மாநிலங்களின் உரிமைகளை மதிக்காத ஆளுநர்கள் - பழ. நெடுமாறன் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017 14:27

இந்திய நாட்டின் அரசியல் சட்டம், குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் ஆகியோருக்குள்ள அதிகார எல்லைகளைத் திட்டவட்டமாக வரையறுத்துள்ளது. அதைப்போலவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையமைச்சர், மாநில முதலமைச்சர்கள் ஆகியோருக்குள்ள அதிகாரங்களையும், பொறுப்புகளையும் விரிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

மத்திய அமைச்சரவையின் பரிந்துரைகளுக்கு ஏற்ப, மாநில ஆளுநர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அவ்வாறு நியமிக்கப்பெற்ற ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின் தலைமையில் இயங்கும் அமைச்சரவையின் பரிந்துரைகளை மீறிச் செயல்படக்கூடாது. மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு இணங்கவே அவர் செயல்பட்டாக வேண்டும்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களாக பா.ச.க.வைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் திட்டமிட்டு மாநில முதலமைச்சரின் அதிகாரங்களில் அத்துமீறி தலையிடுகிறார்கள். பல்வேறு மாநிலங்களில் இதன் விளைவாக ஆளுநர் - முதல்வர் மோதல்கள் நடைபெறுகின்றன. அண்மையில் புதுச்சேரியில் முதலமைச்சருக்குத் தெரியாமலேயே சட்டமன்றத்திற்கு மூன்று நியமன உறுப்பினர்களை மாநிலத் துணை ஆளுநர் நியமித்ததோடு மட்டுமல்ல அவசரம் அவசரமாக அவர்களுக்குப் பதவிப் பிரமாணமும் செய்து வைத்துள்ளார். இதன் மூலம் ஐந்து அத்துமீறல்களை துணை ஆளுநர் கிரண் பேடி செய்துள்ளார்.

1. மாநில அமைச்சரவை பரிந்துரை செய்த நபர்களைத் துணை நிலை ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்து அவரின் ஒப்புதலைப் பெற்று நியமிக்கப்படும் மரபை மீறியுள்ளார்.

2. முதலமைச்சர் பரிந்துரைத்த நபர்களைப் புறக்கணித்துவிட்டு தன்னிச்சையாக மூன்று பேரைச் சட்டமன்றத்திற்கு நியமித்துள்ளார்.

3. சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவியேற்பு நிகழ்ச்சியை நடத்தி வைக்கும் உரிமையும், அதிகாரமும் சட்ட மன்றப் பேரவைத் தலைவருக்கு மட்டுமே உண்டு. அவரின் அதிகாரத்தைப் பறித்ததோடு, தன்னால் நியமனம் செய்யப்பட்டவர்களுக்குத் தானே பதவி ஏற்பு விழாவை நடத்தி வைத்துள்ளார்.

4. இந்த சனநாயகப் படுகொலையின் உச்சக்கட்டம் பா.ச.க.வைச் சேர்ந்த இருவரை சட்டமன்றத்திற்கு நியமித்த செயலாகும். இவர்கள் இருவரும் கடந்த சட்ட மன்றத் தேர்தலில் பொறுப்புத் தொகைக்கூட பெறமுடியாத அளவிற்கு படுதோல்வி அடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

5. துணை ஆளுநரின் இந்த நியமனங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுவை சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தொடுத்துள்ள வழக்கு வருகிற புதன்கிழமை நடைபெறவிருந்த சூழ்நிலையில் அதற்கு முதல் நாளான செவ்வாய்க்கிழமையன்றே யாருக்கும் தெரியாமல் ஆளுநர் மாளிகையிலேயே அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்த துணை ஆளுநரின் செயல் அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும்.

