வேளாண்மை - தொழில் - புதிய சட்டங்கள் உழவர்கள் உரிமைகளை இழப்பார்கள் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுவார்கள் - பழ. நெடுமாறன் அச்சிடுக
திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2020 15:18

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்"
இந்த குறள் எழுதப்பட்ட காலத்தில் மக்கள் உழவர்களை எந்தளவுக்கு மதித்துப் போற்றினார்கள் என்பதை வள்ளுவர் எடுத்துக்காட்டியுள்ளார். ஆனால், அதற்கு நேர் எதிர்மாறான சூழ்நிலை காலப்போக்கில் உருவாகி விட்டது.

உழுதவர்களுக்கே சொந்தமாக இருந்த நிலம் என்பது மாறி நிலக்கிழாரியம் சிறுகச் சிறுக உருவாகி நாளடைவில் நிலத்தில் இறங்கிப் பாடுபட்ட உழவர்கள் நிலமற்றவர்களாகி நிலக்கிழார்களின் தயவில் வாழவேண்டியவர்களானார்கள்.  
சிறுமீன்களை பெருமீன்கள் விழுங்கி வாழ்வதைப் போல சிறு நிலக்கிழார்களை விழுங்க பெரு நிலக்கிழார்கள் தோன்றினார்கள். அவர்களே பிற்காலத்தில் சமீன்தார்களாக, சிற்றரசர்களாக, பேரரசர்களாக உருவெடுத்தார்கள்.   மன்னராட்சிக் கொடுமைகளுக்கெதிராக உழவர்களும், உழைக்கும் மக்களும் ஒன்றுதிரண்டு போராடினார்கள். பிரெஞ்சுப் புரட்சி, ருசியப் புரட்சி ஆகியவை இப்படித்தான் வெடித்தன; மன்னராட்சிகளை வீழ்த்தின. மக்களாட்சி முறைகள் தோன்றின.
அடுத்தக் கட்டத்தில் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை வென்றடக்கி ஐரோப்பிய காலனிய அரசுகள் தோன்றின. அந்நிய ஆட்சிகளுக்கெதிராக  நீண்ட நெடியப் போராட்டத்தில் அடிமைப்பட்ட மக்கள் ஈடுபட்டு இறுதியில் தங்களின் தடைகளை உடைத்துச் சுக்குநூறாக்கி விடுதலைக் கொடியை உயர்த்தினர். விடுதலைப் பெற்ற நாடுகளில் காலனிவாதிகள் விட்டுச் சென்ற சிற்றரசர்கள், சமீன்தார்கள், இனாம்தார்கள் போன்று உழவர்களை கொத்தடிமைகளாக்கி அவர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்து வாழ்ந்தவர்களுக்கெதிராகவும் மக்கள் போராடினர்.
இந்தியாவெங்கும் நடைபெற்ற உழவர் போராட்டங்களின் விளைவாக மேற்கண்டவர்களின் ஆதிக்கப் பிடி தகர்க்கப்பட்டு உழவர்கள் விடுதலைப் பெற்றனர். சமீன்தாரி, இனாம்தாரி ஒழிப்புச் சட்டங்களும், உச்சவரம்புச் சட்டங்களும் கொண்டுவரப்பட்டு உழவர்கள் ஓரளவுக்குத் தலைநிமிர்ந்தனர். ஆனாலும், புதியவகை சுரண்டல்காரர்கள் தோன்றினார்கள். அரும்பாடுபட்டு உழவர்கள் உழைத்து உருவாக்கிய தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை விற்பனை செய்ய மண்டி வர்க்கம் தோன்றி வளர்ந்து பெருகி தனது ஆயிரமாயிரம் கரங்களால் உழவர்களின் உழைப்பைச் சுரண்டியது.
