நச்சுவட்டத்திற்குள் மூச்சுத் திணறும் சனநாயகம் அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011 17:41
''இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகே சனநாயக ஆட்சி மலர்ந்தது எனக்கூறுவது சரியல்ல. அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா சனநாயகப் பாதையில் நடைபோடத் தொடங்கிவிட்டது. இவ்வளவு தூரம் வந்த பிறகு அதிலிருந்து திரும்பிபோக முடியாது'' என வரலாற்று அறிஞரான கே.எம். பணிக்கர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் கே.எம். பணிக்கரின் கூற்றினை பொய்யாக்கும் வகையிலும் சனநாயகத்தை சீரழிக்கும் முறையிலும் நாடெங்கும் பல்வேறு கட்சிகள் திட்டமிட்டு செயல்படுகின்றன. இந்த நிலைமை தொடருமானால் சனநாயகம் அழிந்து சந்தர்ப்பவாதம் ஓங்கி இறுதியில் சர்வாதிகாரம் தலைதூக்கும் அபாயம் நமது தலைக்குமேல் தொங்குகிறது.
நாம் பிரிட்டிசு நாடாளுமன்ற சனநாயக முறைகளை பின்பற்றி வருகிறோம்.
இந்த முறையின் முக்கிய அடிப்படைகள் கீழ்க்கண்டவையாகும்:
1. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் மூலம் சட்டங்கள் இயற்றப்படுதல்.
2. நாடாளுமன்றத்திற்கு பதில்கூறவேண்டிய பொறுப்பு வாய்ந்த அரசு.
3. சட்டத்தின் ஆட்சி
4. அனைவருக்கும் நீதி
5. அனைவருக்கும் முழுமையான கருத்துரிமை, பேச்சுரிமை, சங்கங்கள் அமைக்கும் உரிமை.
6. அதிகார வர்க்கத்தின் தலையீட்டிலிருந்து பாதுகாப்பு.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பிரதமர் ஜவஹர்லால் நேருவும் பிற தலைவர்களும் இந்த மேற்கத்திய சனநாயக நெறிகளை அப்படியே பின்பற்றினார்கள். நல்ல முன்மாதிரியான மரபுகளை உருவாக்கினார்கள். நேருவின் சமகாலத்தில் வாழ்ந்த பிற ஆசிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சனநாயக நெறிகளைப் புறக்கணித்துவிட்டு, சர்வாதிகாரிகளாக உருவெடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எடுத்துக்காட்டாக இந்தோனேசியாவின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தி வெற்றிபெற்ற சுகர்ணோ அவர்கள் அந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் சாகும்வரையில் சுகர்ணோவே அந்நாட்டின் குடியரசுத் தலைவராக விளங்குவார் என்பதை இடம்பெறச் செய்தார்.
இந்தியாவின் முடிசூடாத மன்னராகப் போற்றப்பட்ட சவஹர்லால் நேரு விரும்பியிருந்தால் சுகர்ணோவைப் போலவே செய்திருக்க முடியும். அதை எதிர்ப்பதற்கு அப்போதும் யாரும் இல்லை. ஆனால் சனநாயகத்தில் ஆழமான நம்பிக்கைக் கொண்ட அவர் அவ்வாறு செய்ய விரும்பவில்லை.
வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த நேரு விரும்பியபோது வைஸ்ராயான மவுண்ட்பேட்டன் உட்பட முக்கியத் தலைவர்கள் பலரும் திடுக்கிட்டார்கள். அறியாமை நிறைந்த மக்களுக்கு இந்த உரிமையை வழங்குவது ஆபத்தானது என எச்சரித்தனர். ஆனால் நேரு தனது முடிவில் உறுதியாக இருந்து வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கினார். அவரே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத் நாடாளுமன்ற வாக்காளர்களைச் சந்தித்து வாக்களிக்கும்படி வேண்டி வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
இந்தியாவில் சனநாயகம் வேரூன்றியதற்கு நேரு மட்டுமல்ல எதிர்க்கட்சி வரிசையில் அப்போதிருந்த பல தலைவர்களும் காரணமானவர். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களான எஸ்.ஏ. டாங்கே, புபேஷ்குப்தா, ஏ.கே. கோபாலன், ஹிரேன் முகர்ஜி, இந்திரஜித் குப்தா, சோசலிஸ்டுக் கட்சித் தலைவர்களான அசோக் மேத்தா, இராம் மனோகர் லோகியா, கிருபாளினி, சுதந்திரக் கட்சித் தலைவர்களான என்.ஜி. இரங்கா, பிலுமோடி, எம்.ஆர். மசானி மற்றும் டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி, எச்.வி. காமத் போன்ற பல தலைவர்கள் நாடாளுமன்ற விவாதங்களில் பங்கெடுத்துக்கொண்டு அதன் தரத்தை உயர்த்தினார்கள்.
