முதல்வர்கள் உயர்த்திய போர்க்கொடி அச்சிடுக
வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012 19:47
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களின் அறிவிப்பு பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 10 மாநிலங்களின் முதலமைச்சர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர்களைத் தவிர வேறு யாரும் இதற்கு ஆதரவாகத் இல்லை.
எதிர்க்கட்சிகளான பா.ஜ.க., இடதுசாரிக் கட்சிகள், தெலுங்கு தேசம் போன்றவையும் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ், காஷ்மீர் தேசிய மாநாடு போன்றவையும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத் திட்டத்தின் ஞானத் தந்தையாக ப. சிதம்பரம் அவர்களைக் கருத முடியாது. அமெரிக்காவில் இதுபோல் அமைக்கப்பட்டதை அப்படியே பின்பற்றி இத்திட்டத்தை அவர் இங்கு கொண்டுவந்திருக்கிறார். ஆனால் யாரையும் நேரடியாகக் கைது செய்யும் அதிகாரம் அமெரிக்க அமைப்புக்குக் கிடையாது. ஆனால் இந்திய மையத்திற்கு அந்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த மையம் அதிகாரம் பெறுகிறது. மத்திய உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் இது இயங்கும். மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்க வேண்டிய தேவை இந்த மையத்திற்கு கிடையாது. மார்ச் 1 ஆம் தேதியிலிருந்து இது செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தேசியப் பாதுகாப்புச் சட்டம்#இந்தியப் பாதுகாப்புச் சட்ட விதிகள், தடுப்புக் காவல் சட்டம், தடாச் சட்டம், பொடாச் சட்டம் போன்ற பல கொடுமையான சட்டங்கள் இருந்த போதிலும் அவற்றின்மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்கமுடியவில்லை என்று இந்தப் புதிய ஏற்பாட்டை செய்யுமானால் மத்திய அரசு மீண்டும் மீண்டும் தவறு செய்கிறது என்பதுதான் பொருளாகும்.
எதிர்க்கட்சிகளும் 10 மாநில முதல்வர்களும் இந்த மையம் மாநில உரிமைகளைப் பறிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளனர். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறைகள் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் கேட்கும் அனைத்துத் தகவல்களையும் ஆவணங்களையும் அளிக்க வேண்டும். மையத்தின் அதிகாரிகளுக்கு மாநிலத்தின் எந்த இடத்திலும் சோதனை செய்யவும் சந்தேகத்தின் பேரில் யாரையும் கைது செய்யவும் அதிகாரம் உண்டு. இதற்கு மாநில அரசுகளின் சம்மதம் பெறவேண்டிய தேவை இல்லை. மாநிலங்களில் தனியாக உளவுப் பிரிவுத் துறை துணைக் குழுக்களை அமைத்துக்கொள்ளும் அதிகாரம் இந்த மையத்திற்கு உண்டு. பயங்கரவாதிகள் எனக் கருதப்படுவோரைக் கைது செய்வது, அவர்களிடம் உள்ள பொருட்களைப் பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் முன்பு மத்திய உள்துறை இணைச் செயலாளர் மற்றும் மாநில அரசின் உள்துறைச் செயலாளருக்கு இருந்தது. இப்போது அந்த அதிகாரம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு. பயங்கரவாத மையத்தில் உள்ள உளவுப்பிரிவு அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு குறித்த அதிகாரம் மாநில அரசுகளைச் சேர்ந்தது என நமது அரசியல் அமைப்புச் சட்டம் தெளிவாக வரையறுத்துள்ளது. ஆனால் இதில் மத்திய அரசு தலையிட்டு ஆதிக்கம் செலுத்தும் வகையில் இந்த மையம் உருவாக்கப்படுகிறது. மார்ச் முதல் தேதி முதல் இந்த மையம் செயல்படத் தொடங்கும் என்ற தகவலைக்கூட மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்குத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மாநில உரிமைகள் துச்சமாக மதிக்கப்படுகின்றன என பத்து மாநில முதல்வர்கள் குற்றம் சாட்டும் அதே வேளையில் மத்திய உள்துறைச் செயலாளர் ஆர்.கே.சிங் அவர்களை மேலும் அவமதிப்பது போல "தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் குறித்து கெசட்டில் வெளியிடுவதற்கு முன்பாக மாநில அரசுகளை கலந்தாலோசிக்க வேண்டிய தேவையில்லை' என இறுமாப்பாக 18#10#12 அன்று கூறியுள்ளார்.
