நீதிமுறைக்கு வேட்டுவைக்க ராகுல் முயற்சி - பழ.நெடுமாறன் கண்டனம் அச்சிடுக
வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2014 15:02

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

தனது தந்தையை கொன்ற கொலையாளிகளை உச்சநீதிமன்றம் விடுவித்ததைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு கருணை மனு அளித்தல், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தல் போன்ற உரிமைகளை அரசியல் சட்டம் வழங்கியுள்ளது. அதற்கிணங்க அவர்கள் அளித்த மனுவின் பேரில் உச்சநீதிமன்றம் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்திருக்கிறது. சட்ட வரம்புக்கு உட்பட்டு உச்சநீதிமன்றம் சரியானத் தீர்ப்பை வழங்கிய பிறகு அதைக் குறை சொல்வதும், நீதிபதிகளை மிரட்டும் வகையில் பேசுவதும் நாட்டின் நீதிமுறைக்கு எதிரானப்போக்காகும்.

மேலும் கொலையாளிகள் என்று குறிப்பிடுவதே தவறாகும். ஏனென்றால் காங்கிரஸ் அமைத்த ஜெயின் ஆணையம் ராஜீவ் கொலையில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது. அதற்கிணங்க காங்கிரஸ் அரசு சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு இன்னமும் பரிந்துரையை அரசுக்கு அளிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் இந்த மூவரை கொலையாளிகள் என்று குற்றம் சாட்டுவது மிகத் தவறானது. சிறப்புப் புலனாய்வுக் குழு பரிந்துரை அளித்தப் பிறகே உண்மையான குற்றவாளிகள் யார் என்பது தெரியவரும். இந்த நிலையில் மத்திய அதிகாரவர்க்கத்திற்கு மிகநெருக்கமான ராகுல்காந்தி போன்றவர்கள் இவ்வாறு பேசுவது உண்மையை மறைக்க முயல்வதாகும். அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பிற்குத் தடை வாங்க காங்கிரஸ் சார்பில் முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு உச்சநீதிமன்றம் இணங்கவில்லை. மாறாக இருவார காலத்திற்கு இப்போது இருக்கும் நிலை நீடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.

உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்துள்ள தீர்ப்பை மாற்றிக்கொள்ளவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ராகுல் காந்தி தனது பேச்சின் மூலமும், தனது கட்சியைச் சேர்ந்தவர்களை உச்சநீதிமன்றத்தில் மனுசெய்ய வைத்தும் ஏற்படுத்த முயல்வது நாட்டின் நீதிமுறைக்கு வேட்டுவைப்பதாகும். ஜனநாயகத்திலும் நீதிமுறையிலும் நம்பிக்கை உள்ள அனைவரும் இந்தப் போக்கினைக் கண்டிக்க முன்வருமாறு வேண்டுகிறேன்.