இந்துத்துவத்தைத் தடுக்க மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பு - பழ. நெடுமாறன் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 01 ஜனவரி 2019 12:20

உலகின் எந்த நாட்டிலும் தேச ஒற்றுமைக்கு ஆபத்து என்று கூப்பாடு அந்தந்த நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளால் எழுப்பப்படுவதில்லை. ஆனால், இந்தியாவில் மட்டும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு அபாயம் என்ற கூக்குரல் அகில இந்திய கட்சிகளால் இடைவிடாது எழுப்பப்படுகிறது.

காங்கிரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் தேசத்தின் ஒருமைப்பாடு காக்கப்படவேண்டுமானால் வலிமையான நடுவண் அரசின் மூலமே அது சாத்தியமாகும் என கூறுகிறது. இந்த கருத்தையே இன்னும் அழுத்தமான முறையில் பா.ஜ.க. கூப்பாடு போடுகிறது.
இந்தியா விடுதலை பெற்றப் பிறகு மொழிவழியாக மாநிலங்களை திருத்தி அமைக்கவேண்டும் என பல்வேறு தேசிய  இன மக்கள் நடத்திய போராட்டங்கள் வலுத்ததின் விளைவாக வேறு வழியில்லாமல் மொழிவழியாக  மாநிலங்களை அமைக்க காங்கிரசு ஆட்சி முன் வந்தது என்பது வரலாற்றுப்பூர்வமான உண்மையாகும். இன்னமும் பல தேசிய இனங்கள் இதற்கான போராட்டங்களை  நடத்தி வருகின்றன.
ஆனால், பா.ச.க.வோ "மொழிவழியாக மாநிலங்கள் அமைந்திருப்பதை அடியோடு ஒழித்துவிடவேண்டும். மொழியின் பெயரால் மக்களை கூறுபோடக் கூடாது. ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி மாநிலமோ, சட்டமன்றமோ, அரசோ  இருக்கக் கூடாது. இந்தியா முழுவதையும் 100 ஜனபாதங்களாகப் பிரித்து ஒரே நடுவண் அரசின் கீழ் ஆட்சி அமைக்கப்படவேண்டும்” என்று கூறுகிறது.
இந்தியா என்பதோ, இந்திய தேசிய இனம் என்பதோ உண்மையில் இல்லை. ஒருபோதும் இருந்ததுமில்லை. ஆங்கிலேயர் ஆட்சியில்தான் இந்தியாவில் இருந்த பல்வேறு மொழிவழித் தேசிய இன மக்களும் அடிமைப்படுத்தப்பட்டு இந்தியா என்னும் கூண்டுக்குள் அடைக்கப்பட்டனர். ஆங்கிலேயர் ஆதிக்கம் அகன்ற பிறகு, இந்தியத் துணைக்கண்டம் இந்தியா, பாகிசுதான் என இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டன.  
முசுலிம்கள் தனித் தேசிய இனம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பாகிசுதானின் கிழக்குப் பகுதியான வங்கதேசத்தில் உருதுமொழி திணிக்கப்பட்டபோது, வங்க முசுலிம்கள் கொதித்தெழுந்துப் போராடினர். அப்போராட்டத்திற்கு இந்தியா உதவியதின் விளைவாக வங்கதேசம் தனி நாடாகப் பிறந்தது என்பது வரலாறாகும். மத அடிப்படையில் ஒரு தேசிய இனம் ஒருபோதும் உருவாக முடியாது. மொழி அடிப்படையில்தான் ஒரு தேசிய இனம் இயற்கையாக உருவாக முடியும் என்பது நிலைநாட்டப்பட்டது.
முசுலிம்கள் ஒரு  தனி தேசிய இனம் என்பது ஏற்கப்பட்டால், ஆப்பிரிக்காவில் உள்ள அல்ஜீரியாவிலிருந்து ஆசியாவில் உள்ள இந்தோனேசியா வரை உள்ள முசுலிம்கள் ஒரே தேசிய இனமாக ஆகியிருக்கவேண்டும். ஆனால், அவர்கள் அராபியர்களாக, ஈரானியர்களாக, ஆப்கானியர்களாக, பஞ்சாபியர்களாக, சிந்திகளாக, இந்தோனேசியர்களாக தனித்தனி அடையாளங்களுடன் வாழ்வது ஏன்?
