தண்ணீரை முற்றிலுமாகத் தடுப்பதே நோக்கம் - பழ. நெடுமாறன் அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 01 செப்டம்பர் 2017 12:40

"பொது மேற்பார்வைக் குழுவின் கட்டுப்பாட்டிலும், தமிழகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் கருநாடக அரசு புதிய அணை கட்டிக்கொள்ளலாம், அணைப் பராமரிப்பு, நீர் திறப்பு உள்ளிட்டவற்றை பொது மேற்பார்வைக் குழுவே செய்ய வேண்டும்'' என உச்சநீதிமன்றம் 17-8-2017 அன்று தெரிவித்துள்ள கருத்து தமிழ்நாட்டு விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பல்வேறு கட்சித் தலைவர்களும் விவசாய சங்கங்களின் தலைவர்களும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இக்கருத்தைத் தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு காவிரிப் பிரச்சினையின் கடந்த கால வரலாற்றினை தமிழகம் சார்பில் வாதாடியவர்கள் சரிவர எடுத்துச்சொல்லவில்லை என்பது இதன்மூலம் தெரிகிறது.

 

தமிழ்நாட்டின் எல்லைக்கு மிக அருகில் உள்ள இடத்தில் அதாவது ஒகேனக்கல்லில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் மேகதாது என்னும் இடத்தில் புனல் மின் உற்பத்தி நிலையம் ஒன்றினை அமைக்கப் போவதாக 1982ஆம் ஆண்டு சனவரி முதல் தேதியன்று கருநாடக முதலமைச்சராக இருந்த குண்டுராவ் அறிவித்தார்.

6-2-1982 அன்று ஆளுநர் உரையின்மீது நடைபெற்ற விவாதத்தில் நான் பேசும்போது "1961ஆம் ஆண்டிலிருந்து தமிழகம் திட்டமிட்டுள்ள ஒகேனக்கல் புனல் மின் திட்டம் இதனால் பாதிக்கப்படும். மேக தாது திட்டம் அமைக்கப்பட்டால் ஒகேனக்கல் திட்டத்திற்கு தண்ணீர் வராது. அத்திட்டத்தை கைவிடவேண்டிய நிலை ஏற்படும். அத்துடன் மேட்டூருக்கு வரும் தண்ணீர் அடியோடு தடுக்கப்படும். தமிழகம் மின்சாரப் பற்றாக்குறை மாநிலமாகும். ஆனால் கருநாடகம் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாகும். தமிழ்நாட்டிற்கு காவிரி ஒன்றே பெரிய ஆறு ஆகும். தமிழ்நாட்டின் நிலப்பகுதியில் 34% பகுதி காவிரிப் படுகையிலேயே அமைந்துள்ளது. கருநாடகத்தில் காவிரிப் படுகையின் பரப்பளவு அதன் நிலப்பகுதியில் 17% மட்டுமே. தமிழ்நாட்டு ஆற்றுப்பாசன நிலத்தில் 60% காவிரி ஆற்றின் நீரையே நம்பியுள்ளது. ஆனால், கருநாடகத்தில் காவிரி மட்டுமின்றி, கிருஷ்ணா ஆறு, கோதாவரி ஆற்றின் கிளை ஆறுகள், துங்கபத்திரா கிளை ஆறு மற்றும் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் பலவும் உள்ளன. மேற்கண்ட ஆறுகளில் இருந்து கருநாடகம் 6500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இருப்பினும் 1400 மெகாவாட் மின்சாரம்தான் இதுவரை அம்மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 4100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வழி வகை இருந்தும்கூட பற்றாக்குறை மாநிலமான தமிழகத்திற்குக் கேடுவிளைவிக்கும் வகையில் மேகதாது அணையைக்கட்டுவதற்கு முயற்சி செய்கிறது. தமிழக எல்லையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இந்த அணை கட்டப்படுமானால் ஒகேனக்கல் அணையை நாம் கட்ட முடியாது. நமது திட்டத்தை கைவிட நேரிடும்'' எனக்கூறினேன்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பலரும் ஆதரவு தெரிவித்தனர். மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசின் எதிர்ப்பை இந்திய அரசுக்குத் தெரிவிப்பதாக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் உறுதியளித்தார். அதன்படியே எதிர்ப்பைத் தெரிவித்தார். முதல்வராக ஜெயலலிதா இருந்த போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடுத்தார். இதன் விளைவாக மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.

