வடமொழியின் வல்லாதிக்கம் -பழ. நெடுமாறன் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2021 16:46

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணை இந்தியாவின் 22 அலுவல் மொழிகளைக் கொண்டுள்ளது. இச்சட்டத்தின் 29ஆவது பிரிவு நாட்டில் உள்ள மொழிகள் அத்தனையையும் பாதுகாக்கிறது.

ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய மொழியைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமையைப் பெற்றுள்ளனர் என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கு மாறாக இந்திய அரசின் பொதுச்சேவை ஒளிப்பரப்பு அமைப்பான “பிரச்சார் பாரதி” அண்மையில் விடுத்துள்ள சுற்றறிக்கை அமைந்துள்ளது. அனைத்து மொழிகளிலும் உள்ள தொலைக்காட்சிகள், வானொலிகள் ஆகியவற்றில் சமற்கிருத மொழியில் கட்டாயமாகச் செய்தி வாசிக்கப்படவேண்டும் என அறிவித்துள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசின் பொதிகை தொலைக்காட்சியும், வானொலி நிலையங்களும் இனிமேல் சமற்கிருதத்திலும் செய்தி அறிக்கைகளை ஒளி, ஒலி ஆகியவற்றின் மூலம் பரப்பவேண்டும். இது அப்பட்டமாக சமற்கிருத மொழியை அம்மொழிப் பேசாத மக்கள் அனைவரின் மீதும் திணிப்பதாகும்.

2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியா முழுவதிலும் உள்ள 130கோடி மக்களில் வெறும் 25,000பேர்களுக்குட்பட்டவர்கள் மட்டுமே சமற்கிருதம் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாவார்கள். இந்த விகிதாச்சாரக் கணக்குப்படிப் பார்த்தால், தமிழ்நாட்டில் 100பேர் கூட தேறமாட்டார்கள். 8கோடிக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழும் மாநிலத்தில் வெறும் 100 பேருக்காக தமிழர்கள் அனைவரின் மீதும் சமற்கிருதம் திணிக்கப்படும்.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் அரசு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 32,000க்கு மேற்பட்ட கோயில்களும், மடங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான கோயில்கள் உள்பட 50,000க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவற்றில் சமற்கிருத அர்ச்சனைதான் செய்யப்படுகிறது. பெரிய கோயில்களில் குறைந்தளவுக்கு 100க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பணிபுரிகிறார்கள். ஆக, தமிழ்நாட்டில் உள்ள 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் பல்லாயிரக்கணக்கான அர்ச்சகர்கள் சமற்கிருதத்தில் அர்ச்சனை செய்து வருகிறார்கள்.

ஆனால், நடுவண் அரசு நடத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் சமற்கிருதம் பேசுவோர் 100பேர்கூட இல்லாத நிலைமையில் தமிழகக் கோயில்களில் பல்லாயிரக்கணக்கில் பணியாற்றும் பார்ப்பன அர்ச்சகர்களில் பெரும்பாலோருக்கு சமற்கிருதம் எழுதப்படிக்கத் தெரிந்திருக்காது என்ற உண்மை அப்பட்டமாக வெளிப்படுகிறது. அப்படியானால், அவர்கள் சமற்கிருதத்தில் அர்ச்சனை செய்வதாகக் கூறுவது எப்படி? அர்ச்சனை செய்யும் மந்திரங்களை தமிழில் எழுதி வைத்துக்கொண்டு தப்பும் தவறுமாக அவர்கள் ஒப்புவிக்கிறார்கள் என்பதே உண்மையாக இருக்க முடியும்.

இந்த நிலைமையில் சமற்கிருதத்தில் செய்திகள் ஒலிபரப்புவதால் யாருக்கு என்ன பயன்? நாள்தோறும் தமிழுக்கு ஒதுக்கப்படும் நேரத்தில்தான் சமற்கிருத செய்தி பரப்புவதற்கான நேரம் குறைக்கப்படும். யாருக்கும் எத்தகைய பயனும் இல்லாத இந்தத் திணிப்பு முயற்சி ஏன் செய்யப்படுகிறது? சமற்கிருத வல்லாதிக்கத்தைத் தமிழர்கள் மீது திணிக்கும் அப்பட்டமான வெளிப்பாடாகும்.

கடந்த 2000ஆண்டு காலத்திற்கும் மேலாகத் தமிழை வடமொழி கலப்பு மொழியாக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஓரளவு அவர்கள் வெற்றிப் பெற்றதின் விளைவாக தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து தோன்றின. வடமொழியாளரின் பண்பாடும் அவர்கள் மீது திணிக்கப்பட்டது.

