உலகப் பெருந்தமிழர் அறிஞர் க. ப. அறவாணன் மறைவு அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 01 ஜனவரி 2019 11:56

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும் மூத்தத் தமிழறிஞரும் சிறந்த ஆய்வு நூல்களைப் படைத்தவருமான முனைவர் க. ப. அறவாணன் காலமான செய்தியறிய மிக வருந்துகிறோம். அவருடைய மறைவு தமிழ் கூரும் நல்லுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் படித்த போது எனக்கு இளையவராக படித்தவர், இனிய நண்பர் அறவாணன் ஆவார். அங்கு புலவர் மற்றும் பி. ஓ. எல். பட்டங்களைப் பெற்று கேரளப் பல்கலைக்கழகத்தில் மூத்தத் தமிழறிஞர் வ. அய். சுப்ரமணியம் அவர்களின் மாணவராக சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றார். பிறகு சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக விளங்கி முனைவர் பட்டமும் பெற்றார்.
தன்னால் தோற்றுவிக்கப்பட்ட பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியின் முதல்வராக குன்றக்குடி அடிகளார் அவரைத் தேர்ந்தெடுத்து நியமித்தார். அதற்குப் பிறகு சென்னை பச்சையப்பன் கல்லூரியின் பேராசிரியராகப் பணிபுரிந்தார். ஆப்பிரிக்காவில் உள்ள செனகல் நாட்டு டக்கர் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் ஆய்வாளராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றி அந்நாட்டின் குடியரசுத் தலைவராக விளங்கிய செங்கோர் அவர்களால் நன்கு மதிக்கப்பட்டார்.
பின்னர் சென்னை இலயோலாக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகவும், புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் ஆய்வு மய்யத்தின் இயக்குநராகவும் சிறப்பாகப் பணியாற்றினார். 1998 முதல் 2001-ஆம் ஆண்டு வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் திகழ்ந்து இவர் ஆற்றியப் பணிகள் முன் மாதிரியானவை. இவரால் உருவாக்கப்பட்ட மாணவர்கள் இன்று பல்வேறுப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பேராசிரியர்களாகத் திகழ்ந்து அவர் வழியிலேயே தமிழுக்குத் தொண்டாற்றி வருகிறார்கள்.
இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் என்ற அமைப்பு செயலற்றுக் கிடந்தக் காலக்கட்டத்தில் அதன் பொறுப்பை ஏற்றுத் திறம்பட செயல்பட வழிவகுத்தார். தமிழாய்வுகள் சிறக்கவும் ஒவ்வொரு மாநாட்டின் போதும் ஆய்வு மலர்களை வெளியிட்டும் இவர் ஆற்றியத் தொண்டு மறக்க முடியாததாகும்.
சமூகவியல், மானுடவியல், மொழியியல், கல்வியியல், இலக்கணம், வரலாறு, திறனாய்வு, படைப்பிலக்கியம் போன்ற பல்வேறுத் துறைகளில் இவர் எழுதிய நூல்கள் தமிழுக்குச் செழுமைச் சேர்த்தன. செம்மாந்து விளங்கிய தமிழ்ச் சமுதாயம் தாழ்ந்து சரிந்தது ஏன் என்பது குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் தமிழரைச் சிந்திக்க வைத்தன. தமிழக அரசின் திருவள்ளுவர் விருது உட்பட மூன்று முறை தமிழக அரசு இவரது நூல்களுக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டியது. சிறந்தப் பேராசிரியர் என்பதற்கான விருதினையும் இவர் பெற்றார். சி. பா. ஆதித்தனார் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றார்.
2002-ஆம் ஆண்டில் உலகத் தமிழர் பேரமைப்பினை உருவாக்கும் பணியில் முனைவர் க. ப. அறவாணன் தோளோடு தோள் நின்று துணை புரிந்தார். தொடர்ந்து அதன் துணைத் தலைவராக இறுதி வரை திகழ்ந்து அதன் வளர்ச்சியில் அக்கறைக் காட்டினார்.
தன்னுடைய பெயரால் அறக்கட்டளை ஒன்றினை அமைத்து எழுத்தாளர்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் ஆண்டு தோறும் அறவாணர் விருதை வழங்கி வந்தார்.
2011-ஆம் ஆண்டு சூன் 14 அன்று தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் உலகத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்ற போது முனைவர் க. ப. அறவாணன் அவர்களுக்கு "உலகப் பெருந்தமிழர்' விருதினை வழங்கி நாங்கள் பெருமை அடைந்தோம்.
உலகத் தமிழர்களுக்கு அருந்தொண்டாற்றிய அவரின் மறைவு தமிழ் கூரும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும். அவரது பிரிவினால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது துணைவியார் முனைவர் தாயம்மாள் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.