பிரபாகரன் புகழ் பாடும் குறுந்தகடு வெளியீட்டு விழா! |
![]() |
சனிக்கிழமை, 17 டிசம்பர் 2016 12:39 |
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாளன்று தஞ்சை, முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் தமிழ் நூல்கள் மற்றும் தமிழிசை குறுந்தகடு வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. 26-11-2016 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தொடங்கிய விழவிற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்க, முனைவர் மும்தாஜ் பாலகிருட்டிணன் முன்னிலை வகிக்க, புதிய பார்வை இதழின் ஆசிரியர் ம. நடராசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள விழா இனிதே தொடங்கியது. பா. வீரமணி வரவேற்புரை நல்கினார். விழாவிற்கு மேலும் சிறப்புக் கூட்டும் வண்ணம் காஞ்சிபுரம் சக்தி மழலையர் பள்ளி,மயிலாடுதுறை மகாலட்சுமி மழலையர் பள்ளி, மற்றும் தலைஞாயிறு பட்டவர்த்தி டி.வி.பி. நினைவு மழலையர் பள்ளியைச் சார்ந்த மாணவ - மாணவியர் குழு மேதகு பிரபாகரன் புகழ்பாடும் பாடல்களுக்கு நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர். காஞ்சி. கவிஞர் மு. சந்திரன் இயற்றிய இரு தமிழ்நூல்கள் வெளியிடப்பட்டன. "தமிழனின் வாழ்வியல் நெறிகள்'' என்ற புறநானூறு சார்ந்த நூலை நாட்டார் கல்லூரி பேராசிரியர் நா. பெரியசாமி வெளியிட, சி. முருகேசன், சதா. முத்துக்கிருட்டிணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். "அம்புலிப் பூக்கள்' என்ற கவிதை நூலை பாவலர் இலரா. மோகன் வெளியிட வெண்முருகு. வீரசிங்கம் மற்றும் பொன். வைத்தியநாதன் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டனர். பேராசிரியர் நா. பெரியசாமி "தமிழனின் வாழ்வியல் நெறிகள்'' என்ற நூலின் எழுத்துநடை, கருத்துக்களை வெளிப்படுத்தும் நாடகப் பாங்கு இவற்றைப் பற்றி புகழ்ந்து பேசி. பிற சங்க நூல்களையும் இத்தகைய எளிய நடையிலேயே எழுதி வெளியிட வேண்டுமென படைப்பாசிரியருக்கு வேண்டுகோள் விடுத்தார். "அம்புலிப் பூக்கள்' கவிதைத் தொகுப்பினை திறனாய்வு செய்து அதன் சிறப்பான பகுதிகளை எடுத்து விளக்கியதுடன், ஆசிரியரின் சொல்லாடல், உவமைத்திறன், மொழிநடை இவற்றை வியந்து பாராட்டினார். ந.மு. தமிழ்மணி குறுந்தகட்டில் உள்ள பாடல்களின் கருத்துச் செறிவு, இசை நயம் பற்றி உரை நிகழ்த்தி கவிஞரின் தமிழ்ப்பற்றையும் தலைவர் பிரபாகரன் மீது அவர் கொண்டுள்ள மதிப்பையும் பற்றி நெகிழ்ந்து பாராட்டினர். சிறப்பு விருந்தினர் ம. நடராசன் தனது சிறப்புரையில் தஞ்சை முள்ளி வாய்க்கால் முற்றம் உருவாக்கிவரும் தமிழுணர்வு மற்றும் தமிழ் எழுச்சி பற்றி எடுத்துரைத்தார். முன்னிலை வகித்த முனைவர் மும்தாஜ் பாலகிருட்டிணன் கவிஞரின் தமிழ்த்திறம் பற்றிப் பாராட்டிப் பேசினார். தலைமையுரையில் பழ.நெடுமாறன் கவிஞர் காஞ்சி. மு. சந்திரனின் படைப்பாற்றலைப் பாராட்டி தமிழர்கள் அனைவரும் இதுபோன்ற தமிழ் படைப்புகளில் ஈடுபடுத்திக் கொண்டு தமிழின பெருமைக்கு மேலும் மெருகூட்டவேண்டும் என்றார். நன்றியுரை ஆற்றிய "நிலவும் மலரும்'' பதிப்பகத்தின் உரிமையாளர் முனைவர் மல்லிகா சந்திரன் நூல்கள் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வெளியிடப்படுவது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாகக் கூறினார். விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் தமிழர் பாரம்பரிய உணவு வழங்கப்பட்டது. |