தமிழ்க் கனவில் திளைத்த இறையெழிலன் - பழ. நெடுமாறன் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 15 ஜூன் 2021 20:53

Pa. iraiezhilanphotoமொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்களின் வழித் தடத்தைச் சிறிதளவும் பிறழாமல் பின்பற்றி நடந்த பெருமைக்குரியவர் நண்பர் இறையெழிலன் ஆவார். இராமசாமி என்னும் தன்னுடையப் பெயரை இறையெழிலன் என தூய தமிழில் மாற்றிக் கொண்டதோடு தனது பிள்ளைகளுக்கு தமிழ்ச் செல்வன், தமிழ்ச் செல்வி, தமிழ், தமிழ்மறவன் என்னும் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தார்.

 

 

தமிழ்த்தொண்டினையே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு ஓய்வில்லாமல் பணியாற்றிய நண்பர் அரணமுறுவல் அவர்களுடன் இணைந்து உலகத் தமிழ்க் கழகப் பணிகளுக்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் இறையெழிலன். தமிழுக்காக நடத்தப்பட்ட பல்வேறு போராட்டக்களங்களிலும் மாநாடுகளிலும் இருவரும் பங்கேற்கும் போது அவர்களுடன் நெருங்கிய நட்புறவு எனக்கு ஏற்பட்டது.

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிறுவப்பட்டப் பிறகு அதன் திறப்பு விழா தொடங்கி அவர் மறையும் வரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் விடாமல் பங்கேற்றார்.

2014-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு நாள் அவரும் அரணமுறுவலும் முற்றத்தில் என்னைச் சந்தித்துப் பேசினார்கள். அப்போது எங்களது தமிழர் தேசிய இயக்கம் அரசினால் 2002-ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டு அந்த வழக்கு பல ஆண்டு காலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டுக் கிடந்த நேரம். அவர்கள் இருவரும் “வழக்கு முடியும்வரை காத்திருக்க வேண்டாம். ஒரு புதிய பெயரில் தமிழ்த் தேசிய அமைப்பு ஒன்றினை உருவாக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டுள்ளது.” என வலியுறுத்திக் கூறினர். மேலும் அனைத்துத் தமிழ் அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்து ஒரு கூட்டத்தைக் கூட்டி அனைவரையும் இணைத்துக் கொண்டு அந்த அமைப்பினைத் தோற்றுவிக்க வேண்டும் என்றும் கூறினர்.

இருவரும் கூறியதை ஏற்று 29-06-2014-ஆம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழ்த் தேசியர்களை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எழுபதுக்கும் மேற்பட்டத் தமிழ்த் தேசிய அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழர் தேசிய முன்னணி என்ற பெயரில் இயங்குவது என முடிவெடுக்கப்பட்டது. இந்த அமைப்பின் துணைத் தலைவர்களில் ஒருவராக நண்பர் இறையெழிலன் பொறுப்பேற்றார்.

2014-ஆம் ஆண்டில் ஆகசுட்டு மாதம் 2-ஆம் நாள் தொடங்கி 15 நாட்கள் வரை அவரும் நானும் மற்றப் பொறுப்பாளர்களும் மாவட்டம் தோறும் சென்று மாவட்டக் கிளைகளை அமைத்தோம். கட்சி நடத்திய அனைத்துக் கருத்தரங்குகள், போராட்டங்கள் எல்லாவற்றிலும் முன்னணியில் நின்று பொறுப்புணர்வுடன் பணியாற்றியப் பெருமை அவருக்கு உண்டு.

2015-ஆம் ஆண்டில் தமிழர் தேசிய முன்னணியின் கட்சித் தேர்தல்களை நடத்தும் தேர்தல் ஆணையாளராக அவர் பொறுப்பேற்றார். அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக அவரே சென்று கட்சியின் தேர்தல்களை முறையாக நடத்தி கட்சி அமைப்பைக் கட்டுக்கோப்பாக்கினார்.

2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் நாள் சென்னையில் “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” மாநாடு நடத்தும் பொறுப்பை அவர் ஏற்று மற்றத் தோழர்களுடன் இணைந்து சிறப்பாக நடத்தினார்.

உலகத் தமிழர் பேரமைப்பின் நிகழ்ச்சிகளிலும் அவருடைய பங்களிப்பு சிறப்பானதாகும். குறிப்பாக 2016-ஆம் ஆண்டு சூலையில் மறைமலையடிகளின் நூற்றாண்டு விழா மாநாட்டினை தஞ்சையில் நாங்கள் நடத்திய போது பல நாட்கள் அங்கேயே தங்கி மாநாடு சிறப்புற நடைபெறுவதற்கு வழி கோலியதை என்றும் மறக்க முடியாது.

