கருநாடகத்தின் அடாதபோக்கும் - கண்டிக்கத் தவறிய மத்திய அரசும் - பழ. நெடுமாறன் அச்சிடுக
திங்கட்கிழமை, 05 நவம்பர் 2012 16:17
பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம் பிறப்பித்த ஆணையைச் செயற்படுத்தாத கருநாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு.
அந்த ஆணையத் தின் உத்தரவை ஏற்று தமிழகத்திற்கு விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிடவேண்டும் என்றும் அந்த நீரை கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரைக் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அதற்கு எதிராக பந்த் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் காவிரி ஆணையக் கூட்டத்தை பிரதமர் கூட்டி அதில் விநாடிக்கு 9 ஆயிரம் கன அடித் நீரைக் கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என ஆணைப் பிறப்பித்தார். அந்த ஆணையை ஏற்க மறுப்பதாக கர்நாடக முதலமைச்சர் பகிரங்கமாக அறிவித்து ஆணையக் கூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார். பிரதமரின் ஆணையை மீறியதோடு மட்டுமல்லாமல் உச்சநீதி மன்றத்தையும் கருநாடக முதலமைச்சர் அவமதித்துள்ளார். ஏற்கெனவே காவிரி நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பினையும் இறுதித் தீர்ப்பினையும் கர்நாடகம் ஏற்க மறுத்துவிட்டது. தொடர்ந்து இந்திய அரசியல் சட்டத்தை மதியாதப் போக்கில் கருநாடகம் நடந்து வருகிறது. அதற்கு எதிராக உறுதியான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ளாததின் விளைவாகவே தமிழகக் காவிரிப் பாசன விவசாயிகள் பெரும் இழப்புக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கும் உள்ளாகி யுள்ளார்கள். கடந்த 1968ஆம் ஆண்டிலிருந்து 44ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் கருநாடக அரசினாலும் மத்திய அரசினாலும் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது.
பிரதமர்களான இந்திராகாந்தி முதல் மன்மோகன் சிங் வரை காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு அநீதி இழைத்து ஓரவஞ்சனையுடன் நடந்து கொண்டனர். காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை வழங்கியத் தீர்ப்புகளை மதிக்கவோ தமிழகத்திற்குத் தண்ணீர் தரவோ கருநாடகம் மறுத்த போது பிரதமர்களாக இருந்தவர்கள் அரசியல் சட்டப்படி தாங்கள் ஆற்ற வேண்டிய கடமை களை நிறை வேற்றாமல் செயலற்றுப்போனார்கள். அல்லது புறக்கணித்தார்கள்.
உச்சநீதிமன்றம் தலையிட்டு பிரதமரின் ஆணைப்படி நடக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலைமை இருப்பது வெட்கக்கேடானதாகும். நாட்டின் பிரதமருக்கு உள்ள மரியாதையைப் பார்த்து உலகம் நகைக்கும் நிலை இருப்பது அப்பதவிக்கே அவமானகரமானதாகும்.
1968ஆம் ஆண்டு காவிரி நீர்ப் பங்கீடு பற்றியப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. மத்திய பாசனத் துறை அமைச்சர் கே.எல். ராவ் முயற்சி யிலும் தலைமை யிலும் தொடர்ந்து கருநாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய வற்றின் முதலமைச்சர்கள் பலமுறை பேச்சுக்கள் நடத்தினார்கள். இந்தப் பேச்சுக்களில் எந்த முடிவும் ஏற்பட வில்லை. 1970ஆம் ஆண்டில் பேச்சுக் கள் பயனளிக்கும் என்ற நம்பிக்கையை மத்திய பாசன அமைச்சர் இழந்து விட்டார் என்றாலும் நடுவர் குழுவினை அமைக்க இந்திய அரசு முன்வர வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் ஹேமாவதி, கபினி திட்டங்களின் கட்டுமானப் பணிகளைக் கர்நாடகம் தொடங்கிவிட்டது.