ஆனால் மறுநாள் கல்கத்தாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மாநில முதல்வர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் "நாட்டின் பாதுகாப்பு மத்திய # மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பாகும். அரசியல் சட்டத்தின் 355ஆவது பிரிவு இதை வலியுறுத்துகிறது. பயங்கரவாதத்தை நசுக்குவதற்கு மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு'' என கூறியிருக்கிறார். அதற்கு இரண்டு நாட்கள் கழித்து 21#2#12 அன்று பிரதமர் மன்மோகன் சிங் "இந்த மையத்தின் மூலம் மாநிலங்களின் உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்படாது. மாநில முதல்வர்களுடன் பேசுமாறு உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்' என்று கூறியிருக்கிறார்.
பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் முதலிலேயே மாநில முதல்வர்களை அழைத்துப் பேசி அவர்களின் சம்மதம் பெற்று இத்திட்டத்தை அறிவித்திருப்பார்களானால் இவ்வளவு சர்ச்சையும் வந்திருக்காது. ஆனால், மாநில முதல்வர்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட உள்துறை செயலாளரைக் கண்டித்து ஒரு வார்த்தைக் கூட இருவரும் பேசவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கதாகும்.
ஜவஹர்லால் நேரு பிரதமர் ஆக பதவி வகித்தபோது, அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் முதல்வர்களே பதவி வகித்தார்கள். நேரு போன்ற ஒரு பெரிய தலைவரின் வார்த்தையை அவர்கள் ஒருபோதும் மீறமாட்டார்கள். ஆனாலும் தனது கட்சிக்காரர்கள் என்பதைவிட அவர்கள் மாநிலங்களின் முதல்வர்கள் என்பதை உணர்ந்து எப்போதும் அவர்களை மதிப்புடன் பிரதமர் நேரு நடத்தினார். உள்நாட்டு, வெளிநாட்டு முக்கிய பிரச்சினைகள் குறித்து விளக்கி மாதந்தோறும் மாநில முதல்வர்களுக்குக் கடிதங்கள் எழுதுவதை தனது கடமையாக நேரு இறுதிவரை கொண்டிருந்தார். மாநில முதல்வர்களை அடிக்கடி கூட்டிவைத்து கலந்தாலோசனை செய்வதற்காக தேசிய வளர்ச்சிக் குழுவை அமைத்தார். நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் மட்டும் அல்ல மற்ற அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் அந்தக் கூட்டங்களில் மனந்திறந்த விவாதம் நடப்பதற்கு வழிசெய்தார். அதன் மூலம் மாநில முதல்வர்களின் கருத்தோட்டத்தை அவர் தெரிந்துகொண்டார். நேருவைவிட இன்றைய பிரதமரோ உள்துறை அமைச்சரோ பெரியவர்கள் அல்லர்.
பிரதமர் லால்பகதூரின் மறைவுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது. மொரார்ஜி தேசாய், இந்திரா காந்தி ஆகியோர் போட்டியிட்டனர். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் ஒன்றுகூடி இந்திராகாந்திக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதைக் கண்டு கடும் கோபமடைந்த மொரார்ஜி தேசாய், பிரதமர் தேர்தலில் தலையிட மாநில முதல்வர்கள் யார்?' என்ற கேள்விக்கணையை வீசினார். அப்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராசர் தனக்கே உரியமுறையில் அக்கேள்விக்கு நனி நாகரிகத்துடன் பதிலளித்தார். "மாநிலங்கள் இல்லை என்றால் இந்தியா ஏது?' என பொருள் பொதிந்த பதில் கேள்வியின் மூலம் தக்க விடையைத் தந்தார்.
நாட்டின் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் பொறுப்பில் மாநில முதல்வர்களும் பங்கேற்க காமராசர் வழிசெய்தார். இதன் மூலம் இந்திய அரசியலில் மாநில முதல்வர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்தது. இன்றுவரை அது நீடிக்கிறது.
பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசுக்கு பெரும்பான்மையினரின் ஆதரவு கிடையாது. பல்வேறு மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன்தான் அவர் பதவி நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். இந்த உண்மையை மறந்து பேசுவது எதார்த்தத்தை உணராமல் பேசுவது ஆகும்.
தேசியப் பயங்கரவாதத் தடுப்பு மையம் குறித்து மாநில அரசுகளை கலந்தாலோசிக்கத் தேவையில்லை என மத்திய உள்துறைச் செயலாளர் கூறியிருப்பதை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இன்றைக்கு மாநில முதல்வர்களாக இருப்பவர்களில் யாரேனும் ஒருவர் நாளை பிரதமராகவோ உள்துறை அமைச்சராகவோ வரக்கூடும் என்ற உண்மையை மறந்து பேசுவது விபரீதத்திற்கு வழிவகுத்துவிடும்.
அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது என்பதைத் தெரியாமலே பேசுகிற அமைச்சர்களும் அதிகாரிகளும் தில்லியில் இருக்கிறார்கள்.