நாட்டில் மட்டுமல்ல தங்கள் கட்சிகளிலும் சனநாயகம் தழைக்க இவர்கள் உதவினார்கள்
சுதந்திர இந்தியாவில் நேரு அமைத்த அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேராதவர்களான ஆர்.கே. சன்முகம் செட்டியார், அம்பேத்கர், என்.ஜி.கோபாலசாமி அய்யங்கார், ஜான் மத்தாய், சியாம பிரசாத் முகர்ஜி, சி.டி. தேஷ்முக் போன்ற அறிவும் திறமையும் மிக்க பலர் அங்கம் வகித்தார்கள். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இளம் சனநாயக நாடான இந்தியாவின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார்கள்.
நாட்டில் சனநாயகத்தை நிலை நிறுத்துவதில் முக்கிய பங்குவகித்த காங்கிரசுக் கட்சியில் இன்று சர்வாதிகாரச் சாயலும், சந்தர்ப்பவாதமும் படிந்து ஊழல் மலிந்த பணநாயகக் கட்சியாக மாறிவிட்டது.
தமிழக சட்டமன்றத்திற்கு பாரம்பரியமான பெருமை உண்டு. இராஜாஜி சத்தியமூர்த்தி, காமராசர், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, பக்தவத் சலம், சி. சுப்பிரமணியம், பி.டி. இராசன், பிரகாசம், தென் னட்டி விசுவநாதன், பி. இராமமூர்த்தி, ஜீவானந்தம், முகமது இஸ்மாயில், உ. முத்துராமலிங்கத் தேவர், சி.என். அண்ணாத் துரை போன்ற பல தலைவர்கள் இம்மன்றத்தில் அங்கம் வகித்து சனநாயகப் பயிர் செழித்து வளர உதவினார்கள்.
இந்தியாவில் இருக்கும் பல்வேறு சட்டமன்றங்களுக்கு முன்மாதிரியான சட்டமன்றமாக தமிழக சட்டமன்றம் திகழ்ந்தது.
இச்சட்டமன்றத்தில் அங்கம் வகித்த இராஜாஜி, சுதந்திர இந்தியாவின் முதலாவது கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தார். இச்சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்த வி.வி. கிரி, என். சஞ்சீவி ரெட்டி, ஆர்.வெங்கட்ராமன் போன்றவர்கள் இந்தியக் குடியரசுத் தலைவர்களாக உயர்ந்தார்கள்.
இச்சட்டமன்றத்தில் அங்கம் வகித்த பல தலைவர்கள் அகில இந்தியக் கட்சிகளின் தலைவர்களாக உயர்ந்தார்கள். இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக காமராசரும், இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவராக உ. முத்துராமலிங்கத் தேவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக முகமது இஸ்மாயில் அவர்களும் பதவி வகித்து தமிழர்களுக்குப் பெருமைத் தேடித்தந்தார்கள்.
தமிழக சட்டமன்றத்தில் அங்கம் வகித்து இவர்கள் பெற்ற பயிற்சி பிற்காலத்தில் குடியரசுத் தலைவர்களாகவும், அகில இந்தியக் கட்சிகளின் தலைவர்களாகவும் உயர்ந்து சிறப்பாகச் செயற்பட வழிவகுத்தது.
இந்தத் தலைவர்கள் அங்கம் வகித்தபோது தமிழக சட்டமன்றத்தில் நடவடிக்கைகளும் விவாதங்களும் தரம் உயர்ந்தவையாக இருந்தன. கருத்துக்கு கருத்து மோதியதே தவிர தனிநபர் மோதல்கள் இடம்பெறவில்லை.
ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சியின்போது காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தது. அப்போது கண்ணியமான வகையில் சட்டமன்ற நடவடிக்கைகள் நடைபெற்றன.
1937ல் தொடங்கி பிறகு 1967 வரை இடையில் சிறிது காலம் தவிர பெரும்பாலான காலத்தில் காங்கிரஸ் ஆளுங்கட்சியாக விளங்கியது. அப்போது எதிர்க்கட்சிகளாக பல கட்சிகள் திகழ்ந்தன. சபை நடவடிக்கைகள் அனைவரையும் கவர்ந்தன.
ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது கம்யூனிஸ்டுக் கட்சி முக்கிய எதிர்க்கட்சியாகத் திகழ்ந்தது. காமராசர் முதலமைச்சரானபோது காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சி, தி.மு.க. கம்யூனிஸ்டுக் கட்சி போன்றவை எதிர்க்கட்சிகளாக இருந்தன. 1967க்குப் பிறகு அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது காங்கிரஸ் எதிர்க்கட்சியாக விளங்கிற்று. சபை நடவடிக்கைகளில் ஒருபோதும் கூச்சலோ குழப்பமோ இல்லை.
