சிறுவாணியைத் தடுக்காதே! தமிழர்களைச் சீண்டாதே! - பழ. நெடுமாறன் அச்சிடுக
திங்கட்கிழமை, 16 ஜூலை 2012 19:36
தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் நடுவில் மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளது. தென்மேற்குப் பருவக் காற்று வீசும்போது மலை அதை தடுத்து விடுவதால் பருவ மழையின் பயன் தமிழகத்திற்கு கிடைப்பதில்லை. முழுப் பயனையும் கேரள மாநிலம் அனுப வித்து வருகிறது.
வட-கிழக்கு பருவக் காற்றால் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் மழையும் குறுகிய காலத்தில் பெரு மழையாகக் கொட்டி விடுகிறது. இவ்வாறு தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் சராசரியாகப் பெய்யும் மழையின் அளவு 925மி.மீ. ஆகும். இந்த மழையும் தமிழ்நாடெங்கும் ஒரே மாதிரியாகப் பெய்வதில்லை. மாவட்டத் திற்கு மாவட்டம் மழையின் அளவு வேறுபடுகிறது.

தமிழ்நாட்டில் வறட்சிக்கு இலக்காகும் நிலப் பரப்பு 64% ஆகும்.

தமிழ்நாட்டில் 33 ஆற்றுப் படுகைகள் உள்ளன. இந்த ஆறுகளில் ஓடும் தண்ணீரில் தமிழ்நாட்டு எல்லைக் குள் கிடைப்பது 24,000 மி.க.மீ. ஆகும். பிற மாநிலங்களில் உற்பத்தியாகி தமிழ்நாட்டிற்குள் ஓடிவரும் நீரின் அளவு 12,000 மி.க.மீ. ஆகும். ஆக மொத்தம் தமிழ்நாட்டு ஆறுகளில் ஆண்டு தோறும் 36,000 மி.க.மீ. தண்ணீர் கிடைக்கிறது.

நிலத்தடி நீர் வளமும் தமிழ் நாட்டில் மிகக் குறைவாகும். தமிழ் நாட்டின் 73% பகுதி மிகக்கடினமான பாறைப் படிவங்களால் ஆனதாகும். இப்பகுதியில் ஊற்றுப் பெருகும் வாய்ப்பு அதிகம் கிடையாது. நீர் வளம் கிடைக்கும் மணல் பகுதியில் மட்டும் 27% மக்கள் வாழ்கிறார்கள்.

தமிழகம் இயற்கையிலேயே தண்ணீர் பற்றாக்குறை மாநிலமாகும். நில அமைப்பின்படி கேரளம், கருநாடகம் போன்ற மாநிலங்களில் உற்பத்தியாகும் ஆறுகள் இயற்கை நீதிப்படி தமிழகத்தில் பாய்ந்தோடுகின்றன. தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆறுகளும் கேரள மாநிலத்தில் பாய்ந்தோடுகின்றன. இயற்கை வகுத்த இந்த நீதியைக்கூட கேரளமும் கர்நாடகமும் மதிக்க மறுக்கின்றன. கேரள மாநில ஆறுகளில் கிடைக்கும் நீர் வளம் 2,500 டி.எம்.சிக்கு மேலாகும் இதில் கேரளத்திற்குள்ளேயே 500 டி.எம்.சிக்கு மேல் பயன்படுத்த இயலாது என கணக்கிடப்பட்டிருக்கிறது. எனவே மழைக்காலத்தில் கேரளத்தில் சுமார் 2000 டி.எம்.சி. நீர் வளம் கடலுக்குள் பாய்ந்து வீணாகி வருகிறது. இப்படி வீணாகும் நீரின் அளவில் 200 டி.எம்.சி. தண்ணீரை அதாவது 10இல் ஒருபங்கு நீரை தமிழ்நாட்டின் வறண்ட பகுதிகளுக்குத் திருப்பினால் அப் பகுதிகள் பாசன வசதி பெறும். ஆனால் கேரளம் பிடிவாதமாக கடலுக்குள் தண்ணீரை விட்டாலும் விடுவோமே தவிர தமிழகத்திற்கு தரமாட்டோம் என கூறுகிறது.

சிறுவாணி

"தமிழகத்தின் 3வது பெரிய மாநகரமாக விளங்கும் கோவையின் குடிநீருக்குள்ள ஒரே ஆதாரம் சிறுவாணி ஆறு ஆகும். கோவை மாநகருக்கு மட்டுமல்ல, கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் வாழும் பல இலட்சம் மக்களின் தாகத்தையும் சிறுவாணி நீர்தான் தீர்த்து வைக்கிறது. ஆனால் அதற்கும் இப்போது ஆபத்து வந்துவிட்டது.