சிறிய தொழில் செய்வோர்கூட தங்களின் உற்பத்திப் பொருளுக்குரிய விலையை தாங்களே முடிவு செய்கிறார்கள். எடுத்துக்காட்டாக, பொம்மை செய்பவர்கள் அதற்குரிய விலையை முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவர்களாகத் திகழ்கிறார்கள். ஆனால், உழவனின் உற்பத்திப் பொருளுக்கு உரிய விலையை முடிவு செய்யும் அதிகாரம் அவனிடம் இல்லை. மண்டிக்காரர்களிடம் சென்று தங்களின் உற்பத்திப் பொருளை ஒப்படைத்துவிட்டு, அவர் தரும் விலையை மட்டுமே பெற்றுக்கொண்டு திரும்பவேண்டும். அதுவும் உடனடியாகக் கிடைக்காது. சில தவணைகளாகக் கிடைக்கும். இதற்கிடையே முளைத்தெழுந்த தரகர்களுக்கும் உழவர்கள் தாங்கள் பெறும் பணத்தில் ஒரு பங்கினைக் கொட்டி அழவேண்டும்; வேறு வழியில்லை.
இந்த இழிநிலையை மாற்றுவதற்கு உழவர்கள் சங்கங்கள் அமைத்துப் போராடினார்கள். அவற்றின் விளைவாக, உழவர்களையே உறுப்பினர் களாகக் கொண்ட கூட்டுறவு விற்பனை அமைப்புகள் சட்டபூர்வமாக உருவாக்கப்பட்டன. ஆனால், இவற்றையும் அரசியல்வாதிகள் கைப்பற்றினர். மண்டிக்காரர்களிடமிருந்து மீண்ட உழவர்கள் அரசியல் தரகர்கள் பிடியில் சிக்கித் தவித்தார்கள். இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் மக்களில்      ஏறத்தாழ பாதிபேர் வேளாண்மையைத் தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பவர்கள். ஆனால், இந்தியாவின் தேசிய வருமானத்தில் 15% மட்டுமே இவர்களுக்குக் கிடைக்கிறது. தங்களின் நிலம், உழைப்பு, முதலீடு ஆகியவற்றின்மீது முழு உரிமையும் தங்களுக்கு இருக்கவேண்டும் என்று உழவர்கள் கருதுவதில் தவறு இருக்க முடியாது. வேளாண்மையைத் தவிர பிற தொழில்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் தொழில், அதில் அவர்கள் செய்த முதலீடு இவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் அவர்களுக்கே சொந்தமாக இருக்கிறது. ஆனால், உழவர்களுக்கு மட்டும் நேர் மாறாக அமைந்திருக்கிறது. பிற தொழில்களில் ஈடுபட்டு இருப்பவர்கள் வங்கிகள் மூலமோ அல்லது பிற நிதி அமைப்புகள் மூலமோ, தனியார் மூலமோ எளிதாகக் கடன்பெற்று தங்களது தொழிலைப் பெருக்கிக் கொள்ள முடிகிறது. ஆனால், வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மட்டும் கடன்பெறுவது கடினமான ஒன்றாக அமைந்துள்ளது. பிற தொழில்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தங்களது உற்பத்திப் பொருட்களை விற்பதற்குரிய சந்தை திறந்து கிடக்கிறது. ஆனால், உழவர்களுக்கு அத்தகைய திறந்த சந்தை வசதி அறவே இல்லை.
உழவர்கள் உற்பத்தி செய்யும் கோதுமை, அரிசி போன்றவற்றில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே மத்திய&மாநில அரசுகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இவற்றிற்குரிய விலையை அரசே முடிவு செய்கிறது. எஞ்சியுள்ள மூன்றில் இரண்டு பங்கு தானியங்களை வணிகர்கள் வெளிச்சந்தையில்  விற்றுத்தீரவேண்டிய கட்டாயம்  உள்ளது.  கடன் வாங்கியும், வேறு பலவகையிலும் பல துன்பங்களுக்குள்ளாகி உழவர்கள் பாடுபட்டு உற்பத்தி செய்த தானியங்களை அரசு முடிவு செய்த விலைக்கும் குறைவாக விற்கவேண்டிய நிலையை மண்டிக்காரர்களும், தரகர்களும், அரசியல்வாதிகளும் உருவாக்குகிறார்கள்.
