எழுவருக்கு எதிராக சாய்ந்த துலாக்கோலை நிமிர்த்துக - பழ. நெடுமாறன் அச்சிடுக
வியாழக்கிழமை, 16 மே 2019 12:17

2004-ஆம் ஆண்டில் குசராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு அருகே இஸ்ரத் ஜகான் என்னும் 19 வயது இளம்பெண் உட்பட நான்கு பேர் காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்கள் நால்வரும் இசுலாமிய தீவிரவாதிகள் என்றும் அப்போதைய குசராத் முதலமைச்சர் மோடியை கொலை செய்யும் திட்டத்துடன் வந்துள்ளனர் என்றும் காவல்துறை குற்றம் சாட்டியது.
சுட்டுக்கொல்லப்பட்ட இஸ்ரத் ஜகானின் தாயார் தன் மகளின் கொலை குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என குசராத் உயர் நீதிமன்றத்தில் 2004 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் மனுத் தாக்கல் செய்தார். நீண்ட நெடிய சட்டப்போராட்டத்திற்குப் பிறகு 2009 ஆம் ஆண்டு ஆகஸ்டு 13 ஆம் நாளில் மூவர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து இக்கொலை குறித்து விசாரணை நடத்துமாறு உயர்நீதிமன்றம் ஆணைப் பிறப்பித்தது.
அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விசாரணைக் குழு 248 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் அளித்தது அதில் மோதல் சாவு என்பது பொய்யானது. அந்த நான்கு பேரும் அகமதாபாத் நகரின் குற்றப்பிரிவைச் சேர்ந்த காவல் துறையினரால் படுகொலைச் செய்யப்பட்டனர் என்ற உண்மையினை விசாரணைக்குழு தனது அறிக்கையில் ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியது.
ஆனால் குசராத் மாநில அரசு இந்த அறிக்கையை ஏற்க மறுத்தது. விசாரணை வரம்பினை மீறி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது எனக் குற்றம் சாட்டி உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெற்றது. இதற்கு எதிராக விசாரணைக்குழுவின் சார்பாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
2013-ஆம் ஆண்டில் டிசம்பர் முதல் நாளில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் "மோதல் சாவு" என்ற குற்றச்சாட்டுப் பொய்யானது தொடர்புடைய அதிகாரிகள் அனைவரின் மீதும் புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறும், மேலும் இந்த விசாரணையை சி.பி.ஐ மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆணைப் பிறப்பித்தது. இதற்கிணங்க குசராத் காவல் துறையின் தலைவராக இருந்த வன்சாரா உட்பட உயர் அதிகாரிகள் பலர் மீதும் மத்திய உளவுத்துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் மீதும் கொலைக் குற்றம் சாட்டப்பெற்றது. ஆனால் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடர இந்திய அரசு அனுமதிக்கவில்லை எனவே மாநில காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மட்டும் கைது செய்யப்பட்டனர்.
2016-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு குறித்து பொதுநல மனு ஒன்று அளிக்கப்பெற்றது. கிடைத்துள்ள புதிய ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள உயர் அதிகாரிகள் மீதுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டது. ஆனால் இம்மனுவினை உச்சநீதிமன்றம் மார்ச் 13-ஆம் தேதியன்று தள்ளுபடி செய்தது.
சிறையில் இருந்த போது உயர் அதிகாரியான வன்சரா பதவியிலிருந்து விலகுவதாக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் "அரசு தங்களுக்குப் பெருந் துரோகம் இழைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் அரசின் கொள்கையைத் தான் செயல்படுத்தியதாகவும் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் அரசுக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்ட போதெல்லாம் அதைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் ஆனால் தங்களைப் பாதுகாக்க இந்த அரசு முன்வரவில்லை" எனவும் குற்றம் சாட்டினார். வன்சராவின் பதவி விலகல் கடிதம் அரசை அதிர்ச்சிக் குள்ளாக்கியது.
எனவே குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகளைப் பாதுகாக்க குசராத் அரசு பதட்டத்துடன் முயற்சி செய்தது அதிகாரிகள் அனைவரும் பிணையில் விடுதலைப்பெற்று வெளியே வந்து விட்டனர். இவர்களை பிணையில் விடுதலை செய்யக் கூடாது என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கடந்த 2-5-19-ஆம் நாளில் குசராத் அரசு இந்த வழக்கை நடத்துவதற்கு அனுமதி அளிக்க மறுக்கும் மனு ஒன்றினை சி.பி.ஐ நீதிமன்றத்தில் அளித்தது. இதன் விளைவாக வன்சரா மற்றும் அதிகாரிகள் மேலுள்ள  வழக்குகளும் கைவிடப்பட்டன.
