ஊழல் முடை நாற்றத்திற்கு நடுவே பதவியில் தொடர்வதைவிட விலகுவதே மேல்! அச்சிடுக
சனிக்கிழமை, 12 பெப்ரவரி 2011 17:23
டிசம்பர் 9ஆம் தேதி உலக ஊழல் ஒழிப்பு நாள் ஆகும். அதே நாளில் முன்னாள் அமைச்சர் இராசா மற்றும் அவரது துறையில் இருந்த உயர் அதிகாரிகளின் வீடுகள் சி.பி.ஐ. அதிகாரிகளால் சோதனைக்குள்ளானது குறிப்பிடத்தக்கதாகும்.
அதைப்போல சென்ற 2010ஆம் ஆண்டு அதிர்ச்சிகரமான ஊழல்கள் வெளியான ஆண்டாகும். இந்திய மருத்துவ ஆணையத்தின் தலைவர் கேத்தன் தேசாய் வீட்டிலிருந்து சுமார் 2000 கோடி ரூபாய் பெறுமான பணமும் நகைகளும் கைப்பற்றப்பட்டன.
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல் அமைச்சர் மதுகோடா செய்த பலநூறு கோடி ரூபாய் பெறுமான ஊழல்களும் அம்பலமாயிற்று. காமன்வெல்த் விளையாட்டி போட்டியில் நடைபெற்ற பெரும் ஊழல்கள் உலக நாடுகளுக்கு முன்னால் நம்மை தலைகுனியவைத்தன. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோல ஸ்பெக்ட்ரம் ஊழல் நாட்டையே திடுக்கிட வைத்தது.
அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அதிகாரிகளும் இந்த ஊழல்களில் பெருமளவு தொடர்புகொண்டிருந்தார்கள் என்பது திடுக்கிடவைப்பதாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அதிகார வர்க்கம் மக்களை அடக்கி ஒடுக்கி வைப்பதற்காகப் பயன்பட்டது. சுதந்திர நாட்டில் அதே அதிகார வர்க்கத்தைக் கட்டுப்படுத்தி மக்களுக்கான நிர்வாகம் என்ற உணர்வை ஏற்படுத்துவதற்கு பெருமுயற்சி நடந்தது. ஐ.சி.எஸ். என்பது மாற்றப்பட்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்றவை உருவாக்கப்பட்டன.
முதலாவது பிரதமராகப் பதவி வகித்த ஜவஹர்லால் நேருவும் உள்துறை அமைச்சராக விளங்கிய சர்தார் வல்லபாய் பட்டேலும் அதிகார வர்க்கத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அரசின் கொள்கைகளை அவர்கள் வகுத்தனர். அதை செயல்படுத்தும் பொறுப்பினை அதிகாரிகளிடம் அளித்தனர். தியாகப் பின்னணியும் மக்கள் செல்வாக்கும் மிகுந்த இந்தத் தலைவர்களை மீறி அதிகாரிகளால் செயல்படமுடியவில்லை.
வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப் படவேண்டும் என பிரதமர் நேரு முடிவெடுத்தபோது, கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபுவும் உயர் அதிகாரிகளும் இது நடைமுறை சாத்தியமல்ல எனக்கூறினர். ஆனால் சிறந்த ஜனநாயகவாதியான நேரு தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதன் விளைவாக நாட்டின் மூலை முடுக்குவரை அரசியல் மயமாயிற்று அரசின் கொள்கைவகுப்பில் மக்களும் பங்கேற்கும் நிலை ஏற்பட்டது. நாட்டின் மொத்தச் சூழ்நிலையில் பெரும் மாறுதல் உருவாயிற்று. அரசியல் கட்சிகள், தேர்தல்கள், நாடாளுமன்றம், அமைச்சர் குழு ஆகியவை முக்கியத்துவம் பெற்றன. மாநிலங்களிலும் இந்த மாறுதல் பரவியது.
நேருவின் சமகாலத் தலைவர்களான சுகர்ணோ இந்தோனேசியாவிலும், நாசர் எகிப்திலும் சர்வாதிகாரிகளாக மாறினார்கள். இந்தியாவைச் சுற்றிலும் உள்ள பாகிஸ்தான், பர்மா, வங்காளதேசம் போன்ற நாடுகளிலும் மற்றும் பல ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளிலும் சர்வாதிகாரிகள் ஆட்சிக்கட்டிலில் ஏறினார்கள். ஆனால் இந்தியாவில் சனநாயகச் செடியை மரமாகத் தழைக்கச் செய்தார் நேரு. அவர் விரும்பியிருந்தால் மக்களின் பேராதரவோடு அவர் சர்வாதிகாரியாக ஆகியிருக்க முடியும். ஆனால் அவர் இறுதிவரை சனநாயகவாதியாகவே வாழ்ந்தார்.
