மாநிலங்களை ஆட்டிப்படைக்கும் திட்டக்குழு - பழ. நெடுமாறன் அச்சிடுக
சனிக்கிழமை, 16 ஜூன் 2012 17:03
"தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங் களை நிறைவேற்றுவதற்காக சிறப்பு நிதியுதவி, கூடுதல் நிதியுதவி தேவையென கோரினோம். ஆனால் எதிர்பார்த்தபடி அவை கிடைக்க வில்லை. எங்கள் சொந்த நிதியை எவ்வாறு செலவிடுவது என்பது குறித்து மத்தியத் திட்டக்குழு ஆலோ சனை கூற, நாங்கள் கேட்கவேண்டிய நிலைமை வந்தது. இதற்காகவா நாங்கள் டில்லி வந்தோம்'' என தமிழக முதல்வர் ஜெயலலிதா குறை கூறியுள்ளார்.
அவர் மட்டுமல்ல பல்வேறு மாநில முதலமைச்சர்களின் நிலையும் இதுவாகத்தான் இருக்கிறது. நிதி ஆணையம், திட்டக்குழு போன்ற அமைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது சுயாதிக்கத் தன்மையை இழந்து மத்திய அரசின் அங்கங்களாக மாறிவிட்டன. இவற்றின் மூலம் மாநில அரசுகளை ஆட்டிப்படைக்கும் அதிகாரங்களை மத்திய அரசு பெற்றுவிட்டது.

நிதி ஆணையம் (எண்ய்ஹய்cங் ஈர்ம்ம்ண்ள்ள்ண்ர்ய்) என்பது அரசியல் சட்டப்படி குடியரசுத் தலைவரால் அமைக்கப்படுகிற குழு ஆகும். நிதி ஆதாரங்கள் பங்கிடப்படுவதில் ஏதாவ தொரு அமைப்பு செயல்படவேண்டும். ஆனால் இந்தியாவில் நிதிஆணையம், திட்டக்குழு ஆகிய இரண்டு அமைப்பு கள் இந்தக் காரியத்தைச் செய்கின்றன. இதன் விளைவாக பல்வேறு பிரச்சி னைகள் முளைத்துள்ளன. நிதிஆணை யம் என்பது அரசியல் சட்ட அங்கீ காரம் பெற்றது. திட்டக்குழுவுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் கிடை யாது. அரசியல் சட்ட ரீதியாகவோ அல்லது நாடாளுமன்ற ரீதியாகவோ திட்டக்குழு அமைக்கப்படவில்லை. மத்திய அமைச்சரவையில் நிறை வேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின்படி திட்டக்குழு அமைக்கப்பட்டது. இது மத்திய அரசுக்கான திட்டங்களை மட்டுமல்ல மாநில அரசுகள் வகுக் கின்ற திட்டங்களிலும் திருத்தம் செய் கிறது; குறைக்கிறது. இத்திட்டங் களுக்கான மானியங்களையும் கடன் களையும் நிர்ணயம் செய்கிறது. மேலும். மாநில அரசுத் துறைகளில் நிறை வேற்றப்படும் திட்டங்களையும் மேற் பார்வையிடுகிறது. இத்தணை அதி காரங்களும் திட்டக்குழுவுக்கு உண்டு. நிதி ஆணையம் அரசியல் சட்டப்படி அதிகாரம் படைத்தது. ஆனால் நடை முறையில் திட்டக்குழு அதைவிட அதிக அதிகாரம் படைத்ததாக விளங்குகிறது.

மாநிலங்களின் அதிகாரத்திற் குட்பட்ட துறைகளுக்குத் தேவையான நிதியையும் திட்டக்குழு நிர்ணயித்த பரிந்துரையின்படி மத்திய அரசு வழங்குகிறது. எனவே மாநிலத்திற்கு உட்பட்ட துறைகளிலும் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துகிறது.

நிர்வாக சீர்திருத்த ஆணையம் அமைத்த ஆய்வுக்குழுவும் மாநிலங் களுக்கு அதிக அதிகாரம் அளிப்பது பற்றி அமைக்கப்பட்ட இராஜமன்னார் குழுவும் திட்டக்குழுவின் அதிகாரங் கள் குறித்துக் கடும் கண்டனம் தெரி வித்துள்ளன. திட்டங்களை வகுப்பதில் மாநிலங்களுக்குப் போதிய பங்கில்லை. திட்டங்களை வகுப்பதில் மாநில முதலமைச்சர்களைக் கொண்ட தேசிய வளர்ச்சிக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. திட்டக்குழு தயாரித்த திட்டங் களைப் பரிசீலித்து திருத்தியமைக்கும் அதிகாரமும் தேசிய வளர்ச்சிக் குழுவுக்கு கிடையாது. மாநில முதல் வர்களைக் கொண்ட தேசிய வளர்ச்சிக் குழுவுக்கு மேலான அமைப்பாக திட் டக்குழு உருவாகிவிட்டது. திட்டக்குழு தயாரிக்கும் திட்டம் மாநிலங்களுக்கு முதலில் அனுப்பி வைக்கப்படுகிறது. மாநிலங்கள் அதை அடிப்படையாகக் கொண்டு தங்கள் திட்டங்களை உருவாக்குகின்றன. அவற்றை மீண்டும் திட்டக்குழு பரிசீலனை செய்து சில வற்றை சேர்க்கிறது : சிலவற்றை நீக்கு கிறது. இதில் தலையிட மாநிலங் களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பது வருந்தத்தக்கதாகும்.

