தமிழ் ஆராய்ச்சி மாநாடா? வெற்று ஆரவார மாநாடா? அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 01 ஜூன் 2010 16:17
1964ஆம் ஆண்டு இந்திய தலைநகரான தில்லியில் அகில உலக கீழ்த்திசை ஆய்வு மாநாடு நடைபெற்றது. (World Conference of Orientalists). இம்மாநாட்டில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். எனவே, உலகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த தமிழறிஞர்களை ஒன்றுகூட்டி தமிழுக்கு என உலக அமைப்பு ஒன்று உருவாக்குவது பற்றி முனைவர் தனிநாயகம் அடிகளாரும் முனைவர் வ.அய்.சுப்பிரமணியமும் கலந்தாலோசித்தனர். எனவே, அவர்கள் இருவர் பேரிலும் அழைப்பு விடுக்கப்பட்டு ஒரு கூட்டம் 7.12.1964 பகல் 12 மணிக்குக் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்திற்கு மூத்த தமிழறிஞர் பேரா. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்கள் தலைமை தாங்கினார். உலகளாவிய தமிழ் ஆய்வு மையம் ஒன்றினைத் தோற்றுவிக்க வேண்டிய தேவையைத் தனிநாயகம் அடிகள் விளக்கிக் கூறினார். உலகத் தமிழறிஞர்கள் பலரும் இக்கருத்தை வரவேற்றுப் பேராதரவு தந்தனர்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அமைப்பது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மன்றத் தலைவராக பேரா. ழான் ஃபிலியோசாவை, பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் முன்மொழிந்த போது அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். பேராசிரியர் தாமஸ் பரோ, பேராசிரியர் க்யூடன், பேராசிரியர் தெ..பொ.மீனாட்சி சுந்தரனார், பேராசிரியர் மு.வரதராசனார் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், பேராசிரியர் கமில் சுவலபில், பேராசிரியர் சேவியர் தனிநாயகம் முதலியோர் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் நிறுவப்பட்ட பிறகு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நடத்தி இருக்கிறது.
1966ஆம் ஆண்டு ஏப்ரல் 16 முதல் 23 வரை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரிலும், 1968 சனவரி 3 முதல் 10 வரை தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும், 1970ஆம் ஆண்டு சூலை 15 முதல் 18 வரை பிரான்சு தலைநகரான பாரிசிலும், 1974ஆம் ஆண்டு சனவரி 3 முதல் 9 வரை இலங்கையில் யாழ்ப்பாணத்திலும், 1981ஆம் ஆண்டு சனவரி 4 முதல் 10 வரை தமிழகத்தில் மதுரை மாநகரிலும், 1987ஆம் ஆண்டு நவம்பர் 15 முதல் 19 வரை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரிலும், 1989ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் 9 வரை மொரீசியஸ் நாட்டிலும், 1995ஆம் ஆண்டு சனவரி 1 முதல் 5 வரை தமிழகத்தில் தஞ்சையிலும் உலகத் தமிழராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றன.
இந்த 8 மாநாடுகளில் மலேசியா, பிரான்சு, இலங்கை, மொரீசியஸ் போன்ற வெளிநாடுகளில் நடைபெற்ற மாநாடுகள் உண்மையான உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளாக நடைபெற்றன. ஆனால் 1968, 1981, 1995 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, தஞ்சை ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் அரசியல் ஆரவார மாநாடுகளாக அமைந்துவிட்டன.
தமிழ் ஆராய்ச்சியும், வளர்ச்சியும் வெற்று ஆரவாரங்களால் வளர்ந்துவிடாது. தமிழறிஞர்களின் ஆய்வுகளுக்கு ஊக்கந் தருவதின் மூலமும், அந்த ஆய்வுகளை நூல்களாக்கிப் பரப்புவதின் மூலமும் மட்டுமே தமிழ் உண்மையாக வளர்ந்தோங்கும்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அமைக்கப்பட்ட நோக்கம் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை நாம் எண்ணிப் பார்த்தால் முழுமையான மன நிறைவு கொள்ள முடியாது.