கேரள மாநிலத்தில் உற்பத்தியாகி தமிழகத்திற்குள் ஓடிவரும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் 450 மீட்டர் நீளத்தில் 460 கோடி ரூபாய் செலவழித்து 4.5 டி.எம்.சி. கொள்ளளவு உள்ள புதிய அணை ஒன்றினைக் கட்டுவதற்கு கேரள அரசு முடிவு செய்துள்ளது. இந்த அணை கட்டப்பட்டுவிட்டால் கோவை உட்பட கொங்கு மண்டலத்தில் உள்ள பல நகரங்களிலும் சிற்றூர்களிலும் வாழும் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பரிதவிப்பார்கள். தமிழகத்தின் சிறந்த தொழில் நகரங்களாக வளர்ந்துள்ள கோவை, திருப்பூர் போன்றவற்றில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டால் அங்கு வாழும் மக்கள் வெளியேறும் நிலை ஏற்படும். அது மட்டுமல்ல, தொழில் பெருமளவு பாதிக்கப்படும். இதன் விளைவாக தமிழகத்தின் பொருளாதாரமும் சரியும்.

கேரள மாநிலத்தில் உள்ள அட்டப்பாடி நீர்ப்பாசனத் திட்டத்திற்காக 4.5 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் முன் கேரளம் மனு தாக்கல் செய்தது. அதற்கு தமிழகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. 5-2-2007இல் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் அட்டப்பாடி நீர்ப்பாசனத் திட்டத்திற்காக 2.87 டி.எம்.சி. நீரை மட்டும் ஒதுக்க வேண்டும் எனக் கூறியது. ஆனால் கேரள அரசு நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மீறும் வகையில் 4.5 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையை கட்ட தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து கேரள-கர்நாடக அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளன. உச்ச நீதிமன்றத் தின் இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும் வரை காவிரி படுகையிலோ அல்லது அதன் துணை ஆறுகளின் படுகை களிலோ எந்த ஒரு புதியத் திட்டத்தை யும் செயல்படுத்தாமல் இருப்பது தான் சட்டத்தையும் உச்சநீதிமன்றத்தையும் மதிப்பதாகும்.

ஆனால் இயற்கை நீதியையும் சட்டத்தையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு களையும் கொஞ்சமும் மதிக்காமல் செயல்படுவதில் கேரள மாநிலத்திற்கு நிகர் கேரள மாநிலம்தான். சிறுவாணிப் பிரச்சினையில் மட்டுமல்ல, தொடர்ந்து பல ஆற்றுப் பிரச்சினைகளிலும் கேரளம் தமிழகத்திற்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுகிறது.

பெரியாறு

முல்லைப் பெரியாறு பிரச்சினை யில் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி அணையின் நீர்மட்டத்தை 142அடியாக உயர்த்தலாம் என 27-2-2006 அன்று அளித்தத் தீர்ப்பை நிறைவேற்ற இதுவரை கேரளம் மறுத்து வருகிறது.

பெரியாறு அணையின் நீர்ப் பிடிப்புப் பரப்பு 601 சதுர கிலோ மீட்டர் ஆகும். இதில் தமிழ்நாட்டு எல்லைக்குள் இருக்கும் நீர்பிடிப்பு பரப்பு 114 ச.கி.மீட்டர் ஆகும். அதாவது பெரியாற்றின் நீர்ப்பிடிப்புப் பரப்பில் 5இல் ஒரு சதவிகிதம் தமிழ்நாட்டிற்குள் இருக்கிறது.

பெரியாறு அணையில் 152அடி வரை நீரைத் தேக்கினால் தமிழகத்திற்கு கிடைக்கும் நீரின் அளவு 126 மி.க.மீ. ஆகும். இதில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்து கிடைக்கும் நீரின் அளவு 103 மி.க.மீ. ஆகும் கேரளம் தருவது வெறும் 23 மி.க.மீ. மட்டுமே. இதைத் தருவதற்குக்கூட அவர்களுக்கு மனம் இல்லை.

பெரியாறு அணையின் நீர்மட்டம் 136அடியாக குறைக்கப்பட்டதின் விளைவாக தென் மாவட்டங்களில் தரிசாக மாறிய நிலப்பரப்பு 38,000 ஏக்கர் ஆகும். இருபோக சாகுபடியாக இருந்து ஒருபோக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 86ஆயிரம் ஏக்கர் ஆகும். ஆற்றுப் பாசன நீரை இழந்து கிணற்றுச் சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53 ஏக்கர் ஆகும். விவசாய உற்பத்தி இழப்பு ஆண்டுக்கு சுமார் 60 கோடிக்கு மேல் ஆகும். மின் உற்பத்தி இழப்பு ஆண்டுக்கு 80 கோடியாகும். கடந்த 31 ஆண்டு காலமாக இந்த இழப்பை தமிழக மக்கள் சந்தித்து வருகிறார்கள்.

