வசைத் தமிழ் வல்லவர் - பழ. நெடுமாறன் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2012 14:45
சகோதரச் சண்டையால்தான் ஈழத்தில் தோல்வியும் அழிவும் ஏற்பட்டது என்ற பொய்யை திரும்பத் திரும்ப கருணாநிதி கூறிவருவதைக் கண்டித்து நான் ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரை
அவரை படாதபாடு படுத்திவிட்டது. உண்மை சுட்டதுதான் அதற்குக் காரணமாகும். தனது முரசொலி இதழிலும் பொதுக் கூட்டங் களிலும் கடந்த சில நாட்களாக எனக் குப் பதில் சொல்வதில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்.
"தி.மு.க.வையும் அதன் தலைவ ராகிய அவரையும் பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் வரை பழிப்பதும் இழித்துப் பேசுவதும் தவிர வேறு எதையும் கற்றதுமில்லை கடைப்பிடித்ததுமில்லை. புலிகளுக்கிடையே சகோதர யுத்தம் தூண்டிவிடப்பட்டதற்கும் அதனால் தளபதிகளும் மாவீரர்களும் பலியாகி அந்தப் போரில் பின்னடைவு ஏற்பட்ட தற்கும் நெடுமாறன் கும்பல் அங்கும் இங்கும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்ததுதான் காரணம் என்பதை நடுநிலையாளர்கள் நன்கு அறிவார்கள்.'' என புலம்பியிருக்கிறார்.
விடுதலைப் புலிகளும் அவர்களின் தலைவர் பிரபாகரன் அவர்களும் யாரு டைய தூண்டுதலின்படியும் செயல்படுபவர்கள் அல்லர். உலகத்தின் மிகச் சிறந்த விடுதலை இயக்கத்தை இவ்வாறு கூறுவது அதைக் கொச்சைப்படுத்துவதாகும். கருணாநிதியால் பேணி வளர்க் கப்பட்ட டெலோ போன்ற இயக்கங்கள் தான் "ரா'' உளவுத்துறையின் தூண்டுதலுக்கு இரையாகி அழிந்தன.
எனது கட்டுரையில் எந்த ஒரு இடத்திலும் அவரைப் பற்றி தரக்குறை வான வார்த்தைகள் இடம் பெறவில்லை. அவரைப் பழித்தோ இழித்தோ எதுவும் கூறவில்லை. அவ்வாறு எழுதுவதும் பேசுவதும் எனக்குப் பழக்கம் இல்லாத ஒன்றாகும். அது கருணாநிதிக்கு மட்டுமே ஆகிவந்த கலையாகும்.
சகோதரச் சண்டையை யார் தொடக்கிவைத்தது? திம்பு மாநாட்டில் போராளிகள் ஒற்றுமையாக இருந்து முன்வைத்த கோரிக்கையின் விளைவாக ஆத்திரமடைந்த "ரா'' உளவுத்துறை இந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் வேலைகளை மேற்கொண்டது என்பதை யும் அதன் விளைவாகப் போராளி களுக்கிடையே மோதல் எப்படித் தூண்டிவிடப்பட்டது என்பதையும் ஆதாரப்பூர்வமாக கூறியிருந்தேன். இந்திய அமைதிப்படையின் தளபதி மேஜர் ஜெனரல் ஹர்கிரத்சிங் "ரா'' உளவுத்துறை குறித்து எழுப்பிய குற்றச் சாட்டினையும் "ரா'' உளவுத் துறையின் தலைவராக இருந்த ஏ.கே. வர்மா பிற்காலத்தில் வெளியிட்ட உண்மை களையும் எடுத்துக்காட்டியிருந்தேன். தமிழக சட்டமன்றத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி "ரா'' உளவுத்துறைதான் போராளிக் குழுக் களைப் பிளவுப்படுத்தியது என பகிரங்கமாகக் குற்றம்சாட்டியதையும் சுட்டியிருந்தேன். மேற்கண்ட ஆதாரப் பூர்வமான தகவல்கள் எதற்கும் அவர் எவ்விதப் பதிலையும் கூறவில்லை. என்மீது வசைமாரி பொழிவதில் ஈடுபட்டிருக்கிறார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட நீண்ட அறிக்கையில் எனக்குப் பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பொய்யான தும் முன்னுக்குப்பின் முரணானதுமான விவரங்களையே தந்துள்ளார். இலங்கையில் போர் மும்முரமாக நடந்தபோது அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் கொண்டுவர மத்திய அரசை நடத்தும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கி யத் தலைவரான கருணாநிதி அதில் அடியோடு தவறிவிட்டார் என்பது என்னுடைய மற்றொரு குற்றச் சாட்டாகும். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் "மத்திய அரசை மீறி ஒரு மாநில அரசு எந்த அளவுக்கு இது போன்ற பிரச்சினைகளில் தீர்வு காணமுடியும் என்பதில் அரசியல் அதிகார ரம்புகளைப்
பற்றி தெளிவான அறிவு படைத்தவர்கள் தான் உணர முடியும்'' என்று கூறியுள்ளார். ஐந்து முறை முதலமைச்சராக இருந்த ஒருவருக்கு அதிலும் மத்தியில் ஆளுங் கட்சி எதுவோ அதனுடன் எப்போதும் இணைந்து செல்லக்கூடியவருக்கு பிற மாநில முதல்வர்கள் இதுபோன்ற கட்டங் களில் எப்படி நடந்துகொண்டார்கள் என்பது நன்கு தெரிந்திருந்தபோதிலும் அதை மறைப்பதற்கு முயற்சி செய்திருக்கிறார்.
மேற்கு வங்கத்தின் முதலமைச்ச ராக இருந்த ஜோதிபாசு வங்கதேசத்து டன் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமலிருந்த பராக்கா அணைப் பிரச்சினை குறித்து பேசுவதற்காக டாக்கா சென்று அந்நாட்டின் பிரதமரைச் சந்தித்துப் பேசி ஒரு சமரசத் தீர்வு கண்டார். ஆனால் மாநில முதலமைச்சர் என்ற முறையில் வெளிநாடு ஒன்றின் பிரதமருடன் அவர் உடன்பாடு செய்ய முடியாது. எனவே டில்லி திரும்பி அப்போது பிரதமராக இருந்த தேவகவுடே அவர்களைச் சந்தித்து இது எங்கள் வங்க மக்களின் பிரச்சினை. இதற்கு இப்படித்தான் தீர்வு காண வேண்டும் என வற்புறுத்தி அவரை வங்க தேசத்துடன் உடன்பாடு செய்ய வைத்தார். இது வரலாறு. ஆனால், ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு என்ன சொல்கிறதோ அப் படித்தான் இந்திய அரசு செயல்பட வேண்டும் என வற்புறுத்துகிற துணிவோ அல்லது மனமோ கருணாநிதிக்கு இல்லாமல் போனது. மத்திய அரசு ஈழத் தமிழர் பிரச்சினையில் என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ அதுதான் எனது நிலைப் பாடு என ஒரு முறையல்ல பலமுறை திரும்பத் திரும்பச் சொன்னவர் கருணாநிதி.
போர் நிறுத்தம் செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு பிரதமரையும், பிரணாப் முகர்ஜியையும் தான் வலியுறுத்தியிருப்ப தாக கருணாநிதி கூறினார். ஆனால் 18-2-2009 அன்று நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை நிலைமை குறித்து அறிக்கை ஒன்றை அளித்தார். "அந்த அறிக்கையில் போர் நிறுத்தம் செய்யும் படி இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த முடியாது. ஆனால் இலங்கை அரசு அறிவித்திருக்கிற பாதுகாப்பு வளையங் களுக்கு மக்கள் செல்வார்களானால் அவர்களுக்கு உயிர்ப்பாதுகாப்பு கிடைக்கும்'' என்று கூறினார்.