வேறுவழியில்லாத நிலைமை யில் 1971ஆம் ஆண்டில் இந்திய அரசையும் கர்நாடக அரசையும் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்திய அரசு நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்பதுதான் வழக்காகும். இந்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் வாக்குமூலத்தில் "சட்டப்படி இனியும் பேச்சுக்களால் பயனில்லை என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்தால்தான் நடுவர் மன்றம் அமைக்க முடியும்'' என்று கூறியது.
1972ஆம் ஆண்டு இந்திய தலைமையமைச்சர் இந்திராவிடம் அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி இப்பிரச் சினைக் குறித்துப் பேசினார். வழக்கைத் திரும்பப் பெற்றால் பேச்சுக்களை மீண்டும் நடத்தி தீர்வு காண உதவுவ தாக இந்திரா அளித்த வாக்குறுதியை நம்பி வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற்றது. அதே ஆண்டில் மே மாத இறுதியில் மூன்று மாநில முதலமைச்சர் கள் கூடிப் பேசியதின் விளைவாக காவிரி உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. 1973ஆம் ஆண்டு கடைசியில் டில்லியில் 3 மாநில முதலமைச்சர்களும் இந்தியப் பாசன அமைச்சரும் காவிரி உண்மை அறியும் குழுவின் அறிக்கையை ஆராய்ந் தார்கள். அந்த அறிக்கை யில் சொல் லப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் சரி யானவை என்று மூன்று மாநிலங் களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
1974ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் டில்லியில் கூடிய மூன்று மாநில முதல்வர்களும் காவிரிப் பள்ளத் தாக்கு அதிகார அமைப்பு ஏற்படுத்தும் யோசனையை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் இந்த அமைப்பை நிறுவ வேண்டிய இந்திய அரசு அவ்வாறு செய்யாமல் தானே தீர்வு காண முயன்றதால் பேச்சுக்கள் பயனற்றுப் போயின. 1971ஆம் ஆண்டில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த தமிழக அரசு 1990ஆம் ஆண்டு வரையில் கருநாடக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்திய தவறைச் செய்தது. பேச்சு வார்த்தை நடைபெறும்போது உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. கருநாடகம் திட்டமிட்டுப் பேச்சுவார்த்தையை 19 ஆண்டுகளாக நீடித்துக்கொண்டே சென்றது. 1990ஆம் ஆண்டு நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மீண்டும் முறையீடு செய்தது. அப்போது கருநாடக முதலமைச்சராக இருந்த பங்காரப்பா தலைமையில் முன்னாள் முதலமைச்சர்களான குண்டுராவ், இராமகிருஷ்ண ஹெக்டே, எஸ்.ஆர். பொம்மை ஆகியோர் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒன்று சேர்ந்து டெல்லிக்குச் சென்று பிரதமர் வி.பி.சிங்கை சந்தித்து நடுவர் மன்றத்தை அமைக்கக்கூடாது என்று வற்புறுத்தினார்கள். கருநாடகத்தின் இந்த நெருக்குதலை பிரதமர் வி.பி.சிங்கினால் மீறமுடியவில்லை. பன் மாநில நதிநீர் பிரச்சினைச் சட்டத்தின் 4-1 பிரிவின்படி நடுவர் மன்றத்தை அமைப்பதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு. ஆனால், பிரதமர் வி.பி.சிங் அவ்வாறு செய்யாமல் உச்சநீதிமன்றம் என்ன ஆணையிடுகிறதோ அவ்வாறே நடந்துகொள்ளத் தீர்மானித்தார். இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் இதைத் தெரிவித்தார். அதன் பின் உச்சநீதிமன்றம் நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசுக்கு ஆணைப் பிறப்பித்தது.