1967ஆம் ஆண்டுவரை மத்தி யிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சி நடத்தியது. எனவே அக்கட்சியின் பொருளாதாரக் கொள் கையின் அடிப்படையில் தயாரிக்கப் பட்ட திட்டங்களை மாநிலங்கள் அப்படியே ஏற்றுக்கொண்டன. ஆனால் இப்போது பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்சிகள் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்துள்ளன. அந்தந்த கட்சிகளுக்கென்று தனியான பொருளாதாரக் கொள்கைகள் உண்டு. அவற்றிற்கிணங்க அவை வகுக்கின்ற திட்டங்களை மத்தியில் ஆட்சி நடத்துகிற கட்சியின் பொருளாதாரக் கொள்கைக்கு ஏற்ப அமைக்கப்பட்ட திட்டக்குழு ஏற்ப மறுப்பது அப்பட்ட மான சனநாயக விரோத செயலாகும். இந்திய அரசியல் சட்டத் தின்படி பல் வேறு கட்சிகள் மத்தியிலும் மாநிலங் களிலும் ஆட்சியில் வரலாம் என்ற நிலைமையை திட்டக்குழு அலட்சியம் செய்கிறது. அரசியல் ரீதியான கூட் டாட்சியில் ஒரே மாதிரியான பொருளா தாரத் திட்டம் என்பது சாத்தியமற்றது.

அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்ற நிதி ஆணையம் மாநிலங் களுக்கு ஒதுக்கும் தொகையைவிட அரசியல் சட்ட அங்கீகாரம் பெறாத திட்டக்குழு அதிகமான தொகையை ஒதுக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. இது அரசியல் சட்டத்திற்கே புறம் பானதாகும். இப்படி செய்வதின் மூலம் தனக்கு வேண்டிய மாநில அரசுகளின் திட்டங்களுக்கு அதிக நிதியைக் கொடுக்கவும். எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில அரசுகளுக்குக் குறைந்த நிதியை ஒதுக்கவுமான அதி காரத்தை மத்திய அரசு பெற்றுள்ளது.

திட்டக்குழு அமைக்கப்பட்ட காலத்தில் அது பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்களைக் கொண்ட சுயாதிக்க அமைப்பாகவும் தேசிய நலன் ஒன்றினையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் தன்மை வாய்ந்ததாகவும் அமைக்கப்பட்டது. ஆனால் அதற்குத் தேசிய ரீதியில் ஒரு அந்தஸ்தை அளிக்கவேண்டும் என்ப தற்காக பிரதமர் நேரு திட்டக்குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதன் மூலம் அந்த அமைப்பிற்கு அந்தஸ்து கிடைத்தது என்பது உண்மையே. ஆனால் 60 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுள்ள நிலைமையைப் பார்த்தால் திட்டக்குழு மத்திய அரசுத் துறைகளில் ஒன்றாகிவிட்டது. மத்திய திட்ட அமைச் சரின் கட்டுப்பாட்டில் இது இயங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

1958ஆம் ஆண்டில் நாடாளு மன்றத்தின் மதிப்பீட்டுக் குழு இந்த நிலைமையைக் கண்டித்தது. திட்டக்குழு ஒரு ஆலோசனைக்குழுவாக மட்டுமே இயங்கவேண்டும் என்று அது கூறியது. திட்டக்குழுவோடு பிரதமரும் மத்திய அமைச்சர்களும் சம்பந்தப்பட்டிருப்பது சரியல்ல என்றும் மதிப்பீட்டுக் குழு கருத்துத் தெரிவித்தது. திட்டக்குழுவின் கூட்டங்களுக்கு எந்த அமைச்சரையும் அழைக்கலாம் என்றும் அதைப் போலவே மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு திட்டக்குழுவின் பிரதி நிதியை அழைக்கவேண்டும் என்றும் கூறியது. நடப்புத் திட்டங்களைச் செம்மைப்படுத்துவது எப்படி என்பது பற்றியும் எதிர்காலத் திட்டங்களை வகுப்பது பற்றியும் திட்டக்குழு ஆலோ சனை கூறினால் போதும் என்றும் அது பரிந்துரை செய்தது. இவ்வாறு பரிந் துரைக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் எத்தகைய நடவடிக் கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

