திருத்திக் கொள்ள முடியாத அதிகாரத் திமிர் அச்சிடுக
வியாழக்கிழமை, 08 ஜூலை 2010 20:30
தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அணிசேர முயல்வதை நான் குறைகூறவில்லை. ஆனால் கொள்கை அடிப்படையில் அல்லது குறைந்தபட்ச வேலைத் திட்ட அடிப்படையில் கூட்டணி சேர்வது என்பது போய் பதவிப் பங்கீட்டின் அடிப்படையில் கூட்டணிகள் அமைக்கப்படுவது என்பது மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகிவிட்டது. இதற்காக யாரை யார் நொந்துக்கொள்வது?
தேர்தலில் எப்படியாவது வெற்றிப்பெற்று ஆட்சி அமைப்பது அல்லது தங்களது கட்சிக்கு சில இடங்களை நாடாளுமன்றத்தில் அல்லது சட்டமன்றங்களில் பெறுவது என்பதை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு பெரும்பாலான கட்சிகள் செயற்படுகின்றன. இதற்கு மேலாக கட்சிகள் ஆற்றவேண்டிய பெரும் சனநாயகக் கடமை ஒன்று உள்ளது என்பதையே பல கட்சிகள் மறந்துவிட்டன.
கூட்டணியில் சேர்ந்துவிட்டாலே ஆளுங்கட்சி செய்கிற தவறுகளைத் தட்டிக்கேட்க தோழமைக் கட்சிகள் துணிவதில்லை. துணிந்து கேட்டால் கூட்டணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
நாட்டு நிர்வாகத்தில் புரையோடிக் கிடக்கும் இலஞ்சம், ஊழல், சட்டவிரோதமான நடவடிக்கைகள் இயற்கை வளங்கள் தங்கு தடையில்லாமலும் அனுமதியில்லாமலும் சுரண்டப்படுவது. ஆறுகளில் வரலாறு காணாத மணல் கொள்ளை, ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிப்பு, மழை தரும் காடுகள் கண்மூடித்தனமான அழிப்பு போன்றவற்றையெல்லாம் யார் தட்டிக் கேட்பது?
மேலே கண்ட சமூக விரோதச் செயல்களைத் தடுக்க முடியாத சட்டங்கள் எதற்கு? அதிகாரிகள் எதற்கு? கடந்த 40 ஆண்டு காலத்திற்கு மேலாக இரு கழகங்களின் ஆட்சியில் அதிகாரிகள், முதுகெலும்பு அற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள். நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்பட்டனர்.
அநீதிகளைத் தட்டிக்கேட்ட எதிர்க்கட்சியினர் மீது அடுக்கடுக்கான பொய் வழக்குகள் போடப்பட்டன. பேச்சுரிமை, எழுத்துரிமை பறிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் தலையிட்டு எத்தனை முறை கண்டித்தாலும் திருத்திக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகாரத் திமிர் மிகுந்துள்ளது.
அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் இதழ்கள் / ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன.
தேர்தல்கள் கேலிக்கூத்தாக்கப்பட்டு ஜனநாயக முறைகள் துச்சமாகத் தூக்கி எறியப்பட்டு பணநாயகம் நிலைநாட்டுப்பட்டுவிட்டது.
முன்பு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதல்வர் கருணாநிதி டாக்டர் பட்டம் பெறவந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்கள் காவல் துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஆளானார்கள். உதயகுமார் என்ற மாணவர் மாண்டார். அன்றிலிருந்து இன்றுவரை இருகழகங்களின் ஆட்சியில் நடைபெற்ற ஃபாசிச வெறியாட்டங்களைப் பட்டியலிட்டால் கணக்கிலடங்காது நீளும்.
