பொய்த்துப் போன நம்பிக்கை அச்சிடுக
வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2010 20:14
"தமிழகத்தில் காதல் திருமணம் கலப்புத் திருமணம் என்பவையெல்லாம் வெறும் வரி வடிவங்களாக வார்த்தை ஜாலங்களாக இருக்கின்றன. விழாக்களில் தமிழர்களாகக் கூடும் நாம் அது முடிந்து வெளியேறுகிற நேரத்தில் சாதி வாரியாகத்தான் வெளியே போகிறோம். அந்த அளவுக்குத் தமிழகத்தில் சாதி மாறுபாடுகள்-சாதி வேறுபாடுகள் இருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்றாக வேண்டும். ஒரே சமுதாயமாக தமிழ்ச் சமுதாயமாக, திராவிட இனமாக நாம் மாறவேண்டும்.' என முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.
சென்னையில் 18-01-10 அன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக மறைந்த பெரியார் அவர்கள் சாதி ஒழிப்புப் பிரச்சாரம் செய்தபிறகு அவரின் வாரிசுகளாக தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் 43 ஆண்டு காலமாக தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வந்த பிறகு மேற்கண்டவாறு முதல்வர் கருணாநிதி பேசியிருப்பது வேதனையானது மட்டுமல்ல. வெட்ககரமானதுமாகும்.
பெரியார் அவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பிரச்சாரம் மட்டுமே செய்ய முடிந்தது. அவர் கையில் அதிகாரம் எதுவும் இல்லை. ஆனால் அவர் பேரைச் சொல்லி ஆட்சிக்கு வந்தபிறகு சாதி ஒழிப்பை நடைமுறைப்படுத்த இவர் செய்தது என்ன? அளவற்ற அதிகாரத்தை தனது கையில் வைத்துக்கொண்டு ஐந்தாம் முறையாக முதலமைச்சர் பதவி நாற்காலியை அலங்கரித்த பிறகு தமிழகத்தில் சாதி இன்னும் மறையவில்லை என இவர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் ஆட்சியின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது.
கடந்த 43 ஆண்டு காலத்தில் இரு கழகங்களும் சாதி ஒழிப்புக் குறித்த திட்டவட்டமான கொள்கையோ அல்லது செயல்திட்டங்களோ எதுவும் வைத்திருக்கவில்லை. அவ்வாறு இவர்கள் ஏதேனும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தால் அதற்குத் தமிழக மக்களின் முழுமையான ஆதரவு கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்படியானால் அத்தகைய புரட்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இவர்களைத் தடுத்தது எது?
அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது சுயமரியாதை திருமணங்கள் செல்லும் என்னும் புரட்சிகரமான சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார். கட்சி வேறுபாடில்லாமல் சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தந்தன. ஆனால் அவருக்குப் பின்னால் பதவியேற்றவர்கள் அத்தகைய புரட்சிகரமான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிவிட்டார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டார்கள். தெருப்பெயர்களில் சாதிப் பெயர் ஒழிப்பு, சமத்துவப் புரங்கள் அமைப்பு, கோயில்களில் சகல சாதியினரும் அர்ச்சகராகும் வாய்ப்பு போன்ற சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவையும் முழுமையானதாக அமையவில்லை. அரை குறையாகச் செய்யப்பட்டன.
முதலமைச்சர்களாக பதவி வகித்த அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். செயலலிதா ஆகிய நால்வரும் சிறுபான்மைச் சாதிகளைச் சேர்ந்தவர்கள். தங்கள் சாதி பலத்தால் இவர்கள் ஆட்சி பீடம் ஏறவில்லை. சாதிகளைக் கடந்து மக்கள் இவர்கள் அங்கம் வகித்த கட்சிகளுக்கும் கூட்டணிகளுக்கும் அளித்த ஆதரவினால்தான் இவர்கள் முதலமைச்சர்களாக ஆக முடிந்தது. இது ஆரோக்கியமான அரசியலுக்கு அடையாளமாகத் திகழ்ந்தது.
சிறுபான்மைச் சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக இவர்களின் தலைமையை பெரும்பான்மைச் சாதியைச் சேர்ந்தவர்கள் ஏற்க மறுக்கவில்லை. அதாவது சாதி உணர்வை கடந்து அனைத்துச் சாதிகளின் ஆதரவைப் பெற்றதாலேயே இவர்கள் தலைமை தாங்கிய கூட்டணிகள் வெற்றி பெறமுடிந்தது. மக்கள் ஒன்றுபட்டு நின்று சாதி எல்லைகளைக் கடந்து அளித்த இந்த ஆதரவை முழுமையாகப் பயன்படுத்தி சாதி ஒழிப்புக்கான திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் இவர்கள் செய்தது என்ன?
