தி. மு. க தீர்மானம் அரைக் கிணறு தாண்டுவதாகும் - பழ. நெடுமாறன் அறிக்கை |
![]() |
ஞாயிற்றுக்கிழமை, 21 பெப்ரவரி 2010 18:26 |
முல்லைப் பெரியாறு அணை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பிரச்னைகளை ஆராய்வதற்காக உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி அமைக்கப்படும் ஐவர் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதி இடம் பெறத் தேவையில்லை என தி. மு. க. பொதுக் குழு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை வரவேற்கிறேன். ஆனால் இது அரைக் கிணறு தாண்டும் நடவடிக்கையாகும். 27-2-2006-இல் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை உடனடியாக நிறைவேற்றும் வரையில் மத்திய அரசு செயல்பட தவறிவிட்டது. இந்திய அரசியல் சட்டத்தின் 262-ஆவது பிரிவிற்கு இணங்க 1956#ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய நதிநீர் வாரியச் சட்டத்தின் இரண்டாவது பிரிவு மத்திய அரசிற்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி பெரியாறு அணை நீர் வாரியம் ஒன்றினை உடனடியாக அமைத்து அந்த அணையின் கட்டுப்பாட்டை இந்த வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் வழங்க வேண்டிய நீரை இந்த வாரியமே வழங்கும் நிலை ஏற்படும். இவ்வாறு செய்ய மத்திய அரசு தவறுமேயானால் மத்திய அரசில் அங்கம் வகிக்கிற தி. மு. க. அமைச்சர்கள் உடனடியாக பதவி விலகுவார்களென தி. மு. கழகத் தலைவர் கருணாநிதி அறிவிக்க வேண்டுமென வற்புறுத்துகிறேன் |