உ ழவர் போராட்டம் - பெட்டிச் செய்திகள் அச்சிடுக
வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2020 12:45

பெட்டிச் செய்தி-1
பத்திரிக்கைகளின் தகாத போக்கு
கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே இந்தியாவெங்கிலும்  உள்ள பெரும்பாலான காட்சி ஊடகங்களும், பத்திரிக்கைகளும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. பெரு நிறுவனங்களின் உரிமையாளர்களே இவற்றுக்கும் அதிபர்களாக விளங்கிய காரணத்தினால், இவற்றை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது மோடி அரசுக்கு எளிதாயிற்று.

எனவே, உழவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் செய்திகளும், கண்டன கட்டுரைகளும், தலையங்கங்களும் எழுதப்பட்டன. காலிசுதான் பயங்கரவாதிகளும், மாவோயிசுடுகளும், பிரிவினைவாதிகளும் உழவர் போராட்டத்தில் ஊடுருவி இருக்கிறார்கள் என்றும், வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கான பணம் வருகிறது என்றும், எதிர்க்கட்சிகளின் சதி என்றும் பலவாறாகப் பொய்யுரைகள் பரப்பப்பட்டன.
பெட்டிச் செய்தி-2
போராட்டத்தின் பிற விளைவுகள்
இப்போராட்டத்தின் விளைவாக அரியானா மாநிலத்தில் தில்லிக்கு அருகில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் குறிப்பாக, காலணி உற்பத்தி சாலைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இவற்றுக்குத் தேவையான கச்சாப் பொருட்களைக் கொண்டுவரவும், உற்பத்தியான பொருட்களை விற்பனைக்குக் கொண்டு செல்லவும் முடியாத நிலையில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன.
பஞ்சாபில் உள்ள மண்டி உரிமையாளர்கள் போராடும் உழவர் சங்கங்களுக்கு நிதி உதவி செய்வதாக எழுந்த ஐயப்பாட்டின் விளைவாக அம்மாநிலத்தில் உள்ள மண்டிகளில் வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டன. இவற்றுக்கு எதிராக மண்டிகள் தங்கள் கடைகளை மூடி போராட்டம் நடத்தி வருகின்றன.
போராடும் உழவர்களிடையே பிளவு ஏற்படுத்தவும், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள  உழவர்களை இப்போராட்டத்தில் பங்கேற்காமல் தடுக்கவும் நடுவண் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.  கரும்பு பயிரிடும் உழவர்களுக்கு ரூபாய் 500கோடி மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. நாடெங்கிலும் உள்ள 9கோடி உழவர்களுக்கு தலா ரூபாய் 2ஆயிரம் வீதம் 18ஆயிரம் கோடி ரூபாய்கள் வாஜ்பாய் பிறந்த தினத்தில் வழங்கப்படும் என தலைமையமைச்சர் மோடி அறிவித்துள்ளார்.
பெட்டிச் செய்தி-3
உலகத் தலையீடு
தில்லியில்  முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ்உழவர்கள் சனநாயக ரீதியில் அமைதியாகப் போராடும் உரிமை உண்டு” என ஐ.நா. பேரவையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெசின் அவர்களின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபானே டுஜாரிக் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.
கனடா நாட்டின் தலைமையமைச்சர் ஜஸ்டின் த்ருதோ போராடும் உழவர்களுக்கு ஆதரவுத் தெரிவித்துள்ள செய்தியை நியூயார்க் டைம்சு, பி.பி.சி. தொலைக்காட்சி போன்றவை முதன்மை கொடுத்து வெளியிட்டுள்ளன.
உழவர்கள் போராட்டம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேச்சு நடத்துமாறு பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அந்நாட்டின் 36 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.
தில்லியில் நடைபெற்றுவரும் உழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்க அரசு தலையிடவேண்டும் என வற்புறுத்தி,  அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 19பேர்  அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருக்குக்  கடிதம் எழுதி வற்புறுத்தியுள்ளனர்.  
 பெட்டிச் செய்தி-4
பதக்கங்கள் ஒப்படைப்பு
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், போராடும் உழவர்களுக்கு ஆதரவுத் தெரிவித்தும், தங்களுக்கு அளிக்கப்பட்ட தேசிய விளையாட்டு விருதுகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் வகையில் பேரணியாகச் சென்ற பஞ்சாபைச் சேர்ந்த 35 விளையாட்டு வீரர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
சாகித்ய அகாதமி விருதுகளை பெற்ற பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர்கள் தங்களுக்கு நடுவண் அரசு அளித்த விருதுகளை திரும்ப அளிப்பதாக அறிவித்துள்ளனர்.     
