கை கோக்கும் காங்கிரசும் - பா.ஜ.க.வும் - பழ. நெடுமாறன் அச்சிடுக
புதன்கிழமை, 04 ஜூலை 2018 11:16

மகாவீரரும், கெளதம புத்தரும், காந்தியடிகளும் மனித நேயத்தின் அடிப்படையில் மானுடம் உய்வதற்கான உயர்ந்த நெறிமுறைகளை வகுத்தும் தமது வாழ்வியலில் கடைப்பிடித்தும் வாழ்ந்து வழிகாட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.


ஐரோப்பிய ஆதிக்க ஆட்சிகளின் கீழ் ஆசிய&ஆப்பிரிக்க நாடுகள் அடிமைப்பட்டுக் கிடந்தன. இந்தியாவின் விடுதலை போராட்டம் அந்நாடுகளுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து வழிகாட்டியது. இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு இந்தோனேசியா உள்பட பல நாடுகளின் விடுதலை  போராட்டங்களுக்கு உலக  அரங்கில் ஆதரவுத்  திரட்டி அந்நாடுகள் விடுதலைப் பெற உதவியது. கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளில் அமெரிக்கப் படைகள் நிகழ்த்திய மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் போன்றவற்றை எதிர்த்து உலக அரங்குகளில் இந்தியா குரல் கொடுத்தது. தென்னாப்பிரிக்க வெள்ளை அரசு நிறவெறியின் காரணமாக கறுப்பின மக்களின் மனித உரிமைகளைப் பறித்தபோது அதற்கு எதிராக இந்தியா தொடர்ந்து போராடி காமன்வெல்த் அமைப்பிலிருந்தும், ஐ.நா.  பேரவையிலிருந்தும் தென்னாப்பிரிக்க நிறவெறி அரசை வெளியேற்றியது. இந்தியா கடைப்பிடித்த பஞ்சசீலக் கொள்கையின் விளைவாக அணிசாரா நாடுகளின் அமைப்பு உருவாயிற்று. மூன்றாம் உலகப் போர் மூள்வது இதன்மூலம் தவிர்க்கப்பட்டது.  
மானுட சமுதாயத்தை உய்விக்க வழிகாட்டிய இந்தியா, இன்று மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிய நாடாக குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அலுவலகம் காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆயுதப் படைகள் தொடர்ந்து மனித உரிமை  மீறல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. 2016ஆம் ஆண்டு சூலை 8ஆம் தேதி அன்று பர்கான் வானி என்னும் தீவிரவாதத் தலைவர் ஒருவர் இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதற்கு முந்தைய  ஆண்டுகளில் பலமுறை மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வந்தபோதிலும், இப்போது வரலாறு காணாத வகையில் இளைஞர்களும், பெண்களும் வீதிகளில் இறங்கிப் படைகளுக்கெதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதியிலும் போராட்டங்கள் வெடித்தன. இப்போராட்டங்களை ஒடுக்குவதற்கு இரு நாடுகளைச் சேர்ந்த ஆயுதப்படைகள் களமிறங்கி மக்களைக் கொன்று குவித்தன.  
