இன்று அவரை விட்டால் வேறு தலைவர் இல்லை! ஜüனியர் விகடன் இதழில் வெளிவந்த மதிப்புரை அச்சிடுக
சனிக்கிழமை, 16 செப்டம்பர் 2017 12:43

காமராசர் இறந்து 42 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனாலும், "காமராசர் ஆட்சி அமைப்போம்' என்ற முழக்கம் இன்னமும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதற்குக் காரணம் அவரது தியாகம், எளிமை, நேர்மை, தூய்மை. அவருக்குப் பின்னால் நடந்த அரசியலில் இந்த நான்கும் இல்லாமல் போனதால்தான் காலங்கள் கடந்தும் ஏக்கத்துடன் கவனிக்கப்பட வேண்டியவராக காமராசர் இருக்கிறார். அவரைப் பற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் தமிழில் வந்துள்ளன. "இதோ, மேலும் ஒரு புத்தகம்' என்று இதை ஒதுக்க முடியாது. ஏனென்றால், "பெருந்தலைவரின் பெருநிழலில்' வளர்ந்த பழ. நெடுமாறன் எழுதியிருப்பதால், இது நேரடி சாட்சியம்.

1958-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவரான நெடுமாறன், விடுதிப் பிரச்னை காரணமாக ஒரு போராட்டத்தில் இறங்குகிறார். அதனால் 73 மாணவர்கள் மீது வழக்கு பாய்கிறது. சிதம்பரத்துக்கும் கடலூருக்கும் இவர்கள் வழக்கு விசாரணைக்காக அலைகிறார்கள். இந்த வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவுடன் முதலமைச்சர் காமராசரைச் சந்திக்கிறார்கள். "படிக்கிற வயதில் எதற்குப் போராட்டம்? இது சரியல்ல'' என்று கண்டித்தவர், "ஆகட்டும், பார்க்கலாம்'' என்று அனுப்புகிறார். இவர் வழக்கை வாபஸ் வாங்க மாட்டார் என்று மாணவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், மறுநாளே வழக்கை வாபஸ் வாங்குகிறார் முதல்வர். காவல்துறை அதிகாரியைக் கண்டித்த முதல்வர், "மாணவர்கள் போராட்டம் நடத்தினால் ஆசிரியர்கள் கண்டிக்க வேண்டுமே தவிர வழக்கு போடக்கூடாது. இதனால் அவர்கள் படிப்பு பாழாகி விடாதா?'' என்று சொன்னதும் இவர்களுக்குத் தெரியவருகிறது. இதுதான் பெருந்தலைவருக்கும் பெருந்தொண்டருக்குமான முதல் சந்திப்பு. இப்படித் தொடங்குகிறது புத்தகம்.

1973-ம் ஆண்டு மதுரை வருகிறார் காமராசர். இந்திராவும் அவரும் பிரிந்து... நெடுநாள்களுக்குப் பிறகு சந்தித்த நேரம் அது. இதுபற்றி பேச்சு வந்தபோது, "ஆம், இந்திராவைச் சந்தித்தேன். அது வட இந்தியத் தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை. இன்று அவரை விட்டால் வேறு தலைவர் இல்லை. சொந்த கோபதாபங்களுக்காக உங்களைப் போன்ற இளைஞர்களை பலி கொடுக்க நான் விரும்பவில்லை. எனது வீம்பு பெரிதல்ல'' என்று காமராசர் சொல்கிறார். தனது சுயநலத்துக்கு மற்றவர்களைப் பலியிடும் தலைவர்கள் பெருகிவிட்ட காலத்தில், "காமராசர் ஏன் நினைக்கப்பட வேண்டும்' என்பதற்கு ஆதாரம் இந்தப் புத்தகம்.
"உன்னைப் போன்றவர்கள்தான் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் என்று தலைவர் நினைக்கிறார்'' என நெடுமாறனிடம் டி.டி. கிருஷ்ணமாச்சாரி சொன்னாராம். அந்தக் கட்சியிலிருந்து நெடுமாறனே விலகி முப்பதாண்டுகளுக்குப் பிறகு இந்தப் புத்தகம் வருகிறது. இந்தியத் தேசியத்திலிருந்து தமிழ்த் தேசியத்தின் பக்கம் வந்துவிட்டார் நெடுமாறன். ஆனால், தலைவரை எந்த இடத்திலும் விட்டுத்தரவில்லை. அதுதான் தலைமைப் பண்பும்கூட.

- புத்தகன்.
ஜüனியர் விகடன் 10-9-17