பஞ்சாப் மாநில சிறைத்துறையின் துணைத் தலைவராக உள்ள இலட்சுமிந்தர் சிங் சாகர் போராடும் உழவர்களுக்கு ஆதரவாகத் தனது பதவியிலிருந்து விலகுவதாக  அறிவித்துள்ளார்.
பெட்டிச் செய்தி-5
 முதல்வர்களை மதிக்காத குடியரசுத்  தலைவர்
தில்லியில் நடைபெறும் உழவர்களின் முற்றுகைப் போராட்டப் பிரச்சனையில்  தலையிடுமாறு இந்திய குடியரசுத் தலைவரை வேண்டிக்கொள்வதற்காக, அவரை சந்திக்க அனுமதி கேட்டுக் கடிதம் எழுதிய மாநில முதலமைச்சர்கள் பலருக்குக் குடியரசுத் தலைவர் இதுவரை  எவ்விதப் பதிலும் அளிக்கவில்லை.
பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், இராசசுதான் முதலமைச்சர் அசோக் கெலட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் எழுதிய கடிதங்களுக்கு இதுவரை குடியரசுத் தலைவர் பதில் அளிக்காதது மாநில முதல்வர்களை மட்டுமல்ல, அம்மாநிலங்களின் மக்களையும் அவமதிக்கும் போக்காகும். அதுமட்டுமல்ல, இதுவரை குடியரசுத் தலைவர்களாகப் பதவி வகித்தவர்கள் அனைவரும் தங்களைச் சந்திக்க மாநில முதலமைச்சர்களுக்கு முன்னுரிமை கொடுத்து மதிப்புக் காட்டினர். ஆனால், கட்சிமாறுபாடுகளுக்கப்பால் செயல்படவேண்டிய குடியரசுத் தலைவர், அதற்கு மாறாக நடப்பதென்பது அப்பதவியின் பெருமையை குறைத்துவிட்டது.
பெட்டிச் செய்தி-6
போர்க்களச் செய்தித் துளிகள்
* தில்லியில் நடைபெறும் உழவர்களின் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பல இலட்சக்கணக்கானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக சாலைகளிலேயே இலவய மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு   பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த  நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களும், செவிலியர்களும் தாமாகவே முன்வந்து தொண்டாற்றி வருகின்றனர். மருந்துகளையும் இலவசமாக வழங்குகின்றனர்.
* போராட்டக் களத்தில்  ஆங்காங்கே முடி திருத்தும் நிலையங்களும் அமைக்கப்பட்டு பல  நூறு  பேர் இரவும் பகலுமாக இத்தொழிலில் ஈடுபட்டுத் தொண்டாற்றி  வருகின்றனர்.
*   உடம்பில் ஊசி முனைகள் தைப்பது போன்ற கொடுமையான குளிரில் போராட்டம் நடைபெறுவதால் இரவு முழுவதும் அந்தப் போராளிகளுக்கு சூடான தேநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தேநீர் தயாரித்து வழங்கும் பணியில்  ஈடுபட்டிருக்கிறார்கள்.
* போராட்டக் களத்தில் உள்ள உழவர்களுக்கு உற்சாகமூட்டுவதற்காக நாடகக் கலைஞர்கள், இசைவாணர்கள், அங்காங்கே கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். ஒரு நிகழ்ச்சி நடத்த பல ஆயிரம் பெறும் இந்தக் கலைஞர்கள் தாமாகவே முன்வந்து இதனை ஒரு மாபெரும் தொண்டாகக் கருதி நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.
*   தாங்கள் பயணம் செய்துவந்த டிராக்டர்களின் மேலே கூடாரங்கள் அமைத்தும், டிராக்டர்களுக்கு அடியிலும் உழவர்கள் உறங்குகின்றனர். கடும் குளிர் இருப்பதால் அருகே கட்டைகளை கொளுத்திச் சூடேற்றுகின்றனர்.
* போராட்டக் களத்திற்கு லாரி லாரியாக தண்ணீர் கொண்டுவரப்பட்டு உழவர்கள் குளிக்கவும், குடிக்கவும் உதவி செய்ய தன்னார்வத் தொண்டர்கள் முன்வந்து அரும்பணி ஆற்றி வருகின்றனர்.