இந்தியாவுடன் இலங்கை நெருங்கி உறவாடவேண்டும்! சிங்களப் பத்திரிகையாளர் அறிவுரை அச்சிடுக
திங்கட்கிழமை, 03 செப்டம்பர் 2018 12:27

"இந்தியாவுடன் இலங்கை நெருக்கமான உறவு கொள்வதின் முலம் நமது பொருட்களை விற்பதற்கு மிகப்பெரிய இந்தியச் சந்தை கிடைக்கும்” என ஆர்.எம்.வீ. சேனா நாயகே என்னும் சிங்கள பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

இது குறித்து  அவர் எழுதியுள்ள கட்டுரையில் பின்வருமாறு  குறிப்பிட்டிருக்கிறார் "நமது வரலாற்றில் தொடர்ந்து தென்னிந்தியப் படையெடுப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. இதன் விளைவாக சிங்கள மக்களிடம் இந்திய வெறுப்புணர்வு ஓங்கி நிற்கிறது. இதை நாம் மாற்றிக்கொள்ளவேண்டிய வேளை வந்துவிட்டது. இந்தியாவுடன் நாம் நெருக்கமான உறவு கொள்வதின் மூலம் இந்தியப் பெருஞ் சந்தையில் நமது பாருட்களை விற்க முடியும். நமது நாட்டிற்கு அருகே உள்ள இந்தியாவுடன் வணிகத் தொடர்பு என்பது ஆதாயமிக்கதாகும். தொலைதூரத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொள்வது நமது பொருட்களின் விலையை உயர்த்தவேண்டிய நிலையை ஏற்படுத்திவிடும். ஏனென்றால் அனுப்பும் செலவு அதிகம்.  எனவே அண்டை நாடான இந்தியாதான் நமக்கு அண்மையில் உள்ள சந்தையாகும். நமது நாட்டைப்  போன்ற சிறிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அண்டை நாட்டுடன் கொள்ளும் வணிக உறவுதான் உதவும். ஐரோப்பிய  நாடுகள் ஒன்றிணைந்து தங்களின் பொருளாதார வளர்ச்சியைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன. அதைபோல நாமும் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், மாலத்தீவுகள் போன்ற நாடுகளுடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ளவேண்டும். மேலும் தென்னிந்தியா என்பது இந்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் உட்பட்டது. கடந்த காலத்தில் இலங்கை மீது அடிக்கடி படையெடுத்ததைப் போல இப்போது  தென்னிந்தியா செய்ய முடியாது.  இந்தியாவின் ஒரு அங்கமாக அது இருக்கும்வரை இந்திய அரசை மீறி செயல்பட முடியாது” எனக் கூறியுள்ளார்.
தென்னிந்தியா என அவர்  குறிப்பிடுவது தமிழ்நாட்டையே  ஆகும். ஏனென்றால் தமிழ்நாட்டைச் சேர்ந்த சோழர்களும், பாண்டியர்களும்தான் இலங்கை மீது படையெடுத்துச் சென்று அந்நாட்டைக் கைப்பற்றி ஆண்டார்கள்.   மாமன்னன் இராசராச சோழன் காலத்தில் இலங்கையைக்  கைப்பற்றி அதற்கு மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயர் சூட்டி சோழப் பேரரசோடு இணைத்தான். சோழர்கள் மட்டுமல்ல, பிற்காலப் பாண்டியர்களும்  இலங்கையை வென்று அடக்கி ஆண்டனர். எனவேதான் தமிழர்கள் மீது  சிங்களவர்கள் தீராப்பகைக்  கொண்டிருக்கிறார்கள்.  
"இந்திய அரசின் ஓர் அங்கமாக தமிழ்நாடு இருப்பதால் தனித்துச் செயல்பட முடியாது. இந்திய அரசும்  அதை அனுமதிக்காது. எனவே, இந்தியாவையும்,  இந்திய அரசையும் பகைவர்களாக கருதவேண்டாம். நட்பு கொண்டாட வேண்டும்” என சேனா நாயகே கூறியுள்ளார்.