அறிக்கை: ஆனைமுத்து மறைவு! பண்பட்ட மூத்தத் தலைவரை தமிழகம் இழந்தது! பழ. நெடுமாறன் இரங்கல்! அச்சிடுக
புதன்கிழமை, 07 ஏப்ரல் 2021 18:08

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர்  பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: 

மாா்க்சிய-  பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஐயா வே. ஆனைமுத்து அவர்களின் மறைவு அனைவருக்கும் பேரிழப்பாகும்.

மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, அவற்றை இந்திய அரசு செயல்படுத்தவேண்டும் என்பதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிற்பட்ட-ஒடுக்கப்பட்ட-பழங்குடியினர் -மதச் சிறுபான்மையினர் ஆகிய அனைவரையும் ஒன்று திரட்டி அரும்பாடுபட்டு  வெற்றி கண்ட பெருமைக்குரியவர்.  

மறைந்த பெரியார் அவர்களின் நெருங்கிய தோழராகத் திகழ்ந்து, அவரது பேச்சுக்களையும், எழுத்துக்களையும் முதன்முதலாக தொகுத்துத் தந்தவர். பகுத்தறிவு கொள்கைகளைப் பரப்புவதில் இறுதி மூச்சுவரை பாடுபட்டவர். தொண்டினால் பழுத்து, பண்பாடுமிக்க மூத்தத் தலைவரை தமிழகம் இழந்துவிட்டது. அவரின் மறைவினால் வருந்தும் குடும்பத்தினருக்கும், அவரது இயக்கத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.