மலேசியா, பிரான்சு, இலங்கை, மொரீசியஸ் போன்ற வெளிநாடுகளில் இந்த மாநாடு நடைபெற்ற போது தமிழ் ஆராய்ச்சித் துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, தஞ்சை ஆகிய இடங்களில் இந்த மாநாடு நடைபெற்ற போது ஏற்படவில்லை. வெளிநாடுகளில் நடைபெற்ற மாநாடுகளுக்கு அந்தந்த நாட்டு அரசுகள் நிதியுதவி மற்றும் வசதிகளைச் செய்து கொடுத்ததோடு நின்றுவிட்டன. மாநாட்டுப் பணிகளில் குறுக்கிடவோ திசை திருப்பவோ ஒருபோதும் முயற்சி செய்யவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் இந்த மாநாடுகள் நடைபெற்ற போது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் நோக்கங்களைக் குறித்துக் கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் தங்களின் அரசியல் நோக்கத்திற்கு ஏற்ப இந்த மாநாடுகளைப் பெரும் செலவில் வெறும் கேளிக்கை மாநாடுகளாக நடத்த ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் முற்பட்டது வேதனைக்கு உரிய ஒன்றாகும்.
கருணாநிதியின் புறக்கணிப்பு
1968ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா தலைமையில் இயங்கிய அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலும், 1970ஆம் ஆண்டு முதலமைச்சர் பொறுப்பில் இருந்த போது பாரிசில் நடைபெற்ற மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டிலும் திரு. கருணாநிதி அவர்கள் கலந்துகொண்டார். அதற்குப் பிறகு 1981ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலும், 1995ஆம் ஆண்டு செல்வி செயலலிதா முதலமைச்சராக இருந்த போது தஞ்சையில் நடைபெற்ற எட்டாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலும் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டும் திரு. கருணாநிதி அவர்கள் பங்கெடுக்காமல் புறக்கணித்தார்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மாநாடுகள் 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படவில்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்த மாநாடுகள் மீண்டும் கூட்டப்படுவதில் அக்கறை செலுத்தாத தமிழக முதல்வர் திரு.மு.கருணாநிதி அவர்கள் திடீரென இந்த மாநாட்டை நடத்துவதில் முனைப்புக் காட்டினார்.
பின்னணி என்ன?
முறைப்படி உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத் தலைவருடன் தொடர்பு கொண்டு அல்லது அவரை அழைத்துப் பேசி அவர் மூலம் அம்மன்றத்தின் நிர்வாகிகளின் ஒப்புதல் பெற்று இந்த மாநாட்டை நடத்த முயன்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. 18.9.2009 அன்று காலையில் வெளியான "தினமணி' இதழில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 15 ஆண்டுகாலமாக நடைபெறாததைக் குறித்தும், நடைபெறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் தலையங்கம் தீட்டப்பட்டிருந்தது. அன்று காலை 10 மணிக்கு, சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியாளர் மாநாட்டில் உரையாற்றும் போது தமிழக முதல்வர் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்துவது பற்றிய திட்டத்தைத் திடீரென அறிவித்தார். இதற்கு "தினமணி'யில் வெளியான தலையங்கமே காரணமாகும். மாநாட்டை நடத்தும் பொறுப்பினை மாவட்ட ஆட்சியாளரிடமும் பிற அதிகாரிகளிடமும் அவர் ஒப்படைத்தார். இது எவ்வளவு முறைகேடு என்பதை அவர் உணரவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு உலகத் தமிழ் அறிஞர்களால் நடத்தப்படும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்திற்குத் தலைவரும் பிற நிர்வாகிகளும் ஆட்சிக் குழுவும் உள்ளனர். ஒரு ஆய்வு மாநாட்டை நடத்த வேண்டுமென்றால் அதில் உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய தமிழ் அறிஞர்கள் பங்கு பெறவேண்டும். அவர்கள் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்குப் போதுமான அவகாசம் அளிக்கப்பட வேண்டும். அந்த ஆய்வுக் கட்டுரைகளை ஆராய்ந்து, தொகுத்து மாநாட்டுக்கு முன்னதாக அவற்றை நூலாக வெளியிடுவதற்குப் போதிய கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும். வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய தமிழ் அறிஞர்கள் வருவதற்குரிய முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் நமது முதலமைச்சர் கொஞ்சமும் கவலைப்படவில்லை. அதிகாரிகளையும் தனது கட்சித் தோழர்களையும் வைத்துக் கொண்டு இந்த மாநாட்டை நடத்துவதில் அவர் முனைந்தார்.
