“தியாகத் தழும்பேறிய தமிழ்த் தேசியம்“ - பழ. நெடுமாறன் நேர்காணல் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 15 ஜூன் 2021 20:57

மத்திய பா.ச.க அரசின் 'ஒரே தேசம்' அரசியலை விமர்சிக்கும் வகையில்,'ஒன்றிய அரசு' என்ற சொல்லாடலை முன்வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றவைத்த நெருப்பு, இன்றைக்கு 'தமிழ்நாடா? தமிழகமா?' என்ற விறுவிறு விவாதமாகப் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது!

இந்த நிலையில், மூத்த தமிழ்த் தேசிய வாதியும் 'தமிழர் தேசிய முன்னணி'யின் தலைவருமான பழ.நெடுமாறனிடம் பேசினேன்....

 

''இறையாண்மைமிக்க இந்தியாவை, 'ஒன்றிய அரசு' என்று தி.மு.க-வினர் அழைப்பது, கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது என்கிறார்களே?''

''இந்திய அரசியல் சட்டத்தின் பகுதி 1, பிரிவு 1-இல், 'India, that is Bharat, will be a Union of States' என்று கூறப்பட்டுள்ளது. அதாவது “இந்தியா எனும் பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” என்றுதான் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் சொல்லப்பட்டுள்ளது. பிரிட்டன் என்பது நாம் சொல்வழக்கில் பயன்படுத்துகிற பெயர். ஆனால், அதன் சட்டபூர்வமான பெயர் என்பது 'யுனைடெட் கிங்டம்' (United Kingdom). இதேபோல், அமெரிக்கா என்ற பெயரை 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா' (United States of America)என்றுதான் சொல்லவேண்டும். அதே போல் பல்வேறு மாநிலங்களும் ஒன்றிணைந்ததுதான் இந்தியாவாகும். எனவே, 'இந்திய ஒன்றியம்' அல்லது 'ஒன்றிய அரசு' என்று சொல்வதுதான் அரசியல் சட்டப்படி சரி. இதற்கு மாறாக, நாம் பேச்சுவழக்கில் சொல்லிவருகிற 'மத்திய அரசு' (Central Government) என்ற சொல்லும் 'தில்லி அரசு' என்று சொல்வதும் சட்டபூர்வமானதும் சரியானதும் அல்ல.''

'' 'இந்திய தேசம் 'ஒன்றியம்' எனில், தமிழ்நாடு என்ன ஊராட்சியா...' என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி கேட்கிறாரே?''

''நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவர் இவ்வாறு கேட்பது வியப்புக்குரியது. அரசியல் சட்டத்தில் எந்தச் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறதோ அதைத்தான் சொல்லவேண்டும்.  அதைவிடுத்து, 'தமிழ்நாடு என்ன ஊராட்சியா?' என்றெல்லாம் கேள்வி கேட்பது தவறாகும்.

''இதே வரிசையில், தற்போது 'தமிழ்நாடு அல்ல, தமிழகம்' என்றொரு புதிய கருத்தை மூத்த பத்திரிகையாளர் மாலன் முன்வைத்திருக்கிறாரே...?''

''மாலன் உள் நோக்கத்தோடு சொல்கிறார். அதாவது, 'இந்தியா என்பது ஒரு நாடு. அதிலே ஒரு பகுதியை மட்டும் தமிழ்நாடு என்று குறிப்பிட்டால், தனி நாடு என்ற எண்ணம் வந்துவிடும்;  எனவே, தமிழகம் என்றுதான் சொல்லவேண்டும்' என்கிறார்.

'தமிழகம்' என்றாலே என்ன பொருள்? தமிழ் மொழி பேசுகிற மக்கள் வசிக்கிற நிலப் பகுதி என்பதுதானே...! ஆக, தமிழ் மக்கள் வசிக்கிற நிலப்பகுதியை 'தமிழ்நாடு' என்று சொல்வதில் தவறு என்ன? திருக்குறளில் “நாடு” என்ற அதிகாரத்தில் விரிவாகவும் விளக்கமாகவும் “நாடு“ என்ற சொல்லின் பொருளை வள்ளுவர் கூறியிருக்கிறார். அதை படித்தால் இத்தகைய கேள்விகளுக்கு இடம் இருக்காது.