உயர்நீதிமன்றம் தலையிட்டுக் கொலைக் குற்றம் சாட்டப்பெற்ற அதிகாரிகள் அனைவர் மீதும் சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி அக்குழு அளித்த அறிக்கையின்படி அந்த அதிகாரிகளின் மீது வழக்கு தொடுக்கும்படி சி.பி.ஐக்கு ஆணையிட்டு அவ்வாறே வழக்குத் தொடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கும் கட்டத்தில் குசராத் அரசு வழக்கு தொடுக்க அனுமதி மறுப்பதற்கு அதிகாரம் உண்டா என்ற அடிப்படை கேள்வி எழுந்துள்ளது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிட்டுப் பிறப்பித்த ஆணையை அப்பட்டமாக மீறும் வகையிலும் குசராத் அரசு செயல்பட்டுள்ளது. குற்றம் இழைத்த அதிகாரிகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இந்தப் போக்கு இந்திய அரசியல் சட்டத்தையும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றின்  மாண்பினையும் சீர்குலைக்கும் திட்டமி்ட்டப் போக்காகும்.
கடுமையான குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு சி.பி.ஐ உள்பட யாருக்கும் அதிகாரம் கிடையாது. மாநில அரசின் அனுமதியைப்பெற வேண்டும் என்கிற வாதத்தை குசராத் அரசு முன் வைத்துள்ளது.  அதற்கு இந்திய அரசும் துணை நிற்கிறது.
 சி.பி.ஐ தொடுத்த வழக்கில் தண்டிக்கப்பட்டவரை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்குக் கிடையாது. மத்திய அரசுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு எனவும் இந்திய அரசு கூறுகிறது. ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பெற்று 27 ஆண்டு காலமாக சிறையில் வாடும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையார் 2014-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் முன்மொழிந்து அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒரே மனதாக நிறைவேற்றி இந்திய அரசுக்கு அனுப்பினார்.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்தியரசின் சார்பிலும் மேலும் சிலரின் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த  உச்சநீதிமன்றம் 6-9-2018-ஆம் அன்று 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு எடுக்கலாம் என்ற தீர்ப்பை வழங்கியது. அதன் அடிப்படையில் 9-9-2018-இல் தமிழக அமைச்சரவை கூடி 7 பேரையும் விடுதலை செய்வதற்கு முடிவு எடுத்து அதை தமிழக ஆளுநருக்குப் பரிந்துரைத்து அனுப்பியது. அரசியல் சட்டப்படி முடிவு எடுக்கவேண்டிய ஆளுநர் கடந்த 9 காலமாக எத்தகைய முடிவும் எடுக்கவில்லை. மத்திய உள்துறையின் அறிவுரைக்காக அவர் காத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. அரசியல் சட்டப்படி இது தவறாகும்.
ஏற்கெனவே 1999-ஆம் ஆண்டு மேற்கண்ட 7 பேரில் நால்வருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிராக அளிக்கப்பட்ட கருணை மனுக்களை அப்போதைய தமிழக ஆளுநர் ஏற்க மறுத்து தண்டனையை உறுதிச்செய்தார். இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில்  நால்வர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 25-11-1999-இல் உயர்நீதிமன்றம் அளித்தத் "தீர்ப்பில் மாநில அமைச்சரவையில் ஆலோசனையின் பேரிலும் மற்றும் அதற்கு இணங்கவும் ஆளுநர் செயல்பட வேண்டும் தவிர, முடிவு எடுப்பது மாநில அரசின் பொறுப்பாகும். ஆளுநர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அரசியல் சட்ட 161-ஆவது ஆம் பிரிவின்படி அமைச்சரவை செயற்பட்டு ஆளுநருக்கு வழங்கும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவராவார்" என திட்டவட்டமான தெளிவான தீர்பினை அளித்தது. புரட்சிகரமான இந்த தீர்ப்புக்கு பிறகே இந்தியா முழுவதிலும் மாநில அமைச்சரவைகளும், மத்திய அமைச்சரவையும் கருணை மனுக்களின் மீது அளிக்கும் பரிந்துரைகளை ஆளுநர்களும், குடியரசு தலைவர்களும் ஏற்றுச் செயல்பட வேண்டிய நிலை உருவானது.
மிகக் கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்க வேண்டுமானால் மாநில அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என குசராத் அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டை ஆதரிக்கும் இந்திய அரசு தமிழக அரசு 7 பேரை விடுதலை செய்ய முடிவு செய்த பிறகு அதை ஏற்பதற்குத் தயங்குவது ஏன்? குசராத் அரசின்  முடிவு அநீதிக்குத் துணைபோவதாகும். ஆனால் தமிழக அரசின் முடிவு இயற்கை நீதியை மட்டுமல்ல. அரசியல் சட்டத்தையும் நிலை நிறுத்துவதாகும். இந்த வேறுபாட்டினை உணர்ந்து துலாக்கோல் போல் நேர்மையுடன் செயல்படவேண்டிய இந்திய அரசும், அதன் பிரதிநிதியுமான ஆளுநரும் ஒரு புறமாக சாய்ந்து நிற்பது ஏன்? உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்புக்குப் பிறகாவது சாய்ந்துள்ள துலாக்கோலை நிமிர்த்த ஆளுநரும் இந்திய அரசும் முன்வரவேண்டும்.
- நன்றி - தினமணி.