மூவர் மரண தண்டனை - சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வோம் - பழ. நெடுமாறன் அறிக்கை அச்சிடுக
வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011 18:52
26 தமிழர்கள் உயிர்காப்பு வழக்கு நிதிக்குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
21 ஆண்டு காலம் சிறையில் வாடிய பிறகும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்து 11 ஆண்டுகளுக்குப் பிறகும் இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது இயற்கை நீதிக்குப் புறம்பானதாகும். 1992ஆம் ஆண்டு சிறப்பு நீதி மன்றம் 26 பேருக்கும் ஒட்டு மொத்தமாக மரண தண்டனை விதித்தபோது அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்காடி 18 பேர்கள் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்படவும் மூவருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படவும், இக்குழு வழி செய்தது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்காக அப்போதைய ஆளுநரிடம் கருணை மனு தாக்கல் செய்து அவர் அதை தள்ளுபடி செய்தவுடன் அது செல்லாது என உயர்நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றிபெற்றது இக்குழுவே ஆகும். அதைப்போல இப்போதும் மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்திருப்பதை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகளை இக்குழு மேற்கொள்ளும்.
இராசீவ் கொலையில் மேலும் புலன் விசாரணை செய்யப்பட வேண்டும் என ஜெயின் கமிசன் அளித்த பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்ட சி.பி.ஐ. புலன் விசாரணைக்குழு இன்னமும் தனது விசாரணையை முடித்து அறிக்கையைத் தரவில்லை. இதுபோன்ற உண்மைகளைக் கவனத்தில் கொள்ளாது இந்த மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் ஏற்க மறுத்திருப்பது வருந்தத்தக்கதாகும். எனவே சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இக்குழு விரைந்து எடுக்கும் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.