"காடு  விளைஞ்சு  என்ன?  மச்சான்
கையும் காலும்தானே மிச்சம்"
என கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடியதற்கு ஏற்ப இரங்கத்தக்க நிலைக்கு உழவர்கள் ஆளாக்கப்படுகிறார்கள்.
உலகெங்கும் உற்பத்தி செய்யப்படும் தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பால் போன்றவற்றில் இந்தியா பெரும்பங்கு வகிக்கிறது. இந்திய உழவர்கள் உழைப்பில் உருவாகும் உற்பத்தியில் 10%அளவு மட்டுமே மதிப்புக்கூட்டிய பொருள்களாக விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மற்றவை உற்பத்தி நிலையிலேயே விற்கவேண்டிய அவசியம்  உள்ளது. இவற்றில் பழங்களில் 34%, காய்கறியில் 44% வீணாகின்றன. இவ்வாறு வீணாகும் பொருட்களின் மதிப்பு ஆண்டுதோறும் 92,000கோடி ரூபாய்களுக்கு மேலாகும்.
உழவர்களின் இந்தத் துன்பத்தைப் போக்குவதாகக் கூறி நடுவண் அரசு உழவர்களின் உற்பத்தி மற்றும் விற்பனைச் சட்டம், உழவர்களின் பொருட்கள் உற்பத்தி விலை உறுதி, வேளாண்மைத் தொழில் பாதுகாப்புச் சட்டம், இன்றியமையாத பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களைக் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் அவசரக் கோலத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியிருக்கிறது. வாக்கெடுப்பு நடத்திதான் முடிவு செய்யவேண்டும் என்ற எதிர்க்கட்சியினரின் கோரிக்கையை மேலவைத் துணைத்தலைவர் ஏற்க மறுத்திருக்கிறார். ஒரேயொரு உறுப்பினர் எழுந்து வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தாலும், அதையேற்று வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்பதுதான் நாடாளுமன்ற  விதிமுறையாகும். ஆனால்,  இது அப்பட்டமாக மீறப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கொரோனா தொற்று நோய்க் காலகட்டத்தில் மேற்கண்ட மூன்றும் அவசரச் சட்டங்களாகப் பிறப்பிக்கப்பட்டன. அவற்றை நடைமுறையில் கொண்டுவருவதற்காகத்தான் நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டது. இதற்கு  நாடாளுமன்றக் குழு மற்றும் பல கட்சியினர், உழவர்கள் அமைப்புகள் போன்றவை கொடுத்த எந்தத் திருத்தத்தையும் அரசு ஏற்க மறுத்திருக்கிறது.  
தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்கள்
நாடெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 29 சட்டங்களுக்கு மாற்றாக மூன்று  தொழிலாளர் சட்டங்களை நடுவண் அரசு கொண்டுவந்து அவசரக் கோலத்தில் நிறைவேற்றியுள்ளது.
தொழிலாளர்களின் ஊதியம், வேலையின்போது பாதுகாப்பு மற்றும் உடல்நலம், சமூகப் பாதுகாப்பு, தொழில் உறவு ஆகியவைக் குறித்த இந்தச் சட்டங்களின் விளைவு பாரதூரமானதாகும். 1948ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டப்படி மின்சாரம் மூலம் இயக்கப்படும் தொழிற்சாலைகளில் 10தொழிலாளர்கள் இருந்தாலும், மின்சாரமின்றி இயக்கப்படும் தொழிற்சாலைகளில் 20 தொழிலாளர்கள் இருந்தாலும் அவை இச்சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இது மாற்றப்பட்டு மின்சாரம் மூலம் இயங்கும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின்  எண்ணிக்கை 20ஆகவும், மின்சாரம் இன்றி இயங்கும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கை  40ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இவற்றிற்குக் கீழான எண்ணிக்கையுள்ள தொழிற்சாலைகள் தொழிற் சட்டத்திலிருந்து விலக்கப்பட்டுவிடும்.
