ஆறுகளைப் பாதுகாக்காவிட்டால் எதிர்காலம் இருண்டு விடும்: பழ. நெடுமாறன் அச்சிடுக
திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013 14:15
ஆறுகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்காவிட்டால் எதிர்காலம் இருண்டு விடு:ம என உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ. நெடுமாறன் பேசினார்.
திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் முனைவர் பழ. கோமதிநாயகம் எழுதிய "தாமிரவருணி சமூக-பொருளியல் மாற்றங்கள், "மண்ணை அளந்தவர்கள், "தமிழகம்... தண்ணீர்... தாகம் தீருமா', "தமிழக பாசன வரலாறு' ஆகிய 4 நூல்கள் வெளியிடப்பட்டன. நூல்களை வெளியிட்டு
பழ. நெடுமாறன் பேசியதாவது.
ஆற்றுநீர், மணல் அள்ளும் பிரச்சினைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் பழ. கோமதிநாயகம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அவரது 4 நூல்களும் அதற்குக் கட்டியம் கூறுகின்றன. இயற்கை வளங்களையும், தாமிரவருணியையும் பாதுகாக்க மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என பலரும் குறிப்பிட்டு பேசியிருக்கின்றனர். வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் பேசிய பேச்சுகளால் மக்கள் கொதித்தெழுந்து போராடினர். அத்தகைய நிலை தாமிரவருணியைப் பாதுகாப்பதிலும் இருக்க வேண்டும்.
முன்னோர்களால் பல ஆண்டுகள் தூய்மையாக பராமரிக்கப்பட்ட ஆறுகளை சாக்கடையாக மாற்றியிருக்கிறோம். உலகின் பல நாடுகளிலும் ஆறுகளையும், நதிகளையும் தூய்மையாகப் பராமரிக்கின்றனர்.
ஆறுகளையும், மணலையும் வாழையடி வாழையாக நமது முன்னோர்கள் பாதுகாத்து இந்தத் தலைமுறைக்கு விட்டுச் சென்றுள்ளனர். அதேபோல் அடுத்த தலைமுறைக்கும் நாம் அவற்றை விட்டுச் செல்ல வேண்டும். அது நமது கடமை. அதைச் செய்யாவிட்டால் அடுத்த தலைமுறைக்கு நாம் துரோகம் செய்கிறோம் என்று அர்த்தம். தாமிரவருணி ஆற்றைப் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை. மக்களது ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இதைச் செய்ய முடியாது.
சேரர், சோழர், பாண்டியர் காலத்தில் ஆற்றுவளங்களைக் கொள்ளையடித்தார்களா? கடந்த 20, 30 ஆண்டுகளில்தான் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து ஆறுகளையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்காவிட்டால், எதிர்காலம் இருண்டுவிடும். மணல் வளத்தைச் சூறையாடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார் அவர்.
விழாவில் பேசிய இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு "தாமிரவருணி பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அது நமது கடமையும்கூட' என்றார்.
விழாவுக்கு, திருநெல்வேலி மாவட்ட தமிழ் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு அமைப்பாளர். அ. சேவியர் தலைமை வகித்தார். தாமிரவருணி பண்பாட்டு அரங்கம் அமைப்பாளர் எம்.ஏ. பிரிட்டோ முன்னிலை வகித்தார். எழுத்தாளர் சி. மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ், தாமிரவருணி அமைப்பின் இயக்குநர் டி. பாலசுப்பிரமணிய ஆதித்தன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் அ. மைதீன் பாரூக், திருநெல்வேலி சமூக சேவை சங்க இயக்குநர்அருள்திரு ஜான்சன், தாமிரவருணி பாதுகாப்பு இயக்கத் தலைவர் அருள்திரு. கென்னடி, பேராசிரியர்கள் சாந்தி,
சி. கிறிஸ்டி, மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் கே.எம்.ஏ. நிஜாம் உள்ளிட்டோர் பேசினர். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் ஏ. கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.