1990ஆம் ஆண்டு சூன் 2ஆம் தேதி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 1991ஆம் ஆண்டு சூன் 21ஆம் தேதி நடுவர் மன்றம் இடைக்கால ஆணையைப் பிறப்பித்தது. கர்நாடக அரசு இந்த ஆணையை ஏற்க மறுத்தது. அத்துடன் அது நிற்கவில்லை. 1991ஆம் ஆண்டு சூலை 25ஆம் தேதி காவிரிப் பாசனச் சட்டம் என்ற பெயரில் ஒரு அவசரச் சட்டத்தை கருநாடக அரசு பிறப்பித்தது. நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையைச் செயலற்றதாக்குவதே இச்சட்டத்தின் நோக்கமாகும். இந்த அவசரச் சட்டம் சகல நியாயங்களுக்கும் எதிரானது என்பதை தமிழகம் இந்திய அரசுக்குச் சுட்டிக்காட்டி முறையிட்டது. இச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் அங்கீகாரம் அளிக்காமல் மத்திய அரசே நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இச்சட்டத்தை அனுப்பி அவர் அதை உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பினார். உச்சநீதிமன்றம் 1991ஆம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி கருநாடக அரசு பிறப்பித்த அவசரச் சட்டம் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது. இத்தீர்ப்பை உடனடியாக மத்திய அரசின் கெசட்டில் பிரசுரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் ஆணையை மட்டுமல்ல நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப் பினையும் கெசட்டில் பிரசுரிக்க இந்திய அரசு வேண்டுமென்றே தயங்கியது. மத்திய அரசு நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பினையும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினையும் கெசட்டில் பதிப்பித்தால்தான் இந்தத் தாவாவில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அதை ஏற்று நிறைவேற்றவேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால், இந்திய அரசு அவ்வாறு செய்யாததின் விளை வாக இந்தத் தீர்ப்புகள் யாரையும் கட்டுப்படுத்தும் வலிமையற்றுக் கிடக்கின்றன.
இந்திய அரசிடம் தமிழக அரசு பல தடவை முறையிட்டபோதும் எந்தப் பயனும் இல்லை. எனவே தமிழக முதலமைச்சராக இருந்த செயலலிதா 1993ஆம் ஆண்டு சூலை 18ஆம் தேதியன்று உண்ணா நோன்பை மேற்கொண்டார். 4 நாட்கள் அவர் மேற்கொண்ட உண்ணா நோன்பின் எதிரொலி டில்லியைச் செயல்படவைத்தது. அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ் மத்திய பாசனத் துறை அமைச்சரான வி.சி. சுக்லாவை அனுப்பி தமிழக முதலமைச் சருடன் பேச்சு நடத்தி இறுதியாக காவிரிப் பிரச்சினை சம்பந்தமாக இரண்டு குழுக்களை அமைக்கப் போவதாக அறிவித்தார். காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவைக் கண்காணிக்க ஒரு குழுவையும் அது நடைமுறைப்படுத்த மற்றொரு குழுவையும் நியமிக்கப் போவதாக அறிவித்து உண்ணா விரதத்தை முடித்து வைத்தார்.
இந்த அறிவிப்பை ஏற்று கரு நாடகம் காவிரியில் நீரைத் திறந்து விடவேண்டும் என்று ஆணை யிடுமாறு நடுவர் மன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. அதை நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டு டிசம்பர் 19ஆம் தேதியன்று கீழ்க்கண்ட ஆணையைப் பிறப்பித்தது. உடனடி யாக தமிழ்நாட்டுக்கு 11 டிஎம்.சி. தண்ணீரை அளிக்குமாறு உத்தர விட்டது. ஆனால் இந்த ஆணையை மதிக்க கருநாடகம் மறுத்துவிட்டது. இதன் விளைவாக மீண்டும் உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு முறை யிட்டது. உச்சநீதிமன்றம் தலையிட்டு உடனடியாக ஆவன செய்யுமாறு இந்தியப் பிரதமருக்கு ஆணைப் பிறப்பித்தது. இந்தியப் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் நடுவர் மன்றம் கூறியபடி 11 டி.எம்.சி. தண்ணீ ருக்குப் பதில் 6 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட ஆணை யிட்டார். மறுபடியும் தமிழகத்தை இந்திய அரசு வஞ்சித்தது.
2007ஆம் ஆண்டு சனவரியில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங் கியது. ஆனால் இந்தத் தீர்ப்பையும் கர்நாடகம் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது. இந்திய அரசும் இந்தத் தீர்ப்பை தனது கெசட்டில் பதிப்பிக்க வில்லை. எனவே அது செயல்படாத தீர்ப்பாகவே இன்னமும் இருந்து வருகிறது.
