46 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டக் கவிதை காவிரிநீர்ப் பங்கீட்டுச் சிக்கலில் கண்திறந்து நடுவணரசு முறைசெய்க! - கவிஞர் தெசிணி அச்சிடுக
புதன்கிழமை, 01 நவம்பர் 2017 12:27

தமிழகத்துக் களஞ்சியமாம் தஞ்சை மண்ணைத்
தழைக்கவைக்கும் காவேரி ஆற்றின் நீரைத்
தமிழகத்துக் கில்லாது செய்யும் வண்ணம்
தன்போக்கில் அணைகட்டும் மைசூர் ஆட்சி

தமிழகத்தோ டிதுகுறித்து முன்னர் கண்ட
உடன்பாட்டை யும்மீறித் தருக்கி நின்றால்,
தமிழகத்தின் நலன் காக்க தில்லி இன்னும்
தயங்குவதேன்? நடுவணரசு வேறெ தற்காம்?
ஒற்றுமைக்கு நாம் மட்டும் பொறுத்திருக்க,
நாம்மட்டும் மாநிலங்கள் உறவைக் காக்க,
முற்றிலுமே நம்பொறுமை தன்னை ஏதோ
முடமென்று கருதினாற்போல் மைசூர் ஆள்வோர்
குற்றத்தை இழைக்கின்றார், குறுக்கே ஆற்றில்
எழுப்புகின்றார் அணை; நம்மை எழுப்பிவிட்டார்;
சற்றுமினி பொறுத்தலிலை; உடனே இஃதைத்
தடுப்பதற்கே நடுவணரசு முனைக என்போம்.
காவிரிநீர்ப் பங்கீடு சிக்கல் தீர்க்க
நடுவரிடம் விடுவதற்கேன் காலந் தாழ்த்தல்?
காவிரிநீர் தன்னில்தன் கையை வைக்கும்
கன்னடமா நிலத்தரசோ அறத்தைக் கொல்லும்;
காவிரிநீர் தடைப்பட்டால் நமது தஞ்சை
கடும்பாலை வனமாகும்; தமிழர் துஞ்சோம்!
காவிரிநீர்ப் பங்கீட்டில் முறைமை செய்ய
கண்திறந்தே நடுவணாட்சி துணிக இன்றே!

நன்றி : "கவிதை' இதழ் 01-07-1971