2016 சூலை 16ஆம் தேதி அன்று ஐ.நா. மனித உரிமை ஆணையம் இந்திய-பாகிஸ்தான் அரசுகளின் பிரதிநிதிகளை அழைத்து காஷ்மீரில் உள்ள நிலைமையை ஆராய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என வேண்டிக்  கொண்டபோது இந்திய அரசு இவ்வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டது. இந்தியா அனுமதித்தால் தானும் அனுமதிப்பதாக பாகிஸ்தான் அரசு கூறியது. ஆக இரண்டு அரசுகளும் காஷ்மீர் நிலைமையை நேரடியாகக் கண்டறிய ஐ.நா. மனித உரிமை ஆணையத்தை அனுமதிக்கத் தயாராக இல்லை. எனவே வேறு வழியின்றி பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் தான் கண்டறிந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையம் 49 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை சூன் 14ஆம் தேதி  வெளியிட்டது. 2016 சூலை 16ஆம் தேதி முதல் 2018 ஏப்ரல் வரை இந்திய ஆயுதப்படைகள் அளவுக்கதிகமான அடக்குமுறைகளைப் பயன்   படுத்தியதின் விளைவாக மிக மோசமான வகையிலும், பரவலாகவும் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன. பாதுகாப்புப் படைகளால் 130 முதல் 145 பேர்களும், ஆயுதம் தாங்கிய போராளிகளால் 16 முதல் 20 பேர்களும் சட்டத்திற்குப் புறம்பான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  
இந்தியப் பாதுகாப்புப் படை பெல்லட் தோட்டாக்களைப் பயன்படுத்தி மக்களைச் சுட்டுள்ளது. ஒவ்வொரு தோட்டாவிலும்  500 முதல் 600 பெல்லட் என்னும் வகை சிறு ஈய குண்டுகள் இருக்கும். தோட்டாக்களிலிருந்து நான்கு புறமும் சிதறும் இந்த சிறு குண்டுகள் கண்மூடித்தனமாகப் பாய்ந்து பரவலான மக்களை படுகாயத்திற்குள்ளாக்கும். முகம், கண், தலை போன்ற பகுதிகளில் இக்குண்டுகள் பாய்ந்தால்  அவர்கள் உயிரிழப்பது என்பது உறுதி. ஆனால், மத்திய காவல்படை கூட்டத்தைக் கலைப்பதற்காகவே பெல்லட்  குண்டுகளைப் பயன்படுத்துவதாக கூறுகிறது. ஆனால், இதன் விளைவாக நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டும், படுகாயமடைந்தும் உள்ளனர்.  காஷ்மீர் மாநில மனித உரிமை ஆணையம் 2016ஆம் ஆண்டில் மட்டும் 1726 பேர் இக்குண்டுகளால் படுகாயமடைந்துள்ளனர் என்று கூறியுள்ளது. 2018 ஜனவரியில் காஷ்மீர் சட்டமன்றத்தில் முதல்வர் மெகபூபா முப்தி அவர்கள் 6121பேர் இக்குண்டுகளால் படுகாயமடைந்ததாகவும், அதில் 728பேருக்கு கண்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். இவர்களில் ஏராளமானவர்கள் கண் பார்வையை இழந்துவிட்டனர். இக்குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள் பலர்  மனநிலை இழப்பு  நோய்க்கு ஆளாகி உள்ளனர் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.  காவல்துறை ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு மக்கள் கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்குக் கடைப்பிடிக்கப்படவேண்டிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அந்த விதிமுறைகளில் பெல்லட் குண்டுகளும், அதைச் சுடும் ஷாட் துப்பாக்கியும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமின்றி இந்திய ஆயுதப்படைகள் ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தில் செயல்படுகின்றன. இதற்கு அம்மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டமே காரணமாகும் (1990). மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படுபவர்கள் அவற்றுக்குப் பரிகாரம் தேடும் உரிமையை இச்சட்டம் அடியோடு தடுக்கிறது.
இச்சட்டம் குறித்து மறு ஆய்வு செய்வதற்காக குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இக்குழு ்இந்தச் சட்டம் ஒடுக்குமுறையின் சின்னமாகும். வெறுப்பு, பாகுபாடு காட்டுதல் மற்றும் அத்துமீறல் ஆகியவற்றின் அடையாளமாகும்” என கடுமையாகச் சாடியது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இச்சட்டத்தை ரத்து செய்யவேண்டுமென தொடர்ந்து வற்புறுத்தின. குற்றங்கள் இழைத்த ஆயுதப்படையினரை விசாரணைக்கு உட்படுத்துவதின் மூலம் மக்களுக்கு நீதி வழங்க முன்வருமாறு ஐ.நா. மனித உரிமை ஆணையம் வேண்டிக்கொண்டது. ஆனாலும், அதன்படி நடக்க இரு அரசுகளும் முன்வரவில்லை.