ஆனால் சிங்கள அரசின் வாக்குறுதியை நம்பி பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த மக்கள் மீது குண்டுகள் வீசப்பட்டு அவர்கள் படு கொலை செய்யப்பட்டனர். மருத்துவ மனைகள் மீது தாக்குதல்கள் நடத்தப் பட்டு அழிக்கப்பட்டுள்ளன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை இலங்கை அரசு நாட்டைவிட்டு வெளியேற்றி யுள்ளது. மேற்கண்டவை குறித்தெல்லாம் பிரணாப் முகர்ஜியின் அறிக்கையில் சிறு கண்டனம் கூட தெரிவிக்கப்படவில்லை. பிரணாப் முகர்ஜியின் அறிக்கையின் விளைவாக இலங்கையில் போர் நிறுத்தம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று அறிவிக்கும் துணிவை இராசபக்சே பெற்றார். ஆனால் தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக இந்திய அரசு போர் நிறுத்த முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக கருணாநிதி பொய்யான தகவல்களைத் திரும்பத் திரும்பக் கூறினார்.
இலங்கையில் போரை நிறுத்தப் போதிய நடவடிக்கைகளை எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இது வரை எந்தத் தலைவரும் கூறாத ஒரு பதிலை கருணாநிதி கூறியிருக்கிறார். "என் மீது புகார் காண்டம் படிக்கும் அந்தக் கூட்டத்தில் உள்ளவர்களை நான் கேட்கிறேன். உங்கள் வாதப்படி நான்தான் எதுவும் செய்யவில்லை. நீங்கள் அப்போது என்ன செய்து கிழித்தீர்கள். சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்துவிட்டு இலங்கைத் தமிழர்களுக்காக உயிரை விட்டிருக்க வேண்டியதுதானே? அதை ஏன் நீங்கள் செய்யவில்லை'' எனக் கொந்தளிக்கிறார். கோபத்தில் அவர் நிதானம் இழந்திருப் பது நன்கு தெரிகிறது. "ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு'' என்ற பழ மொழிதான் நினைவிற்கு வருகிறது.
இலங்கைத் தமிழர்களுக்காக தங்களது இன்னுயிர்களை அர்ப்பணித்து தீயில் கருகி மாண்ட முத்துக்குமார் உட்பட 17 தமிழர்கள் தமிழ்நாட்டில் உன் னதமான உயிர்த்தியாகம் செய்தபோது முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்களின் தியாகத்தைக் கொச்சைப் படுத்துவதில் முனைந்தார். குடும்பப் பிரச்சினையின் காரணமாகவும் வேறு சொந்தப் பிரச்சினையின் காரணமாகவும் அவர்கள் தற்கொலை செய்துகொண்டார் கள் என இவரின் கீழ் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் அறிக்கைகள் வெளியிட்டார்கள். முதலமைச்சராக இருந்த இவர் அவற்றை ஒருபோதும் கண்டிக்கவில்லை. ஆனால் இப்போது இலங்கைத் தமிழர்களுக்காக உயிரை விட்டிருக்க வேண்டியதுதானே எனக் கேட்கிறார். மனிதநேயம் உள்ள யாரும் இத்தகைய கேள்விகளை ஒருபோதும் எழுப்ப மாட்டார்கள்.
1-7-09 அன்று தமிழக சட்ட மன்றத்தில் முதல்வர் கருணாநிதி கூறிய வார்த்தைகள் ஒட்டுமொத்த தமிழர் களையும் அதிர்ச்சியடைய வைத்தன.
