சுப்பிரமணிய சுவாமியை நீக்க வேண்டும்! தமிழக பா.ஜ.க.விற்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள் அச்சிடுக
திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2014 17:44

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணைப்படி ஆயுள் தண்டனை பெற்ற ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொள்ளும் முயற்சியால்

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் எனவே இந்த அரசைக் கலைக்க வேண்டும் என பா.ஜ.க.வைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு. முறைப்படி அமைச்சரவையைக் கூட்டி அதில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பியிருக்கிறார். மூன்று பேரின் கருணை மனுவை 11 ஆண்டு காலமாக மத்திய அரசு கிடப்பில் போட்டது போல மூவர் விடுதலை விசயத்திலும் செய்யக்கூடாது என்பதற்காக 3 நாள் கெடுவும் விதித்திருக்கிறார். இவ்வாறு சட்ட வரம்புக்கு உட்பட்டுத்தான் முதல்வர் செயல்பட்டிருக்கிறார். ஆனால், தமிழக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூப்பாடு போடுகிற சுப்பிரமணிய சுவாமிக்கு சட்டமும் தெரியவில்லை. கடந்த காலத்தில் என்ன நடந்திருக்கிறது என்பதும் தெரியவில்லை.
கர்நாடகத்தில் ஜனதா கட்சியின் ஆட்சி முதல்வர் பொம்மை தலைமையில் நடைபெற்றபோது அந்த ஆட்சியை கலைக்க மத்திய அரசு முற்பட்டது. ஆனால், பொம்மை உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். மாநில அரசுகளைக் கலைப்பதற்கு சில வரைமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்து பொம்மையின் ஆட்சியைப் பதவி விலக்குவதைத் தடுத்து நிறுத்தியது. அதற்குப் பிறகு இதுவரை எந்த மாநில அரசையும் மத்திய அரசு பதவி விலக்கவில்லை. விலக்கவும் முடியாது. இந்த அடிப்படையைக் கூட புரிந்துகொள்ளாமல் சுப்பிரமணியசுவாமி தமிழக அரசை மிரட்டுவதற்கு முயல்கிறார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் இராதாகிருஷ்ணன் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதற்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை கொஞ்சமும் மதிக்காமலும் செயல்படும் சுப்பிரமணிய சுவாமி மீது தமிழக பா.ஜ.க. நடவடிக்கை எடுத்து அவரைக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்வரவேண்டும் என வற்புறுத்துகிறேன்.