எனினும் அண்மைக் காலத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் மக்களை அதிரவைத்துள்ளன. கருணாநிதியின் ஆட்சியில் அமைச்சராக இருந்த தா. கிருட்டிணன் மதுரையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மகன் அழகிரி கைது செய்யப்பட்டார். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அரசு வழக்கறிஞராக தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டபோது உச்சநீதிமன்றம் தலையிட்டு வழக்கை ஆந்திர மாநிலத்திற்கு மாற்றியது. எந்தக் கொலை வழக்கிலும் நடந்திராத அதிசயம் இந்த வழக்கில் நடந்தது. 200க்கும் மேற்பட்ட சாட்சிகளில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பிறள் சாட்சிகளாக மாறினார்கள். கொலையாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அரசு தரப்பில் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு இதுவரை செய்யப்படவில்லை.
தினகரன் அலுவலகத்தில் அழகிரியின் ஆட்களால் மூவர் படுகொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கு என்ன ஆயிற்று என்பதே இன்னமும் யாருக்கும் புரியாத புதிர்.
காமராசர் முதலமைச்சராக இருந்த பொழுது விருது நகரில் அவரது தங்கையின் பேரன் கிரிமினல் வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டிருந்தார். ஆனால் காவல்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்யத் தயங்கினார்கள். செய்தியறிந்த காமராசர் மாவட்டக் கண்காணிப்பாளரை தொலைபேசியில் அழைத்துக் கண்டித்தார் .குற்றம் செய்தவன் யாராக இருந்தாாலும் நடவடிக்கை எடுக்கும்படி ஆணைப் பிறப்பித்தார். முதல் அமைச்சரின் பேரன் உடனடியாகக் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டு அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பேரன் என்பதற்காகச் சட்டத்தை வளைக்கவோ நீதியை மறைக்கவோ காமராசர் முயலவில்லை. ஆனால் இன்றைய முதலமைச்சர் மகனுக்காக சட்டத்தைப் புறக்கணித்து, நீதி தேவதையின் கைகளைக் கட்டி செயல்பட்டவிதம் சரிதானா?
கம்யூனிஸ்டுக் கட்சியின் செயலாளர் தா. பாண்டியன், இயக்குநர்சீமான், திருவாரூர் தங்கராசு போன்றவர்களின் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகத்தைச் சூறையாடி 2 கோடி ரூபாய் பெறுமான இயந்திரங்களை அடித்து நொறுக்கினார்கள். சிறந்த எழுத்தாளரும், பேச்சாளருமான பழ. கருப்பையாக வீட்டிற்குள் பட்டப்பகலில் புகுந்து அவரைத் தாக்கினார்கள். மேலே கண்டவற்றில் இதுவரை குற்றவாளிகளைக் காவல்துறை கண்டறியவில்லை.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் கார் சேதப்படுத்தப்பட்டது. இதைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டனத்திற்கும், தண்டனைக்கும் உரியவர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த வழக்கில் மறுநாளே சிலரை காவல்துறை கைது செய்துள்ளது. ஆளுங்கட்சியின் ஆதரவாளரான வீரமணியின் காரைச் சேதப்படுத்தியவர்களை கைது செய்வதில் காட்டிய அக்கறையில் சிறிதளவைக்கூட மற்றவர்கள் விஷயத்தில் காவல் துறை காட்டாதது ஏன்? குற்றமிழைத்தவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால்தானா?
தமிழகக் காவல் துறை திறமை மிக்கது. பிரிட்டனில் உள்ள ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு நிகரானது என்ற பாராட்டைப் பெற்றது. 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்தியா விடுதலைப் பெற்றதைத் தொடர்ந்து மதக்கலவரங்கள் மூண்டன. தில்லியில் மூண்ட கலவரங்களை மூன்று நாட்களாக யாராலும் அடக்க முடியவில்லை. காரணம் தில்லி காவல்துறையே மத காழ்ப்புகளால் பிளவுபட்டுக் கிடந்தது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் சென்னை நகர காவல்துறை ஆணையாளராக இருந்த சஞ்சீவிப் பிள்ளை தலைமையில் தமிழகக் காவல்படையை தில்லிக்கு வரவழைத்து அமைதியை நிலைநாட்டும் பொறுப்பை ஒப்படைத்தார். இரண்டே நாட்களில் தமிழகக் காவல் படையினர் கலவரங்களை ஒடுக்கினார்கள்.