தமிழகத் திட்டத்தின்படி காவிரியில் இரண்டு அணைகள் கட்டப்படும். முதலாவதாக இராசிமணல் அணை கட்டப்படும். இங்கு அமைக்கப்படும் புனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் 360 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த அணைக்குக் கீழே 5 கி.மீ. தொலைவில் ஒகேனக்கல் அணை கட்டப்பட்டு அங்கு 120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த இரண்டு அணைகளின் மூலம் 480 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும்.

இதையொட்டி மேட்டூர் அணையின் உயரம் மேலும் 10 அடி அதிகரிக்கப்படும். ஒகேனக்கல் மின் உற்பத்தித் திட்டத்தின் கீழ் கட்டப்படும் இரண்டு அணைகளின் விளைவாக இப்பகுதியில் பாசன வசதிகள் எதுவும் செய்யப்படாது. மின்சார உற்பத்திக்காக மட்டுமே இந்த அணைகள் கட்டப்படும். இந்த அணைகளிலிருந்து வெளியேறும் நீர் மேட்டுர் அணையில் வந்து நிறையும்.

இந்த இரண்டு அணைகள் கட்டப்படுவதின் மூலம் காவிரிப் பாசனப் பகுதியில் வெள்ளச் சேத அபாயம் நிரந்தரமாக தடுக்கப்படும். தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறை இதன் மூலம் தீர்க்கப்படும். இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் என்பது இந்தியாவின் மற்ற மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கிடைக்கக்கூடிய வருமானத்தைவிட அதிகமானதாகும். இப்பகுதி வன விலங்கு சரணாலயமாகவும், சுற்றுலா இடமாகவும் மாறி அந்நிய செலாவணி பெருகுவதற்கு வழி ஏற்படும். உள்நாட்டு மீன் உற்பத்தியும் பெருகும். இப்படிப் பலவகையிலும் ஒகேனக்கல் சிறந்தத் திட்டமாகும்.

தமிழகத்தின் இடைவிடாத முயற்சியின் காரணமாக மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் ஒகேனக்கல் புனல் மின் திட்டத்தை நிறைவேற்றலாம் என தேசிய புனல் மின்னுற்பத்தி ஆணையம் பரிந்துரை செய்தது. ஆனால், இத்திட்டத்திற்கு கருநாடக மாநிலத்தின் ஒப்புதலைப் பெற்றால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

ஆனால், கடந்த 35 ஆண்டு காலத்திற்கு மேலாக இத்திட்டங்களுக்கு கருநாடகம் ஒப்புதல் அளிக்காத காரணத்தினால் மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்து வருகிறது.

ஒகேனக்கல் திட்டத்தை தமிழகம் தயாரித்து மத்திய அரசிடமும், தேசிய புனல் மின் உற்பத்தி ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதலுக்காக 25-8-1961இல் அனுப்பிய காலக்கட்டத்தில் கருநாடக அரசு மேகதாது திட்டம் குறித்துச் சிந்திக்கவும் இல்லை. எதிர்ப்புத் தெரிவிக்கவும் இல்லை. ஆனால், 1982ஆம் ஆண்டில் அதாவது 21 ஆண்டுகள் கழித்து மேகதாது திட்டத்தை கருநாடகம் அறிவித்தது. ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றவிடக்கூடாது என்ற உள்நோக்கத்துடனும், கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிறைந்து வழிந்தோடி வரும் நீர். இடையில் எவ்வித தடையும் இல்லாமல் நேரடியாக மேட்டூர் அணைக்கு வந்து சேருவதைத் தடுக்கும் நோக்கத்துடன்தான் மேகதாது அணையை கட்டுவதில் முனைந்து நிற்கிறது. மின்உற்பத்தி மட்டுமே அதன் நோக்கம் என்று சொன்னால் கருநாடகத்தில் ஓடும் கிருஷ்ணா மற்றும் ஆறுகளில் 4,100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வழி உண்டு. அதைச் செய்யாமல் மேகதாது திட்டத்தை கருநாடகம் முன்னிறுத்தி ஒகேனக்கல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் 35 ஆண்டு காலமாக முட்டுக்கட்டைப் போட்டு வருகிறது என்ற உண்மையை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல தமிழக அரசு தவறிவிட்டது.