திட்டக்குழு என்பது வெறும் ஆலோசனைக்குழுவாக மட்டும் விளங்க வேண்டுமே தவிர சகல அதி காரங்களையும் படைத்தக் குழுவாக இருப்பது மத்திய-மாநில மோதல் களுக்கு வழிவகுத்துவிட்டது. அதே வேளையில் சனநாயக மரபுகளுக்கும் திட்டக்குழுவின் நடவடிக்கைகள் எதிராக அமைந்திருக்கின்றன. மாநில- அரசுகள் அமைக்கும் மாநில திட்டக் குழுக்கள் அந்த மாநிலத்தை ஆளும் கட்சியின் பொருளாதார கொள்கைக்கு ஏற்ப திட்டத்தை வகுக்கின்றன. ஆனால் மத்திய அரசில் பொறுப்பு வகிக்கும் கட்சியின் பொருளாதாரக் கொள்கைக்கு ஏற்ப அமைக்கப்பட்ட மத்தியத் திட்டக்குழு மாநிலத் திட்டங் களைத் திருத்துவதும், ஏற்க மறுப்பதும் சனநாயகத்திற்கு எதிரான போக்காகும்.

மத்திய-மாநில நிதியுறவுகளைப் பற்றி இந்திய அரசியல் சட்டத்தின் 268ஆம் பிரிவு முதல் 272ஆம் பிரிவு வரையும், 274, 275 மற்றும் 279 முதல் 282ஆம் வரையும் உள்ள பிரிவுகள் குறிப்பிடுகின்றன. இந்த அரசியல் சட்டப் பிரிவுகள் நிதி விஷயத்தில் மத்திய அரசுக்கு வழங்கியிருக்கிற எல்லையற்ற அதிகாரம் என்பது மாநில அரசுகளை மிகப்பெரும் அளவுக்குப் பாதித்துவிட்டது. மத்திய அரசிட மிருந்து மாநிலங்கள் பெறுகிற உதவியை நிதியாணையம், திட்டக்குழு போன்ற மத்திய அமைப்புகள் மூலம் மட்டுமே பெறவேண்டிய நிலை உள்ளது. மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிடும் நிதியில் 80 சதவீதித் திற்கு மேற்பட்ட நிதி நிதியாணையம், திட்டக்குழு ஆகியவற்றின் மூலம் மட்டுமே அளிக்கப்படுகிறது என்பதிலிருந்து இந்த அமைப்புகள் எத்தகைய அதிகாரம் படைத்த அமைப்புகளாக வளர்ந்துள்ளன என்பது புரியும்.

எனவே தமிழக முதல்வர் கூறி யுள்ள குற்றச்சாட்டுகள் மத்திய-மாநில உறவுகள் எத்தகைய சீர்கேடடைந் துள்ளன என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. மாநிலங்கள் தங்கள் மக்களின் தேவைக்கேற்ற திட்டங்களை வகுத்து செயல்பட இயலாத நிலையில் உள்ளன. எந்தத் திட்டம் வகுத்தாலும் அதற்கு திட்டக்குழுவின் ஒப்புதலும் நிதியுதவியும் இன்றியமையாததாகும். எனவே, திட்டக்குழு என்ன சொல் கிறதோ அதற்கேற்ப தங்கள் திட்டங் களை திருத்தியமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மாநில அரசுகள் உள்ளன. திட்டக்குழுவின் அதிகாரத்திற்கு எதிரான நிலை எடுக்க முடியாத கட்டாயத்தில் மாநிலங்கள் உள்ளன. எதிர்நிலையெடுத்தால் கிடைக்கவேண்டிய உதவிகள் கிடைக்காமல் போகும்.

அரசியல் சட்ட சம்மதம் இல்லாமல் மத்திய அமைச்சரவையின் ஒரு தீர்மானத்தின்படி அமைக்கப்பட்ட திட்டக்குழு மத்திய அமைச்சரவைக்கு மேலான அதிகாரம் படைத்த குழுவாக இன்று பூதம்போல் வளர்ந்து நிற்கிறது. இக்குழுவைப் பயன்படுத்தி மாநில அரசுகளை மத்திய அரசு ஆட்டிப் படைக்கிறது. குறிப்பாக எதிர்க்கட்சி அரசுகள் மத்திய அரசின் புறக்கணிப் புக்கு ஆளாகி அவதியுறுகின்றன. சனநாயக ரீதியிலும் இத்தகைய நிலை பெருந் தவறானதாகும். மாநிலங்களை ஆளும் கட்சிகளை அந்தந்த மாநில மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். மாநில அரசுகளை மத்திய அரசு நியமிப் பதில்லை. சனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் தங்களின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஏற்ப வகுக்கிற திட்டங்களை ஏற்க மறுக்கவும் திருத்த வுமான அதிகாரம் மத்திய திட்டக் குழுவுக்கு இருப்பது சனநாயக மரபு களுக்கு முற்றிலும் முரணானது. மாநில முதல்வர்கள் ஒன்றிணைந்து இதற் கெதிராகப் போராட முன்வரவேண்டும்.

நன்றி : "தினமணி' 6-6-12