பொங்கல் பெருநாள் தமிழர் திருநாள் - பேரா. மு. அறிவரசன் |
![]() |
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2017 00:00 |
பழங்காலத்தில் தமிழரின் தொடர் ஆண்டாகக் கலி - ஆண்டு நடைமுறையில் இருந்தது. தமிழர் தாயகத்தின் கல்வெட்டுக்களில் கலி - ஆண்டு பயன்படுத்தப்பட்டதை அறிய முடிகிறது. ஈழத்தமிழரிடையே இன்றும் கலி - ஆண்டு நடைமுறையில் இருக்கிறது. கலி என்பது எழுதல் பொலிதல் தழைத்தல் பின்பற்றுதல் முதலான பொருளைத் தருகின்ற தமிழ்ச் சொல் ஆகும். திருவள்ளுவர்க்கு முன் (தி.மு) 3070 - இல் ஒருமுறை தென்தமிழ் நிலத்தின் ஒரு பகுதியைக் கடல் கொண்டது. அதன் பிறகு தமிழர்களால் பின்பற்றப்பட்ட ஓர் ஆண்டுக் கணக்காகக் கலி - ஆண்டு இருக்கக் கூடும் என அறிஞர்கள் கருதுகின்றனர். காலப் போக்கில் ஆரியத் தாக்கத்தால் கலி - ஆண்டு முறையைத் தமிழர் கைவிட்டனர். மாறாக ஆரியச் சார்பு உடைய பிரபவாதிக ஆண்டு முறையைக் கைக்கொண்டனர். பிரபவாதிக ஆண்டு முறை என்பது பிரபவ விபவ முதலான அறுபது பெயர்களைக் கொண்டது. அறுபது பெயர்களும் வடமொழிப் பெயர்கள். அந்தப் பெயர்கள் அறுபதும் கிருட்டிணனுக்கும் பெண் உருக்கொண்ட நாரதனுக்கும் பிறந்த அறுபது குழந்தைகளின் பெயர்கள் என்று புராணக்கதை சொல்கிறது. இந்தக் கதை கேட்பதற்கே அருவெறுப்பாக உள்ளது. அதுமட்டும் அன்று அறுபது பெயர்களின் ஆண்டுகள் சுழற்சி முறையில் வருவதால் பெருங்குழப்பம் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. தாம் பிரபவ ஆண்டில் பிறந்ததாக ஒருவர் சொல்கிறார். அவர்க்கு 61 - ஆம் அகவை தொடங்கும் போது மீண்டும் பிரபவ ஆண்டு வருகிறது. அவர் வாழ்நாளில் இரண்டு பிரபவ ஆண்டுகள் வருவதால் எந்தப் பிரபவ ஆண்டில் அவர் பிறந்தார் என்னும் வினா எழுகிறது. அதனைத் தொடர்ந்து குழப்பம் ஏற்படுகிறது. பிரபவாதிக ஆண்டுமுறை ஆரியச் சார்பானது; அருவெறுப்பான கதைக்கு உரியது. குழப்பம் ஏற்படுத்துவது. அதனால் நாம் அந்த ஆண்டு முறையைப் பின்பற்றுவது அறிவுடைமை ஆகாது. கலி - ஆண்டு கடந்த காலத்தில் தமிழர்களால் பின்பற்றப்பட்ட ஆண்டு. என்றாலும் அந்த ஆண்டு முறை இன்று வழக்கிழந்து விட்டது. அதனால் தமிழர் அனைவர்க்கும் பொதுவானதும் அறிவுக்குப் பொருந்துவதும் ஆகிய ஒரு புதிய ஆண்டு முறையை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1921 - ஆம் ஆண்டு தனித் தமிழ் இயக்கத் தலைவர் மறைமலையடிகள் தலைமையில் ஐந்நூறு தமிழ் அறிஞர்கள் சென்னை நகரில் உள்ள பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் கூடினர். கிறித்து பிறப்பதற்கு 31 - ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என அறிஞர்கள் ஆராய்ந்து முடிவு செய்தனர். திருவள்ளுவர் தமிழர் அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்கவர் என்பதால் அவர் பிறந்த ஆண்டிலிருந்து தமிழர்க்கான ஆண்டுக் கணக்கைத் தொடங்கித் தொடர்வது என்னும் முடிவு செய்யப்பட்டது. திருவள்ளுவர் ஆண்டு தை முதல் நாளில் தொடங்குவதாகவும் ஆன்றோர்கள் அறிவித்தனர். கதிரவனின் செங்குத்துக் கதிர்வீச்சுப் பரவுகின்ற வான மண்டில வட்டத்தை 20 பாகை ஓர் ஓரை என்றவாறு 12 ஓரைகளாகப் பழந்தமிழர் பகுத்தனர். ஒவ்வோர் ஓரைக்குள் காணப்படுகின்ற விண்மீன் கூட்டங்களின் உருவ ஒப்புமைக்கு ஏற்பச் சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை என்று பெயரிட்டனர். இப்பெயர்களே தமிழர்க்கான திருவள்ளுவர் ஆண்டின் 12 மாதங்களுக்கான பெயர்களாக அமைந்தன. தமிழ் - - வடமொழி -- மாதப் பெயர்கள் விண்மீன்களின் தமிழ்ப் பெயர் வடமொழிப்பெயர் தமிழ்நாடு அரசு 1971, 1972, 1981 - ஆகிய ஆண்டுகளில் வெளியிட்ட ஆணைகளின் படி அரசின் அனைத்துத் துறைகளிலும் திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்த ஏற்பிசைவு அளித்துள்ளது. தமிழ் உணர்வாளர்கள் பொது நிகழ்வுகளிலும் தம் இல்லத்து நிகழ்வுகளிலும் திருவள்ளுவர் ஆண்டையும் சுறவம் முதலாகத் தொடங்கும் தமிழ் மாதப் பெயர்களையும் பயன்படுத்துகின்றனர். தமிழர் ஆகிய நாம் எத்தனையோ விழாக்களை எழுச்சியுடன் கொண்டாடி