கசக்கிறது ஆனாலும் காதல் தொடர்கிறது! - பழ. நெடுமாறன் அச்சிடுக
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜூலை 2012 17:36
"உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை வாபஸ் வாங்காவிட்டால் மத்திய கூட்டணி ஆட்சியில் இருந்து விலகத் தயங்க மாட்டோம்'' என 30-5-12 அன்று சென்னையில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி எச்சரித்தார்.
மத்திய அரசுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் அவர் இவ்வாறு பேசியதை தி.மு.க. தொண்டர்கள் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

ஆனால் ஆர்ப்பாட்டம் முடிந்த தும் அறிவாலயத்திற்கு வந்த கருணா நிதி தொலைக்காட்சி நிருபர்களுக்கு அளித்த நேர்காணலில் "மத்திய அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் தாம் பேசவில்லை'' என கூறினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை விட்டு வெளியேறத் தயங்க மாட்டோம் என நீங்கள் சொன்னீர்களே என செய்தியாளர்கள் கேட்டபோது "நான் எங்கே அப்படி சொன்னேன். நீங்களாகவே பொய் யாகக் கேள்வி கேட்கக் கூடாது. மத்திய அரசை விட்டு வெளியேறு வோம் என்று எங்காவது இருக்கிறதா?'' என தான் சற்று நேரத்திற்கு முன்னால் பேசியதை அடியோடு மறுத்துப் பேசினார்.

அது மட்டுமல்ல "விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் வர வுள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நெருக்கடியை கொடுக்கக்கூடிய செயலை நாங்கள் உருவாக்க மாட் டோம். தி.மு.க. கசப்போடு இந்தக் கூட் டணியில் நீடிக்கும் அவ்வளவுதான். நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அல்ல. பெட்ரோலிய விலை உயர் வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்'' என கருணாநிதி அறிவித்தார்.

முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதும், தான் பேசியதையே மறுப்ப தும் அவருக்கே ஆகிவந்த கலை யாகும். இன்று நேற்றல்ல, தொடர்ந்து இதைத்தான் அவர் செய்து வருகிறார். மத்தியில் ஆளுங்கட்சி எதுவோ அதற்கு எதிரான நிலையை அவர் ஒரு போதும் எடுத்ததில்லை. ஆளுங்கட்சி யுடன் கூட்டு சேரவும் மத்திய அரசில் பங்குபெறவும் அளவில்லாத முயற்சி செய்வார். அம் முயற்சி வெற்றிபெறாத நிலையில்கூட மத்திய ஆளுங்கட் சிக்கு எதிர் நிலை எடுக்காமல் இணைந்துபோகக்கூடிய வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பார்.

காங்கிரஸ் எதிர்ப்புணர்வை அடித்தளமாகக் கொண்டு வளர்ந்த தி.மு.க.வை அந்தப் பாதையிலிருந்து திருப்பியவர் கருணாநிதியே ஆவார். 1969ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றபோது. அதிகாரப்பூர்வமான காங்கிரஸ் வேட் பாளரான சஞ்சீவி ரெட்டியை எதிர்த் துப் போட்டி வேட்பாளராக வி.வி. கிரியை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி களம் இறக்கினார். இந்திரா காந்தியின் மத்திய ஆட்சியுடன் இணைந்து செயல்படவேண்டி விரும் பிய கருணாநிதி வலுவில் சென்று கிரிக்கு ஆதரவு தெரிவித்தார். தி.மு.க. வின். வாக்குகளால்தான் கிரி வெற்றிபெற முடிந்தது.

இந்தத் தேர்தலுக்கு முன்னால் பெரியார் கருணாநிதிக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். பார்ப்பன ரான வி.வி. கிரியை எதிர்த்து திராவிட ரான சஞ்சீவி ரெட்டியை ஆதரிக்கும் படி வேண்டினார். எதற்கெடுத்தாலும் பெரியார் வழியில் வந்தவன் என பேசும் கருணாநிதி பெரியாரின் வேண்டுகோளை மதிக்கவில்லை. பிரதமர் இந்திராவின் தயவைப் பெறு வதற்காக எத்தகைய துரோகத்தையும் செய்வதற்கு அவர் தயாராக இருந்தார். மேலும் காமராசரின் ஆதரவு பெற்ற சஞ்சீவி ரெட்டியை தோற்கடிப்பதன் மூலம் தமிழ்நாட்டிலும் அகில இந்திய அரசியலிலும் அவரின் கரத்தை வலு விழக்கச் செய்யலாம் என கருதினார்.

இதைத் தொடர்ந்து 1971ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் திற்கான இடைத்தேர்தலில் இந்திரா காங்கிரசோடு கூட்டு சேர்ந்தார். இப்போதும் காமராசரின் காங்கிரசைத் தோற்கடிக்க இந்திராவிற்கு உதவினார். ஆனாலும் இந்தக் கூடா நட்பு நீண்ட காலம் நீடிக்கவில்லை.

