தாய்த் தமிழை வாழவைப்போம் - பேரா. அறிவரசன் |
|
செவ்வாய்க்கிழமை, 16 மே 2017 00:00 |
தோழர்காள்! தோழர்காள்! தூயநம் தாய்த்தமிழை வாழவைப்போம் தாயகத்தில் வாருங்கள் தோழர்காள்! ஆனாத பெருமைசேர் அன்னைத் தமிழ் மொழியின் வாணாளைக் குறைக்கின்ற வஞ்சகரின் செயல்எண்ணிக் கிளர்ந்து திரண்டெழுந்து கேடுநீக்க முயலாமல் தளர்ந்து கிடத்தல் தகுமாமோ? நாளெல்லாம்
தொன்மைத் தமிழென்றும் தொடர்ந்து வளர்கின்ற வண்மைத் தமிழென்றும் வாய்கிழியப் பேசுகிறோம் சங்கத்து நூல்களென்றும் தகைசான்ற குறளென்றும் எங்கெங்கும் மேடைகளில் எக்களித்து முழங்குகிறோம் ஞால முதல்மொழிநம் தாய்த்தமிழே என்றென்று காலமெலாம் பேசியே காலம் கழிக்கின்றோம். தேர்தல் அரசியலார் ஏமாற்றும் திட்டமுடன் ஊர்ஊராய் அலைவதனால் உற்றபயன் ஏதுமில்லை இறைவற்குச் சமற்கிருதம் இசையரங்கில் தெலுங்குமொழி முறைமன்றில் ஆங்கிலமாம் முறையான கல்வியிலும் ஆங்கிலமாம் தமிழ்நாட்டில் அன்னைத் தமிழ்மொழியோ ஏங்கித் தவிக்கிறது, தீங்குசெய் தில்லிநமை ஆள்வதோ இந்தியினால்? அடிமைகள் நாமென்னும் கீழ்நிலையில் வாழ்வதுவோ? கிளர்ந்தெழ வேண்டாமோ? எருமைஎன என்றும்நாம் இருத்தல் இழிவன்றோ? உரிமைக்குப் போர்தொடுக்கும் உணர்ச்சிபெற வேண்டாமோ? மான உணர்வும் மறப்பண்பும் மாய்ந்தனவோ? வீணே உயிர்காத்தல் வீணாம் விளங்குபுகழ் மறைமலையார் பாவாணர் மாப்பெருஞ் சித்திரனார் அறவழியில் போராடி அருந்தமிழைக் காத்து நின்றார் எவர் வருவார் அவர்போல என்றெண்ணிக் கிடக்காமல் அவர் வகுத்த கொள்கையுடன் அணிவகுப்போம் நமதருமைத் தாயாம் தமிழ்காக்க வாய்ப்பேச்சுத் தவிர்த்தின்றே ஓய்வின்றிச் செயற்படுவோம் ஒருங்கு. |