முதலமைச்சரின் இந்த அவசரத்திற்கும் பதைபதைப்பிற்கும் என்ன காரணம்? உலகத் தமிழ் ஆராய்ச்சி வேலைகள் 15 ஆண்டுகளாகத் தேங்கிக் கிடப்பதைக் கண்டு பதைப்பா? அது உண்மையானால் இந்த 15 ஆண்டு காலத்தில் 1996 முதல் 2001 வரை அவர் முதலமைச்சராக இருந்திருக்கிறார். மீண்டும் 2006ஆம் ஆண்டு முதலமைச்சர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். சென்ற தடவை முதலமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில் இது குறித்து அவர் சிறிதளவும் கவலைப்படவில்லை. 2006ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு 3 ஆண்டுகளாக இதில் அவர் கவனம் செலுத்தவில்லை. திடீரென 2010ஆம் ஆண்டில் அவருக்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை நடத்த வேண்டும் என்ற ஞானம் பிறந்திருக்கிறது.
களங்கத்தை மறைக்க முயற்சி
உலகத் தமிழ் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காகவோ நெறிப்படுத்துவதற்காகவோ இந்த மாநாட்டை நடத்த அவர் முன்வரவில்லை. ஈழத் தமிழரின் பிரச்சனையில் தான் செய்துவிட்ட மன்னிக்க முடியாத மாபெரும் தவறை மூடி மறைப்பதற்கு அவர் முற்படுகிறார். சிங்கள இராணுவ வெறியர்களால் ஓர் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் பதறப் பதறப் படுகொலை செய்யப்பட்ட போது அதைத் தடுத்து நிறுத்தி அந்த மக்களைக் காப்பாற்ற இவர் முற்றிலுமாகத் தவறிவிட்டார். தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள இராணுவ வெறியர்களுக்கு இந்திய அரசு ஆயுத உதவி உட்பட எல்லா உதவிகளையும் செய்தபோது அதை ஏன் என்று தட்டிக் கேட்க இவர் முன்வரவில்லை. இதன் விளைவாக உலகமெல்லாம் இருக்கக்கூடிய தமிழ் மக்கள் நடுவில் ஏற்பட்ட கொதிப்புணர்வையும் தன் மீது படிந்து விட்ட மாறாத களங்கத்தையும் துடைப்பதற்காக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைப் பயன்படுத்திக் கொள்ள இவர் திட்டமிட்டார்.
ஆனால் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராக இருக்கக்கூடிய சப்பானிய தமிழ் அறிஞரான நெபுரு கரோசீமா இவரின் இந்த சூழ்ச்சிக்கு உடன்பட சம்மதிக்கவில்லை. வெவ்வேறு வகையில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதிலும் கூட அவர் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தன்மதிப்பை நிலைநிறுத்துவதில் உறுதியாக இருந்தார். ""எங்களைக் கேட்காமல் மாநாட்டை நடத்தப்போவதாக அறிவித்தது முதல் தவறு. மாநாடு நடத்துவதாக இருந்தால் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு அவகாசம் வேண்டும். அப்போதுதான் உலகளாவிய தமிழறிஞர்கள் தங்களின் ஆய்வுக்கட்டுரைகளை உருவாக்கமுடியும். இவற்றை எல்லாம் கொஞ்சமும் யோசித்துப் பாராமல் தான் நினைத்தபடியே எதையும் செய்ய நினைக்கும் முதலமைச்சரின் கைப்பாவையாக ஒருபோதும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் இயங்கமுடியாது'' என அவர் உறுதிபடத் தெரிவித்தார். வேண்டுமானால் 2011ஆம் ஆண்டில் இந்த மாநாட்டை நடத்தலாம் என்று அவர் சொன்னார்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற மாநாட்டினை நடத்த வேண்டும் என்பது நமது முதலமைச்சரின் உண்மையான நோக்கமாக இருந்தால் அம்மன்றத்தின் தலைவர் தெரிவித்த இந்த யோசனையை ஏற்று 2011ஆம் ஆண்டில் மாநாட்டை நடத்த முன்வந்திருக்க வேண்டும். இவர் நோக்கம் அது அல்லவே. 2011ஆம் ஆண்டில் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வந்து விடும். அப்போது நடத்த முடியாது என்ற போலியான காரணத்தை அவர் கூறினார். சட்டமன்றத் தேர்தல் வருகிறது என்று சொன்னால் அதற்குப் பிறகு இந்த மாநாட்டை வைத்துக் கொள்ளலாமல்லவா?
உடனடியாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாக இந்த மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்து விட்டார். தன்னல நோக்குடன் இவர் நடத்த முற்பட்டிருக்கிற உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தமிழ் கூறும் நல்லுலகின் பெரும் கண்டனத்திற்கு உரியதாகியிருக்கிறது. உலகத் தமிழ் ஆய்வில் இவருக்குக் கவலை இல்லை என்பது மட்டுமல்ல பல்வேறு நாட்டு தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி ஏறத்தாழ 50 ஆண்டு காலத்திற்கு மேற்பட்ட அயராத உழைப்பின் மூலம் உருவாக்கியுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தைப் புறந்தள்ளுவதற்கும் பிளவுபடுத்துவதற்கும் இவர் துணிந்துவிட்டார். இவரது இந்தப் போக்கு தமிழ் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையான போக்காகும். ஏறத்தாழ 300 கோடி ரூபாய் செலவில் இந்த மாநாட்டை நடத்துவதில் அவர் முனைந்திருக்கிறார். தமிழ்நாடு அரசு அதிகாரிகளையும் தனது கட்சி நிர்வாகிகளையும் வைத்துக் கொண்டு இந்த மாநாட்டை நடத்த அவர் திட்டமிட்டிருக்கிறார்.
மத்திய அரசின் நிதியுதவியுடன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. அந்த நிறுவனத்திடமாவது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாநாட்டுப் பணிகளில் அந்த நிறுவனம் அறவே புறக்கணிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது.
குறைந்தபட்சம் தமிழ்நாட்டிலுள்ள தமிழ் அறிஞர்களை ஒன்றுகூட்டி அவர்களைக் கொண்டு மாநாட்டுக் குழு ஒன்றினை அமைத்து அக்குழுவின் மூலம் மாநாட்டை நடத்தும் முறையான செயலைக் கூட அவர் செய்ய முன்வரவில்லை. காரணம் தமிழ்நாட்டு அறிஞர்கள் மீதும் இவருக்கு முழுமையான நம்பிக்கையில்லை. அதிகாரத்தையும், பணத்தையும் மட்டுமே நம்பிச் செயல்படுகிறார்.
தங்கள் வளர்ச்சிக்கு ஏணியாக தமிழை இரு கழகங்களும் பயன்படுத்திக்கொண்டனவே தவிர, தமிழ் வளர்ச்சிக்கு ஏணியாக அவர்கள் ஒருபோதும் செயல்படவில்லை. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் மூலம் உலகத் தமிழ் ஆராய்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்படுவதற்கும் முறையாகச் செயல்படுவதற்கும் தமிழக அரசு துணை நின்றிருக்க வேண்டும். தமிழக அரசு துணை நின்றால் இந்திய அரசு மற்றும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் அரசுகளும் யுனெஸ்கோ போன்ற அமைப்புகளும் பேருதவி புரியும். மாறி மாறி இரு கழகங்களின் பிடியில் தமிழக ஆட்சி இருக்கும்வரை இத்தகைய செயல்பாட்டினை ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது. எனவே உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி மேற்கண்ட அமைப்புகள் முறையாக இயங்குவதற்குரிய வழிவகைகளைக் காணவேண்டும். இந்த அடிப்படையில் கீழ்க்கண்ட யோசனைகளை உலகத் தமிழ்ச் சமுதாயத்திற்கு முன் வைக்கிறேன்.
1. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் இதுவரை எட்டு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடத்தி தமிழ் ஆராய்ச்சித் துறையில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைப்புக்கு இதுவரை நிரந்தரமான தலைமை அலுவலகம் எதுவும் இல்லை. இந்த அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் எந்த நாட்டைச் சேர்ந்தவரோ அந்த நாட்டில் அவருடைய அலுவலகமே இந்த அமைப்பின் அலுவலகமாக இருந்து வருகிறது. இதுகூடாது. இந்த அமைப்பின் வளர்ச்சிக்கு இது உதவி செய்யாது. எனவே உலகத் தமிழராய்ச்சி மன்றத்திற்கு நிரந்தரமான தலைமை அலுவலகம் ஒன்று அமைக்கப்படவேண்டும். இந்த அலுவலகத்தில் நிரந்தரமான அலுவலர்களும் நியமிக்கப்படவேண்டும்.
2. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் திட்டமான உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட்ட அடிப்படை நோக்கங்களுக்கு ஏற்ப செயற்பட முடியவில்லை. அதன் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டவர்களும் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை.
1974ஆம் ஆண்டில் சென்னையில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு விட்டது. இதன் முதல் இயக்குநராக தனிநாயகம் அடிகளார் நியமிக்கப்படுவார் என உலகத் தமிழ் அறிஞர்கள் எதிர்பார்த்தார்கள். ஏனெனில் இந்த நிறுவனம் அவரின் கனவுத் திட்டம் ஆகும். அவருடைய கடும் முயற்சியின் விளைவாகத் தான் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றமும் யுனெஸ்கோவும் இதற்கு ஆதரவு அளித்தன. அவ்வாறு அவர் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தால் நிறுவனத்திற்குத் தேவையான உலகளாவிய செல்வாக்கை பெற்றுத் தந்திருப்பார். ஆனால் தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலை அதற்கு ஏற்றவகையில் இருக்கவில்லை. தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளே உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் தமிழக அரசு ஈழத்தமிழரான அவரை நியமிக்க முன்வரவில்லை.