ஆனால், இந்த உண்மையை இந்திய தேசியம் பேசுபவர்கள் உணர மறுக்கிறார்கள். இந்திய துணைக்கண்டத்தில் வாழும் பல மொழிகளைப் பேசும் பல தேசிய இன மக்கள் நில எல்லை, மொழி, இலக்கியம், பண்பாடு, பொதுப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் வேறுபட்டவர்கள். இவை என்றும் அழிக்கப்பட முடியாதவை. இதன் விளைவாகத்தான் அந்தந்த மாநிலங்களில் வாழும் மக்களின் உரிமைகளைக்  காக்கும் வகையில் மாநிலக் கட்சிகள் உருவாயின.
1967ஆம் ஆண்டு வரை இந்தியா முழுவதிலும் அனைத்து மாநிலங்களிலும், நடுவண் அரசிலும் காங்கிரசு கட்சியே ஆட்சியில் இருந்தது. அதற்குப் பிறகு அதன் ஆதிக்கம் படிப்படியாக அகற்றப்பட்டு பல்வேறு மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் ஆட்சிகளைக் கைப்பற்றின.  அதற்குப் பின்னர் எந்தவொரு அகில இந்தியக் கட்சியும் தனித்துப் பெரும்பான்மை பெற்று தில்லி ஆட்சியில் அமர முடியவில்லை. காங்கிரசு கட்சி ஆனாலும், ஜனதாக் கட்சி ஆனாலும், பாரதிய ஜனதாக் கட்சி ஆனாலும் மாநிலக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தே ஆட்சி நடத்தவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. சில கட்டங்களில் மட்டுமே இதற்கு விதிவிலக்காக ஒரே கட்சி ஆட்சி அமைந்தது. ஆனால், அவை தொடர்ந்து நீடிக்க முடியவில்லை.
காங்கிரசு, பா.ச.க. போன்ற அகில இந்தியக் கட்சிகளிடையே வேறுபாடு அதிகமில்லை. பல அம்சங்களில் இவைகள் ஒன்றுபட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒரே நாடு - பாரதநாடு, ஒரே மொழி&சமற்கிருதம், ஒரே பண்பாடு-பாரதப் பண்பாடு என்பதில் இக்கட்சிகளிடையே கருத்து வேறுபாடு கிடையாது. இந்தியப் பெரு முதலாளி வர்க்கமும் இக்கருத்துக்குத் துணையாக நிற்கிறது.
எடுத்துக்காட்டாக, "காசுமீரில் மக்கள் உரிமைகள் அப்பட்டமாகப் பறிக்கப்படுகின்றன. இந்தியப் படை அத்துமீறிச் செயல்படுகிறது. அதைப்போல, பாகிசுதான் வசம் இருக்கும் ஆசாத் காசுமீரிலும் மக்கள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பாகிசுதான் இராணுவம் அத்துமீறிச் செயல்படுகிறது” என ஐ.நா. மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியதோடு, இது குறித்து விசாரணை ஆணையம் ஒன்றை அனுப்ப  இருப்பதாக இந்திய - பாகிசுதான் அரசுகளுக்குத் தெரிவித்தது. ஆனால், இந்திய அரசு "இது உள்நாட்டுப் பிரச்சனை எனவே, விசாரணை ஆணையத்தை அனுமதிக்க முடியாது” என்று  கூறியது. பாகிசுதான் அரசும் மிகத்  தந்திரமாக "இந்த ஆணையத்தை இந்தியா அனுமதித்தால், தானும் அனுமதிப்பதாகக்” கூறியது. இதைக் கண்டிக்கவேண்டிய முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசுக் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி இந்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து அறிக்கை வெளியிட்டார். இதன்மூலம் காசுமீர் மக்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை ஒடுக்குவதில் பா.ச.க.விற்கும், காங்கிரசுக்கும் ஒரே நிலைப்பாடு என்பது அப்பட்டமாக வெளிப்பட்டது.   
ஆனால், மாநில மக்களின் மொழி மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட பல்வேறு மாநிலக் கட்சிகளும் பல கால கட்டங்களில் அகில இந்தியக் கட்சிகளான காங்கிரசு, பா.ச.க. ஆகியவற்றோடு கூட்டணி வைத்துக்கொள்ளவும், நடுவண் அரசில் பங்கேற்கவும் தயங்கவில்லை. சிலந்திப் பின்னும் வலையில் சிறு பூச்சிகள் சிக்கி சிலந்திக்கு இரையாவதைப் போல, மாநிலக் கட்சிகள் பலவும் அகில இந்தியக் கட்சிகளின் பிடியில் சிக்கிச் சீரழிந்து வருகின்றன.