பரம்பிக்குளம்-ஆழியாறு

பெரியாறு பிரச்சினையில் மட்டுமல்ல இன்னும் பல ஆற்றுப் பிரச்சினைகளிலும் கேரளம் தமிழக நலன்களுக்கு எதிராகத் திட்டமிட்டுச் செயல்படுகிறது. 1958ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த காமராசரும், கேரள முதலமைச்சராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்களும் செய்துகொண்ட உடன் பாட்டின்படி பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள ஆனைமலையில் பாலாறு, ஆழியாறு, உப்பாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம் ஆகியவை உற்பத்தியாகி கேரள மாநிலத்திற்குள் ஓடி அரபிக்கடலில் கலக்கின்றன. இந்த ஆறுகள் அனைத்தும் தமிழ்நாட்டில் உற்பத்தியாகின்றன என்பது முக்கியமான தாகும். ஆனாலும் கேரளம் செய்வதைப் போல இந்த ஆறுகளில் அணைக்கட்டி கேரளத்திற்கு தண்ணீர் செல்லவிடாமல் தடுக்க நாம் ஒருபோதும் நினைக்க வில்லை.

பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின்படி தமிழ்நாட்டிற்கு 30.5 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கிறது. எஞ்சிய தண்ணீர் எவ்விதத் தடையு மில்லாமல் கேரளத்தில் பாய்ந் தோடுகிறது. கோவை, ஈரோடு மாவட்டங்களில் 1,80,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 1970 ஆம் ஆண்டிலிருந்து 1993ஆம் ஆண்டு வரை பிரச்சினை எதுவும் இன்றி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திட்டம் குறித்து இரு மாநிலங்களும் மறு பரிசீலனை செய்துகொள்ள வேண்டும் என்ற உடன்பாட்டின்படி கேரளம் வேண்டுமென்றே பொய்யானக் குற்றச்சாட்டுகளை எழுப்பி இத்திட் டத்தை மேலும் தொடரவிடாமல் தடுப்பதற்கு முயற்சி செய்கிறது. பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தை 138 கோடி செலவில் தமிழகம் நிறைவேற்றி யிருக்கிறது. இதில் கேரளத்தின் பங்கு எதுவும் இல்லை. தமிழ்நாட்டின் எல்லைக்குள் இத்திட்டப்படி அமைக்கப் பட்டுள்ள அணைகளை தனது கட்டுப் பாட்டில் ஒப்படைக்க வேண்டுமென கேரள அரசு வற்புறுத்துகிறது. இத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன், கேரள மாநிலம் 6500 ஹெக்டெர் நிலம் மட்டுமே பாசன வசதி பெற்றி ருந்தது. இத்திட்டத்திற்குப் பிறகு 2.6 இலட்சம் ஹெக்டெர் பாசன வசதி பெறுகிறது. தமிழ்நாடு கட்டிய அணை களின் மூலம் ஒரு செலவும் இல்லாமல் இந்த வசதியைப் பெறுகிறது. ஆனாலும் அவர்களுக்கு மன நிறைவு இல்லை.

அமராவதி

அமராவதி அணையின் மூலம் கோவை, ஈரோடு மாவட்டங்களில் 1,60,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறு கிறது. கேரள மாநிலத்தில் உற்பத்தி யாகும் வட்டவடையாறு தமிழ்நாட்டில் நுழைந்தவுடன் தேனாறு என்ற பெயர் பெறுகிறது. இதில் பாம்பாறு இணை கிறது. தமிழக-கேரள எல்லையில் சின்னாறு சேர்கிறது. அமராவதி அணையின் மூலம் நம்முடைய பாசன வசதிக்கு 12 டி.எம்.சி. தண்ணீர்தான் தேவை. ஆனால் ஆண்டு ஒன்றுக்கு 7 டி.எம்.சி. தண்ணீர்தான் சராசரியாக வருகிறது. இந்தச் சூழ்நிலையில் கேரள எல்லைக்குள் இருக்கும் பாம்பாற்றில் அணைகட்டி 3 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்குவதற்கு கேரளம் திட்டமிட்டுள் ளது. அவ்வாறு செய்தால் அமராவதி பாசனப் பகுதி விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள்.