 2012ஆம் ஆண்டில் காஷ்மீர் மாநில முதலமைச்சராக இருந்த உமர் அப்துல்லா முதல் இப்போது முதலமைச்சராக இருந்த மெகபூபா முப்தி வரை இச்சட்டம் இராணுவத்தினருக்கு அளவற்ற அதிகாரங்கள் கொடுப்பதால் காஷ்மீர் மக்கள் அதை விரும்பவில்லை. திரும்பப் பெறுங்கள் என மன்றாடினர். ஆனால் அவ்வாறு செய்ய அப்போதிருந்த காங்கிரசு அரசும், இப்போதிருக்கும் பா.ஜ.க. அரசும் முன்வரவில்லை. ஏனெனில் இராணுவ தளபதிகள் இச்சட்டத்தை நீக்குவதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். இராணுவத்தினரும் மற்றும் மத்திய ஆயுதப் படையினரும் புரியும் மனித உரிமை மீறல்கள், சித்ரவதைகள், படுகொலைகள், பாலியல் வன்முறைகள் ஆகியவற்றிலிருந்து அவர்களை இந்தச் சட்டம் பாதுகாக்கிறது.
ஜம்மு&காஷ்மீர் மாநிலப் பொதுப் பாதுகாப்புச் சட்டம் (1978) கொடூரமான ஆள் தூக்கிச் சட்டமாகும். எத்தகைய காரணமும் கூறாமல், யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம்; காவலில்  வைத்து  சித்ரவதை செய்யலாம்; சிறையில்  அடைக்கலாம். 2016ஆம் ஆண்டு மார்ச்  முதல் 2017 ஆகஸ்ட்  வரை  1000பேருக்கும் மேலானவர்கள் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் பலர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு என்ன நேர்ந்தது? என்பது அவர்களின் குடும்பங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. காணாமல் போனவர்கள் பட்டியல் இன்னும் நீளமானது. பல இடங்களில் பலர் ஒன்றாகப் புதைக்கப்பட்ட குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டில் காஷ்மீர் மாநில மனித உரிமை ஆணையம் வடக்கு காஷ்மீர் பகுதியில்  இத்தகைய புதைக்குழிகளில் 574  உடல்களையும் மற்றொன்றில் 2156 உடல்களையும் கண்டுபிடித்தது. இவைகள் குறித்து எத்தகைய நியாயமான விசாரணையும் நடத்தப்படவில்லை.
ஆயுதப் படைகளின் தாக்குதலினால் படுகாயமடைந்தவர்களுக்கு அடிப்படை மருத்துவ உதவிகள் புரிவது கூட தடுக்கப்படுகிறது. பல நாட்கள் தொடர்ந்து நீடிக்கப்படும் ஊரடங்குச் சட்டங்களும், செய்தித் தடைகளும் இதற்குக் காரணமாகும். இணையதளம், கைப்பேசி ஆகியவை பலமுறை பல பகுதிகளில்  தடைசெய்யப்படுகின்றன. கருத்துக்களை வெளியிடும் உரிமை பறிக்கப்பட்டு  ஊடகங்களும்,  பத்திரிகைகளும் தடைசெய்யப்படுகின்றன.