ஆனால் தி.மு.க. சார்பில் கருணாநிதி முதலமைச்சரானபோது காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் எத்தகைய கலாட்டாவும் இல்லை. ஆனால் 1972க்குப் பிறகு தி.மு.க. ஆளுங்கட்சியாகவும், அதிலிருந்து பிரிந்த அ.தி.மு.க. எதிர்க்கட்சியான பிறகுதான் சபையில் கூச்சலும் குழப்பமும் தினந்தோறும் அன்றாட நடவடிக் கைகள் ஆகிவிட்டன. சட்டமன்ற விவாதத்தின்போது
ஙன்ற்ன்ஹப் ஆcழ்ண்ம்ர்ய்ண்ர்ன்ள் க்ங்bஹற்ங் கூடாது என்பது மரபாகும். ஆனால் தி.மு.க. ஆளுங்கட்சியாகவும் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாகவும் ஆன பிறகும் அ.தி.மு.க. ஆளுங்கட்சியாகவும் தி.மு.க. எதிர்க்கட்சியாக ஆன பிறகும் சபை விவாதங்களின் தரம் தாழ்ந்து தனிநபர் தாக்குதல்களும் வெளிநடப்புகளும், கை கலப்புகளும், செருப்பு வீசுதல் போன்றவையும் நடைபெறத் தொடங்கிவிட்டன.
இதனால் மிகுந்த பொருட்செலவில் நடத்தப்பெறும் சட்டமன்றத்தின் நேரம் வீணாக்கப்படுகிறது. மக்கள் பிரச்சினைகளைக் குறித்து விவாதிப்பதற்கு பதில் தனிப்பட்ட மோதல்களுக்கு இடமளிக்கப்பட்டுவிட்டது.
வடஇந்திய மாநிலத் தேர்தல்களில் குண்டர்களின் அச்சுறுத்தல், தேர்தல் சாவடிகளைக் கைப்பற்றுதல் போன்றவை சர்வசாதாரணமானவை. ஆனால் தமிழகத் தேர்தல்களில் இத்தகையத் தீமைகளுக்கு இதுவரை இடமில்லாமல் இருந்தது. ஆனால் இப்போது?
திருமங்கலம் துணைத் தேர்தலில் புதிய வியூகம் வகுக்கப்பட்டது. கிராமம் கிராமமாக திருமணம், காதணி விழா போன்றவை போலியாக நடத்தப்பட்டு வாக்காளர்களுக்கு அறுசுவை விருந்தளிக்கப்பட்டு, கையில் பணமும் கொடுக்கப்பட்டது. பணம் வழங்கும் வேலையை காவல்துறையே செய்தது. எதிர்க்கட்சி வேட்பாளரின் தொண்டர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். தேர்தல் சாவடிகள் தி.மு.க. குண்டர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டன. இன்னும் பல தகாத செயல்கள் புரிந்து வெற்றிபெறவேண்டிய நிலைக்கு தி.மு.க. ஆளாகியது. இந்த புதிய தேர்தல் சூத்திரத்தை வகுத்தவர் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் அழகிரி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகமெங்கும் திருமங்கலம் வியூகம் பல துணைத் தேர்தல்களில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்தப் பொதுத் தேர்தலிலும் திருமங்கலம் பாணியே கடைப்பிடிக்கப்படும் என்பதிலே சந்தேகமில்லை.
இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான கோபால்சாமி ஒரு முக்கியக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
'கடந்த 2006க்கு முன் வரை தேர்தலில் முறைகேடுகள் அதிகமான மாநிலங்களின் பட்டியலில் பீகார், உத்திரப்பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்கள் முதல் இரண்டு இடங்களில் இருந்தன. ஆனால் 2006க்குப் பிறகு இந்தப் பட்டியலில் பீகார், உத்திரபிரதேச மாநிங்களைப் பின்னுக்குத் தள்ளி தமிழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
சனநாயகத்தை நிலை நிறுத்துவதிலும் ஒட்டுமொத்த முன்னேற்றத்திலும் இந்தியாவில் முதன்மை இடத்தை வகித்து வந்த தமிழகம் இப்போது தேர்தலில் முறைகேடுகள் செய்வதில் முதன்மையாக இருக்கிறது என தேர்தல் தலைமை ஆணையர் குறிப்பிடும் அளவுக்கு நிலைமை சீர்கேடு அடைந்துள்ளது கண்டு. ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
கொள்கை அடிப்படையிலோ அல்லது சாதனைகள் அடிப்படையிலோ மக்களிடம் வாக்குகளை பெறமுடியாத நிலையில் பணத்தையும் அதிகாரத்தையும் பிற முறைகேடுகளையும் நம்பி வெற்றிபெறவேண்டிய அவசியம் உருவாகிவிட்டது.
இந்திய அரசியல் சட்டத்தை வகுத்த பெரிய தலைவர்கள் நமது நாட்டிற்கு ஏற்றது நாடாளுமன்ற சனநாயக முறையே எனத் தீர்மானித்தார்கள். ஆனால் இன்று சனநாயக முறைகள் கேலிக்கூத்தாக்கப்பட்டுவிட்டன. பதவியை வைத்து பணத்தைத் திரட்டுவது, பணத்தை வீசி பதவியைக் கைப்பற்றுவது என்ற நச்சு வட்டத்திற்குள் சனநாயகம் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது. நச்சுவட்டத்தில் இருந்து அது விடுபட்டு வெளிவருமா? அல்லது இறுதிமூச்சை விடுமா? என்ற கேள்விக்குறி அனைவரையும் குடைகிறது. இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் வாக்காளர்களையே சார்ந்ததாகும். வாக்காளர்கள் கடமை தவறினால் சனநாயகம் அழிந்து பணநாயகம் தலைதூக்கும்.