இட்லரின் இனவெறி இங்குமா? - பழ. நெடுமாறன் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2021 16:45

“இருமனம் ஒன்றி நடைபெறும் திருமணம் வாழ்க்கை நெடுகிலும் மணம் பரப்பி இன்பம் காண வழிவகுக்கும். உலகமெலாம் நாடு, மொழி, மதம் கடந்து மனம் ஒப்பியத் திருமணங்கள் நடைபெறுகின்றன.

அவற்றை வாழ்த்துவார் உண்டே தவிர, அவற்றைத் தடுப்பார் யாரும் இல்லை. ஆனால், உத்தரப்பிரதேசத்தில் மதம் கடந்து ஒருவனும், ஒருத்தியும் இணைவது சட்டத்திற்குப் புறம்பானதாகக் கருதப்பட்டு அவர்களைத் தண்டிக்கும் வகையிலான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.  குறிப்பாக, இந்து சமயத்தைச் சேர்ந்த ஒரு பெண், இசுலாம் சமயத்தைச் சேர்ந்த ஒரு ஆணை மணப்பது சட்டப்படிக் குற்றமாக்கப்பட்டுள்ளது. மதமாற்றத் தடைச் சட்டம் என்ற பெயரில் மறைமுகமாக இச்சட்டம் புகுத்தப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச அரசின் இச்சட்டத்தைப் பின்தொடர்ந்து மத்தியப் பிரதேசம், உத்ரகாண்ட் போன்ற மாநிலங்களிலும் இத்தகைய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பா.ச.க. ஆட்சி நடைபெறும் மற்ற மாநிலங்களிலும் இத்தகைய சட்டங்கள் கொண்டுவரப்படவிருக்கின்றன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இரு மனம் ஒப்பிய திருமணங்களைத் தடுக்கக் கூடாது என பிரம்ம சமாசம் வேண்டுகோள் விடுத்தபோது, அதை அவர்கள் ஏற்றனர். அதற்குப் பிறகு, விடுதலைப் பெற்ற இந்தியாவில் 1954ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட திருமணச் சிறப்புச் சட்டத்தில் மணமக்களின் மதங்கள் எவை என்பது குறிப்பிடப்படவேண்டும் என்ற பிரிவு நீக்கப்பட்டது.

பா.ச.க. ஆளும் மாநிலங்களில் ஏற்கெனவே ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதைத் தடுக்கும் சட்டம், மதமாற்றத் தடைச் சட்டம் ஆகியவை கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, முசுலீம்களுக்கு எதிராகவே இச்சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முசுலீம்கள் மட்டுமல்ல, மலைவாழ் மக்கள் மற்றும் கேரள மக்கள் போன்றவர்களெல்லாம் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். அவர்களின் அடிப்படை உரிமைகள் இத்தகைய சட்டங்களின் மூலம் பறிக்கப்படுகின்றன.

அரசியல் சட்டம் மக்களுக்கு அளித்துள்ள உரிமைகளும், சலுகைகளும் இதன்மூலம் பறிக்கப்படுகின்றன. தனிப்பட்டவர்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளை பறிப்பது சட்டத்திற்குப் புறம்பானது என 2017ஆம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்பை சிறிதளவுகூட மதிக்காமல் இத்தகைய சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.

அரசின் தலையீடின்றி ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் சமயத்தை கடைப்பிடிக்கும் உரிமையை அரசியல் சட்டம் வழங்கியுள்ளது. ஆனால், இத்தகைய புதிய சட்டங்களின்படி காவல்துறை, உள்ளூர் ஆட்சி நிர்வாகம், மதவெறி அமைப்புகள் ஆகியவை யாருடைய தனிப்பட்ட விருப்புரிமையைப் பறிக்க முடியும்.

1935ஆம் ஆண்டில் செர்மானிய நாட்டில் ஆரியர்களின் தூய தன்மையைக் காப்பாற்றுவதற்காக செர்மானியர் பிற இனத்தைச் சேர்ந்தவர்களை குறிப்பாக, யூதர்களை திருமணம் செய்துகொள்வது சட்டப்படி தடைசெய்யப்பட்டது. இதன் விளைவாக, இரண்டாம் உலகப்போரின்போது செர்மனியில் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த 50 இலக்கத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள். இட்லரின் இனவெறிக் கொள்கையின் விளைவாக மனித குலத்திற்கு எத்தகைய தீமைகள் நேர்ந்தது என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. அந்த கொடிய வரலாறு இந்தியாவிலும் நடைபெறவேண்டுமா? என்ற கேள்வி பேருருவம் எடுத்து அனைவரின் உள்ளங்களையும் குடைந்துகொண்டிருக்கிறது.