உலகப் பெருந்தமிழர் ம.இலெ. தங்கப்பா மறைவு! அச்சிடுக
சனிக்கிழமை, 16 ஜூன் 2018 11:47

20ஆம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதைப் படைப்புலகில் புதியதொரு திருப்பத்தை ஏற்படுத்திய பாரதியார், பாரதிதாசனார் ஆகியோர் வாழ்ந்த புதுச்சேரி மண் தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா அவர்களையும் தமிழ்கூறும் நல்லுலகுக்குத் தந்தது.

தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மீது அவர் கொண்டிருந்த அளவற்றப் பற்று  இயல்பானது. வாழ்நாள் முழுவதிலும் தமிழுக்காகவே வாழ்ந்தார். தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றினார். தமிழர்களின் நெஞ்சங்களில்  நிறைந்து மறைந்தார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தென்மொழி, புரட்சிக் கவிஞரின் குயில் இதழ் ஆகியவற்றில் தொடர்ந்து எழுதினார். அவர்களின் வழியே நின்று இணையற்ற மொழிக்காவலராகத் திகழ்ந்தார்.  ஆங்கிலத்திலும் புலமைமிக்கவராக விளங்கினார்.  சங்க இலக்கியம் மற்றும் வள்ளலார், பாரதி, பாவேந்தர் ஆகியோரின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.  
2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சங்கக் கவிதைகளின் மொழி நுணுக்கங்களையும், இன்றைய புதிய வாழ்வியலுக்கு அக்கவிதைகள்  நன்கு பொருந்தி வருவதையும் உணர்ந்த நிலையில் அவரது மொழியாக்கங்கள் அமைந்தன. சங்க  இலக்கியப்  பாடல்களை Love Stands Alone என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் அவர் வெளியிட்ட  நூலும், முத்தொள்ளாயிரம் கவிதைகளை Red Lillies Frightened Birds என்ற தலைப்பிலும் வெளியிட்ட போது சங்கப் பாடல்களின் செவ்வியல் தன்மையை அவை உலகிற்கு உணர்த்தின. வள்ளலாரின் திருவருட்பாவை Songs of Grace என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு என்னும் பல்வேறு துறைகளின் 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.  
இந்திய இலக்கிய கழகம் இவரைப் போற்றி விருது வழங்கியது. சோளக்கொல்லைப் பொம்மை என்னும் தலைப்பில் இவர் இயற்றிய சிறுவர் இலக்கியப் பாடல்  நூலுக்கும் இந்திய இலக்கிய கழகம் விருது வழங்கியது. இவரது தமிழ்த் தொண்டினைப் பாராட்டும் முகத்தான் தமிழக அரசு 1991ஆம் ஆண்டில் பாவேந்தர்  விருது அளித்துப் பாராட்டியது. புதுச்சேரி அரசின் கலைமாமணி விருதும் இவருக்கு வழங்கப்பெற்றது. பாரதியார் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமைக்காக கல்கத்தா தமிழ்ச்சங்க விருது, அரவிந்தர் பாடல்களை தமிழில் பெயர்த்தமைக்காக அரவிந்தர் ஆசிரம விருது, 1998ஆம்  ஆண்டில் பகுத்தறிவாளர் கழகம் வழங்கிய பெரியார் விருது, 2002ஆம் ஆண்டில் தமிழர் தேசிய இயக்கம் வழங்கிய தமிழ்த் தேசிய செம்மல் விருது,  2016ஆம் ஆண்டு உலகத் தமிழர் பேரமைப்பு வழங்கிய உலகப் பெருந்தமிழர் விருது, 2018ஆம் ஆண்டு புதுவைத்  தமிழ்ச்சங்க விருது இன்னும் எண்ணற்ற விருதுகளையும், பரிசுகளையும் பெற்ற பெருமைக்குரியவர்.
புதுவை அரசு ஊழியர்கள் அலுவலகக் கோப்புகளில் தமிழில் ஒப்பமிடவேண்டும் என விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிறைவேற்றத் தவறியதற்காக முனைவர் திருமுருகனார் பெற்ற தமிழ் மாமணி விருதையும், முனைவர் ம.இலெ.  தங்கப்பா அவர்கள் பெற்ற கலைமாமணி விருதையும் புதுவை அரசிடமே திருப்பிக் கொடுக்கும் துணிவும், தமிழ்ப் பற்றும் இவர்கள் இருவரிடமும் இருந்தது. இவ்விருதைகளை இவர்கள் பெற்றபோது கிடைத்தப் பாராட்டுகளைவிட, விருதுகளை திருப்பிக்கொடுக்க முன்வந்தபோது இவர்கள் இருவருக்கும்  குவிந்தப்  பாராட்டுகள் மிகுந்ததாகும்.
தமிழறிஞராக மட்டுமல்ல, தமிழருக்காக இடையறாது பணியாற்றிய செயல்வீரராகவும்  திகழ்ந்தார். உலகத்  தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்று அதன் வளர்ச்சிக்குத் துணை  நின்றார்.  தமிழர் தேசிய முன்னணி அமைக்கப்பட்டபோது புதுவை மாநிலத்தின் முதல் தலைவராகப் பொறுப்பேற்று திறம்பட செயலாற்றினார்.  
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமைமிக்கவராகத் திகழ்ந்த இவரின் தொண்டினை தமிழகப் பல்கலைக்கழகங்களோ, தமிழக அரசோ நன்கு பயன்படுத்தியிருக்கவேண்டும். அவ்வாறு செய்திருந்தால் தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெரும் பயன் விளைந்திருக்கும். அவரின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும். அவரின் பிரிவால் வருந்தும் அவரது துணைவியார் விசாலாட்சி அம்மையார்,  அவரது மக்கள் செங்கதிர், விண்மீன் பாண்டியன், இளம்பிறை, மின்னல்  ஆகியோருக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் ஆழ்ந்த  இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
- பழ. நெடுமாறன்.