பிரதமர் நேரு சனநாயக நெறி முறைகளில் நம்பிக்கைக் கொண்டவராக இருந்ததால் காங்கிரஸ் கட்சிக்கும் மாநில ஆட்சியிலும், மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள் பதவிகளில் அமர்வதை ஊக்குவித்தார். ஒருபோதும் அவர்களின் செயல்பாடுகளில் தலையிட்டதில்லை. தன்னை மிஞ்சி இவர்கள் செயல்பட்டால் என்ன செய்வது என்ற அச்சம் அவருக்கு எழவில்லை. தமிழ்நாட்டில் காமராசர், ஆந்திராவில் சஞ்சீவி ரெட்டி, மராட்டியத்தில் ஒய்.பி. சவான், குசராத்தில் மொரார்ஜி தேசாய், வங்கத்தில் பி.சி. ராய், பஞ்சாபில் கெய்ரோன், ஒரிசாவில் பட்நாயக், கர்நாடகத்தில் நிஜலிங்கப்பா என பல்வேறு மாநிலங்களிலும் உருவான மாநிலத் தலைவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்புக் கொடுத்தார்.
ஐந்தாண்டுத் திட்டங்களை உருவாக்குவதிலும் மத்திய அரசின் கொள்கைகளை வகுப்பதிலும் மாநில தலைவர்களுக்கு பெரும் பங்கு இருந்தது. மத்தியிலும்-மாநிலத்திலும் இருந்த அதிகார வர்க்கம் இந்த மக்கள் தலைவர்களை மீறிச் செயல்பட ஒருபோதும் துணியவில்லை.
ஆனால் நேருவின் மறைவிற்குப் பிறகு நிலைமை தலைகீழ் ஆகிவிட்டது. பிரதமராக லால்பகதூர் சாஸ்திரி பொறுப்பேற்றப்போது அதிகார வர்க்கத்தையே நம்பி செயல்படவேண்டிய நிலையில் அவர் இருந்தார். மிக்க அதிகாரம் படைத்த பிரதமரின் செயலகம் ஒன்றை அவர் உருவாக்கினார். 1964ஆம் ஆண்டு சூலை 13ஆம் தேதி பிரதமரின் செயலாளராகவும் இந்த செயலகத்தின் தலைமைப்பொறுப்பாளராகவும் ஐ.சி.எஸ். அதிகாரியான எல்.கே. ஜா நியமிக்கப்பட்டார். இவர் திறமைவாய்ந்த அதிகாரி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் நாளடைவில் இவர் தலைமையின் கீழ் பிரதமரின் செயலகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. வெளிநாட்டுத் தலைவர்கள் பிரதமரைச் சந்திக்கும்போதெல்லாம் அவரும் உடனிருப்பார். பிரதமரின் செயலாளராக மட்டுமல்ல அவரின் ஆலோசகராகவும் அவர் மாறினார். அரசாங்கத்தின் கொள்கை வகுப்பதில் முக்கியப்பங்கினை வகித்தார். இதன் விளைவாக டெல்லியில் இருந்த வெளிநாட்டுத் தூதுவர்களும், அரசியல் தலைவர்களும் பிரதமரைச் சந்திப்பதற்கு ஜாவின் தயவைத் நாடத்தொடங்கினார்கள்.
தேசியக் கொள்கைகள் வகுப்பதில் பிரதமர் சாஸ்திரி புதிய சிந்தனையோட்டத்தைக் கொண்டுவரவில்லை. மாறாக வெளியுறவுத் துறையிலும், உள்நாட்டுப்பிரச்சினைகளிலும் நேருவின் கொள்கைகளையே பின்பற்றினார். அதைச் செயல்படுத்துவதற்கு அதிகார வர்க்கத்தையே பெரிதும் சார்ந்திருந்தார்.