எனவே, மாலன் சொல்ல வருவதன் நோக்கம் வேறு. அதாவது, ஆந்திர மாநிலத்துக்கு ஆந்திர பிரதேஷ், இந்தி பேசுகிற மாநிலத்துக்கு உத்தரபிரதேஷ், மத்திய பிரதேஷ் என்றிருப்பதைப் போல 'தமிழ் பிரதேஷ்' என்று கொண்டுவருவதற்கான நோக்கத்தில்தான் இதுபோன்ற கருத்துகள் சொல்லப்படுகின்றன.

'இந்தியா' என்ற பெயரையே 'இந்துஸ்தான்' என்று மாற்றவேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் நோக்கம். 1993-ஆம் ஆண்டு சனவரியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக இருந்த இராசேந்திர சிங் பின் வருமாறு கூறினார். “இந்தியா எனப்படும் பாரத் என்பதற்கு பதிலாக பாரத் எனப்படும் இந்துஸ்தான் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்” எனத் திட்டவட்டமாக தனது நோக்கத்தை தெளிவுப்படுத்தியுள்ளார். ஆக, இந்துஸ்தான் என்று கூறினால், அது 'இராசஸ்தான்' என்ற பெயரில் எதிரொலிக்கும்தானே....! அப்படியென்றால், இராசஸ்தான் என்ற பெயரையும் மாற்றச் சொல்வார்களா? பொதுவாக 'ஸ்தான்' என்றப் பெயர் நாட்டையே குறிக்கிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்றவை அதற்கு எடுத்துக்காட்டாகும்.''

Nedumaran Mutram Vikatan2

''சென்னை மாகாண பெயர் மாற்றக் கோரிக்கை எழுந்த காலகட்டத்தில், 'தமிழகம்' என்ற பெயரும் சிபாரிசு செய்யப்பட்டதா?''

 ''ஓரிருவர் கூறியிருக்கலாம்... 1956-ல் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, 'சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்' என்பது மட்டும்தான் கோரிக்கையாக எழுந்தது. அப்போது, சென்னை மாகாண ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரசுக் கட்சி சார்பில் பேசிய அமைச்சர் சி.சுப்பிரமணியம், 'தமிழில் நாம்'தமிழ்நாடு' என்றும் ஆங்கிலத்தில் சென்னை மாகாணம் என்றும் குறிப்பிட்டுக்கொள்ளலாம்' என்றார்.

பெயர் மாற்றத்தில் காங்கிரசுக் கட்சி இவ்வாறு பிடிவாதமாக இருந்தது பெரும் தவறாகும்.''

''1922-லேயே 'தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி' என்று தங்கள் கட்சிக்குப் பெயர் வைத்துக்கொண்ட காங்கிரசுக் கட்சி, சென்னை மாகாணப் பெயரை மாற்றுவதில் மட்டும் மறுப்பு தெரிவித்தது ஏன்?''

''1920-ஆம் ஆண்டு நாகபுரியில் கூடிய காங்கிரசு மாநாட்டில்தான் 'சுதந்திர இந்தியா மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 'சுதந்திர இந்தியாவில் மொழிவழி மாநிலங்களைப் பிரிப்பதற்கு முன்னோடியாக, நமது காங்கிரசுக் கட்சியை மொழிவழியாக நாமே பிரித்துக்கொள்ளலாம். இதற்கான அதிகாரம் நம் கையில்தானே இருக்கிறது' என்று காந்தியடிகள் கூறிய அறிவுரையை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்தே 'தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி, ஆந்திர காங்கிரசுக் கமிட்டி' என்றெல்லாம் பிரிக்கப்பட்டன. இப்படி மொழிவழி பிரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த காங்கிரசுக் கட்சி, பின்னாளில் மொழிவழியாக பிரிக்கப்பட்டுவிட்ட சென்னை மாகாணத்துக்கு  'தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட மறுத்தது, காங்கிரசுக் கட்சிக்கு அவப்பெயரைத் தேடிக் கொடுத்தது!''

''இன்றைய தமிழக அரசியலில், தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கக்கூடிய கட்சியாக நீங்கள் யாரைப் பார்க்கிறீர்கள்?''