தொல்காப்பியர் காலத்தில் வடவேங்கடம் முதல் தென்குமரி வரையிலும், கிழக்கே வங்கக் கடலும், மேற்கே அரபிக் கடலும் எல்லைகளாகக் கொண்ட நிலப் பகுதியே தமிழ்மக்கள் வாழும் பகுதியாக அடையாளம் காணப்பட்டது. இலக்கியச் சான்றுகளும் அவ்வாறே கூறுகின்றன. குடிகளாகவும் பின்னர் குலங்களாகவும் வாழ்ந்த தமிழர்கள் வேளிர்களால் ஆளப்பட்டனர். பின்னர், மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்ட மூன்று நாடுகளாகத் திகழ்ந்தன.

கி.பி. 6ஆம் நூற்றாண்டில் களப்பிரர் ஆட்சியை வீழ்த்தி, பல்லவர், பாண்டியர் ஆகியோர் தங்களின் ஆட்சிகளை நிலைநிறுத்திய பிறகு இந்த நிலைமை அடியோடு மாறுகிறது. குறிப்பாக, வடமொழி, வேத நெறி, தத்துவங்கள், புராணங்கள் ஆகியவை தமிழ்நாட்டில் அடியெடுத்து வைத்தன. சங்ககாலத் தமிழரின் திணை வாழ்வு மறைந்தது. தமிழகத்தின் பல்வேறு துறைகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கமும், தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பும் பெருகின. சமுதாயம் சாதி ரீதியாகப் பிளவுப்பட்டது.

பல்லவ மன்னர்கள் வடமொழிப் பெயர்களையே சூட்டிக்கொண்டனர். வைதிக சமயம் அவர்கள் வாழ்வோடு ஒன்றிணைந்தது. ஆட்சிமொழியாக வடமொழி உயர்த்தப்பட்டது. அதை எழுத்தில் வடிக்க கிரந்தம் உருவாக்கப்பட்டது. பல்லவர்களின் கல்வெட்டுக்கள் சமற்கிருத மொழியில் வெட்டி வைக்கப் பெற்றன. பல்லவர் காலத்தில் தமிழ் கல்வெட்டுகள் மிகமிகக் குறைவு.

தமிழக மன்னர்களில் வடமொழிப் பெயர்களைத் தங்களுக்கு முதன்முதலாகச் சூட்டிக் கொண்டவர்கள் பல்லவர்களேயாவார்கள். கி.பி. 250 முதல் கி.பி. 340ஆம் ஆண்டுவரை ஆண்ட முற்காலப் பல்லவர்களின் பெயர்கள் வருமாறு: வீரகூர்ச்சரவர்மன் என்ற பப்பதேவன், சிவஸ்கந்தவர்மன், விஜயஸ்கந்தவர்மன், புத்தவர்மன், புத்யன்குரன் என்னும் வடமொழிப் பெயர்களை இவர்கள் பெருமையுடன் சூட்டிக்கொண்டார்கள். பாரத்துவாஜ கோத்திரத்தை சேர்ந்தவர்களாகவும் தங்களைக் கூறிக்கொண்டனர்.

கி.பி. 340 முதல் கி.பி. 615ஆம் ஆண்டு வரை ஆண்ட இடைக்காலப் பல்லவர்களின் பெயர்கள் வருமாறு: குமாரவிஷ்ணு, முதலாம் கந்தவர்மன், வீரக்கூர்ச்சரவர்மன், இரண்டாம் கந்தவர்மன், முதலாம் சிம்மவர்மன், மூன்றாம் கந்தவர்மன், முதலாம் நந்திவர்மன், சிம்மவிஷ்ணு ஆகியோர் வடமொழிப் பெயர்களைச் சூட்டிக்கொள்வதில் பெருமிதம் கொண்டனர்.

பிற்காலப் பல்லவர்கள் கி.பி. 575 முதல் கி.பி. 850 வரை ஆண்டனர். அவர்களும் வடமொழிப் பெயர்களையே சூட்டிக்கொண்டு மகிழ்ந்தனர். சிம்ம விஷ்ணு, மகேந்திர வர்மன், நரசிம்மவர்மன், பரமேஸ்வரவர்மன், இராஜசிம்மன் ஆகியோருடன் பிற்காலப் பல்லவர் மரபு முடிவடைந்தது. அதற்குப் பிறகு புதிய பல்லவர் மரபு வழியைச் சேர்ந்த இரண்டாம் நந்திவர்மன், நந்தி வர்மன், மூன்றாம் நந்திவர்மன் ஆகியோர் ஆண்டனர். அதற்குப் பின்னர், பாண்டியர், சோழர், ஆதிக்கம் ஓங்கியது. பல்லவ ஆட்சி அபராஜிதவர்மன் என்பவனோடு கி.பி. 890இல் முடிவடைந்துவிடுகிறது.