 அண்மையில் பா.ச.க. ஆட்சிக்கு எதிராக வலிமையான கூட்டணி அமைப்பதற்காக தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைத்த கூட்டத்திற்கு காங்கிரசுத் தலைவர் இராகுல்காந்தி தலைமை  தாங்கியிருக்கிறார். தி.மு.க., திரிணமுல் காங்கிரசு, தேசிய மாநாட்டுக் கட்சி போன்ற பல்வேறு மாநிலக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு பா.ச.க. எதிர்ப்புக் கூட்டணியை அமைத்துள்ளனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் பா.ச.க. வெற்றி பெறுவதற்கும், மோடி தலைமையமைச்சராவதற்கும் இதே மாநிலக் கட்சிகள்தான் துணை நின்றன. இந்த கட்சிகளின் துணையில்லாமல் பா.ச.க. வெற்றி பெற்றிருக்கவும் முடியாது, மோடி  தலைமையமைச்சராயிருக்கவும் முடியாது.
 இப்போது அதே கட்சிகள் மோடியின் ஆட்சியில் மதவெறி கட்டவிழ்த்துவிடப்பட்டதாகவும், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோர் பசு பாதுகாப்பு என்ற பெயரால் வேட்டையாடப் படுவதாகவும், பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி போன்றவையின் காரணமாக பொருளாதாரம் சரிந்துவிட்டதாகவும், மத்திய அமைப்புகளான சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளின் சுயாதிக்க நிலை பறிக்கப்படுவதாகவும், ரபேல் விமான ஊழல் போன்ற பெரும் ஊழல்கள் தலைவிரித்தாடுவதாகவும் குற்றம் சாட்டுகின்றன. ஆகவே, மோடியின் ஆட்சியை அகற்றிவிட்டு இராகுலின் ஆட்சியைக் கொண்டுவருவதற்குத் துணை நிற்கின்றன.
தமிழ்நாட்டில் இடதுசாரி கட்சிகளை தவிர மற்றும் உள்ள பல மாநிலக் கட்சிகளும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ச.க. வெற்றி பெறுவதற்குத் துணை நின்ற கட்சிகள் தான். குறிப்பாக, திராவிட கட்சிகள் தங்களுக்கிடையேயுள்ள பகைமையின் காரணமாக மாறி மாறி காங்கிரசுக்கும், பா.ச.க.வுக்கும் பல்லக்குத் தூக்கி தமிழ்நாட்டில் அவர்கள் சில இடங்களில் வெற்றி பெறுவதற்கு துணை நின்றவைதான், தில்லி ஆட்சியிலும் பங்கு பெறுவதற்கு  இக்கட்சிகள் ஒருபோதும்  தயங்கியதில்லை. நடுவண் அரசில்  அமைச்சர் பதவிகளைப் பெற்ற இந்த கட்சிகள் அந்த பதவிகளைப் பயன்படுத்தி ஈழத் தமிழர் பிரச்சனை, காவிரிப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை போன்றவற்றைத் தீர்ப்பதற்கு ஏதாவது செய்ய முடிந்ததா என்றால், முடியவில்லை என்பதுதான் பதில். பின்னர் எதற்காக கூட்டு சேர்ந்தார்கள்? எதற்காகப் பதவிகளைப் பெற்றார்கள்?
தொலைநோக்குப் பார்வையோ அல்லது மாநில மக்களின் உரிமைகளைக் காக்கவேண்டும் என்ற நோக்கமோ, கொள்கை, கோட்பாடு போன்றவையோ அறவே இல்லாமல் பல மாநிலக் கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டும்,  தங்களின்  ஊழல் ஆட்சிகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடனும், பா.ச.க.வுடன் கூட்டு சேர்ந்ததின் விளைவாக ஏற்பட்ட அழிவுகளைச் சுட்டிக்காட்டி இப்போது அதற்கெதிராக காங்கிரசு தலைமையில் புதிய கூட்டணி அமைப்பது சூடான இரும்புச் சட்டியிலிருந்து தப்புவதற்காக பற்றி எரியும் அடுப்பில் குதிப்பதற்கு ஒப்பாகும்.
