படரும் பாசிச சர்வாதிகாரம்! அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011 19:20
லிபியாவின் சர்வாதிகாரியாக 42 ஆண்டுகள் கோலோச்சிய கடாபி படுகொலை செய்யப்பட்டு, அந்நாட்டில் புரட்சிக்காரர்களின் கை ஓங்கியிருக்கிறது.
லிபியாவில் மட்டுமல்ல மத்திய கிழக்கு நாடுகளில் சர்வாதிகாரிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சிகள் வெடித்துக் கிளம்பிய வண்ணம் உள்ளன. சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்களின் போராட்டங்களுக்குப் பின்னணியில் அமெரிக்காவின் கைவரிசையும் இருக்கிறது என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.
இந்நாட்டில் உள்ள எண்ணெய் வளங்களைக் குறிவைத்து அமெரிக்காவும் இப்போராட்டங்களை ஊக்குவிக்கிறது. ஆனாலும் சர்வாதிகாரிகளின் இரத்த வெறிபிடித்த ஊழல்மயமான ஆட்சிக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுகிறார்கள் என்பது அதைவிட மகத்தான உண்மையாகும்.
எகிப்தில் அதிபர் முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடந்து அதன் விளைவாக அவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். சிரியாவிலும் அதிபர் பசார்-அல்-ஆசாத், ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே ஆகியோருக்கு எதிராக மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இவர்களின் ஆட்சிகளும் முடிவுக்கு வரும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
உகாண்டா அதிபர் இடிஅமீன், காங்கோ அதிபர் முபுடு செட்கோ, யுகோஸ்லேவிய அதிபர் ஸ்லோபோடன் மிலோசெவிக், பிலிப்பைன்சு அதிபர் பெர்டினான்டு மார்கோஸ் போன்ற பல சர்வாதிகாரிகளின் ஆட்சிகள் மக்களால் ஏற்கெனவே வீழ்த்தப்பட்டுள்ளன.
சர்வாதிகாரிகளின் ஆட்சிகளில் முதலில் பலியாவது சனநாயகம்தான். அது மட்டுமல்ல சர்வாதிகாரமும் ஊழலும் ஒட்டிப்பிறந்த சகோதரப் பிறவிகள்.
பிரான்சில் 14ஆம் லூயி மன்னரின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. மன்னன் மற்றும் அரசியின் தலைகள் கில்லட்டினில் வெட்டப்பட்டன. ஆனால் மன்னர் ஆட்சியை வீழ்த்தியப் பிறகு உண்மையான சனநாயக ஆட்சி மலரவில்லை. இதன் விளைவாக நாட்டில் பெரும் குழப்பமும் கொந்தளிப்பும் மூண்டன. இதன் விளைவாக நெப்போலியன் என்ற சர்வாதிகாரி தோன்றி ஆட்சியைக் கைப்பற்றினார். தொடர்ந்து பல போர்களை பிரான்சு மட்டுமல்ல ஐரோப்பாவே சந்திக்க நேர்ந்தது. பேரழிவு தொடர்ந்தது.
இரஷ்யாவில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக லெனின் தலைமையில் புரட்சி வெடித்தது. இந்தப் புரட்சி உலகத்தையே புரட்டிப்போட்டு திருத்தியமைக்கப்போகும் புரட்சி எனக்கருதிய பாரதி இதை யுகப்புரட்சி என வருணித்தான். பிரஞ்சுப் புரட்சியின் பாடத்தை நன்கு உணர்ந்திருந்த லெனின் மக்களின் துயரம் துடைப்பதில் முழு கவனம் செலுத்தி மக்களாட்சியை மலரச்செய்தார். அவர் ஒரு போதும் சர்வாதிகாரியாக விரும்பியதுமில்லை. எண்ணிப்பார்த்ததுமில்லை.
ஏகாதிபத்திய ஆட்சிகளையோ மன்னர் ஆட்சிகளையோ எதிர்த்துப் போராட சனநாயக ரீதியில் மக்களைத் திரட்டி அப்போராட்டத்திற்குத் தலைமை தாங்குபவர்கள் போராட்டத்தில் வெற்றிபெற்றவுடன் மக்களால் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் பதவி போதையில் மக்களை மறந்து மதோன்மத்தர்களாக மாறுகிறார்கள். இவர்கள் தொடங்கிய கட்சிகளில் சனநாயகம் சாகடிக்கப்படுகிறது. சர்வாதிகாரம் தலை தூக்குகிறது. அதன் தொடர்ச்சியாக ஆட்சியிலும் சர்வாதிகாரம் படர்கிறது.
ஜெர்மனியில் இட்லரின் நாஜிக் கட்சியில் சனநாயகம் மருந்துக்குக்கூட இருந்ததில்லை. எனவே இட்லர் ஆட்சி பீடம் ஏறியபோது சர்வாதிகாரியானார் விளைவு உலகப் போர் மூண்டது. அப்போரில் ஜெர்மனியும் அழிந்தது. ஐரோப்பா சுடுகாடாயிற்று.