இன்றைக்குச் சீர்கெட்டுக் கிடக்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிலை குறித்து 19#05#10 அன்று வெளியான தினமணி நாளிதழ் விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. இந்நிலைமாற வேண்டுமானால் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இந்த நிறுவனம் கொண்டு வரப்பட வேண்டும். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில் நியமிக்கப்படுபவர்களும் யுனெஸ்கோ, இந்தியா அரசு, தமிழக அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகளும், மத்தியப் பல்கலைக் கழகங்கள், தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த தமிழறிஞர்களின் பிரதிநிதிகளும் மற்றும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ் போன்ற தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் தமிழ் அறிஞர்களும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களின் தமிழ் அறிஞர்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆட்சிக் குழுவில் இடம் பெறவேண்டும். அவர்களின் முழுமையான கட்டுப்பாட்டில் தான் இந்த நிறுவனம் செயல்பட வேண்டும். அப்போது தான் உலகத் தமிழ் ஆராய்ச்சிப் பணிகளை முறையாக நெறிப்படுத்த முடியும்.
3. தமிழ்ப் பல்கலைக் கழகம்
உலகத் தமிழ் அறிஞர்களின் நீண்ட காலக் கனவுத் திட்டமான தமிழ்ப் பல்கலைக் கழகம் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். காலத்தில் நனவானது. ஆனால் எத்தகைய நோக்கத்திற்காக தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக வேண்டுமென தமிழறிஞர்கள் விரும்பினார்களோ அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. முதல் துணைவேந்தராக முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியம் அவர்கள் இருந்த போது தொலைநோக்குப் பார்வையுடனும் திட்டமிட்டும் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கான உறுதியான அடித்தளத்தை அமைத்தார். தமிழக அரசின் முழுமையான ஒத்துழைப்பின்மை, திட்டங்களை நிறைவேற்றப் போதுமான நிதியின்மை போன்ற காரணங்களினால் அவர் தனது பதவிக் காலம் முடியும் முன்பாகவே பதவி விலகினார். தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்குப் பேரிழப்பாக இது அமைந்தது. ஆனால் அவருக்குப் பின்னால் பதவியேற்றவர்களில் பலர் அவரைப் பின்பற்றி இப்பல்கலைக் கழக வளர்ச்சியில் போதுமான நாட்டம் செலுத்த முடியாத அளவிற்கு அரசியல் குறுக்கீடுகள் இருந்தன.
உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகமாக உருவாக வேண்டிய இப்பல்கலைக் கழகம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகமாகச் சுருங்கிப்போயிற்று. இந்நிலை அடியோடு மாற்றப்படவேண்டும்.
உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகமாக இது செயல்படவேண்டுமானால் முதலில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து இது முழுமையாக விடுவிக்கப்படவேண்டும். உலக நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் அங்கம் வகிக்கும் வகையில் இதன் ஆட்சிக்குழு திருத்தியமைக்கப்படவேண்டும். இப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பதிவாளர் போன்ற அலுவலர்கள் ஆகியோரின் தேர்விலும், நியமனத்திலும் உலகத் தமிழறிஞர்களின் கண்காணிப்பு இருக்க வேண்டும். பிற நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் இப்பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பதவி முதல் பேராசிரியர் பதவி வரை பொறுப்பேற்பதற்கு எவ்விதத் தடையும் இருக்கக்கூடாது. அப்பொழுதுதான் உலகத் தமிழர்களுக்கு உரிமையான பல்கலைக் கழகமாக இது திகழமுடியும். இதற்கான நிதியினை தமிழக அரசு, இந்திய அரசு, மலேசியா#சிங்கப்பூர் #இலங்கை அரசுகள் யுனெஸ்கோ ஆகியவை அளிக்க வேண்டும்.