அயோத்தி இராமர் கோயில் பிரச்சனை உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. ஆனால், இந்துத்துவா அமைப்புகள் இப்போதே இராமர் கோயிலைக் கட்டுவதற்கான சட்டம் கொண்டுவரப்படவேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். அரசியல் அமைப்புச் சட்டத்தையோ, உச்சநீதிமன்றத்தையோ அவர்கள் மதிக்கத் தயாராக இல்லை. இராமரின் பெயரால் நாட்டில் மதகலவரத்தை மூட்டி பிண மலைகளைக் குவிக்கத் துடிக்கிறார்கள்.
இதற்கெதிராக உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கூட்டணிக்குத் தலைமை தாங்கும் காங்கிரசு இந்தப் பிரச்சனையில் எத்தகைய நிலைப்பாடு கொண்டுள்ளது? 1989ஆம் ஆண்டு தனது தேர்தல் பிரச்சாரத்தை அன்றைய காங்கிரசுத் தலைவர் இராசீவ்காந்தி அயோத்தியிலிருந்து தொடங்கும்போது "இராமரின் புனித மண்ணிலிருந்து புறப்படுகிறேன்” என்று கூறிவிட்டுதான் பயணத்தைத் தொடங்கினார் என்பது மறைக்க முடியாத வரலாற்று உண்மையாகும்.
பா.ச.க. ஆட்சியின் இந்துத்துவா எதேச்சதிகாரப் போக்குக்கு எதிராக சனநாயகக் கோட்பாடுகளை காப்பாற்றுவதற்குப் போராடவேண்டிய காங்கிரசுக் கட்சி, அதற்கு  நேர் மாறாக இந்துத்துவா பாதையிலேயே நடைபோட தொடங்கியிருக்கிறது. காங்கிரசுத் தலைவர் இராகுல்காந்தி தேர்தல் பரப்புரையின்போது கோயில் கோயிலாகப் போகிறார். தனது குலம், கோத்திரம் ஆகியவற்றைக் கூறுகிறார். தனது மார்பில் பூணூல் அணிந்து கொண்டு தன்னை காசுமீர் பார்ப்பனர் என அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
அண்மையில் நடந்து முடிந்த 5 மாநிலங்களின் தேர்தலுக்காக விடுக்கப்பட்ட காங்கிரசு அறிக்கையில் "ஒவ்வொரு கிராமத்திலும் கோசாலைகள் அமைக்கப்படும், பசுவின் கோமியம் மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்படும், ஆன்மீகத்திற்காகத்  தனித்துறை உருவாக்கப்படும், மாநிலமெங்கும் சமற்கிருதப் பள்ளிகள் அமைக்கப்படும்” போன்ற வாக்குறுதிகளை வாரி வழங்கியிருக்கிறது. இதன்மூலம் இந்து அடிப்படைவாதத்தை நிலைநிறுத்துவதில் பா.ச.க.வுடன் போட்டிபோட காங்கிரசுக் கட்சி முனைந்துள்ளது.
ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதிக்கப்படவேண்டுமென உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்புக்கெதிராக கேரளத்தில் இந்துத்துவாதிகள் வன்முறை போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அக்கோயிலுக்கு வரும் பெண்களை விரட்டியடிக்கின்றனர். இதைக் கண்டிக்க வேண்டிய காங்கிரசுக் கட்சி பா.ச.க.வுடன்  போட்டிப்போட்டுக்கொண்டு பெண்களுக்கெதிராகப் போராடுகிறது.  இதன்மூலம் மறைமுகமாக பா.ச.க.வின் பெண்ணடிமைத்தனக் கோட்பாட்டுக்குத் துணைபுரிகிறது.
பா.ச.க. தீவிர இந்துத்துவா பேசுகிறது. காங்கிரசு மிதவாத இந்துத்துவா பேசுகிறது. இரு கட்சிகளிடையே உள்ள வேறுபாடு இது ஒன்றுதான். இதற்கெதிராக ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கவேண்டிய மாநிலக் கட்சிகள் மாறிமாறி மேற்கண்ட இரு கட்சிகளுக்கும் பின்னே ஓடுவது ஏன்?
