தமிழர் வரலாற்று ஆய்வுக்கு மிகுந்த முதன்மை அளிக்கப்படவேண்டும் - த. ஸ்டாலின் குணசேகரன் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019 15:08

பேராசிரியர் கே. ராஜன் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினர் 2009ஆம் ஆண்டு "தமிழக தொல்லாய்வு அட்டவணை" என்ற நூலினை வெளியிட்டுள்ளனர்.

அதில் தமிழ்நாட்டில் 2000 இடங்கள் தொல்லாய்விற்கான  இடங்களென்று மாவட்ட வாரியாகத் துல்லியமான விபரங்களுடன் வெளியிட்டுள்ளனர்.
இந்நூல் வெளியான பிறகு இடைப்பட்ட பத்தாண்டுகளில் மேலும் 500 தொல்லியல் ஆய்வுக்கான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழகத்திலுள்ள 2500 தொல்லியல் ஆய்விற்கான இடங்களில் இதுவரை 100 இடங்களில் மட்டும்தான் ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.  அப்படியானால் தமிழகத்தில் மொத்தமுள்ள தொல்லியல் ஆய்வுக்காகத் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் 4% மட்டுமே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 100 இடங்களில் நடைபெற்ற ஆய்வுகளில் மிகக் குறைவான அளவிற்கே முழுமையான ஆய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன.  இந்தியாவில் இதுவரை சுமார் 1லட்சத்து 50 ஆயிரம் கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் தமிழ்நாட்டில் மட்டுமே 60,000 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் 30,000 கல்வெட்டுகள் மட்டுமே படிக்கப்பட்டு, பதிப்பிக்கப் பட்டுள்ளன. மீதமுள்ள கல்வெட்டுகள் இதுவரை ஆய்விற்கே எடுத்துக் கொள்ளப்படாமல் உள்ளன.
தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 600 செப்பேடுகளில் பாதிக்கும் மேல் பதிப்பிக்கப்படாமல் இருக்கின்றன.
நடைபெற்றுள்ள தொல்லியல் ஆய்வுகளில் குறைவான அளவிற்கே முடிவான முழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே தமிழுக்கு உலகளவில் இத்தனை பெருமைகளும், அங்கீாரமும் கிடைத்திருக்கிற தென்றால், வாய்ப்பிருக்கிற எல்லா ஆய்வுகளையும் முழுமையாக  முடிக்கப் பெற்றால் இன்னும் எத்தனை சிறப்புகள் தமிழுக்கும் தமிழர்க்கும் கிடைக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.  தமிழர்களாகிய நமக்கு வரலாறு இருக்கிற அளவுக்கு வரலாற்று உணர்வு இல்லாமலிருக்கிறது.