"ஈழத் தமிழர்களின் வாழ்வா தாரத்தை பெருக்க வேண்டுமேயானால் சிங்கள அரசின் மூலமே அதைச் செய்ய முடியும். எனவே நம்முடைய பேச்சால், நம்முடைய நடவடிக்கையால் சிங்களரு டைய கோபத்தை அதிகரிக்கும் வகையில் எதுவும் செய்துவிடக்கூடாது'' என தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கக் கூடியவர் கூறினார். அதுமட்டுமல்ல, "தமிழீழ'' தனிநாடு இனி சாத்தியமானது அல்ல. சமஉரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு சிங்களரிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்'' என்றும் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
உலகத்தின் பலநாடுகள் இராச பக்சே அரசின் மனித உரிமை மீறல் களை மிகக்கடுமையாகக் கண்டனம் செய்யும் கட்டத்தில் இராசபக்சேக்கு வெண்சாமரம் வீசும் வேலையில் தமிழக முதலமைச்சர் ஈடுபட்டது வெட்கக் கேடானதாகும். இதன் மூலம் உலக நாடுகள் நடுவில் ஈழத்தமிழர் போராட் டம் குறித்து ஒரு தவறான கண்ணோட் டத்தை ஏற்படுத்த அவர் செய்யும் முயற்சி வெற்றிபெறப் போவதில்லை.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க் கால் பகுதியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் செத்து மடிந்து கொண்டிருந்தபோது 13-8-2009இல் இவர் என்ன கூறினார். "இலங்கையில் இப்போது சுமூக நிலை ஏற்பட்டுவிட்ட பிறகும்கூட அந்தப் பிரச்சினையைக் கிளப்பிவிட்டுக்கொண்டிருப்பவர்களை எனக்குத் தெரியும்'' எனக் கூறினார். ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதை சுமூக நிலை என்று கருதினாரா? அல்லது மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர் கள் முள்வேலி முகாம்களுக்குள் முடக் கப்பட்டு போதுமான உணவு மருந்து இல்லாமல் தினமும் 200 பேருக்கு மேல் செத்துக்கொண்டிருந்தார்களே அதை சுமூக நிலை என்று கருதினாரா? தமிழர் பகுதிகளில் சிங்களரைக் குடியேற்று வதை சுமூக நிலை என்று கருதினாரா? எது சுமூக நிலை? இவ்வளவு கொடுமைகள் இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் போது அதைக் கண்டித்து ஒருவார்த்தை இதுவரைல்லாதவர்;

இப்போது அங்கு சுமூக நிலை என்று கூறுவதன் மூலம் இராச பக்சே நடத்திவரும் அட்டூழியங்களை மறைப்பதற்குத் துணை நின்றார். ஆனால் இப்போது டெசோ மாநாட்டில் ஈழத் தமிழர் நிலை மிக இரங்கத்தக்க நிலையில் இருப்பதாகப் பேசி முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.
"காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பது பழமொழி. இலங்கையில் போர் நடைபெற்றபோது நான் எதுவும் செய்யவில்லையா? இதோ பட்டியல்'' என்று கூறி அனைத்துக் கட்சிக் கூட்டம், மனிதச் சங்கிலி, சட்டமன்றத்தில் தீர்மானம், தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம், பேரணி, முழு அடைப்பும் வேலை நிறுத்தமும் என ஒரு நீண்ட பட்டியலையே அளித்திருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டியதை மாநிலத்தில் ஆளுங் கட்சியாகவும், மத்தியில் ஆளுகின்ற கூட்டணியில் அங்கம் வகிக்கிற கட்சி யாகவும் இருக்கிற ஒரு கட்சி செய்வது சாதனையா என்ன? எதிர்க்கட்சிகளுக்கு வீதியிலே இறங்கி போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆளுங்கட்சியி னரும் அதே வேலையைச் செய்வது கேலிக் கூத்தாகும். மத்திய அமைச்சர வையில் இவர் மகன் உட்பட தி.மு.க. அமைச்சர்கள் பலர் இருக்கிறார்கள்.

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அமைச்சரவையில் இவர்கள் போராடியிருந்திருக்க வேண்டும். அங்கு அதை செய்யாமல் முச்சந்தியில் நின்று முழங்குவது பிரச்சினையைத் தட்டிக் கழிப்பதாகும். மக்களை ஏமாற்றுவதாகும். அது மட்டுமல்ல, "மாநில அரசின் பொறுப்பில் இருந்து தி.மு.க. ஏன் விலக வில்லை என்று சிலர் கேட்கிறார்கள்.

