அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றமளிக்கிறது! பழ. நெடுமாறன் கண்டனம் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 04 மார்ச் 2014 20:13

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

அய். நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா, பிரிட்டன், மாண்டிநீக்ரோ, மாசிடோனியா, மொரிசீயஸ் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டாக கொண்டு வந்திருக்கும் தீர்மானம் புதிய மொந்தையில் தரப்படும் பழைய கள்ளே ஆகும்.

அய். நா. மனித உரிமை ஆணையர் பரிந்துரைத்தப்படி சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்படுவதற்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசே நம்பகத்தன்மையும் உருப்படியான நடவடிக்கைகளும் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து செயற்பட தவறினால் சுதந்திரமான நம்பகத்தன்மையுள்ள சர்வதேச விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என இத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த 4 ஆண்டுகளில் இரண்டு முறை அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின்படி இராஜபக்சே அரசே இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு விசாரணை நடத்தவும் பாதிக்கப்படட மக்களுக்கு உதவி செய்யவும் வேண்டுமென வற்புறுத்தப்பட்டது. ஆனால் இத்தீர்மானங்களை இராஜபக்சே அரசு கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. மீண்டும் அவருக்கு இரண்டாண்டு காலம் அவகாசம் கொடுப்பது என்பது இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களை அழிப்பதற்கு துணை போவதாகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அடுத்து இந்தத் தீர்மானத்தில் 13-ஆவது சட்டத்திருத்தத்தின்படி வடக்கு மாநில முதலமைச்சருக்கு தேவையான அதிகாரத்தையும் நிதியையும் வழங்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 13-ஆவது சட்டத்திருத்தத்தையே உச்சநீதிமன்ற ஆணையின் மூலம் இராஜபக்சே சாகடித்து விட்டார். இப்போது 13-ஆவது சட்டத்திருத்தமே இல்லை. அதன்படி தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது என்பது நடக்கப்போகாத ஒன்றாகும். அமெரிக்காவின் தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்மானமாகும். இந்தத் தீர்மானத்திற்கு திருத்தங்கள் கொண்டு வந்து ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டியது உலக நாடுகளின் கடமையாகும்.