இந்திய அரசியல் சட்டத்தின் 257#3ஆவது பிரிவு ஒரு மாநிலத்தில் உள்ள இருப்புப் பாதைகளைப் பாதுகாப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதில் மாநில அரசுக்கு உள்ள பங்கு, மத்திய அரசுக்குள்ள அதிகாரம் ஆகியவற்றைப் பற்றியும் கூறுகிறது. இந்தப் பிரிவு குறித்த விவாதம் அரசியல் நிர்ணயச் சபையில் நடைபெற்ற போது சட்ட அமைச்சரான அம்பேத்கர் பின்வரும் விளக்கத்தை அளித்தார் :
"அனைத்து போலிசு அதிகாரங்களும் மாநிலப் பட்டியலில்தான் உள்ளன. எனவே இரயில்வே சொத்துக்களைப் பாதுகாக்கும் கடமை மாநில அரசுக்கு உண்டு. சில வேளைகளில் குறிப்பிட்ட விசயங்களில் இரயில்வே சொத்துக்களைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு விரும்பினால் இது சம்பந்தமான உத்தரவுகளை மாநில அரசுக்குப் பிறப்பிக்கலாம், என்று குறிப்பிட்டார் இதன் மூலம் அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களின் நோக்கம் என்பது மாநிலங்களில் உள்ள மத்திய சொத்துக்களைப் பாதுகாக்கும் கடமை மாநில அரசுகளையே சேர்ந்தது என்பது தெளிவாகிறது.''
மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த இரண்டு அமைப்புகள் இருக்க முடியாது. அதற்கான பொறுப்பு மாநில அரசை மட்டுமே சேர்ந்தது. மத்திய
போலிஸ் ஒரு மாநிலத்தில் நடவடிக்கையில் இறங்குவதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசின் சம்மதத்தைப் பெறவேண்டும். மாநிலங்களின் விருப்பத்தை மீறி மத்திய அரசு தனது
போலிஸ் படையை நாட்டின் எந்தப் பகுதியிலும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க என்ற பெயரில் அனுப்புமானால் அரசியல் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அது தவறானதாகும்.
மிகப்பெரும்பான்மையான மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சிப் பொறுப்பில் உள்ளன என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டுச் செயல்பட மத்திய காங்கிரஸ் அரசு முற்றிலுமாகத் தவறிவிட்டது. 1947 முதல் 1967ஆம் ஆண்டு வரை மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே கட்சியின் ஆட்சி என்பது முடிந்துபோன ஒன்றாகும். இனி எப்போதும் அந்தக் காலம் திரும்பிவரப்போவதில்லை என்ற உண்மையை உணர்வதற்கு காங்கிரஸ் கட்சி பிடிவாதமாக மறுக்கிறது. மாநிலக் கட்சிகளின் தயவுடன்தான் மத்திய ஆட்சியை நடத்த வேண்டிய நிலை இனி ஒருபோதும் மாறப்போவதில்லை என்ற உண்மையை காங்கிரஸ் தலைமை உணரவேண்டும். மாநிலக் கட்சிகள் அந்தந்த மாநிலங்களின் ஆதரவோடுதான் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றன. மத்திய அரசின் தயவில் மாநில முதல்வர்கள் இல்லை. நேரடியாகவோ மறைமுகமாகவோ மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதுகூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும். மாநில முதல்வர்களை மதியாத போக்கில் பிரதமரோ மத்திய அமைச்சர்களோ நடந்துகொள்வது வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும். மத்திய#மாநில மோதலுக்கு வழிவகுக்கும்.
நமது அரசியல் சட்டம் செயலுக்கு வந்து 60 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தடவை அரசியல் சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. மாநிலங்களின் அதிகாரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசு பறித்து வருகிறது. மாநிலங்கள் கேவலம் நகராட்சி அளவுக்குத் தாழ்த்தப்பட்டு மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் நிலை உருவாகிவிட்டது. இதன் விளைவாக மத்திய#மாநில மோதல்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. எனவே நடைமுறையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் முற்றிலுமாகப் பயன்படத் தவறிவிட்டது. 1956ஆம் ஆண்டு மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்படுவதற்கு முன்னால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம் மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னால் அதற்குப் பொருந்துவதாக அமையவில்லை. இதன் விளைவாக மத்திய#மாநில மோதல்கள் வலுத்துக்கொண்டே போகின்றன. இன்று மாறிவிட்ட சமுதாய பொருளாதார மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் நமது அரசியல் அமைப்புச் சட்டம் கூட்டாட்சிச் சட்டமாக அமையவில்லை. எனவே மாறிவரும் தேவைகளுக்கு ஏற்றபடி இந்தச் சட்டத்தை அடியோடு மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.