''தமிழ்த் தேசியத்தை 40 ஆண்டு காலத்திற்கும் மேலாகத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறவர்கள் நாங்கள்தான். 'தமிழர் தேசிய இயக்கம்' என்று முதலில் பெயர் வைத்தோம். 2002-ல் என்னைப் பொடா சட்டத்தில் கைது செய்தபோது, எங்கள் இயக்கத்துக்கும் தடை விதித்தார்கள். இன்றைய தேதிவரையிலும் அந்தத் தடை நீடித்து வருகிறது. இதை எதிர்த்து நாங்கள் தொடுத்த வழக்கு 19 வருடங்களாக உயர் நீதிமன்றத்தில் கிடப்பில் கிடக்கிறது. எனவேதான் 'தமிழர் தேசிய முன்னணி' என்ற பெயரில், 70 அமைப்புகளை ஒன்றிணைத்து எங்கள் இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

எங்களது தோழர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டம், தடாச் சட்டம், பொடாச் சட்டம், தேசத் துரோகச் சட்டம் போன்றவற்றின் கீழ் பல வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறை சென்றார்கள். சென்னையில் இருந்த எங்கள் கட்சியின் தலைமை அலுவலகம் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த எங்கள் கட்சி அலுவலகங்களை காவல்துறையினர் இழுத்துப் பூட்டி முத்திரை வைத்தார்கள். பிரபாகரனையும் அவரது புலிகள் இயக்கத்தையும் முதன் முதல் அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆதரவு திரட்டினோம் என்பதுதான் தமிழக அரசுக்கு எங்கள் மீதிருந்த கோபம். எங்கள் மாநாடுகளும் பொதுக் கூட்டங்களும் ஊர்வலங்களும் தடை செய்யப்பட்டன. அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளாகி எங்கள் தோழர்கள் பல் வேறு கொடுமைகளைச் சந்திக்க நேர்ந்தது.

ஆனாலும் காவிரிப் பிரச்னை, பெரியாற்றுப் பிரச்னை போன்ற ஆற்று நீர்ப் பிரச்னைகளையும் தமிழகம் வந்தேறிகளின் வேட்டைக்காடாகத் திகழ்வதையும் தமிழே கல்வி மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் திகழ வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு போராட்டங்களை நாங்கள் நடத்தியிருக்கிறோம். இராசீவ் கொலை வழக்கில் 26 தமிழர்களுக்கு ஒட்டுமொத்தமாக தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட போது பல்வேறு அமைப்புகளை ஒன்று திரட்டி 26 தமிழர்கள் உயிர்க்காப்புக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து 19 பேர் விடுதலை ஆவதற்கும் மீதமிருந்தவர்களில் மூவருக்கு ஆயுள் தண்டனையும் நால்வருக்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்ட போது அதை எதிர்த்துப் போராடி அவர்களது உயிரையும் காப்பாற்றி இருக்கிறோம். எழுவரின் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். இவ்வாறு தமிழ்த் தேசியத்தை வளர்த்தெடுப்பதற்கு முன்னோடிகளாக நாங்கள் இன்று வரையிலும் திகழ்ந்து வருகிறோம். ஆனாலும் தமிழ்த் தேசியம் பேசுவோர் அனைவரையும் அரவணைத்துச் செல்வதே எங்களது நோக்கமாகும்.

''இன்றைய தேர்தல் அரசியலில் பங்கெடுத்துக்கொள்ளக்கூடிய அரசியல் கட்சிகளில், நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய தலைவர் என்று நீங்கள் யாரைச் சொல்வீர்கள்?''

''தேர்தல் அரசியல் என்பதே சந்தர்ப்பவாத அரசியலாக மாறிவிட்டது. 1967-ல் அமைக்கப்பட்ட தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சியும் இருந்தது; முதலாளித்துவக் கட்சியான சுதந்திரா கட்சியும் இருந்தது. 1967-லிருந்தே இந்திய தேசியத்துடன் திராவிடத் தேர்தல் கட்சிகள் சமரசம் செய்து கொண்டன. இன்று வரையிலும் அந்த சமரசம் என்னும் சந்தர்ப்பவாத அரசியல் நீடிக்கிறது. திராவிட தேர்தல் அரசியல் கட்சிகள் காங்கிரசு, சனதா, பா.ச.க என மாறி மாறி அகில இந்தியக் கட்சிகளோடு கூட்டு சேர்ந்துதானே தேர்தலைச் சந்தித்து வருகின்றன. காங்கிரசுக் கட்சி தனது சமய சார்பற்றத் தன்மையைக் கைவிட்டு மிதவாத இந்துத்துவாக் கட்சியாகவும் பா.ச.க. தீவிரவாத இந்துத்துவாக் கட்சியாகவும் திகழ்கின்றன. ஆனால் பல்வேறு மாநிலக் கட்சிகள் மாநில சுயாட்சிக் கோரிக்கையை மறந்து மேற்கண்ட இரு கட்சிகளுடன் மாறி மாறி கூட்டுச் சேர்ந்து தேர்தலைக் கேலிக் கூத்தாக்கி விட்டன. இந்தப் போக்கின் வளர்ச்சி சனநாயகத்தை பணநாயகமாக மாற்றுவதில் போய் முடிந்திருக்கிறது.