நாங்கள் அப்போது பதவி விலகியிருந்தால் இலங்கை அரசு போரை நிறுத்தி யிருக்குமா?'' என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார். அவரது நிலையைக் கண்டு பரிதாபப்படுகிறேன். பதவி மீதுள்ள அவரது அடங்காத ஆசை எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனாலும் ஒரு இனம் திட்டமிட்டு அழிக்கப்படும்போதுகூட பதவி நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வாதமிடும் ஒருவரை இப்போதுதான் தமிழகம் பார்க்கிறது. பதவி விலகினாலும் எதுவும் நடக்காது எனக்கூறி உலகை ஏமாற்ற முற்படும் அவருக்கு ஒரு நிகழ்ச்சியை நினைவுபடுத்துகிறேன். ஒன்றுபட்ட பம்பாய் மாகாணத்தை மொழிவழியாக மராட்டியம், குசராத் என பிரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. பம்பாய் நகரத் தின் மீது இரு தரப்பும் உரிமை கொண்டாடியதால் இரண்டு மாகாணங்களுக்கும் பொதுவான தலைநகரமாக பம்பாய் இருக்கட்டும் என பிரதமர் நேரு அறிவித்தார். நேருவின் இந்த அறிவிப்பைக் கண்டு மராட்டிய மக்கள் கொதித்தெழுந்தார்கள். பெரும் போராட் டம் மூண்டது. அப்போது இராணுவத்தை ஏவி அந்தப் போராட்டத்தை ஒடுக்கு வதற்கு முயற்சி நடைபெற்றது. இராணுவ துப்பாக்கிச் சூட்டில் 300க்கு மேற்பட்ட மராட்டியர்கள் இறந்து போனார்கள். இந்த பதட்டமான சூழ்நிலையில் மத்திய நிதியமைச்சராக இருந்த சிந்தாமணி தேஷ்முக் பிறப்பால் மராட்டியர். எனவே அவரது மனச்சாட்சி அவரை உறுத்தி யது. அவர் ஒன்றும் அரசியல்வாதி அல்ல. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த அவரை நேரு நிதியமைச்ச ராக்கினார். நேருவின் மதிப்பையும் அன்பையும் ஒருங்கே பெற்றவராக இருந்தபோதிலும்கூட தனது மக்கள் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டு வேதனையடைந்தார். "மராட்டிய மக்களுக்கு பம்பாய் நகரம் சொந்த மானது. அதற்காகப் போராடும் எனது மக்களைக் கொன்று குவிப்பதைக் கண்டிக்கும் வகையில் எனது அமைச்சர் பதவியை விட்டு விலகுகிறேன்'' எனக் கடிதம் எழுதக்கூடிய துணிவு அவருக்கு இருந்தது. நேரு தமது வாழ்நாளில் என்றும் அடையாத அதிர்ச்சியை அடைந்தார். தேஷ்முக்கின் பதவி விலகல் அவரைச் சிந்திக்க வைத்தது.

இதன் விளைவாக பம்பாய் மராட்டியர்களுக்கே சொந்தம் என நேருவை அறிவிக்க வைத்தது. தேஷ்முக் என்ற தனியொரு மனிதன் தனது பதவியைத் தியாகம் செய்ய முன்வந்ததன் மூலம் மராட்டிய மக்களுக்கு பம்பாய் நகரம் கிடைத்தது. இது வரலாறு. 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு தேஷ்முக்கின் தியாக வரலாறு தெரியாமல் இருக்க முடியாது. ஆனால் பதவிமீது அவர் கொண்ட வெறி அவர் கண்களைக் கட்டிப்போட்டுவிட்டது. அந்தக் காலக்கட்டத்தில் தி.மு.க. வின் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களை நம்பித்தான் மன்மோகன் சிங் அரசு பதவியில் நீடித்தது. தி.மு.க.வின் அமைச் சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் போர் நிறுத்தத்திற்கு இந்திய அரசு ஏற்பாடு செய்யாவிட்டால் அந்த அரசுக்கு அளிக்கிற ஆதரவைத் திரும்பப் பெறு வோம் எனக்கூறி இருந்தாலே போதும்; இந்திய அரசுக்கு வேறு வழி இருந் திருக்க முடியாது. ஆனால், அவ்வாறு செய்ய கருணாநிதி துணியவில்லை.