அதே காலக்கட்டத்தில் இத்தாலியில் முசோலினியின் ஃபாசிச ஆட்சி ஏற்பட்டது. அந்த மக்களுக்கும் அதே கதிதான் நேர்ந்தது.
இட்லர், முசோலினி ஆகியோரைத் தங்களது வழிகாட்டிகளாகக் கொண்டு கடாபி போன்றவர்கள் இயங்கினார்கள். தங்களின் வழிகாட்டிகளைப் போலவே இவர்களும் தங்கள் மக்களைச் சொல்லொண்ணாத துன்பங்களுக்கு ஆளாக்கிவிட்டுத் தாங்களும் இரத்தக் களரியில் சிக்கி உயிரிழந்தார்கள். வரலாறு கற்பித்த இந்தப் பாடத்தை மறந்தவர்கள் அதற்குரிய தண்டனையை அடைந்தார்கள்.
ஏகாதிபத்திய ஆட்சிகளிலிருந்து விடுதலைப் பெற, போராடிய பல தலைவர்கள், தங்களுடைய நாடுகள் விடுதலைப் பெற்றப் பிறகு சனநாயகத்தை நிலைநிறுத்தவும் பாடுபட்டார்கள். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேரு 17 ஆண்டுகாலம் அந்தப் பதவியில் யாராலும் அசைக்க முடியாதபடி வீற்றிருந்தார். மக்கள் அவர் மீது அன்பு மழை பொழிந்தனர். அவர் விரும்பியிருந்தால் சர்வாதிகாரியாகியிருக்க முடியும். ஆனால் அவருக்கு நாடாளுமன்ற சனநாயகத்தில் அளவுகடந்த நம்பிக்கை இருந்தது. அதன் விளைவாக இந்தியாவில் சனநாயகம் ஆழமாக வேரூன்றியது.
நேருவின் சமகாலத்தில் வாழ்ந்த இந்தோனேசிய அதிபர் சுகர்ணோ போன்றவர்கள் தங்கள் நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்தியபோதிலும், சனநாயகத்தில் நாட்டம் கொள்ளவில்லை. இந்தோனோசியாவின் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டபோது சுகர்ணோ உயிருள்ளவரை அவர்தான் அந்நாட்டின் அதிபர் என்பது சட்டமாக்கப்பட்டது. அத்தகைய நிலை இந்தியாவில் தனது காலத்தில் வந்துவிடக்கூடாது என்பதில் நேரு மிக எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருந்தார்.
ஆனால், அவருக்குப் பிறகு அவரது மகள் இந்திரா பிரதமர் ஆன பிறகு சர்வாதிகாரப் போக்கு தலைதூக்கி மெல்லமெல்ல வளர்ந்தது. தனது விருப்பத்திற்கு வளைந்துகொடுக்க மூத்தத் தலைவர்கள் மறுத்தக் காரணத்தினால் காங்கிரஸ் கட்சியையே இரண்டாக உடைக்கவும் இந்திரா தயங்கவில்லை. இந்திராவின் தலைமையில் காங்கிரஸ் கட்சி சர்வாதிகாரத்திலும் வாரிசு உரிமையிலும் கட்டுண்டது. இன்னமும் அதிலிருந்து அக்கட்சியால் மீளமுடியவில்லை.
தனது ஆட்சியின் மீதான எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களைக் கண்டு வெகுண்ட இந்திரா 1975ஆம் ஆண்டில் அவசர நிலையை முதன்முதலாகக் சுதந்திர இந்தியாவில் கொண்டு வந்து, முழுமையான சர்வாதிகாரியானார். ஆனால் ஜெயப்பிரகாசு நாராயண் தலைமையில் மக்கள் போராட்டம் வெடித்து சர்வாதிகாரத்தை முளையிலேயே கிள்ளியெறிந்தது. மீண்டும் சனநாயகம் தழைத்தது. இந்திராவும் தனது தவறை உணர்ந்து மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார்.
ஆனாலும், காங்கிரஸ் கட்சிக்குள் இந்திராவினால் அழிக்கப்பட்ட சனநாயகம் மீண்டும் எழமுடியவில்லை. சனநாயக ரீதியில் அந்தக் கட்சி இயங்கவும் முடியவில்லை. இந்திராவுக்குப் பிறகு சனநாயக ரீதியில் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சியினால் முடியவில்லை. அரசியலில் அனுபவமோ, ஆட்சித்திறமையோ சிறிதும் இல்லாத இராசீவ் காந்தி, இந்திராவின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக பிரதமராக வந்தார். கட்சித் தலைவராகவும் பதவியேற்றார். அவருக்குப் பின் அரசியலுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் போனாலும் அவரின் மனைவி என்ற ஒரே தகுதியினால் சோனியா காங்கிரஸ் தலைவரானார். அவரைத் தொடர்ந்து வாரிசாக ராகுல் உருவாகிக்கொண்டிருக்கிறார். தியாகப் பாரம்பரியம் மிக்கத் தலைவர்கள் வகித்த காங்கிரஸ் தலைமை பதவியின் மாண்பு சீர்குலைக்கப்பட்டுவிட்டது.