மாநிலங்களின் தன்னாட்சி உரிமையில் நிலைநிறுத்துவதில் உறுதிப்பாடு இருக்கவேண்டும். மத்தியில் அதிகாரக் குவிப்பை நோக்கமாகக் கொண்ட கட்சிகளுடனும், மதவாத கட்சிகளுடனும் ஒருபோதும் கூட்டு சேர்வதில்லை என்ற கோட்பாட்டில் என்றும் மாறாத நிலைப்பாடு இருக்கவேண்டும். மேற்கண்ட முடிவுகளுடன் மாநிலக் கட்சிகள் தங்களுக்குள் கூட்டணியை அமைத்துக்கொண்டு இயங்கினால் அகில இந்தியக் கட்சிகளைத் தோற்கடிக்க முடியும் என்பதை தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா இராஷ்டிர சமிதி கட்சியும், மிசோராம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணிக் கட்சியும், அண்மையில் நடந்த சட்டமன்றத்  தேர்தலில் பெற்ற வெற்றிகள் எடுத்துக்காட்டியுள்ளன.
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரசுக் கட்சி, தெலுங்குதேசம் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. பா.ச.க. கட்சியும் கூட்டணி அமைத்துக்கொண்டு போட்டியிட்டது. இந்த இரண்டு வலிமையான கூட்டணிகளையும், தெலுங்கானா இராஷ்டிர சமிதி தோற்கடித்து அம்மாநில சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் 88 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. காங்கிரசுக் கூட்டணி 21 இடங்களையே பெற முடிந்திருக்கிறது. அதிகார பலம், பண பலம் ஆகியவற்றைக் கொண்ட பா.ச.க.  கூட்டணி ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்திருக்கிறது. முசுலிம் கட்சி 7 இடங்களிலும், உதிரிகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மிசோராம் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரசுக் கட்சியை வீழ்த்தி மிசோ தேசிய முன்னணி அம்மாநில சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 40 இடங்களில் 26 இடங்களை கைப்பற்றியுள்ளது.  காங்கிரசுக் கட்சி வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்திருக்கிறது. இங்கும் பா.ச.க  ஒரேயொரு இடத்தைப் பெற்றுள்ளது. உதிரிகள் 8 இடங்களை பெற்றுள்ளனர். இந்த உண்மையை அனைத்து மாநிலக் கட்சிகளும் உணரவேண்டும்.
"மாநிலங்களுக்குத் தன்னாட்சி உரிமை, மத்தியில் உண்மையான கூட்டாட்சி” என்ற கோட்பாட்டை நிலைநிறுத்துவதற்கு மாநிலக் கட்சிகள் ஒன்றுபட்டுப் போராட முன் வரவேண்டும். அப்போதுதான் மாநில மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியும். மாநிலங்களுக்கு முழுமையான உரிமையும், அதிகாரமும்  அளிக்கப்படவேண்டும். நடுவண் அரசுக்கு வெளியுறவு, போக்குவரத்து, பாதுகாப்பு போன்ற குறிப்பிட்ட சில அதிகாரங்கள் மட்டுமே இருக்கவேண்டும். இதற்கேற்ற வகையில் புதிய அரசியல் யாப்புச் சட்டம் வகுக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு மாநிலக் கட்சிகள் கூட்டணி அமைப்பதின் மூலமே அகில இந்தியக் கட்சிகளின் எதேச்சதிகாரத்தையும், மதவெறி பாசிசத்தையும் ஒழிக்க முடியும்.  கொள்கை ரீதியான மாற்று  அணி அமைக்கவும் வெற்றிபெறவும் முடியும்.
2018ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் ஒரு அப்பட்டமான உண்மையை உணர்த்தியிருக்கின்றன. காங்கிரசு & பா.ச.க. ஆகிய இரு அகில இந்திய கட்சிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியின் முடிவே இத்தேர்தல் என்று கருதினால் அது தவறானது. மாநிலக் கட்சிகளின் உதவியின்றி எந்த அகில இந்தியக் கட்சியும் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்ற உண்மையை மட்டுமல்ல, அகில இந்தியக் கட்சிகளை மாநிலக் கட்சிகளால் வீழ்த்தவும் முடியும் என்ற உண்மையையும் இத்தேர்தல் உணர்த்தியிருக்கிறது. எனவே 2019ஆம் ஆண்டில் நடைபெற விருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக உருவாக்கும் தேர்தலாக அமையவிருக்கிறது. மாநிலக் கட்சிகள் தொலைநோக்குப் பார்வையுடனும், கொள்கை உறுதியுடனும் இயங்கினால் மேற்கண்ட கோட்பாட்டிலும், தேர்தலிலும் வெற்றிபெற முடியும்.
- சிந்தனையாளன்  - பொங்கல் மலர் - 2019