போராட்டங்களினாலும், ஊரடங்கு உத்தரவுகளினாலும் பள்ளிகளும், கல்லூரிகளும் இயங்க முடியாமல் மாணவர்களின் எதிர்காலம் பாழ்படுகிறது.  கல்வியறிவற்ற இளைய சமுதாயம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் அடியோடு பறிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய ஐ.நா. மனித உரிமை ஆணையம் பாகிஸ்தான் வசமுள்ள ஆசாத் காஷ்மீரிலும் மனித உரிமைகள் மீறப்படுவதைச் சுட்டிக்காட்டிக் கண்டித்துள்ளது. பாகிஸ்தான் தலைமையமைச்சர், காஷ்மீர் விவகாரத்துறை அமைச்சர் ஆகியோரின் கட்டுப்பாட்டிலும், பாகிஸ்தான் அரசியல் சட்டத்தின் கீழும் இப்பகுதி ஆளப்படுகிறது. பாகிஸ்தானுடன் ஆசாத் காஷ்மீர் இணைக்கப் பட்டுள்ளதை எதிர்த்து யாரும் பேச முடியாது. பாகிஸ்தானிலும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (1997) கீழ் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆசாத் காஷ்மீரில் மக்பூன் தாஸ் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் முன்னறிவிப்பு எதுவும் கொடுக்காமல் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு அந்தப் பகுதியின் நிலம் முழுவதும் சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித் தடயத்திற்காக ஒப்படைக்கப் பட்டுள்ளது. வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மறுவாழ்விடமோ, இழப்பீடோ கொடுக்கப்படவில்லை.  
பாகிஸ்தான் படையினரின் மனித உரிமை மீறல்களுக்கும், அட்டூழியங்களுக்கும், படுகொலைகளுக்கும், பாலியல் வன்முறைகளுக்கும் ஆசாத் காஷ்மீர் மக்களும் ஆளாக்கப்படுகின்றனர் என ஐ.நா. மனித  உரிமை ஆணையம் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த அறிக்கை இந்திய அரசுக்குக் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, "காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும்” என்பதே இந்த ஆத்திரத்திற்கு காரணமாகும். இந்திய வெளியுறவுத்துறை இந்த அறிக்கையை முழுவதுமாக ஏற்கமறுப்பதாகக் கூறியதோடு "பொய்மை நிறைந்தது; உள்நோக்கம் கொண்டது; முற்றிலும் தவறானது. இந்தியாவின் இறையாண்மை, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை மீறும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய அறிக்கைகள் ஐ.நா.நிறுவனத்தின் மீதுள்ள நம்பிக்கையை தகர்த்துவிடும். இத்தகைய நச்சுத்தன்மை வாய்ந்த அறிக்கையின் மூலம்  இந்திய அரசு மற்றும் மக்களின் மன உறுதியை அழித்துவிட முடியாது” என்று  கூறியுள்ளது.
எதிர்க்கட்சியான காங்கிரசுக் கட்சியும் இந்த அறிக்கையைக் கண்டித் துள்ளது.  இந்தியாவின் இறையாண்மையையும், தேசிய நலன்களையும் இந்த அறிக்கைப் புண்படுத்தியுள்ளது. "காஷ்மீரின் உண்மை நிலவரத்தை தெரிந்துகொள்ளாமலும், பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த அறிக்கை அமைந்துள்ளது. எனவே இந்த அறிக்கையை காங்கிரசுக் கட்சி ஏற்க மறுக்கிறது. இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு காங்கிரஸ் முழுமையான ஆதரவு தெரிவிக்கிறது” எனக் கூறியுள்ளது.