கட்சிப் பணிகளுக்காகத் தொடர்வண்டி, மகிழுந்து மூலமாக நான் மேற்கொண்ட பல்வேறு பயணங்களிலும் உடன் வரும் போது “தமிழ், தமிழர், தமிழ் நாடு குறித்த அவருடைய கனவுகளை நனவாக்க வேண்டும்; அதை நான்தான் செய்ய முடியும்” என என்னிடம் வலியுறுத்திக் கொண்டே வருவார்.

தமிழ்ப் பகைவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் அமர்ந்திருந்தாலும் அவர்களை மிகக் கடுமையாகச் சாடுவது அவரின் இயல்பாகும். பல முறை நான் குறுக்கிட்டு “கொஞ்சம் கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். குருதி அழுத்தம் அதிகமாகிவிடப் போகிறது” என்று கூறும் போது சுற்றியிருப்பவர்கள் நகைப்பார்கள். அவரும் தனது பொல்லாத கோபத்தை மறந்து சிரித்துக் கொள்வார்.

குணமெனும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேனும் காத்தர் அரிது

என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப அவரது கோபம் சட்டென்று தணிந்துவிடும்.

இந்திய தேசிய மாயையிலும் திராவிட மாயையிலும் மூழ்கியிருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்க முடியாது என நான் கூறும் போது அவருக்கு அதை ஏற்பது இயலாததாக இருக்கும். உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் எனத் துடிப்பார்.

உலகத் தமிழர் கழகத்தின் மாத வெளியீடான உலக முதன் மொழி இதழின் ஆசிரியர் என்ற முறையில் அவர் எழுதும் தலையங்கங்களில் அவரின் இதயத் துடிப்பு அப்பட்டமாக வெளிப்படும். சிறந்த தமிழறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகளை தாங்கிய இதழாக அது வெளிவந்தது.

எத்தனையோ நாட்கள் பகலிலும் இரவிலும் முற்றத்தின் புல்வெளியில் அமர்ந்து எவ்வளவோ தமிழ்க் கனவுகளை நனவாக்குவதுக் குறித்து நாங்கள் பேசியிருக்கிறோம். இன்று அந்தக் கனவுகளின் அடிப்படையான தமிழ்த் தேசியம் வேரூன்றி விட்டது.

தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்
தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்
தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்
செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்

என புரட்சிக் கவிஞர் பாடியதைப் போல இன்று தமிழுணர்வு மேலும் வளர்ந்து மலர்ந்து மணம் பரப்புவதைக் கண்டு மகிழ வேண்டிய வேளையில் அவர் மறைந்தது பேரிழப்பாகும்.

எனது நூல்கள் பலவற்றையும் திருத்திச் செம்மையான வடிவம் கொடுத்த அவருக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். அவர் உடல் நலம் குன்றியிருந்த இந்த வேளையிலும் இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் நூலைத் திருத்தி எனக்கு அனுப்பி வைத்த அந்தக் கடமையுணர்வுக்கு எனது விழிகளில் துளிர்க்கும் கண்ணீர்த் துளிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

வாழ்நாள் முழுவதிலும் தமிழின் ஏற்றத்திற்காக அவர் கண்ட கனவுகள் நனவாவதற்கு முன்பு எதிர்பாராத வகையில் அவர் மறைந்த செய்தி கிடைத்த போது அதிர்ச்சியினால் உறைந்து போனேன். என்னை உளமார நேசித்த உண்மையான நண்பரை நான் இழந்து விட்டேன். கொடிய கொரோனா நோய்த் தடுப்பு முடக்கத்தின் விளைவாக அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தக் கூட இயலாமல் போனதை எண்ணி எண்ணி என்னுடைய நெஞ்சம் குமைகிறது.

அவரின் மறைவு தமிழர் தேசிய முன்னணிக்கும், உலகத் தமிழர் பேரமைப்புக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ், தமிழர், தமிழ் நாடு ஆகியவற்றின் உயர்வுக்காக இறுதி மூச்சு உள்ளவரை ஓயாது தொண்டாற்றிய ஒரு தூயத் தொண்டரை தமிழ் கூறும் நல்லுலகம் இழந்திருக்கிறது.

அவருடைய பிரிவினால் வருந்தும் அவரது பிள்ளைகளுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.