மகிழ்கிறோம். நம்முட் பலர் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். பெற்றோரின்பிறந்தநாள், பிள்ளைகள் - பேரப் பிள்ளைகளின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். தகுதி வாய்ந்த தலைவர்கள், நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் முதலானோரின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். இத்தகைய பிறந்தநாள் விழாக்களைக் கொண்டாடுவது பிழையன்று. கற்பனைப் புராணங்களிலும் கட்டுக்கதைகளிலும் இடம்பெற்ற கடவுளர் எனச் சொல்லப்படுவோரின் பிறந்த நாளைக் கொண்டாடுவது ஏற்புடையதா? அட்டமியில் கிருட்டிணன் பிறந்தான். நவமியில் இராமன் பிறந்தான் என்ற நம்பிக்கை அடிப்படையில் அவர்கள் பிறந்த நாட்களையும் தமிழருள் ஒருசாரார் கொண்டாடுகின்றனர். ஆதியும் அந்தமும் இல்லாதார் என்று சொல்லப்படும் ஆண்டவர்களின் பிறந்தநாள் இது....இது என அறிந்து சொன்னவர்கள் யார்? எதன் அடிப்படையில் அறிந்தார்கள்? இந்த வினாக்களுக்கு விடை என்ன? இன்று தமிழர்கள் பல்வேறு மதங்களைப் பின்பற்றுகின்றனர். சைவர்- வைணவர், கிறித்தவர், இசுலாமியர் எனத் தமிழர்கள் பலவாறாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். கிறித்துவத் தமிழரும், இசுலாமியத் தமிழரும், சைவ-வைணவத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டுள்ள கடவுளர் தொடர்பான விழாக்களைக் கொண்டாடுவதில்லை. சைவ-வைணவத் தமிழர்கள் கிறித்துவரும் இசுலாமியரும் கொண்டாடும் விழாக்களைக் கொண்டாடுவதில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் தமிழர் தாயகங்கள் ஆட்சிப் பரப்பு என்ற அளவில் சில பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஆயினும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த அனைவரும் தமிழர் என்று சொல்லப்பட்டனர். எந்த மதமும் தமிழரைப் பிரிக்கவில்லை என்பதை அறியமுடிகிறது. தமிழர்கள் மதங்களால் பிரித்து அறியப்பட்டாலும் மொழியால் ஓரணியில் திரள முடியும். மொழியால் மட்டும் தான் ஒன்றுபட முடியுமா? வேறு வகையால் தமிழர் ஒருங்கிணைய முடியாதா? முடியும். சாதி - மதப் பிரிவுகளை மறந்து மொழியால் இணைந்து பொதுவான ஒரு விழாக் கொண்டாடுகின்றனர். எதிலும் நுழைந்து இடையூறு செய்யும் ஆரியம் இதிலும் நுழைந்தது. எங்கும் நுழைந்து இன்னல் செய்யும் ஆரியப் பார்ப்பனியம் இங்கும் நுழைந்தது. இந்துமதக் காவலர்கள் எனச் சொல்லிக் கொண்ட சங்கராச்சாரிகள் சுறவம் முதல்நாள் மகரசங்கிராந்தி எனச் சொல்லி மதச் சாயம் பூச முயன்றனர். அன்று திராவிடக் கழகத் தலைவராக விளங்கிய பெரியார் ஈ.வெ.ரா அவர்களும் அண்ணாதுரை அவர்களின் தலைமையில் செயற்பட்ட அன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் பேராசிரியர் கா. நமச்சிவாயர், மறைமலைஅடிகள், நாவலர் ச.சோமசுந்தர பாரதி, புரட்சிக் கவிஞர் கனக சுப்புரத்தினம் முதலான அறிஞர் பெருமக்களும் சங்கராச்சாரிகளின் சதிவலையை அறுத்துப் பொங்கல் திருவிழா தமிழர் திருவிழாவே என்பதை உறுதி செய்தனர். அறிவுக்குப் பொருந்தாத கட்டுக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட தீபாவளி போன்ற விழாக்கள் பகுத்தறிவு உள்ளோர் கொண்டாடத்தக்கவை அல்ல எனத் தமிழர் தலைவர்கள் அறிவுறுத்தினர். பொங்கல் விழாவே தமிழர் கொண்டாடத்தக்கது என வலியுறுத்தினர். அதனை ஏற்று இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இன்றுவரை தமிழர் அனைவரும் சாதி- மதப் பிரிவுகளை மறந்து சுறவம் முதல் நாளைப் பொங்கல் விழாவாக தமிழர்க்கான திருவிழாவாகக் கொண்டாடி வருகிறோம். உலகிற்கு வெப்பத்தையும் ஒளியையும் தந்து உயிர்கள் அனைத்தையும் வாழவைக்கின்ற கதிரவனுக்கு நன்றி செலுத்துவதாக பொங்கல் விழா அமைகின்றது. கடந்த மாதங்களில் - கார், கூதிர் காலங்களில் நிலத்தில் விதைத்தவை முளைத்து முற்றிக் கதிராகி அறுவடை செய்யுங் காலத்தில் கொண்டாடப்படுவதால் இந்த விழா அறுவடை விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இயற்கையோடு இயைந்த இந்தப் பொங்கல் விழாவை மதத்தால் வேறுபட்ட தமிழர்கள் இனத்தால் ஒன்றுபட்டு எழுச்சியுடன் கொண்டாடி மகிழ்வோம். |