ஆங்கிலக் கல்வி அச்சிடுக
திங்கட்கிழமை, 21 நவம்பர் 2016 12:10

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்
பாரில் நல்இசைப் பாண்டிய சோழர்கள்
பார் அளித்ததும் தர்மம் வளர்த்ததும்

பேர்அ ருட்சுடர் வாள்கொண்டு அசோகனார்
பிழைப டாது புவித்தலங் காத்ததும்,
வீரர் வாழ்த்த மிலேச்சர்தந் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்(து)
ஆங்கி லம்பயில் பள்ளியுள் போகுநர்;
என்ன கூறிமற்று எங்ஙன் உணர்த்துவேன்
இங்கு இவர்க்குஎன(து) உள்ளம் எரிவதே.
சூதி லாத உளத்தினன் எந்தைதான்
சூழ்ந்து எனக்கு நலஞ்செயல் நாடியே
ஏதி லார்தரும் கல்விப் படுகுழி
ஏறி உய்தற்(கு) அரிய கொடும்பிலம்
தீதி யயன்ற மயக்கமும் ஐயமும்
செய்கை யாவினு மேயசி ரத்தையும்
வாவதும் பொய்ம்மையும் என்ற விலங்கினம்
வாழும் வெங்குகைக்கு என்னை வழங்கினேன்
"ஐயர்' என்னும் "துரை' என்னும் மற்றுனெக்(கு)
ஆங்கிலக் கலை என்றென்(று) உணர்த்தியே
பொய்யருக்கு இது கூறுவன் கேட்பீரேல்;
பொழுதெ லாம் உங்கள் பாடத்தில் போக்கி நான்
மெய் அயர்ந்து விழிகுழி வெய்திட
வீறிழந்தென துள்ளம் நொய் தாகிட
ஐயம் விஞ்சிச் சுதந்திரம் நீங்கிஎன்
அறிவு வாரித் துரும்பென் றலைந்தால்
செலவு தந்தைக்கோ ராயிரம் சென்றது;
தீது எனக்குப்பல் ஆயிரம் சேர்ந்தன;
நலம்ஓர் எள் துணையுங் கண்டிலேன் இதை
நாற்பது ஆயிரம் கோயிலில் சொல்லுவேன்!
- சி. சுப்பிரமணிய பாரதி