4. தமிழர் வரலாறு
தமிழ்நாட்டின் வரலாறு, தமிழீழ வரலாறு போன்றவை ஏற்கனவே ஓரளவு தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் வரலாறு இதுவரை எழுதப்படவில்லை. சங்கக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே மேற்கே எகிப்து, கிரேக்கம், ரோமாபுரி வரையிலும் கிழக்கே தென்கிழக்கு ஆசிய நாடுகள் உட்பட சீனா வரையிலும் தமிழர்கள் பரவிச் சென்றுள்ளனர். இந்நாடுகளில் மேலும் விரிவான ஆய்வு நடத்திப் பழந்தமிழர் பற்றிய வரலாற்று உண்மைகளைச் சேகரித்து முழுமையான தமிழர் வரலாறு எழுதப்படவேண்டும். பல நூறு அறிஞர்கள் பல ஆண்டுகள் மிகக்கடுமையாக உழைத்தால் ஒழிய இதைச் செய்ய முடியாது. இப்பணியினை மேற்கொள்ள உலக நாடுகளைச் சேர்ந்த வரலாறு, மொழியியல், அறிஞர்களைக் கொண்ட குழு அமைக்கப்படவேண்டும்.
5. உலகத் தமிழ் இலக்கிய வரலாறு
தொல்காப்பியர் காலம் முதல் இருபதாம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் எழுந்த தமிழ் இலக்கியங்களைப் பற்றிய வரலாறு முறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அதைப் போல சங்கக் காலப் புலவரான ஈழத்துப் பூதந்தேவனார் காலம் முதல் இன்றுவரையிலும் தமிழீழப் பகுதியிலும் இலக்கியங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதைப் போல மலேசியா, தென்னாப்பிரிக்கா போன்ற தமிழர்கள் குடியேறிய நாடுகளிலும் அவர்களாலும் இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன.
உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் உருவாக்கிய இலக்கியங்களைக் குறித்த உலகத் தமிழ் இலக்கிய வரலாறு என்பது இதுவரை தொகுக்கப்படவே இல்லை. அது தொகுக்கப்பட்டால்தான் தமிழ் இலக்கிய வரலாறு முழுமை யடையும். அதற்கான முயற்சி இன்னும் தொடங்கப்படவேயில்லை என்பது கவலையளிக்கும் செய்தியாகும். எனவே உலகத் தமிழ் அறிஞர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு உலகத் தமிழ் இலக்கிய வரலாறு தொகுக்கப்படவேண்டும்.
6. தமிழர் பண்பாட்டு வரலாறு
தமிழர்களுக்கு மிகநெடியதும் ஆழமானதும் பெருமை மிக்கதுமான பண்பாட்டு வரலாறு உண்டு. ஆனால் நமது பண்பாட்டு வரலாறு இதுவரை முறையாக எழுதப்படவேயில்லை. பண்டைக் காலம் முதல் இந்தியாவின் பிறபகுதிகளோடும் கடல் கடந்த அயல் நாடுகளுடனும் தமிழர்கள் கொண்டிருந்த வணிக, சமய மற்றும் படையெடுப்புத் தொடர்புகளின் மூலம் நமது பண்பாடு எந்த அளவுக்கு பிற பண்பாடுகளில் ஊடுருவியது என்பது குறித்தும், பிற பண்பாடுகளின் தாக்கம் நமது பண்பாட்டில் ஏற்பட்டது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்படவேண்டும். சமூக வரலாற்றின் அடிப்படையிலும் அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடனும் தமிழர் பண்பாட்டு வரலாறு உருவாக்கப்படவேண்டும்.
7. எழுத்துச் சீர்திருத்தம்
தொல்காப்பியர் காலம் முதல் காலத்துக்குக் காலம் தமிழ் எழுத்து வடிவங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுவந்துள்ளன. அந்த மாற்றங்களை தமிழர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்தக் கணினி யுகத்தில் தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வருகிறது. எனவே மிக எச்சரிக்கையாகவும், ஆழமாகவும் சிந்தித்து இந்த மாற்றங்களை உருவாக்கவேண்டும். இல்லையென்றால் தமிழுக்கு வேண்டாத சிக்கல்கள் ஏற்பட்டுவிடும். தமிழ் மொழி எவ்வாறு இயற்கையான அமைப்பும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பண்பட்ட வளர்ச்சியும் உடையதோ அப்படியே தமிழ் மொழியின் ஒலி அமைப்பும் வரிவடிவமும் இயற்கையோடு இயைந்த பல்வகையான படிநிலை வளர்ச்சிகளைக் கொண்டதாகும். அவ்வரிவடிவங்களுக்கும், ஒலிவடிவங்களுக்கும் ஆழமான பொருள் உண்டு. இதை உணராது தமிழ் எழுத்து வடிவைச் சிதைப்பது ஏற்கத்தக்கதன்று. எழுத்துச் சீர்திருத்தம் பற்றி தீர்க்கமாக ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக அறிஞர் குழு ஒன்று உருவாக்கப்படவேண்டும். இக்குழுவில் உலகத் தமிழ் அறிஞர்களும் கணினி அறிஞர்களும் இடம் பெறவேண்டும். உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வைகையில் இக்குழுவின் முடிவுகள் அமைய வேண்டும்.