நெய்யாறு

கேரள மாநிலத்தில் பாயும் நெய்யாற்றில் அணைகட்டப்பட்டு அதன் வலதுபுற கால்வாய் மூலம் அம்மாநிலத்தில் 15ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. இடது புறக்கால்வாய் மூலம் 19,100 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. இதில் 9,200 ஏக்கர் நிலங்கள் குமரி மாவட்டத்தில் உள்ளன. ஆனால், குமரி மாவட்டம் தமிழ் நாட்டோடு இணைந்த பிறகு இக்கால் வாயில் தண்ணீர் தர கேரளம் பிடிவாதமாக மறுத்து வருகிறது.

செண்பகவல்லி அணை

நெல்லை மாவட்டத்தில் சிவகிரி மலைகளில் வெள்ளையராட்சி காலத்தில் செண்பகவல்லி அணை கட்டப்பட்டது. இந்த அணை சரிவர பராமரிக்கப்படாத தால் அதில் கசிவுகள் ஏற்பட்டு அணையின் நீர்மட்டம் குறைந்தது. எனவே இந்த அணையை மராமத்து செய்ய தமிழக அரசு திட்டமிட்டு கேரள அரசிடம் அனுமதி கேட்டது. அனுமதி கொடுக்காதது மட்டுமல்ல. 1994ஆம் ஆண்டில் இந்த அணையை கேரள அதிகாரிகள் இடித்துத் தள்ளிவிட்டார்கள்.


கர்நாடகம் - காவிரி

காவிரி நதிநீர் பிரச்சினையில் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்புகளையும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணை யையும் மதிப்பதற்கு கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. தமிழ் நாட்டிற்கு காவிரி ஒன்றுதான் பெரிய ஆறு ஆகும். கர்நாடகத்தில் காவிரி மட்டுமின்றி கிருஷ்ணா, துங்கபத்திரா, கோதாவரி ஆற்றின் கிளை நதிகள் மற்றும் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் பல உள்ளன.

தமிழ்நாட்டின் 34 சதவிகித நிலப்பகுதி காவிரிப் படுகையில் அமைந்துள்ளது. கர்நாடகத்தில் காவிரி படுகையின் பரப்பு அதன் நிலப்பகுதி யில் 17 சதவிகிதம் மட்டுமே ஆகும். தமிழ்நாட்டின் ஆற்றுப் பாசன நிலங் களில் 60% நிலம் காவிரி ஒன்றையே நம்பி உள்ளது. தமிழ்நாடு உணவு தானிய உற்பத்திக்கு காவிரியையே பெரிதும் சார்ந்துள்ளது. ஏற்கெனவே தமிழ்நாடு உணவு பற்றாக்குறை மாநிலமாகும். மிகை நீர் அதிகமுள்ள கர்நாடகம் காவிரிப் பிரச்சினையில் காட்டி வரும் பிடிவாதத்தின் விளைவாக தமிழகம் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகியிருக் கிறது. எந்த காவிரி நீரில் ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக தமிழர்கள் உரிமை கொண்டாடி நேசித்து வாழ்ந்தார் களோ அந்த காவிரி நீரின் மீது தமிழர்களுக்கு உரிமை இல்லை. தனக்குப் போக எஞ்சிய நீரைத்தான் தமிழ் நாட்டிற்குத் தர முடியும் என கருநாடகம் கல்நெஞ்சுடன் கூறுகிறது. எந்தத் தீர்ப்பையும் மதிப்பதற்கு அது தயாராக இல்லை.

தென்பெண்ணையாறு

கர்நாடக மாநிலத்தின் வழியாக ஓடிவரும் தென்பெண்ணையாறு அம்மாநில எல்லையில் உள்ள ஒரத்தூர் ஏரியில் கலந்து பிறகு தமிழகத்திற்குள் ஓடிவருகிறது. இந்த ஏரியில் ஒரு தடுப்பணை கட்டி ஏரியின் நீர்மட்டத்தை அதிகரிக்கவும். அங்கிருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஏரிகளில் நீரை நிரப்ப வேண்டும் என்பதும் கர்நாடகத்தின் திட்டமாகும். அதற்கான முயற்சிகளில் அந்த மாநிலம் ஈடுபட்டிருக்கிறது. தென்பெண்ணை யாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் தமிழகத்தின் வட மாவட்டங் களில் உள்ள விவசாய நிலங்கள் பாலைவனமாக மாறிப்போகும்.

ஆந்திரம் - பாலாறு

கர்நாடக நந்தி மலையில் உற்பத்தி யாகி ஆந்திரா வழியாக தமிழ்நாட்டிற் குள் ஓடிவரும் பாலாற்றின் மூலம் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 2 இலட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுவந்தது.