பாண்டியர்கள்

அதே காலகட்டத்தில் பாண்டிய நாட்டின் நிலைமையும் அவ்வாறே மாற்றமடைந்தது. பைந்தமிழ் வளர்த்தப் பாண்டியர்கள் என புகழ்பெற்ற மன்னர்களும், பல்லவர்களைப் போல வடமொழியில் தங்கள் பெயர்களைச் சூட்டிக்கொண்டனர். கி.பி. 575 முதல் கி.பி. 920 வரை ஆண்ட இடைக்காலப் பாண்டியர்களின் கொடி வழி பின்வருமாறு:

கடுங்கோன், மாறவர்மன் அவனிசூளாமணி, செழியன் சேந்தன், மாறவர்மன் அரிகேசரி, கோச்சடையன் ரனதீரன், மாறவர்மன் அரிகேசரி இராஜசிம்மன், நெடுஞ்சடையன் பராந்தகன் (முதலாம் வரகுணன்), ஸ்ரீ மாறன், ஸ்ரீ வல்லவன், இரண்டாம் வரகுணன், பராந்தக வீர நாராயணன், இரண்டாம் இராஜசிம்மன்,

பிற்காலச் சோழர்கள்

கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இடையில் அதாவது, கி.பி. 816 முதல் கி.பி. 1279 வரை ஏறத்தாழ 430 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த பிற்காலச் சோழர் ஆட்சிக்கு விஜயாலயன் அடிகோலினான். இவனைத் தொடர்ந்து பட்டமேறிய சோழ மன்னர்கள் அனைவருமே வடமொழிப் பெயர்களை மிக்க விருப்புடன் சூட்டிக்கொண்டனர். முதல் ஆதித்தச் சோழன், முதல் பராந்தகன், கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தரசோழன், உத்தமர்சோழன், முதல் இராஜராஜன், முதல் இராஜேந்திரன், முதல் இராஜாதிராஜன், இரண்டாம் இராஜேந்திரன், வீரராஜேந்திரன், அதிராஜேந்திரன், முதற் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன், இரண்டாம் இராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன், மூன்றாம் இராஜேந்திரன் ஆகியோர் சூட்டிக்கொண்டனர்.

பிற்காலப் பாண்டியர்கள் கி.பி. 1216 முதல் கி.பி. 1311 வரை ஆண்டனர். அவர்களும் வடமொழிப் பெயர்களையே சூட்டிக்கொண்டனர். சடையவர்மன் குலசேகரன், மாறவர்மன் சுந்தரபாண்டியன், இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், சடையவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன் குலசேகரன், சுந்தரபாண்டியன் வீரபாண்டியன் ஆகியோர் ஆண்டனர். இறுதியாகக் குறிப்பிடப்பட்ட இரு பாண்டியர்களுக்குள்ளே மோதல் ஏற்பட்டதால் வீரபாண்டியன் தனக்கு உதவியாக அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிகாபூரை அழைத்து வந்தான். அதன் விளைவாக பாண்டிய நாடு அந்நியர் ஆதிக்கத்திற்குட்பட்டது.

அதற்குப் பின் நாயக்கர்கள் ஆட்சி மதுரை, தஞ்சை, திருச்சி ஆகிய நகரங்களைச் சுற்றி அமைக்கப்பட்டது. பின்னர், மராட்டியர் ஆட்சி தஞ்சையில் வேரூன்றியது. அதற்குப் பிறகு, ஆங்கிலேயர் ஆட்சி உருவானது.

கி.பி. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கிட்டத்தட்ட 16ஆம் நூற்றாண்டு வரை 13 நூற்றாண்டு காலம் தமிழகத்தில் நடைபெற்ற பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள் ஆட்சிக் காலங்களில் வடமொழி ஏற்றம் பெற்றது. மன்னர்களே தங்களுக்கு வடமொழிப் பெயர்களைச் சூட்டிக்கொண்டு பெருமிதம் அடைந்தனர். அரசின் எவ்வழி அவ்வழி குடிகள் என்பதுபோல, மக்களும் வடமொழிப் பெயர்களைச் சூட்டிக்கொண்டனர். மலைகள், ஆறுகள், கோயில்கள் ஆகிய அனைத்தின் பெயர்களும் வடமொழியில் மாற்றம் பெற்றன. கோயில்களிலிருந்த இறைவன்-இறைவி ஆகியோரும் சமற்கிருத மயமாக்கப்பட்டனர்.