1975ஆம் ஆண்டு பிரதமர் இந்திராகாந்தி அவசர நிலைப் பிரகட னத்தைக் கொண்டுவந்து சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த முயன்றார். அப் போது 1976ஆம் ஆண்டில் கருணா நிதியின் ஆட்சியைப் பதவி நீக்கம் செய்தார். கொடிய மிசா சட்டத்தின் கீழ் கருணாநிதியின் மருமகன் மாறன், மகன் ஸ்டாலின் உட்பட ஏராளமான தி.மு.க. தலைவர்களும் தொண்டர் களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க சர்க்காரியா ஆணையத்தை பிரதமர் இந்திரா அமைத்தார். காங்கிரஸ் கட்சி யோடு கூட்டு சேர்ந்ததன் விளைவாக ஆட்சியையும் பறிகொடுத்தார். கழகத் தோழர்கள் சிறைக்கொடுமைகளை அனுபவிக்கவும் வழிவகுத்தார்.

1977ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் மொரார்ஜி தலைமையில் ஜனதாகட்சியின் ஆட்சி ஏற்பட்டபோது அதனுடன் இணைந்து செயல்பட்டார். சர்க்காரியா ஆணையம் தனக்கு எதிராக அளித்த பரிந்துரைகளின்மீது மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் வகையில் பிரதமர் மொரார் ஜியை எப்படியாவது திருப்திப்படுத்த முயன்றார். இந்த எண்ணத்துடன்தான் 1978ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் தலைவர் இந் திரா காந்திக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை மதுரையிலும் சென்னையிலும் நடத்தினார்.

பொதுவாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் வரும்போது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய கருப்புக் கொடி காட்டுவது சனநாயகத் தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறை யாகும். ஆனால் இந்திரா காந்தி எதிர்க் கட்சியில் இருந்தபோது அவருக்குக் கருப்புக்கொடி காட்ட கருணாநிதி முயற்சி செய்தது. சனநாயக மரபு களுக்கு எதிரானது. ஆனால் அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. இந்திராவிற்கு கடும் எதிர்ப்புக் காட்டு வதன் மூலம் பிரதமர் மொரார்ஜியை திருப்திப்படுத்த முடியும். அதன் விளை வாக சர்க்காரியா கமிசன் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுக்க முடியும் என நம்பினார். இந்த நோக்கத்துடன் மதுரையில் இந்திரா காந்திக்கு எதிராக தனது தொண்டர் களை ஏவினார். அவர்களும் இந்திரா விற்கு எதிரான கொலைவெறித் தாக்கு தலை நடத்தினார்கள் என்பதும். அந்தத் தாக்குதல்களிலிருந்து அவரின் உயிரை நான் பாதுகாத்தேன் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

இவ்வளவும் செய்துவிட்டு மறு ஆண்டே, அதாவது 1979ஆம் ஆண்டில் காங்கிரசுடன் கூட்டுசேர அவர் தயங்கவில்லை. நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்ற முழக்கத்துடன் இந்திராவுடன் கூட்டு சேர்ந்தார். நாடெங்கும் வீசிய இந்திரா அலையின் காரணமாக தி.மு.க.வும் சில இடங்களை நாடாளுமன்றத்தில் பெற் றது. பிரதமர் இந்திராவை வற்புறுத்தி தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பதவி நீக்கம் செய்யவைத்தார். ஆனால் அடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர் தலில் இந்திராவின் கூட்டு இருந்தும் தி.மு.க. வெற்றிபெறவில்லை. மீண்டும் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வரானார்.

1989ஆம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமர் பொறுப்பு ஏற்ற பிறகு அவரு டன் கூட்டுசேர்ந்தார். அவருக்குப் பின் பிரதமர்களாகப் பதவி ஏற்ற தேவ கவுடா, குஜ்ரால் ஆட்சியினருக்கும் ஆதரவாகவே இருந்தார்.

1998ஆம் ஆண்டு அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்ததை கடுமையாகக் கண்டனம் செய்தார். மதவாத கட்சிகளுடன் கூட்டு சேர்ந்த அ.தி.மு.க. பெரியார், அண்ணா ஆகி யோரின் பெயர்களை உச்சரிக்கக் கூட தகுதியற்றது என கடுமையாகச் சாடினார். ஆனால் மறு ஆண்டே 1999-இல் பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டு சேர்ந்தது.

2003ஆம் ஆண்டில் மீண்டும் காங்கிரசுடன் தி.மு.க. கைகோர்த்தது. 1989ஆம் ஆண்டிலிருந்து மத்திய ஆட்சியில் தி.மு.க.வும் பங்கு பெற்றது. எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் அந்த ஆட்சியில் தி.மு.க. அமைச்சர் களும் பதவி வகித்தார்கள். இன்றும் வகிக்கிறார்கள்.