2009ஆம் ஆண்டில் மிகக் கொடூரமான போர்க் குற்றங்களையும், மனிதகுலத்திற்கு எதிரான அட்டூழியங்களையும் சிங்கள இராணுவம் புரிந்தது. ஜெனீவா உடன்பாட்டின்படி தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தித் தமிழர்களைக் கொன்றுகுவித்தது. டப்ளின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற அமைப்பு 2010ஆம் ஆண்டில் விசாரணை நடத்தி மேலே கண்ட குற்றச்சாட்டுகளை உறுதி செய்தது. இதன் விளைவாக ஐ.நா. செயலாளர் & நாயகமான பான்&கீ&மூன் விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார். அக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க அதிபர் இராஜபக்சே மறுத்தார். ஆனாலும், பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே ஐ.நா. விசாரணைக் குழு தனது கடமையை நிறைவேற்றியது. சர்வதேச மனித நலச்சட்டம், மனித உரிமைச் சட்டம் ஆகியவற்றை மீறியதோடு போர்க் குற்றங்களையும் இலங்கை இராணுவம் செய்துள்ளது. அரசுக்கு எதிரானவர்களும், ஊடக வியலாளர்களும், சமூக ஆர்வலர்களும், இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சிங்கள அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வளையங்களில் தஞ்சம் புகுந்த மக்கள் ஈவுஇரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு நோயாளிகளும், மருத்துவர்களும் சாகடிக்கப் பட்டிருக்கிறார்கள். போர் முடிந்தப் பிறகும் முள்வேலி முகாம்களில் சித்ர வதைகளும், பாலியல் வன்முறைகளும், படுகொலைகளும் தொடர்ந்து நடத்தப்பட்டன என ஐ.நா. விசாரணைக்குழு தனது அறிக்கையில் குற்றம் சாட்டியது.   
2012ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் இப்பிரச்சனையில்  தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசுக்கு  மூன்றாண்டு கால  அவகாசம் அளித்தது. அதற்கிணங்க இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக்குழு அளித்தப் பரிந்துரைகளையும்  நிறைவேற்ற இராஜசபக்சே மறுத்துவிட்டார். அதன்பின் 2013ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி  அளித்த அறிக்கையையும் ஏற்பதற்கு இராசபக்சே மறுத்துவிட்டார்.  
அமெரிக்காவும் மற்றும் மேற்கு நாடுகளும் ஐ.நா. விசாரணை  அறிக்கையின்  அடிப்படையில் இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தின. ஆனால், இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இலங்கை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் கூறியபோது அதை இலங்கை அரசு ஏற்க மறுத்தது. அதைபோலவே இப்போதும் காஷ்மீர் பிரச்சனையில் சர்வதேச விசாரணையை ஏற்க பா.ஜ.க. அரசு மறுத்துள்ளது. அதற்கு எதிர்க்கட்சியான காங்கிரசும் ஆதரவுத் தெரிவித்துள்ளது வியப்புக்குரியதல்ல. ஏனெனில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 64% மக்கள் முஸ்லீம்களாக இருந்தபோதிலும் அவர்கள் பாகிஸ்தானுடன்  இணைய மறுத்து இந்தியாவுடன் இணைந்தார்கள். அப்போது காஷ்மீர் மக்களுக்கு காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதிகள் காலப்போக்கில் காற்றில் பறக்கவிடப்பட்டன. அதன் விளைவாகவே காஷ்மீரில் கொந்தளிப்பு உருவாயிற்று. காஷ்மீர் பிரச்சனை முற்றியதற்கு காங்கிரசுக் கட்சி முக்கிய காரணமாகும். பா.ஜ.க. அரசு அதே பாதையைப் பின்பற்றுவதால்  காங்கிரஸ் அதற்கு ஆதரவுத் தருகிறது.
காஷ்மீர் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து மெகபூபா முப்தியின் அரசுக்கு அளித்த ஆதரவை பா.ஜ.க. திரும்பப் பெற்றதும் உடனடியாக அங்கு ஆளுநர் ஆட்சி கொண்டுவரப்பட்டுள்ளதும் ஒன்றுகொன்று  தொடர்பில்லாதவை எனக் கூற முடியாது. காஷ்மீரில் நடைபெற்ற ஆயுதப்படைகளின் அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்கள், படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ஆகியவைக் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் கூறியதற்குப் பதிலடியாக காஷ்மீரின் ஜனநாயகத்தை இந்திய அரசு படுகொலை செய்துள்ளது.  இது பொருள் பொதிந்தது மட்டுமல்ல, கடும் எதிர்விளைவுகளையும் உருவாக்கும்.
நன்றி - தினமணி - 25-06-2018