டெசோ மாநாட்டிற்கு காவல் துறை தடை விதித்ததை யும் அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்றதையும் பெரும் சாதனையாகவும், அ.தி.மு.க. அரசின் ஜனநாயக விரோதப் போக்கிற்கு எடுத்துக்காட்டாகவும் கருணாநிதி சுட்டிக்காட்டியிருக்கிறார். மாநாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டது தவறு என நான் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். அந்த சனநாயக விரோத நடவடிக்கையை நான் ஆதரிக் கவில்லை. ஆனால் அதைக்கூறும் தகுதி கருணாநிதிக்கு இல்லை. ஏன் என்றால் நாங்கள் நடத்த இருந்த 8க்கும் மேற் பட்ட தமிழீழ ஆதரவு மாநாடுகளுக்குத் தடைவிதித்தவர் கருணாநிதியே. உயர் நீதிமன்றத்தில் நீதியை நிலைநிறுத்தி அதற்குப் பிறகுதான் அந்த மாநாடுகளை நடத்தினோம்.
1985இல் நான் இலங்கைக்கு ரகசிய சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னால் இவருக்கு எழுதிய கடிதத்தில் போராடும் விடுதலைப் போராளி களுக்கும் மக்களுக்கும் நமது டெசோ இயக்கத்தை தவிர வேறு உற்ற துணைவன் இல்லை. அதை மேலும் வளர்க்க வேண்டியது நம்முடைய கடமையாகும் என குறிப்பிட்டிருந்தேன். ஆனால், இவர் என்ன செய்தார். எனக்கும் வீரமணி அவர்களுக்கும் தெரியாமல் டெசோ இயக்கம் இனி செயல்படாது என அறிவித்துவிட்டு ஒதுங்கிக்கொண்டார். அப்போது ஏன் அவ்வாறு செய்தார்? இப்போது ஏன் மீண்டும் டெசோவைத் தூக்கிப் பிடிக்கிறார்? என்பதற்குரிய விளக்கத்தை இதுவரை கூறவில்லை.
அது மட்டுமல்ல உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து போராடியபோது அவர்கள் மீது அதிரடி காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாகத் தாக்க வைத்தவர் கருணாநிதி. தமிழகமெங்கும் மாணவர்கள் கல்லூரிகளுக்குச் செல்லாமல் போராடியபோது அனைத்துக் கல்லூரி களையும் மூடியவர் கருணாநிதி. ஈழத் தமிழர்களுக்காக ஆதரவாகப் பேசுப வர்கள், எழுதுபவர்கள், செயல்படுப வர்கள் மீது பொய்யான வழக்குகளைத் தொடுத்துக் கைது செய்தார். பல தோழர்கள்மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போடப்படும் கூட்டங் களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கூட்டங்களுக்கு இடமளிக்கக்கூடாது என மண்டப உரிமையாளர்களை காவல்துறை மிரட்டியது. சுவரொட்டிகள், துண்ட றிக்கைகள் ஆகியவற்றை அச்சிடக் கூடாது என அச்சகங்கள் பயமுறுத் தப்பட்டன. மொத்தத்தில் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை இவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் நிலவியது.
23-4-2009இல் ஒரு நாள் முழு அடைப்பும் வேலை நிறுத்தமும் செய்த தைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு 4-2-2009 அன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வேலை நிறுத்தமும் முழுஅடைப்பும் நடத்த நாங்கள் முற்பட்டபோது தலைமைச் செயலாளரை விட்டு அது சட்ட விரோதம் என அறிவிக்கச் செய்தார். அது மட்டுமல்ல இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் அனைவருக்கும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவ தாக எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்க வைத்தார். அவரின் இந்த கெடுபிடியெல்லாம் மீறித்தான் நாங்கள் அந்தப் பந்த் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி னோம். எதைச் சட்டவிரோதம் எனக் கூறினாரோ அதே பந்த் போராட்டத்தை இவரும் நடத்த நேர்ந்தது.
