அமெரிக்கத் தீர்மானம் வெறும் கண்துடைப்பே! பழ. நெடுமாறன் கண்டனம் அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013 17:07
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்
பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளத் தீர்மானம் இலங்கையைக் கண்டிக்கிற தீர்மானம் அல்ல. அது ஒரு கண்துடைப்புத் தீர்மானமாக அமைந்திருக்கிறது.
ஈழத் தமிழர்களின் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் உலக நாடுகளின் கண்டனத்திலிருந்து இலங்கையைக் காப்பாற்றுகிறத் தீர்மானமாக அது உள்ளது.
அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் நிலைப்பாடு என்பது ஈழத் தமிழர் பிரச்சினையைப் பயன்படுத்தி இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து சீனாவிடமிருந்து பிரிப்பது மட்டுமே என்பது அம்பலமாகியிருக்கிறது. தங்களின் அரசியல் பொருளாதார நலன்களை மட்டுமே மனதிற்கொண்டு இந்நாடுகள் இராசபக்சேயின் இரத்தவெறிக்கு ஈழத்தமிழர்களைக் காவுக்கொடுக்கத் துணிந்துவிட்டன. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழக மாணவர்கள் எழுச்சியுடன் ஒன்றுபட்டு நடத்துகிற போராட்டத்திற்கு தமிழக மக்கள் அனைவரும் ஆதரவாக அணி திரள்வதின் மூலமே நம்மால் ஈழத் தமிழர்களை பாதுகாக்க முடியும்.