கொள்கை, கோட்பாடற்ற சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டால் தமிழ்த் தேசியம் நீர்த்துப் போகும். அதனால்தான் நாங்கள் யாரையுமே இன்றைய சூழலில் ஆதரிக்க முடியாமல், ஒதுங்கி நிற்கிறோம். நாங்கள் தனியாக நின்று தேர்தலைச் சந்திக்கும் வலிமை பெறும் வரை இந்த நிலை நீடிக்கும்.''

''திராவிடம் என்பதே தமிழ்த் தேசியத்துக்கு எதிரானது என்ற பரப்புரை இப்போது அதிகரித்துவருகிறதே?''

''இந்திய தேசியத்தைத்தான் முன்னிறுத்தி நாங்கள் எதிர்த்துவருகிறோம். ஏனெனில், மாநிலங்களின் உரிமைகளையெல்லாம் பறித்து, மத்தியில் குவித்து வைத்துக்கொண்டு, வெறும் ஊராட்சி நிலைக்கு மாநிலங்களைத் தள்ளிவிட்டார்கள். இதற்கு காரணமான இந்திய தேசியத்தைதான் நாங்கள் எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறோம்.  

மாறாக, திராவிடத் தேர்தல் கட்சிகள் இந்திய தேசியத்தோடு சமரசம் செய்துகொண்டு, கைகோர்த்துச் செல்ல ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. !இந்து தேசியம்! என்பது மொழிவழி தேசியத்தை அடியோடு அழித்து மாநிலங்களையும் இல்லாமல் செய்து ஒரே ஆட்சியை மட்டும் இந்தியா முழுமைக்கும் நிலை நிறுத்தும் நோக்கம் கொண்டதாகும். இதைப் புரிந்த கொண்டாலும் கூட பல்வேறு மாநிலக் கட்சிகள் சந்தர்ப்பவாத நோக்கத்துடன் இந்து தேசியத்துடன் கூட்டு சேர்ந்துள்ளன. இது நமது தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதாகும். இந்தநிலையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்கள் முதன்மையான எதிரி இந்தியமே!''

''திராவிடம் என்ற சொல்லாடலே ஆரியத்துக்கு எதிரானதுதான் என்று திராவிடக் கட்சியினர் விளக்கம் தருகிறார்களே...?''

''சங்க நூல்களிலும் சிலம்பு, மேகலை போன்ற காப்பியங்களிலும் திராவிடம் என்ற சொல்லாடல் ஓரிடத்தில் கூட இடம் பெறவில்லை. பக்தி இலக்கியக் காலத்திலும் ஆரியத்துக்கு எதிரான சரியான சொல்லாடலாக'தமிழன்' என்ற சொல்தான் கடைபிடிக்கப்பட்டுள்ளது.'ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்' என்று 7-ம் நூற்றாண்டிலேயே திருநாவுக்கரசர் தனது தேவாரப் பாடலில் குறிப்பிட்டிருக்கிறார்...! எனவே, ஆரியன் என்பதற்கான சரியான எதிர்ப்பதம் 'தமிழன்'தான்!

இந்தியாவில் உள்ள எல்லா தேசிய இனங்களின் மொழிகளும் சமற்கிருத ஊடுருவலால் கலப்பு மொழிகளாகித் திரிந்து விட்டன. இந்த நிலையில், நம் தமிழ் மொழி மட்டும்தான் அதற்கு அடிபணியாமல் தனது தனித்தன்மையைக் காத்துக் கொண்டிருக்கிறது. தொல்காப்பியர், திருவள்ளுவர் காலத்திலிருந்தே தமிழில் வடசொல் கலப்பை தமிழர்களாகிய நாம் எதிர்த்துவருகிறோம்!''

- த.கதிரவன்

நன்றி ஜூனியர் விகடன் நேர்காணல் - சூன் 5, 2021, சூன் 12, 2021