புதுச்சேரியில் மட்டுமல்ல, புதுதில்லி மாநிலத்திலும் துணை ஆளுநரின் செயற்பாடுகள் அம்மாநில முதலமைச்சரின் அதிகாரங்களைச் சிறிதளவுகூட மதிக்காத தன்மை வாய்ந்ததாகும். இருவருக்கிடையே நடைபெறும் மோதலில் தலையிட்டுத் தீர்த்து வைக்க மத்திய உள்துறை அமைச்சரோ அல்லது தலைமையமைச்சரோ முன்வரவில்லை. ஏனென்றால் இந்த மோதல் அவர்களுக்குத் தெரியாமல் நடைபெறவில்லை. பா.ச.க.வால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் இன்னமும் அந்தக் கட்சியினராகவே செயல்படுகிறார்களே தவிர கட்சிக்கு அப்பாற்பட்டவர்களாகக் கடமையாற்றவில்லை.

இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்கத்திலும் ஆளுநர் - முதலமைச்சர் மோதல் உச்சக்கட்டத்திற்கே சென்றுள்ளது.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நடந்த மத மோதல்கள் குறித்து பா.ச.க. பிரதிநிதிகள் அம்மாநிலத்தின் ஆளுநர் திரிபாதியைச் சந்தித்து முறையிட்டனர். அதன் பின், முதல்வர் மம்தா பானர்ஜியை தொலைபேசியில் அழைத்து ஆளுநர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

மேற்கு வங்க அரசின் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் மம்தா பானர்ஜி பின்வருமாறு ஆளுநர் மீது குற்றம் சாட்டினார். "ஆளுநர் திரிபாதி என்னை தொலைப்பேசியில் அழைத்து மிரட்டினார். பா.ச.க.விற்கு ஆதரவான முறையில் அவர் பேசிய விதத்தால் நான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தேன். பா.ச.க.வின் மாவட்டத் தலைவர் போல ஆளுநர் நடந்து கொண்டார். நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் பதவிக்கு வந்துள்ளேன். ஆளுநரின் கருணையால் இப்பதவிக்கு நான் வரவில்லை. ஆனால், அவர் மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டவர். அவர் என்னை மிரட்டும் நிலை என்னை மிகவும் பாதித்துள்ளது''.
இந்தியாவில் மக்கள் செல்வாக்கு மிக்க முதல்வர்களில் ஒருவரான மம்தா பானர்ஜியின் கதியே இதுவானால் மற்ற எதிர்க்கட்சி முதல்வர்களின் நிலைமை என்ன?

தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் 2016 ஆகஸ்ட் 30ஆம் தேதியே முடிவடைந்துவிட்டது. ஆகஸ்ட் 31ஆம் தேதி மராட்டிய மாநில ஆளுநராக இருக்கும் வித்யாசாகர்ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பையும் தற்காலிகமாக ஏற்றார். கிட்டத்தட்ட 11 மாதங்களாகப் பதவியில் அவர் தொடர்கிறார். தமிழ்நாடு போன்ற இந்தியாவின் மிகமுக்கியமான மாநிலத்திற்கு நிரந்தர ஆளுநர் ஒருவர் 11 மாத காலமாக நியமிக்கப்படாமலும் தொலைதூரத்தில் உள்ள பம்பாயில் இருக்கும் ஆளுநர் ஒருவர் இங்கும் ஆளுநராகவே நீடிப்பதும் தமிழ்நாட்டை மட்டுமல்ல சனநாயகத்தையே அவமதிப்பதாகும். இதன் விளைவாக சட்டப்படி நடக்க வேண்டிய பல வேலைகள் தடைப்பட்டுக் கிடக்கின்றன. தமிழ்நாட்டில் நான்கு பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் கிடையாது. பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்படவில்லை ஆசிரியர்கள் நியமனங்களும் செய்யப்படாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழக அரசிலும் பல்வேறு பணிகள் சட்டரீதியாக முடங்கிக்கிடக்கின்றன.

தமிழக முதல்வராக இருந்த செல்வி செயலலிதா அம்மையார் மறைவிற்குப் பின் அக்கட்சிக்குள்ளும், சட்டமன்றத்திலும், தமிழ்நாட்டிலும் நடைபெற்ற பல்வேறு குழப்பங்களுக்கு வித்திட்ட பெருமை தற்காலிக ஆளுநரையே சாரும்.