 1947ஆம் ஆண்டு தொழில் தகராறு சட்டத்தின்கீழ் 100 தொழிலாளர் களுக்கு மேல் வேலை பார்க்கும் தொழிற்சாலைகளில் வேலை குறைப்பு  செய்து தொழிலாளர்களை மீட்க வேண்டுமென்றால், அதற்கு அரசின் அனுமதி பெறவேண்டும். இந்தச் சட்டம் இப்போது. 300 தொழிலாளர்கள் வேலை பார்க்கும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. ஆக, இந்த எண்ணிக்கைக்கு குறைந்த எண்ணிக்கையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது. மேலும், அங்குள்ள தொழிலாளர்களுக்கு வேலைப் பாதுகாப்பு  மற்றும் உரிமைகள் எதுவும் கிடைக்காது.  
தற்போது தொழிலாளர்களின்  வேலை நிலைமை, தொழிற் சங்கம் அமைக்கும் உரிமை, தொழிலாளர்களை நீக்குதல், நிர்வாகத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு  தீர்வு காண  தொழில் நடுவர் மன்றங்கள் அமைக்கப்படவேண்டும் என்ற விதி புதிய சட்டத்தின்படி திருத்தப்படும். பொது நன்மைக்காக இந்த விதியிலிருந்து  தொழிற்சாலைகளுக்கு விலக்களிக்க  அரசுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.  இங்ஙனம் தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பறிக்கும் வகையில் புதிய தொழிற்  சட்டம்  அமைந்துள்ளது.
தொழிற்சாலைகளில் 20 எண்ணிக்கை வரை ஒப்பந்தத் தொழிலாளர்களாக நியமிக்கலாம் என்ற எண்ணிக்கை 50ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உடல்நலத்திற்கும், பாதுகாப்பிற்கும் அபாயம்  விளைவிக்கும் தொழில்களில் பெண்களை ஈடுபடுத்தக்கூடாது என்ற சட்டம் மாற்றப்பட்டுள்ளது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தால் பெண்களையும்  இத்தகைய தொழில்களில் ஈடுபடுத்தலாம் எனக்  கூறப்பட்டிருக்கிறது.
மேற்கண்ட மூன்று புதிய சட்டங்களின்  விளைவாக,  தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புத்  திட்டங்கள், பாதுகாப்பு  ஏற்பாடுகள், தொழில்புரியும் சூழ்நிலைமைகள், வேலை குறைப்பு நடவடிக்கைகளுக்கு அரசு அனுமதி  போன்ற தொழிலாளர்களின் நலன்களுக்கான அத்தனையும் பறிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று சட்டங்களும் 411 பிரிவுகளையும், 13 பகுதிகளையும் கொண்ட 350 பக்கங்களுக்கு மேல் அமைந்திருக்கின்றன. இச்சட்டங்களை முழுமையாகப் படித்துப்பார்க்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் போதுமான அவகாசம் அளிக்காமலும்,  நிலைக்குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தாமலும், அவசரக் கோலத்தில் விவாதிக்கப்பட்டு பலத்த எதிர்ப்புக்கிடையே   நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஏற்கெனவே, உத்தரப் பிரதேசம், குசராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் அவசரச் சட்டங்களின் மூலம் 8மணிநேர வேலை என்பதை 12 மணிநேரமாகக் கூட்டியுள்ளன. மிகைநேர வேலைக்கான இரட்டை ஊதியத்தையும் மறுத்துள்ளன. இம்மூன்று மாநிலங்களிலும் பா.ச.க. அரசுகளே ஆட்சியில் உள்ளன. நல்லவேளையாக உச்சநீதிமன்றம் தலையிட்டு  குசராத் மாநில அரசின் சட்டம் செல்லாது என அறிவித்துள்ளது. மற்ற மாநிலச் சட்டங்களுக்கும் இதே கதி ஏற்படும்.
மொத்தத்தில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை கசக்கிப் பிழியவும் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலை வாங்கவும் தொழிலதிபர்களுக்குப் புதிய சட்டங்கள் உதவுமே தவிர, தொழிலாளர்களுக்கு ஒருபோதும் பயன் அளிக்காது.