பிரதமராக வாஜ்பாய் பதவி ஏற்றபோது பிரதமரும் 4 மாநிலங்களின் முதல்வர்களும் அடங்கிய குழுவை உருவாக்கினார். இந்த குழுவிற்கு உதவியாக சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலாளர்களும். மத்திய நீர்ப்பாசனத்துறையைச் செயலாள ரையும் கொண்ட குழுவும் அமைக்கப் பட்டது. இந்த குழுக்கள் அதிகாரமற்ற குழுக்களாகும். எனவே இத்தகைய குழுக்களினால் எத்தகைய நடவடிக் கையும் எடுக்க முடியவில்லை.
சட்டப்படி மத்திய அரசு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வ தற்கு முன்வரவில்லை. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நதி நீர் வாரியச் சட்டத்தைப் பயன்படுத்தி காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
உச்சநீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்தத் தீர்ப்புகளைக் கருநாடகம் மதிக்கவில்லை என தமிழகம் மத்திய அரசிடம் புகார் செய்தவுடன் மேலே கண்ட சட்டத்தின் 4/1 பிரிவின்படி காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பை மத்திய அரசு அமைத்து அதை தனது கெசட்டிலும் பதிப்பித்திருக்க வேண்டும். இச்சட் டத்தில் இந்த அமைப்பின் தலைவராக வும் உறுப்பினர்களாகவும் நியமிக்கப் படக் கூடியவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும். அவர்களுக்கு என்னென்ன அதிகாரங் கள் உள்ளன என்பது பற்றி விரிவாகவும் தெளிவாகவும் சொல்லப் பட்டிருக்கின்றன.
இச்சட்டத்தின் 22/1 (சி) பிரிவில் சொல்லப்பட்டுள்ள படி அதிகார அமைப்பின் ஆலோசனையை சம்பந் தப்பட்ட மாநில அரசுகள் ஏதாவது மீறினால் வாரியம் உடனடியாக ஒரு நடுவரை உச்சநீதிமன்றத் தலைமை நீதி பதியின் ஆலோசனையுடன் நியமிக் கும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர் இவ்வாறு நியமிக்கப்படலாம். இந்த நடுவரின் தீர்ப்பே இறுதியானது. பிரச் சினையில் சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களையும் இத்தீர்ப்புக் கட்டுப் படுத்தும் உடனடியாக இத்தீர்ப்பை ஏற்றுச் செயல்படுத்துவது சம்பந்தப் பட்ட மாநிலங்களின் நீங்காத கடமையாகும்.
இச்சட்டத்தில் இவ்வளவு தெளிவாக எல்லாம் சொல்லப்பட்டிருந்தும் நதிநீர் வாரியச் சட்டத்தை 1956ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இந்திய அரசு பயன் படுத்தவே யில்லை என்பதும் இது செயலற்றச் சட்டமாக இன்றுவரை கிடக்கிறது என்பதும் மிகமிக வருந்தத் தக்கதாகும். 1974ஆம் ஆண்டிலேயே காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பை ஏற்படுத்த கருநாடகம், கேரளம், தமிழகம் ஆகிய 3 மாநிலங் களும் ஒப்புக்கொண்டன. ஆனால் கடந்த 38 ஆண்டுகளாக அதை அமைக்க மத்திய அரசு முன்வர வில்லை. உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பிற்குப் பிறகாவது இந்த அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு முன்வரவேண்டும். இந்திய அரசின் இந்த அலட்சியப் போக்கு மாநிலங் களுக்கிடையே மோதலை அதிகமாக்கு வதோடு இந்திய அரசியல் சட்டப்படி அமைக்கப்பட்ட உச்சநீதிமன்றம் போன்ற உயர் அமைப்புகளையும் யாரும் மதிக்காத நிலையை ஏற்படுத்தி விடும் என்பதையும் இறுதியில் தேச ஒருமைப்பாடு என்பது சிதறுண்டுப் போகும் என்பதையும் இந்திய அரசு உணர்ந்து செயல்படவேண்டும்.