1965ஆம் ஆண்டில் துறைச் செயலாளர்களைக் கொண்ட குழு ஒன்றை பிரதமர் சாஸ்திரி அமைத்தார். இக்குழுவில் அமைச்சரவை செயலாளர் பாதுகாப்புத் துறைச் செயலாளர், வெளிநாட்டுத்துறைச் செயலாளர், பொருளாதாரத் துறையைச் சேர்ந்த இரு செயலாளர்கள், பிரதமரின் செயலாளர் எல்.கே.ஜா ஆகியோர் இடம்பெற்றனர். பிரதமருக்கு எல்லா விசயங்களிலும் ஆலோசனைக் கூறுவதுதான் இந்தக்குழுவின் நோக்கமாகும். சூப்பர் அமைச்சரவையாக மாறிய இக்குழுவினர் எடுத்த முடிவுகளை அமைச்சரவை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டிய நிலை உருவாயிற்று.
காங்கிரஸ் கட்சிக்குள்ளும் மத்திய அரசிலும் கூட்டு அரசியல் தலைமையை ஏற்படுத்த காங்கிரஸ் தலைவர் காமராசர் முயற்சி செய்தார். கட்டுப்பாடான தலைமை இல்லாவிட்டால் அதிகாரவர்க்கத்தின் கை ஓங்கிவிடும் என்பதை அவர் தெளிவாக உணர்ந்திருந்தார். அவர் காங்கிரஸ் தலைவராக இருந்தவரை பிரதமர் சாஸ்திரி அவரை நேரடியாக எதிர்க்கத் தயங்கினார். ஆனால் அவருக்குப் பின் பிரதமரான இந்திராகாந்தி கூட்டுத் தலைமையை அலட்சியப்படுத்தினார். தன்னுடைய தலை மையை கட்சியிலும் ஆட்சியலும் நிலை நிறுத்த அவர் செய்த முயற்சிகளின் விளைவாக அதிகாரவர்க்கத்தையும் துதிபாடிகளையும் சார்ந்து நிற்கவேண்டிய அவல நிலை மைக்கு ஆளாகி இறுதியில் அவசர கால நிலைமையை அறிவித்து மக்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகி ஆட்சியை இழக்கும் பரிதாபம் அவருக்கு ஏற்பட்டது.
பிரதமர் சாஸ்திரியின் காலத்தில் உருவாகிய இந்த சரிவு மன்மோகன்சிங் காலம் வரை தொடர்கிறது. பிரதமராக இந்திரா பதவி வகித்தபோது அவரின் முதன்மைச் செயலாளரான பி.சி. அலெக்சாண்டர் சர்வதிகாரம் படைத்தவராகத் திகழ்ந்தார். பிரதமராக இராஜீவ்காந்தி இருந்தபோது உளவுத்துறை அதிகாரியான எம்.கே. நாராயணன், வெளியுறவுத் துறை செயலாளரான ரொமேஷ்பண்டாரி, ஜே.என்.தீட்சித் போன்ற அதிகாரிகள் அவரின் ஆலோசகர்களாகத் திகழ்ந்தார்கள். பிரதமராக பி.வி. நரசிம்மராவ் பதவிவகித்தபோது, பிரிஜேஷ் மிஸ்ரா என்பவர் முதன்மைச் செயலாளராக விளங்கி கட்சியிலும் ஆட்சியிலும் பெரும் ஆதிக்கம் செலுத்தினார். பிரதமராக மன்மோகன்சிங் இருக்கும்போது திட்டக்குழுவின் துணைத் தலைவர் அலுவாலியா, பாதுகாப்பு ஆலோசகர்களான எம்.கே. நாராயணன், ஜே.என்.தீட்சித், சிவசங்கர மேனன் போன்ற அதிகாரிகள் அவருக்கு ஆலோசகர்களாக விளங்கி வருகிறார்கள். இந்த நிலைமை நீடிப்பது அதிகார வர்க்கத்தின் கை ஓங்குவதற்கு வழிவகை செய்துவிட்டது. அதனால்தான் ஸ்பெக்ட்ரம் ஊழலாக இருந்தாலும் வேறு ஊழலாக இருந்தாலும் அதிகாரிகளும் அதிலே தொடர்புகொண்டவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் இன்று ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் ஊழல் சாக்கடையில் மூழ்கியவர்களாகத் திகழ்வதால் அதிகாரிகளும் தவறிழைக்கிறார்கள். தங்களின் ஊழல் திட்டங்களுக்கு ஒத்துழைப்பவர்களையே முக்கியப் பொறுப்புகளில் ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் நியமிக்கிறார்கள். எனவே நேர்மையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படும் சூழ்நிலை உருவாகிவிட்டது. மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் வரையிலும் ஊழல் பரவுவதற்கு பலவீனமான அரசியல் தலைமையே முக்கிய காரணமாகும்.
கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்களாக அரசியல் தலைவர்கள் விளங்கும்வரை அதிகாரிகள் அவர்களுக்கு அடங்கி ஒடுங்கி இருப்பார்கள். அரசியல் தலைமை ஊழல்களில் ஈடுபடும்போது அவர்களுக்குத் துணைநிற்கவேண்டிய நிலை அதிகாரிகளுக்கு ஏற்படுகிறது. எனவே பெரும்பாலான அதிகாரிகள் ஊழலுக்கு ஒத்துழைக்கிறார்கள். பங்கும் பெறுகிறார்கள். பதவி உயர்வும் பெறுகிறார்கள்.
அரசியல் தலைமை வகுக்கும் கொள்கைகளைச் செயல்படுத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் அதிகாரிகளுக்கு உண்டு. அரசியல் தலைமை தடுமாறும்போது அதிகாரிகளும் தடுமாறுகிறார்கள்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக காமராசர் இருந்தபோது கல்வித்துறையில் எல்லோருக்கும் இலவசக் கல்வி சீருடை, மதிய உணவு ஆகியவை அளிக்கப்படவேண்டும் என்றும், மின்துறையில் மின்வசதி இல்லாத கிராமம் இருக்கக்கூடாது என்றும் கொள்கை வகுத்தார். அதை நிறைவேற்றும் பொறுப்பை நெ.து. சுந்தரவடிவேலு, அப்பாத்துரை ஆகிய இரு நேர்மையான அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். காமராசரின் திட்டத்தை அவர்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தினார்கள். இதன் விளைவாக தமிழகத்தில் புரட்சிகரமான மாற்றங்கள் உருவாயின. காமராசர் கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரராக இருந்ததாலும் தனது கொள்கைகளை செயல்படுத்தத் தக்க அதிகாரிகளை நியமித்து வேலை வாங்கியதாலும் அவரது ஆட்சிக்காலம் பொற்காலமாகத் திகழ்ந்தது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பிரதமரின் ஆலோசனையையும் மீறி அமைச்சர் இராசா செயல்பட்டதை உச்சநீதிமன்றமே கண்டித்துள்ளது. இந்த நிலைமை உருவானதற்கு இராசாவின் துணிவு மட்டும் காரணமல்ல. பிரதமர் மன்மோகன்சிங்கின் பலவீனமான தலைமையும் காரணமாகும். தனது அறிவுரையை மீறிச் செயல்படத் துணிந்த இராசாவை பிரதமர் நீக்கியிருந்திருப்பாரானால் இந்த ஊழலைத் தடுத்திருக்க முடியும். மத்தியில் மட்டுமல்ல மாநில அரசுகளில் நடைபெறும் தவறுகளையும் தடுத்து திருத்தவேண்டிய கடமையும் பொறுப்பும் பிரதமருக்கு உண்டு. எல்லாவற்றையும் மெளனமாகப் பார்த்துக்கொண்டு செயலற்றுக்கிடக்கும் பிரதமரின் போக்குதான் அடுக்கடுக்கான ஊழல்கள் வளர்வதற்குக் காரணமாகும். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பி.ஜே. தாமசை ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கவேண்டிய பரிதாபகரமான சூழ்நிலைக்கு பிரதமர் ஆளானார். இதற்குக் காரணம் என்ன? அவரை ஆட்டுவித்தப்படியெல்லாம் ஆட்டுவிக்கும் சக்தி எது?
பிரதமர் மன்மோகன்சிங் முழுமையாக சோனியாவைச் சார்ந்து நிற்கிறார். காங்கிரஸ் தலைவியான சோனியாவோ தனது செயலாளர்களான ஜார்ஜ் அகமதுபடேல் போன்றவர்களைச் சார்ந்து நிற்கிறார். அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல் தலைவர்களின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்படுகின்றன.
பதவி நாற்காலியை அலங்கரிப்பதற்காக மட்டும் பிரதமர் இருக்கக்கூடாது. தனது நிழலில் நடைபெறும் ஊழல்களை அனுமதிப்பதும், பார்த்தும் பாராமுகமாக இருப்பதுமே பெரும் ஊழல் ஆகும். இப்படி அவமானங்களைச் சுமந்து கொண்டும், ஊழல் முடை நாற்றத்தைச் சகித்துக்கொண்டும் பதவியில் தொடர்வைதைவிட விலகிவிடுவது மன்மோகன் சிங்குக்குப் பெருமைதரும்.