தில்லியில் ஆளுங்கட்சி எது வோ அதனுடன் கூட்டு சேர்ந்து தமிழ கத்தில் தாங்கள் நடத்தும் ஊழல் ஆட்சிக்குப் பாதுகாப்புத் தேடிக் கொள்ளவே இவ்வாறு கருணாநிதி செய்து வருகிறார். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற ஆற்றுப் பிரச்சினைகளைத் தீர்க்க மத்திய அமைச்சர் பதவிகளை தி.மு.க. ஒருபோதும் பயன்படுத்தியதில்லை.

மத்திய ஆளுங்கட்சி எதுவாக இருந்தாலும், அதனால் தாங்கள் அவமதிப்புகளுக்கு ஆளானாலும் அதை வெளியில் காட்டாமல் சகித்துக் கொண்டு ஆதரவாகச் செயல்படுவ தையே தங்கள் கடமையாக தி.மு.க. கொண்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழ

லில் தி.மு.க. அமைச்சர் ராசா, நாடாளு மன்ற மேலவை உறுப்பினர் கனி மொழி உட்பட பலர் கைது செய்யப் பட்டனர். இன்னமும் அவர்கள்மீது அந்த வழக்கு தொடர்ந்து நடக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஊழலில் தொடர்புகொண்ட தி.மு.க.வை தனது கூட்டணியிலிருந்து விலக்குவதற்கு காங்கிரசும் முன்வரவில்லை. தனது கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டப் பிறகு அந்த ஆட்சி யில் தொடர்ந்து நீடிக்க மறுத்து தி.மு.க. வெளியேறவும் இல்லை. காரணம் மத் திய ஆட்சியுடன் மோதுவதற்கு கருணாநிதி ஒருபோதும் தயாராக இல்லை.

ஆனால் அதே நேரத்தில் தமிழ் நாட்டில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளை கொத்தடிமை களைப் போல நடத்துவது கருணாநிதி யின் பழக்கமாகும். முக்கியமான பிரச்சி னைகளில்கூட கூட்டணிக் கட்சிகளை அவர் ஒருபோதும் கலந்தாலோசிப்பது இல்லை. அரசின் தவறான நடவடிக்கை குறித்து கூட்டணிக் கட்சிகள் பகிரங்க மாக விமர்சிக்கவோ எதிர்ப்புத் தெரி விக்கவோ கூடாது. அவ்வாறு எதிர்க் கத் துணிந்த தோழமைக் கட்சித் தலைவர்களை கருணாநிதியின் அக்கட் சியைத் சேர்ந்த தலைவர்களும் அர சியல் பண்பாடற்ற முறையில் திட்டித் தீர்ப்பார்கள். அத்துடன் கருணாநிதி நிற்க மாட்டார். தன்னை எதிர்க்கத் துணிந்த கூட்டணிக் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் சிலருக்கு சலுகை களைக் காட்டி தங்கள் வசமாக்குவதும், தலைமைக்கு எதிராக அவர்களைத் தூண்டி விடுவதும், முடியுமானால் அந்தக் கட்சியை உடைத்து வேறு ஒரு கட்சியை உருவாக்குவதும் அவருக்கு மட்டுமே ஆகிவந்த கலையாகும்.

ஆனால் அதே வேளையில் மத்தியில் ஆளுங்கட்சி எதுவாக இருந் தாலும் அதனுடன் மோதிக்கொள் ளவோ, பிணங்கி நிற்கவோ அவர் ஒரு போதும் துணிவதில்லை. பா.ஜ.க.வோ அல்லது காங்கிரசோ மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது தமிழ் நாட்டில் அக்கட்சிகளைச் சேர்ந்தவர் களுக்குச் சலுகைகளை காட்டி தன் வசமாக்கிக்கொள்வது அவரின் பழக்க மாகும். இக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தன்னையும் தனது கட்சியையும் விமர் சனம் செய்தாலும் அதைப் பொறுத்துக் கொண்டு போவார். ஏனென்றால் தில்லியில் அதிகாரம் இவர்கள் கையில் உள் ளது. சுருக்கமாகச் சொன்னால் தனக்கு மேலே இருப்பவர்கள் எட்டி உதைத் தாலும் அந்தக் கால்களுக்கு முத்த மிடுகிற பழக்கம் அவருக்கு எப்போ தும் உண்டு. தனக்கு கீழே இருப்பதாக தன்னால் கருதப்படுபவர்களை தலை யில் ஏறி மிதிப்பது அவருக்கே உரிய பழக்கமாகும்.

மத்திய ஆட்சி தனது கட்சியைச் சேர்ந்த அமைச்சரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. தனது மகளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக் கிறது. ஆனாலும், காங்கிரஸ் உறவு அவருக்குக் கசக்கவில்லை. கசப்போடு கூட்டணியில் நீடிப்போம் என்றுதான் அவரால் கூறமுடிகிறது. எதிர் நிலை யெடுத்தால் குடும்பமே சிறைக்குச் செல்லவேண்டியிருக்கும் என்பது அவருக்குத் தெரியும்.