ஏற்கெனவே 2016ஆம் ஆண்டு ஜனவரியில் அருணாச்சல பிரதேசத்தில் பதவியிலிருந்த காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட உட்குழப்பத்தைப் பயன்படுத்தி அம்மாநில பா.ச.க.வைச் சேர்ந்த ஆளுநர் ஜோதி பிரசாத் இராஜ்கோவா மாநில ஆட்சியைப் பதவி நீக்கம் செய்தார். உச்சநீதி மன்றம் இப்பிரச்சனையில்த லையிட்டு ஆளுநர் பிறப்பித்த அனைத்து ஆணைகளையும் இரத்து செய்தது. மீண்டும் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமையவேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால்உ ச்சநீதிமன்றம் இவ்வளவு தெளிவான தீர்ப்பை அளித்த பிறகும் பா.ச.க.வைச் சேர்ந்த ஆளுநர்கள் அத்தீர்ப்பையோ, அரசியல் சட்டத்தின்மா ண்பினையோ கொஞ்சமும் மதிக்காமல் செயல்பட்டு வருகிறார்கள்.

"ஆட்டுக்குத் தாடியும் நாட்டிற்கு ஆளுநரும் தேவையில்லை'' என மறைந்த முதல்வர் அண்ணா அவர்கள் கூறினார். அதைப்போலவே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனக் குரல் எழுப்பியிருக்கிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் ஆளுநர் பதவி உருவாக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் அது தேவையா என்ற கேள்வியையும், தேவையெனில் அவர்களுக்கென்று வழிகாட்டும் நெறிமுறைகளும் வகுக்கப்படவேண்டுமா? என்ற கேள்வியையும் அரசியல் நிர்ணய சபையைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் எழுப்பினர். அப்போது சட்ட அமைச்சரான அம்பேத்கர் அவற்றை ஏற்கவில்லை. வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்கினால் அவை சரியாகப் பின்பற்றப்படுகிறதா? என்பதை யார் கண்காணிப்பது எனக் கேட்டார். எனவே, வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்குவதற்குப் பதில் உன்னதமான மரபுகளை ஆளுநர்கள் பின்பற்ற வேண்டும் என்பது ஏற்கப்பட்டது. ஆனால் இப்போது அரசியல் சட்ட விதிகளும் பின்பற்றப்படவில்லை. மரபுகளும் மதிக்கப்படவில்லை.

பா.ச.க.வைச் சேர்ந்த ஆளுநர்கள் அத்துமீறி செயல்படும்போது மத்திய உள்துறை அமைச்சரோ அல்லது தலைமையமைச்சரோ தலையிட்டு அவற்றைச் சீர் செய்ய முன்வர மறுக்கிறார்கள். இதன் விளைவாக ஆளுநரின் மாண்பும், முதலமைச்சரின் மதிப்பும் ஒன்றுக்கொன்று மோதும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
தலைமையமைச்சராக நேரு அவர்கள் இருந்தபோது மத்திய அமைச்சர் மற்றும் மாநில ஆளுநர் போன்ற உ யர் பதவிகளை வகித்த அஜித் பிரசாத் ஜெயின் என்பவர் எழுதிய கட்டுரையில் ஒரு உண்மையைப் பதிவு செய்துள்ளார்.

காங்கிரஸ் ஆளுநரும், காங்கிரஸ் முதலமைச்சரும் பதவி வகித்த ஒரு மாநிலத்தில் இருவருக்குள்ளும் கடும் மோதல் ஏற்பட்டு இருவரும் இணைந்து செயல்படமுடியாத நிலை உருவாகிவிட்டது. இப்பிரச்சனையை நேரு அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றபோது அவர் அம்மாநிலத்தின் ஆளுநரை வேறு மாநிலத்திற்கு மாற்றினார். ஏனெனில் சட்ட மன்றத்தில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்றுள்ள முதலமைச்சரை மாற்றவோ, பதவி நீக்கம் செய்யவோ முயல்வது சனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரானது என நேரு கருதினார்.

சனநாயகக் கோட்பாடுகளை நேரு மதித்த இம்முன்மாதிரியைப் பின்பற்றிச் செயல்பட தற்போதைய தலைமையமைச்சர் மோடி முன்வருவாரானால் பல மாநிலங்களில் ஆளுநர்களால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தீர்வதற்கு வழி ஏற்படும்.
நன்றி : தினமணி 12-7-17