8. இலக்கியங்களின் செம்பதிப்பு
தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள், உரையாசிரியர்களின் நூல்கள், சிற்றிலக்கியங்கள் ஆகியவை குறித்து தமிழறிஞர்களிடையே பாட பேதங்கள் நிறைய உள்ளன. எனவே இந்த பாடபேதங்களை ஆராய்ந்து இந்த இலக்கியங்களுக்கான செம்பதிப்புகள் உருவாக்கப்படவேண்டும். உலகெங்கும் உள்ள தமிழர்கள் அத்தகைய செம்பதிப்புகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் முழுமையாக ஆராய்ந்து உருவாக்குவதற்கு உலகத் தமிழ் அறிஞர்களைக் கொண்ட குழு அமைக்கப்படவேண்டும்.
9. தமிழாய்வுகள் தொகுப்பு
தமிழ்நாட்டிலும் பிற நாடுகளிலும் நிகழ்த்தப்பெற்ற தமிழ் ஆய்வுகள் யாவும் ஒரு இடத்தில் கிடைக்கின்ற வகையில் அவை அத்தனையும் தொகுக்கப்பெற்று உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திலும், தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பாதுகாக்கப்பட வேண்டும்.
10. அறிவியல் # கலைச்சொற்கள்
தமிழ் வழங்கும் நாடுகளில் பயன்படுத்தப்படும் அறிவியல் # கலைச்சொற்கள் யாவும் ஒரே மாதிரியாக வேறுபாடின்றி இருத்தல் தமிழின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். எனவே தமிழ் வழங்கும் நாடுகளைச் சேர்ந்த அரசுகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை கூட்டாக அறிவியல் கலைச்சொற்களை உருவாக்கும் குழுவை அமைக்க வேண்டும். தமிழக அரசுக்கு இதில் பெரும் பங்குண்டு. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மூலம் இந்தப் பணியைச் செய்விக்க தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு உருவாக்கப்படும் கலை, அறிவியல், நிர்வாக இயல், சட்ட இயல் போன்ற பல்வேறு துறைகளுக்கான சொற்களை உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
11. ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு
தமிழரால் எழுதப்பெற்ற ஓலைச் சுவடிகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் பரவலாக உள்ளன. தமிழ் நாட்டுக்கு வணிக நிமித்தமாகவும், மதப் பரப்புரையின் காரணமாகவும் வந்த பிற நாட்டவர்கள் இங்கிருந்து ஓலைச்சுவடிகளை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலுள்ள தேசிய நூலகங்களில் ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகள் உள்ளன. இவை எல்லாம் தொகுக்கப்பட்டு அவற்றுக்கு அட்டவணை தயாரிக்கப்பட வேண்டும். இச்சுவடிகளின் எல்லாம் நுண்நிழல் படிப் பிரதி தொகுக்கப்பட்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திலும் தமிழ் பல்கலைக்கழகத்திலும் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த சுவடிகளைப் பிரதி செய்யும் பணிகளும் தொடங்கப்பட வேண்டும்.
12. நோக்கு நூல்கள்
தமிழ் ஆட்சி மொழியாகவும் பயிற்சி மொழியாகவும் உயர் கல்விக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்படும் இந்த காலகட்டத்தில் இதற்கு ஏற்ற நோக்கு நூல்கள் தமிழில் போதுமான அளவு இல்லை. அறிவியல், கலை#நிர்வாக இயல் ஆகியவற்றில் ஏற்பட்டு வரும் வளர்ச்சிக்கு இடம் கொடுக்கும் வகையில் போதுமான அளவுக்கு நோக்கு நூல்கள் இல்லை. அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், ஆய்வடங்கல்கள் ஆகிய 3 வகைகளில் இன்னும் பல நோக்கு நூல்கள் உருவாக்கப்பட வேண்டும்.
13. மொழி பெயர்ப்பு
தமிழில் உள்ள இலக்கியச் செல்வங்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இத்துறையில் போதுமான அளவுக்கு மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகவில்லை.
