலிதா முதலமைச்சராக இருந்த போது பிரபாகரனின் பெற்றோர்களை இந்தியாவிற்குள் மீண்டும் அனுமதிக்க கூடாதென அவர் எழுதிய கடிதத்தின் விளைவாகக் கருப்புப் பட்டியலில் பார்வதி அம்மையார் பெயர் சேர்க்கப்பட்டுவிட்டது. ஆகவேதான் அவர் திருப்பியனுப்பப்பட்டார் என்று இன்னொரு காரணத்தையும் கூறினார்.
இது உண்மை என்று சொன்னால் இந்திய அரசின் கருப்புப் பட்டியல் உலகமுழுவதும் இருக்கும் இந்திய தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுவிடும். மலேசியாவில் உள்ள இந்தியத் தூதர் எப்படி பார்வதி அம்மையாருக்கு ஆறு மாதத்திற்கு விசா கொடுத்தார். அவர் தவறாக விசா கொடுத்திருந்தால். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ஆக இந்த இரண்டாவது பொய்யும் அம்பலமாகிவிட்டது.
அந்த அம்மையார் வருகிற விவரம் தெரிந்தபிறகு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களுக்கு முதலமைச்சர் மூலம் செய்தி தெரிவிக்கப்பட்டு அவர் ஆணையின்படியே பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டார் என்பதுதான் உண்மை.
கருணாநிதியின் இந்த அடாத செயல் உலகெங்கும் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்ட கொதிப்புணர்வைக் கண்டபிறகு வழக்கம் போல பல்டி அடித்தார்.
பார்வதி அம்மையார் மீண்டும் தமிழகம் வரவிரும்பினால் தான் இந்திய அரசுக்கு கடிதம் எழுதி அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறுகிறார்.
பார்வதி அம்மையார் என்ன பந்தா? இங்கிருந்து மலேசியாவிற்கும் மீண்டும் இங்குமாக உதைத்து விளையாடுவதற்கு?
உலகத் தமிழர்களால் மதித்துப் போற்றப்படும் ஒரு தாயை தமிழ் மண்ணில் அடியெடுத்து நுழைய மறுத்ததோடு ஈவு இரக்கமில்லாமல் அந்த மூதாட்டியை ஓய்வெடுக்கக்கூட விடாமல் அதே விமானத்தில் திருப்பி அனுப்பிய கருணாநிதியையும் இந்திய அரசையும் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்கப்போவதில்லை.
எந்தப் பிரச்சினையாய் இருந்தாலும் தன்னலத்துடனும் தனது பதவியைக் காக்கும் நோக்கத்துடனும் மட்டுமே செயல்பட்டு எதிராகச் செயல்படுவது பிறகு அதற்கு எதிர்ப்புக் கிளம்பியவுடன் பல்டி அடித்துப் பசப்புவது இது அவருக்கு ஆகிவந்த கலை. தமிழர்கள் அவரைப் பற்றி நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள். அவரது ஏமாற்று நாடகங்கள் ஒருபோதும் பலிக்கப்போவதில்லை.
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
உலகத்தார் இகழாத நெறிகளை ஆராய்ந்து செயலாற்ற வேண்டும். ஒரு தலைவனின் தகைமைக்குப் பொருந்தாத செயலை உலகம் ஒப்புக்கொள்ளாது என்றார் வள்ளுவப் பெருந்தகை.
குறளோவியம் தீட்டியவருக்கு இந்த உண்மை புரியாமல் போனது ஏன்?