தாங்கள் அமைத்த அமைச்சரவையில் நிர்வாகத் திறமை, கட்சிக்காக செய்த தியாகம், தொண்டு, மக்களிடம் உள்ள செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் அமைச்சர்களை நியமிப்பதற்குப் பதில் சாதி வாரியாக அமைச்சர்களை நியமித்தார்கள். அது மட்டுமல்ல சர்வீஸ் கமிஷன் தலைவர், உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைவர் மற்றும் முக்கிய அதிகாரிகள் ஆகியோரின் நியமனங்களிலும் சாதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இவ்வாறு இன்னின்ன சாதிகளுக்கு இன்னின்ன உயர்பதவிகளை அளித்திருக்கிறோம் என்பதையும் விளம்பரப்படுத்தி அந்தந்த சாதி மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளும் வெட்கமில்லாமல் மேற்கொள்ளப்பட்டன.
சாதித் தலைவர்களின் பெயரால் மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றை அமைக்கும்
மலினமான முயற்சியும் நடைபெற்றது. இதன் மூலம் அந்தந்த மாவட்டங்களில் வாழும் அந்தந்த சாதி மக்களின் ஆதரவைப் பெற்றுவிடலாம் எனப் பகுத்தறிவுப் பாசறையில் பயின்றவர்கள் நம்பியது நகைப்பிடமாக அமைந்தது.
இத்தகைய பெயர் சூட்டுதல்கள் சாதிகளின் ஆதரவைத் திரட்டித் தருவதற்குப் பதில் பல்வேறு சாதிகளுக்கிடையே மோதலை ஏற்படுத்திற்று. ஒரு சாதித்தலைவரின் பெயரால் அமைக்கப்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளை இன்னொரு சாதியைச் சேர்ந்தவர்கள் வழிமறித்துக் கொளுத்தினார்கள். இதன் விளைவாக சாதிக் கலவரங்கள் மூண்டன.
மாவட்டங்களுக்கு சூட்டப்பட்ட சாதித் தலைவர்களின் பெயர்களின் காரணமாக வேண்டாத விளைவுகள் ஏற்பட்டன. ஒவ்வொரு சாதியினரும். தங்கள் சாதிப் பெயரை சூட்ட வேண்டும் என போராட்டங்களையும், எதிர் போராட்டங்களையும் தொடங்கினார்கள். நல்லவேளையாக திருவள்ளுவர் பெயரால் அமைக்கப்பட்ட மாவட்டத்தில் மட்டுமே எந்தக் கலவரமும் இல்லை. காரணம் வள்ளுவர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பது யாருக்கும் தெரியவில்லை.
சாதிக் கலவரங்கள் வெடித்தவுடன் அதற்கான அடிப்படைக் காரணங்களை உணர்ந்துகொள்ளாமல் பதட்டமான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். மாவட்டங்களுக்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கும் தாங்கள் சூட்டிய சாதிப் பெயர்களே இதற்குக் காரணம் என்பதைக் காலங்கடந்து உணர்ந்தனர். அதன் விளைவாக இந்தப் பெயர்கள் நீக்கப்பட்டன. ஆனால் இந்தப் பெயர்களைச் சூட்டும் போது முன்யோசனையோ, தொலைநோக்குப் பார்வையோ இருக்கவில்லை என்பதை இந்தப் பெயர் நீக்க நடவடிக்கைகள் எடுத்துக்காட்டின.
சாதிச் சங்கங்களின் நிகழ்ச்சிகளில் அமைச்சர்களும் உயரதிகாரிகளும் தங்கு தடையில்லாமல் கலந்து கொண்டனர். இதன் மூலம் சாதிய உணர்வுகளுக்கு உரமூட்டினர். இதன் விளைவாக அரசு ஊழியர்களே சாதி ரீதியான சங்கங்களை அமைக்கத் தொடங்கினார்கள். அதிலும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் சாதி சங்கங்களிலும், சாதி கட்சிகளிலும் தீவிரமாக ஈடுபடும் போக்கு வளர்ந்தது. அப்படியானால் பதவிகளில் இருக்கும் போது இவர்கள் எப்படி சாதி உணர்வற்று நடுநிலையாளர்களாகச் செயல்பட்டிருக்க முடியும்? என்ற கேள்விக்கு விடைதான் இல்லை.
இரு கழகங்களின் ஆட்சியில் சாதி ஒழிப்பு நடவடிக்கைகளுக்குப் பதில் சாதி உணர்வு பெருக்க நடவடிக்கைகள் அதிகமாயின. தேர்தல் ஆதாயம் தேடும் ஒரே நோக்கத்துடன் தொலைநோக்கு கொஞ்சமும் இல்லாமல், இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் விஷ விருட்சமாக வளர்ந்து நச்சுக் காற்றை பரப்பிக்கொண்டிருக்கிறது.
இன்னும் ஏராளமான கிராமங்களில் தீண்டாமை, சாதி இழிவு போன்ற பெருநோய்கள் தங்கு தடையின்றித் தொடர்கின்றன. நமது சட்டங்களோ அவற்றை அமுல்படுத்த வேண்டிய அதிகாரிகளோ அவர்களுக்கு ஆணையிட வேண்டிய அமைச்சர்களோ இந்த இழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வரவில்லை. சமுதாயச் சீரழிவுக்குக் காரணமான இவற்றை அறவே ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் துணிவும் இவர்களுக்கு இல்லை.