1996ஆம் ஆண்டிலிருந்து தமிழகமும் கருநாடகமும் புனல் மின் நிலையங்கள் அமைப்பது குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தின. தமிழகத்தில் இராசிமணல் புனல் மின் திட்டம், ஒகேனக்கல் புனல் மின் திட்டம், கருநாடகத்தில் சிவசமுத்திரம் திட்டம், மேகதாது திட்டம் ஆகிய நான்கு திட்டங்கள் குறித்து நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் வெற்றிபெறவில்லை.

2009ஆம் ஆண்டில் மத்திய அரசு அதிகாரிகளுக்கு முன்னிலையில் இரு மாநில அதிகாரிகளும் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. ஒகேனக்கல் இராசிமணல் திட்டங்களை மத்திய அரசே நிறைவேற்றி இரு மாநிலங்களும் மின்சாரத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என தமிழகம் கூறிய யோசனையையும் கருநாடகம் ஏற்கவில்லை. தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் ஒரே நோக்கத்துடன்தான் மேகதாது திட்டத்தைக் கருநாடகம் வலியுறுத்துகிறது.

2007ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் மேற்கண்ட நான்கு புனல் மின் உற்பத்தித் திட்டங்கள் குறித்து கூறுகையில் "புனல் மின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் அதன் மூலம் அணைகளில் தேக்கப்படும் காவிரி நீரை வேளாண்மைப் பயன்பாட்டிற்காக திறந்துவிடுவது குறித்து நாங்கள் ஏற்கெனவே இட்டுள்ள ஆணைகள் எக்காரணம் கொண்டும் மீறப்படலாகாது'' என்று திட்டவட்டமாக கூறியது. அதாவது தமிழகத்திற்கு அளிக்கப்படவேண்டிய நீர் குறித்தக் காலங்களில் குறித்தபடி அளிக்கப்பட வேண்டும் என்பதே இதற்குப் பொருளாகும்.

ஆனால், புனல் மின் திட்டங்களுக்கு நடுவர் மன்றம் அனுமதி அளித்துவிட்டதாக கருநாடகம் தவறாகப் பொருள் கொண்டு மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முற்படுகிறது. மேலும் காவிரிப் பிரச்சினை உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இன்னும் உள்ளது. தனது முடிவினை உச்சநீதிமன்றம் அறிவிக்காத வகையில் மேகதாது அணைத்திட்டம் உள்பட எத்தகையத் திட்டத்தையும் மேற்கொள்ளுவதற்கு கருநாடகத்திற்கு உரிமை கிடையாது.

1961ஆம் ஆண்டிலிருந்து தமிழகம் கட்டுவதற்கு திட்டமிட்ட ஒகேனக்கல் திட்டம் கருநாடக மாநிலத்தின் ஒப்புதல் கிடைக்காத காரணத்தினால் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், கருநாடகத்தின் மேகதாது திட்டத்திற்கு தமிழகத்தின் ஒப்புதலைப் பெறாமலும் நடுவர் மன்றத்தின் ஆணையை மீறியும், உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைனையில் இப்பிரச்சினை இருப்பதைப் பொருட்படுத்தாமலும் கருநாடகம் அடாவடித்தனமாக செயல்படுகிறது என்ற உண்மையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் தவறிவிட்டது. அதன் கவனத்திற்கு தமிழக அரசு கொண்டு செல்லத் தவறியதே இதற்குக் காரணமாகும்.

நன்றி : தினமணி 22-8-2017