வடக்கேயிருந்து படைபடையாகப் பார்ப்பனர்கள் வரவழைக்கப்பட்டு தமிழகத்தின் வளமான பகுதிகளில் குடியேற்றப்பட்டு அவற்றுக்கு சதுர்வேதி மங்கலங்கள் என பெயர் சூட்டப்பெற்று அவர்களுக்கே உரியதாக நிலங்கள் வழங்கப்பட்டன. வேதபாடசாலைகளும், கடிகைகளும் மன்னர்களின் மானியத்தால் செழித்து வளர்ந்தன. கோயில்களில் வேதியர்களின் ஆதிக்கம் மேலோங்கியது.

தமிழக மன்னர்களால் ஏறத்தாழ 1300 ஆண்டு காலமாகப் போற்றி வளர்க்கப்பட்ட வடமொழியின் ஆதிக்கம் தமிழில் ஊடுருவியது. வடவரின் பண்பாடு தமிழ்ப் பண்பாட்டை சீரழித்தது. இந்தச் சீரழிவிலிருந்து தமிழையும், தமிழரையும் மீட்பதற்காகப் பெரும் போராட்டங்களை தமிழரகள் நடத்தவேண்டியிருந்தது.

தொல்காப்பியர் வகுத்தளித்த இலக்கணம் வடமொழி ஆதிக்கத்திற்கெதிரான வேலி அமைத்துத் தந்தது. வள்ளுவர் வகுத்த குறள் தமிழர் பண்பாட்டைக் காக்க வேலி வகுத்தது. இவர்களுக்குப் பின் தோன்றிய தமிழ்ப் புலவர்களான இளங்கோவடிகள், சாத்தனார் போன்றவர்களிலிருந்து கம்பன் காலம் வரை வடமொழிச் சொற்களைத் தூயதமிழில் பெயர்த்து வழங்கினர். அதிலும் சில புலவர்கள் வடமொழிப் பற்றுக்கொண்டு தாங்கள் படைத்த இலக்கியங்களில் வடசொற்களை வலிந்து புகுத்தினர்.

பிற்காலத்தில் மறைமலையடிகள் தோன்றி வடமொழி என்னும் முதலையின் வாயின் பிடியிலிருந்து தமிழை மீட்டார். அதற்காகத் தனித்தமிழ் இயக்கத்தைக் கண்டார். அவர் வழியில் பாவாணர், தமிழ் மீட்புப் பணியில் தொடர்ந்து செயல்பட்டார். அவரைப் பின்பற்றி ஏராளமானவர்கள் தங்களை அத்தொண்டிற்கு ஒப்படைத்துக்கொண்டு செயலாற்றியதின் விளைவாக தமிழ் இன்னும் அழியாமல் நின்று நிலவுகிறது.

வடமொழி முதலையின் பிடியிலிருந்து தமிழை மீட்டுத் தந்தார் மறைமலையடிகள். மீட்டுத் தந்த தமிழை இன்று ஆங்கிலத் திமிங்கலத்தின் வாயில் திணிக்கும் வேலையை தமிழரே செய்கின்றனர். ஆங்கிலவழிக் கல்வியின் மீது பற்றுக்கொண்ட தமிழர்கள் தங்கள் குழந்தைகளை அப்பள்ளிகளுக்கே அனுப்புகின்றனர். இதன் விளைவாக நம்முடைய குழந்தைகள் தமிழும் தெரியாமல், ஆங்கிலத்தையும் அறியாமல் இரண்டும்கெட்டான் குழந்தைகளாக வளர்கின்றனர். ஆட்சியிலும், நீதிமன்றத்திலும், கல்வியிலும் ஆங்கிலமே அரசோச்சுகிறது. கோயில்களில் வடமொழி ஆதிக்கம் நிலவுகிறது.

இந்த நிலைமையில் சமற்கிருத செய்தி வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டிருப்பது வடமொழியின் வல்லாதிக்கத்தின் அறிகுறியாகும். ஏற்கெனவே மத்திய அரசின் துறைகளின் பெயர்களும், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் பெயர்களும் சமற்கிருத மயமாக்கப்பட்டு விட்டன. இந்தியா முழுவதிலும் பல்வேறு தேசிய இனங்களின் தாய்மொழிகள் ஓரங்கட்டப்படுகின்றன. முதலில் இந்தி, இறுதியில் சமற்கிருதம் என்பதே இன்றைய நடுவண் அரசின் நோக்கமும், திட்டமுமாகும். அதை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலையில் நடுவண் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்கெதிராக மிகக் கடுமையான போராட்டத்தை நடத்தியாக வேண்டிய நிலைமைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.