முல்லைப் பெரியாறு - 34 ஆண்டுகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - பழ. நெடுமாறன் அறிக்கை அச்சிடுக
புதன்கிழமை, 07 மே 2014 13:22

பெரியாறு அணை உரிமை பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் நீண்ட காலத்திற்குப் தமிழகத்திற்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக

உயர்த்தலாம் என 2006-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை நிறைவேற்ற விடாமல் கேரள அரசு தடுத்து விட்டது. ஆனால், இப்போது உச்ச நீதிமன்றம் 142 அடியாக உயர்த்தலாம் என்றத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உடனடியாக பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடிக்கு உயர்த்துமாறு தமிழக அரசை வேண்டிக் கொள்கிறேன். நமக்கு சாதகமாக மழையும் பெய்து கொண்டிருக்கிறது. எனவே உடனடியாக இதை நிறைவேற்றுவதற்கு கட்சி வேறுபாடில்லாமல் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு தமிழக அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.

உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் அணை பலமாக இருக்கிறது என்பதை உறுதி செய்து விட்டது. எனவே புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளில் கேரள அரசு இனி ஈடுபடக் கூடாது. ஈடுபட்டால் அதன் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரள அரசு கொண்டு வந்த அணைப் பாதுகாப்புச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு புறம்பானது, அது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. அதை நான் வரவேற்கிறேன். பெரியாறு அணையைப் பராமரிக்க 3 பேர் கொண்ட குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்திருப்பதும் நல்ல செய்தியாகும்.

மொத்தத்தில் இந்தத் தீர்ப்பு 34 ஆண்டுகள் தமிழர்கள் போராடிப் பெற்ற வெற்றியாகும். இதற்காக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும், போராடிய விவசாயிகள், அனைத்துக் கட்சித் தோழர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்திய வழக்கறிஞர்கள், துணை நின்ற தமிழக பொறியியல் வல்லுநர்கள் ஆகிய அனைவருக்கும் தமிழர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.