இதன் விளைவாக பல கட்சிகளிலும் உட்கட்சி சனநாயகம் சாகடிக்கப்பட்டு சர்வாதிகாரத் தலைமையும் வாரிசு அரசியல் உரிமையும் பரவிவிட்டன. பல கட்சிகள் சில குடும்பங்களின் கட்டுப்பாட்டுக்குள் இன்னமும் திணறுகின்றன.
ஆனாலும் அந்தந்தக் கட்சிக்குள் இது ஏன் என்றோ, இது கூடாது என்றோ குரல் எழுப்ப யாரும் இல்லாமல் அனைவருமே ஆமைகளாய், ஊமைகளாய் அடங்கிக் கிடக்கின்றனர். சனநாயகத்திற்கு இது பெரும் கேடாகும்.
அரசியல் கட்சிகளிடையே பரவிவிட்ட சர்வாதிகாரப் போக்கின் விளைவாக, நாட்டில் ஃபாசிசம் படர்ந்துள்ளது. இந்தப் போக்கு முடிவில் ஆட்சியிலும் சர்வாதிகாரம் நிலைபெறுவதற்கு வழிவகுத்துவிடும் என்பதில் ஐயமில்லை.
ஆசியாவில் மிகப்பெரிய சனநாயக நாடாக இந்தியாவை உலகம் கருதுகிறது. ஆனால், இங்கு சனநாயகத்திற்கு நேர்ந்துவிட்ட ஊனம் உலகிற்கு இன்னும் தெரியவில்லை. கட்சிகளில் குடிகொண்டுவிட்ட சர்வாதிகாரப் போக்கின் விளைவாக சனநாயகத்தின் குரல் வளையை நெறிப்பதற்கான ஒடுக்குமுறைச் சட்டங்கள் பெரும்பாலான கட்சிகளின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்டு மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன. உரிமைகள் கோரி மக்கள் நடத்தும் போராட்டங்கள் ஈவு இரக்கம் இல்லாமல் ஒடுக்கப்படுகின்றன.
சர்வாதிகாரச் சாயல் படிந்துவிட்ட ஆட்சியில் பதவியில் இருப்போர்கள் கொஞ்சமும் அஞ்சாமல் பெரும் ஊழல்களில் துணிவாக ஈடுபட்டு வருகின்றனர். தங்களை யாரும் எதுவும் கேட்க முடியாது எனக் கருதி நாட்டின் வளங்களைச் சூறையாடுகின்றனர்.
கடாபியும், இடி அமீனும், மிலோசேவிக்கும், மார்கோசும் மக்களை மதியாதப் போக்கில் செயல்பட்டு நாட்டையே ஊழல் காடாக்கினார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மக்கள் கொதித்தெழுந்ததின் விளைவாக இந்த சர்வாதிகாரிகள் வீழ்ந்தனர்.
ஏற்கனவே இந்தியாவைச் சுற்றியுள்ள பல நாடுகளில் சனநாயகம் அழிந்து, சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகிறது. பாகிஸ்தானில் நீண்ட காலமாக இராணுவ சர்வாதிகார ஆட்சி நீடித்தது. அண்மையில்தான் மக்கள் போராட்டத்தின் விளைவாக ஓரளவு சனநாயக ஆட்சி மலர்ந்தாலும், இராணுவத்தின் கை ஓங்கியே உள்ளது. மற்றொரு அண்டை நாடான பர்மாவில் சனநாயக ஆட்சி வீழ்த்தப்பட்டு இராணுவ சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டு நெடுங்காலமாகிறது. இலங்கையில் இனப்படுகொலை செய்யும் சர்வாதிகார ஆட்சி வெறிக்கூத்தாடுகிறது. உலகக் கண்டனத்தைக் கண்டு அது கொஞ்சமும் கூசியதாகவே அஞ்சியதாகவோ தெரியவில்லை. இந்த சர்வாதிகார ஆட்சிகளுடன் இந்திய அரசும் கூடிக்குலவுகிறது.
அந்நிய ஆட்சிலிருந்து இந்த நாடு விடுதலைப் பெற உயிர்த்தியாகம் செய்து இரத்தம் சிந்தி போராடிய தியாகத் தலைவர்கள் தங்களின் செந்நீரைச் சிந்தி சனநாயகப் பயிரையும் வளர்த்தனர். ஆனால் இன்று சனநாயகப் பயிர் கொஞ்சம் கொஞ்சமாகக் கருகிக்கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.
சனநாயகம் அழிந்து சர்வாதிகாரம் தலை தூக்குமானால் லிபியா போன்ற நாடுகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அந்த மக்கள் சொல்லொண்ணாத கொடுமைகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகி நலிந்த நிலை இந்தியாவிலும் ஏற்படும் என்பதை எண்ணிப் பார்த்து சர்வாதிகாரப் போக்கு நாட்டிலும், கட்சிகளிலும் தலைதூக்குவதை முளையிலேயே கிள்ளியெறிய மக்கள் முன்வரவேண்டும்.