சாதிகளைக் கடந்து தங்களின் தொண்டு, தியாகம் ஆகியவற்றினால் மக்களிடையே மதிப்புப் பெற்ற பல தலைவர்கள் காலமானபிறகு சாதி வட்டத்திற்குள் குறுக்கப்படும் வெட்ககரமான நடவடிக்கைகள் பகிரங்கமாக நடக்கின்றன. இன்றைய சாதித் தலைவர்கள் பலருக்கும் சொந்த செல்வாக்கு இல்லை. எனவே இவர்கள் மறைந்த தலைவர்களை முகமூடிகளாகப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் செல்வாக்கை வளர்க்க முயலுகிறார்கள்.
காதல் திருமணங்களும், கலப்புத் திருமணங்களும் வெறும் வடிவங்களாக, வார்த்தை ஜாலங்களாக இருக்கின்றன என முதல்வர் கருணாநிதி வேதனைப்படுவதில் அர்த்தமில்லை. நமது சமுதாயத்தில் கலப்புத் திருமணங்கள் பெருகும்போதுதான் சாதி வேறுபாடுகள் மறையும். ஆனால் இந்தக் கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
கலப்புத் திருமணங்கள் செய்துகொள்பவர்களுக்கு அரசு பரிசு தருகிறது. மணமக்களில் யாராவது ஒருவர் ஆதிதிராவிடராக இருக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆனால் இது மட்டும் போதாது. இந்த நிபந்தனைக்கு உட்பட்டவர்களுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் வழங்கிச் சலுகைகள் காட்டுங்கள். அத்துடன் எந்தச் சாதியாக இருந்தாலும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்பவர்கள், ஒரே சாதிக்குள் இருக்கக்கூடிய பல்வேறு பிரிவுகளுக்கிடையே நடைபெறும் திருமணங்கள் ஆகியவற்றையும் கலப்புத் திருமணங்களாக அங்கீகரித்து அதற்கு நூற்றுக்கு 50 விழுக்காடு முதல் 75 விழுக்காடு வரை மதிப்பெண்கள் கொடுத்துச் சலுகைகள் காட்டுங்கள். சாதிமறுப்புத் திருமணங்கள் செய்துகொண்டவர்களுக்குக் கல்வியில், அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுங்கள்.
இதற்குக் காலவரையறை இருக்கவேண்டும். பல நூற்றாண்டு காலமாக அழுத்தப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு இடஒதுக்கீடு அளித்து அவர்களைக் கைதூக்கி விடவேண்டியது சமுதாயத்தின் கடமையாகும் ஆனால் அது எவ்வளவு காலத்திற்கு என்பது வரையறுக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக 50 ஆண்டுகள் என்று ஒரு வரையறை வகுக்கப்பட்டால் அதில் முதல் 5 ஆண்டுகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் அளிக்கப்படவேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் இது 10 சதவீதமாக உயர்த்தப்படவேண்டும். இப்படி படிப்படியாக இது உயர்த்தப்பட்டு 50 ஆம் ஆண்டின் நிறைவில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்படவேண்டும் என்பது அறிவிக்கப்பட வேண்டும். இத்தகைய புரட்சிகரமான நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே சாதியற்ற சமுதாயத்தை உருவாக்கமுடியும்.
"யாதும் ஊரே யாவரும் கேளீர்'' என்பதே சங்க காலத் தமிழரின் சமுதாயக் கோட்பாடாகும். சங்ககாலத் தமிழ்ச் சமுதாய அமைப்பு முறையில் பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றிற்கு இடமிருந்ததில்லை. தொல்காப்பியத்தில், சாதி என்னும் சொல் பல்வேறு வகையான மரம், செடி, கொடி, முதலியவற்றை வேறுபடுத்திக் காட்டவே பயன்படுத்தப்பட்டுள்ளது. மனிதர்களை வேறுபடுத்திக் காட்ட அவர் ஒரு போதும் அந்தச் சொல்லை பயன்படுத்தவில்லை. ""பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என திருக்குறள் கூறுகிறது. பிற்காலத்தில் தமிழகத்தில் வேரூன்றிய இந்தத் தீமையை அடியோடு களைந்தெறியவதற்கான முயற்சிகளில் ஈடுபட நாம் நம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்.
சாதிப் பாகுபாட்டு எதிர்ப்பு இயக்கம் தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. சித்தர்கள் இதற்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.
இராமலிங்க வள்ளலார், பேராசிரியர் சுந்தரனார், பாரதியார், பாரதிதாசனார் போன்றவர்கள் சாதியம் பேசும் சழக்கர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள்.
இவர்கள் வழியில் 60 ஆண்டு காலமாக இடைவிடாது பெரியார் செய்த சாதி ஒழிப்பு பிரச்சாரம் அவரைப் பின்பற்றுவதைக் கூறுபவர்கள் ஆட்சிகளில் செயல்முறைக்கு வரும் என்ற நம்பிக்கை அடியோடு பொய்த்துப்போயிற்று என்பதையே முதல்வர் கருணாநிதியின் ஒப்புதல் வாக்குமூலம் எடுத்துக்காட்டுகிறது.