ஆனால் கர்நாடகப் பகுதியில் புதிய பெரிய ஏரிகள் அமைக்கப்பட்டு பாலாற்றின் நீர் தடுப்பணைகள் மூலம் திருப்பப்பட்டு இந்த ஏரிகள் நிரம்பிய பிறகு எஞ்சிய நீரே தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டது. தமிழக எல்லையில் இருந்து சுமார் 10கி.மீ. தொலைவில் இந்த ஏரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக பாலாற்று பாசன நிலங்கள் மட்டுமல்ல, மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் உள்ள மக்கள் குடிநீர் பற்றாக்குறைக்கும் ஆளானார்கள்.

கர்நாடகம் செய்த இந்த வஞ்சனை போதாது என்று ஆந்திரமும் வஞ்சனை செய்யத் துணிந்துள்ளது. கர்நாடகத்திலிருந்து ஓடி வரும் பாலாறு ஆந்திர மாநிலத்தில் 33 கி.மீ. தூரம் ஒடி தமிழகத்திற்குள் நுழைகிறது. இந்த சிறிய தூரத்தில் 3 தடுப்பணைகள் கட்டுவதற்கு ஆந்திரம் திட்ட மிட்டுள்ளது. இதன் மூலம் 50 டி.எம்.சி. தண்ணீர் தேக்கப்படும். ஆந்திரம் தனது திட்டத்தை நிறைவேற்றிவிடுமானால் பாலாறு முழுமையாக பாழாறு ஆகி விடும். மேற்கண்ட மூன்று மாவட்டங் கள் முழுமையாக வறண்ட பகுதிகளாக மாறி மக்கள் இடம்பெயரக்கூடிய நிலை ஏற்படும்.

தமிழகத்தின் அண்டை மாநிலங் களான கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்றவை தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் நெய்வேலி மின்சாரம், எண்ணூர் அணல் நிலைய மின்சாரம் ஆகியவற்றில் பங்குபெறுகின்றன. புதிதாக எழுப்பப்பட்டுவரும் கூடங்குளம் அணுமின்நிலைய மின்சாரத்திலும் தங்களுக்குப் பங்கு அளிக்க வேண்டும் என வற்புறுத்துகின்றன. தமிழகத்திற்கு போதுமான மின்சாரம் கிடைக்காத நிலையிலும் அண்டை மாநிலங்களுக்கு தனது மண்ணில் உற்பத்தியாகும் மின்சாரத்தை நாம் தாராளமாக அனுப்புகிறோம். எங்கள் மாநிலத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் எங்களுக்கு மட்டுமே என்று கூறுகிற சிறுமை நம்மிடம் இல்லை. ஆனால், தங்கள் மாநிலத்தில் உற்பத்தியாகும் தண்ணீர் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என அண்டை மாநிலங்கள் கொஞ்சங்கூட மனித நேயமில்லாமல் கூறுகின்றன; கூறுவதை செயல்படுத்துகின்றன.

தமிழ்நாட்டில் மலையாளிகள் ஏராளமாக வாழ்கிறார்கள். ஆந்திரர் களும், கன்னடர்களும் அவ்விதமே வாழ்கிறார்கள். தமிழகத்திற்குத் தண்ணீர் தரமறுத்தால் அவர்களும் பாதிக்கப் படுவார்கள் என்பதையும் தங்களுடைய செயல் அவர்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டிவிடும் என்பதையும் உணர மறுக்கிறார்கள். இங்கு தொழில், வணிகம் நடத்த அவர்களுக்கு எவ்விதத் தடையுமில்லை. தமிழ்நாட்டிலிருந்து கேரள மாநிலத்திற்கு அரிசி உட்பட உணவுப் பொருட்களும் காய்கறி, பால், ஆடு, மாடு கோழி ஆகியவையும் எவ்விதத் தடையுமில்லாமல் அனுப்பப் படுகின்றன. தமிழ்நாட்டிலிருந்து இவை கிடைக்காவிட்டால் கேரள மக்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்படும். ஆனால் இதை கொஞ்சமும் எண்ணிப் பாராமலும் தவிக்கும் தமிழர்களுக்குத் தண்ணீர் தர கல்நெஞ்சத்துடன் பிடிவாத மாக மறுத்தும் வரும் அண்டை மாநிலங் கள் தேசிய ஒருமைப்பாட்டிற்கு உலை வைக்கின்றன என்பதுதான் உண்மை.

நன்றி : கல்கி 8-7-2012