ஈழத்தில் போர் உச்சக்கட்டமாக நடந்துகொண்டிருந்த போது 27-4-09 அன்று ஒரு நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றினார். அண்ணா நினைவிடத் தில் சாகும்வரை பட்டினிப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டுமென்பதற்காகவே இந்தப் போராட்டம் என்று கூறினார். ஆனால், அன்று பகல் 11 மணியள விலேயே மத்திய நிதியமைச்சராக அப்போது இருந்த ப. சிதம்பரம் இலங்கை யில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக தமக்கு செய்தி அனுப்பியிருப்பதாகக் கூறி உண்ணா நோன்பை முடித்துக் கொண்டார்.
ஆனால் 30-8-12 அன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 27-4-09 அன்று வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கை யில் போர் நடவடிக்கைகள் முற்றுப் பெற்றுவிட்டன. கனரக துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான்வழித் தாக்கி டும் ஆயுதங்கள் போன்றவற்றை இலங்கை பாதுகாப்புப் படை பயன் படுத்தக்கூடாது என்று ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. மத்திய முக்கிய அமைச்சர் ஒருவரே இவ்வாறு அறி வித்த பிறகும் அதை எப்படி நம்பாமல் இருப்பது? அவ்வாறு நம்பி நான் எடுத்த முடிவுக்குத்தான் இப்போது களங்கம் கற்பிக்க முயல்கிறார்கள் எனக் கூறியிருக்கிறார்.
பிரணாப்பை நம்பிதான் நான் உண்ணாவிரதத்தை நிறுத்தினேன் என இப்போது புலம்புகிற அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் போட்டி யிட்டபோது வரிந்துகட்டிக்கொண்டு முதல் ஆளாக அவரை ஆதரித்து களத்தில் இறங்கியது ஏன்? இந்த கேள்விக்காவது அவர் பதில் கூறவேண்டும்.
3 ஆண்டுகளுக்கு முன்பு உண்ணாவிரதத்தை முடித்து வைப்ப தற்கு மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறிய செய்திதான் காரணம் என்று அப்போது கூறினார். ஆனால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பிரணாப் முகர்ஜியை நம்பித்தான் உண்ணாவிரதத்தை நிறுத்தினேன் என்று புலம்புகிறார். எது உண்மை? இவருக்கு வாக்குறுதி அளித்தது சிதம்பரமா? பிரணாப் முகர்ஜியா? என்ற கேள்விகள் அடுக்கடுக்காக எழுகின்றன. அவற் றுக்கு இதுவரை எந்தப் பதிலையும் அவர் கூறவில்லை.
2009ஆம் ஆண்டு போர் நெருக் கடியான காலக் கட்டத்தில் போர் நிறுத்தம் குறித்துப் பொய்யான வாக்கு றுதிகளையும் செய்திகளையும் கூறி தமிழக மக்களை கருணாநிதி ஏமாற்றி னார் என்பது பின்னர் அம்பலமாகி விட்டது. இப்போதும் அதைப்போல முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை மக்களிடையே கூறி வருகிறார். அதைச் சுட்டிக்காட்டி கண்டிப்பவர்கள்மீது பாய்கிறார். வசைமாரி பொழிகிறார். பொது வாழ்க்கைக்குப் பொன்விழா கொண் டாடிய மூத்த தலைவர் ஒருவர் தன்னிலை பிறழ்ந்து ஆத்திர வயப்பட்டு வார்த்தைகளை அள்ளிக்கொட்டுவது அவரின் உண்மையான உருவத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. அவருடைய தொண்டர்கள் அவருக்கு முத்தமிழ் அறிஞர் என்ற பட்டத்தை சூட்டியிருக் கிறார்கள். ஆனால் உண்மையில் வசைத் தமிழ் வல்லவர் என்ற பட்டம் அவருக்கு மிகமிக பொருத்தமானதாகும்.
நன்றி : தமிழக அரசியல் 9-9-12