இத்தகைய திறமைவாய்ந்த தமிழகக் காவல்துறை இன்று ஆளுங்கட்சியின் குற்றேவல் துறையாக மாற்றப்பட்டுவிட்டது.
சென்ற தலைமுறையைச் சேர்ந்த தலைவர்கள் அந்நிய ஆட்சியின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்க புரிந்த தியாகம் அளவற்றது. அவர்கள் தலைமையில் ஏராளமானவர்கள் இரத்தம் சிந்தினார்கள். உயிரிழந்தார்கள். இதெல்லாம் வீண்தானா? விழலுக்கு இறைத்த நீர்தானா? வெள்ளையர்களை விரட்டிவிட்டு இந்தக் கொள்ளையர்கள் ஆட்சி ஏற்படத்தான் அவர்கள் பாடுபட்டார்களா?
பொது வாழ்விற்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு எண்ணற்றத் துன்பங்களைத் தாங்கி அளவற்றத் தியாகங்களைப் புரிந்த பல நேர்மையான தலைவர்களும் தொண்டர்களும் பல கட்சிகளில் இன்னமும் இருக்கிறார்கள். நாட்டின் சீரழிவைத் தடுக்க வேண்டிய இத்தகைய சீலர்கள் வெறும் பார்வையாளர்களாக நின்று கைகளைப் பிசைந்துக் கொண்டிருப்பது சரியா? நமது மனசாட்சி நம்மை உறுத்தவில்லையா? "நெட்டை மரங்கள் போல நின்று பெட்டைப் புலம்பல்' என பாரதி பாடியதற்கு நாமே எடுத்துக்காட்டுகளாக அமையலாமா?
பொது வாழ்க்கையின் உன்னதமான நெறிமுறைகள் நம் கண்முன்னாலேயே சிதைக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு கையில் ஊமையராக இன்னும் எத்தனைக் காலம் விளங்கப்போகிறோம்?
உலகின் மாபெரும் சனநாயக நாடு எனப் பாராட்டப்பட்டட நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் சனநாயகம் நம் கண்முன்னாலேயே சிறிது சிறிதாகச் சாகடிக்கப்படுவதையும் பாசிச சர்வதிகாரம் தலைவிரித்தாடுவதையும் தடுத்து நிறுத்த வேண்டியது நமது கடமையா? அல்லவா?
ஹிட்லரின் மாய்மாலப் பேச்சில் மயங்கி ஜெர்மானிய மக்கள் அவனை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதின் விளைவாக அந்த நாட்டை இரத்தக் களரியாக்கிதோடு, இரண்டாம் உலகப்போரிலும் ஈடுபடுத்தி ஐரோப்பாவையே அழித்தவன் அவன். இந்த அழிவிலிருந்து ஜெர்மனி மீண்டு எழுவதற்கு 50 ஆண்டு காலம் ஆயிற்று. இவ்வளவுக்கும் ஜெர்மனி அறிவியலில் முன்னேறிய நாடு.
ஆனால் சகல துறைகளிலும் பின்தங்கிக் கிடக்கும், தமிழ்நாடு, இந்தச் சீரழிவிலிருந்து மீண்டெழுவது எப்போது? அதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்?
தேர்தல் கூட்டணிகளில் கவனம் செலுத்துவதை சற்று நிறுத்திவிட்டு, ஃபாசிச வன்முறைக் கொள்ளையர்களின் பிடியில் சிக்கிச் சீரழியும் தமிழகத்தை மீட்பதை உடனடி கடமையாகக் கொண்டு அணி திரள்வோம்.