பல மொழிகளில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நியமித்து அவர்களைக் கொண்டு இலக்கியச் செல்வங்களும் பிற அரிய தமிழ் நூல்களும் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
14. தமிழ்த் துறைகளுக்கு நிதிஉதவி
உலக நாடுகளில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களில் இயங்கி வந்த தமிழ்த் துறைகள் போதுமான நிதியுதவி இல்லாமல் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. இத்துறைகளை மீண்டும் தொடங்கவும் மேலும் பல பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறைகள் தொடங்கப்படவும் தேவையான நிதியுதவி வழங்கப்பட வேண்டும். வெற்று ஆரவார மாநாடுகளுக்குப் பல நூறு கோடிகளை வாரி இறைப்பதன் மூலம் தமிழ் வளராது. அந்தப் பணத்தை இது போன்ற காரியங்களுக்குப் பயன்படுத்துவது தமிழ் வளர்ச்சிக்குச் செய்யப்படும் பேருதவியாகும்.
மும்மணிகளைக் காத்து வளர்ப்போம்
உலகத் தமிழறிஞர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக் கழகம், ஆகியவற்றை உருவாக்கினர்.
இந்த அமைப்புகளால் விளைந்த பயன்கள் குறித்து யாழ் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் சு. வித்தியானந்தன் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இலக்கியம் பற்றியோ, மொழி பற்றியோ ஆராயும் உரிமை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கே உண்டு என்பது தகர்க்கப்பட்டுவிட்டது. தமிழாராய்ச்சி குறுகிய எல்லைக்குட்பட்டிராது பரந்து விரிந்து பல துறைகளில் விருத்தியடைந்திருக்கிறது. தமிழ் இலக்கியம் பற்றியும், தமிழ் இலக்கணம் பற்றியும் உள்ள ஆராய்ச்சி மட்டுமே தமிழாராய்ச்சி என்ற நிலை மாறி, தமிழ் மக்கள் வரலாறு, தமிழ் மக்கள் மனிதவியல், தமிழ் மக்கள் சமயங்கள், தத்துவங்கள், தமிழ்த் தொல்பொருளியியல், தமிழ்நாட்டவர் பிறநாட்டவரோடு கொண்ட தொடர்புகள், தமிழர் பண்பாடு, தமிழ்க் கலைகள், தமிழ் மொழியியல் இன்னோரன்ன பல துறைகளிலும் தமிழராய்ச்சி விரிந்து சென்றிருக்கிறது. தமிழ் இலக்கியத்தின் சிறப்புப் பற்றியும், பண்பாட்டு வளர்ச்சி பற்றியும், தொன்மை பற்றியும், மொழியியல் பற்றியும் பல உண்மைகள் வெளிவந்துள்ளன' என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தமிழ் வளர்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றம் தொடரவேண்டும். இடைக்காலத்தில் ஏற்பட்டுவிட்ட தேக்க நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இன்றைய காலக் கட்டத்தில் தமிழர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு சிறப்பானது. உலகில் ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
உலகில் ஆங்கில மொழிக்கு அடுத்த இடத்தைத் தமிழ் பெற்றுள்ளது. இந்த இடத்தைத் தக்க வைத்துக்கொள்வதோடு அதை முதலிடத்திற்கு கொண்டு போவதற்கான முயற்சியில் நாம் ஈடுபடவேண்டும்.
இந்த மூன்று அமைப்புகளையும், சீரழிவிலிருந்து தடுத்து நிறுத்திச் செம்மையான அமைப்புகளாக உருவாக்கும் பொறுப்பினை உலகத் தமிழர்கள் ஏற்க வேண்டும். நியாயமாக ஆறரைக் கோடி தமிழர்களைக் கொண்டுள்ள தமிழகம் இதற்குத் தலைமை தாங்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டின் தற்போதைய சூழல் அதற்கு ஏற்றதாக இல்லை. வீண் ஆரவாரம், வெற்று விளம்பர நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் தமிழை வளர்த்துவிட முடியும் எனக் கருதுபவர்கள் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்வரை உருப்படியான எதையும் செய்யப்போவதில்லை. எனவே தமிழ் மொழியின் எதிர்காலம் குறித்து உண்மையான கவலையும் அக்கறையும் கொண்ட உலக நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் ஒன்றுகூடி இந்த மூன்று அமைப்புகளின் வளர்ச்சிக்குத் துணை நிற்கவேண்டும். அப்போதுதான் இந்த அமைப்புகள் எத்தகைய நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டனவோ அந்த நோக்கம் இனிது நிறைவேறும். தமிழ் உலக முதன்மை மொழியாகப் பெருமையுற்று விளங்கும்.