மாநில அதிகாரத்தைப் பறிக்கும் நீட் - பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு அச்சிடுக
வியாழக்கிழமை, 16 செப்டம்பர் 2021 13:55

இந்திய மருத்துவ கவுன்சில் செயல்பாட்டை ஆராய்ந்து, செய்ய வேண்டிய மாற்றங்களைப் பரிந்துரைக்க 2014-ல் பேராசிரியர் ரஞ்சித் ராய் சௌத்ரிதலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

பல்வேறு முறைகேடுகளுடன், மருத்துவ கவுன்சில் செயல்படுவதாகவும், தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் நடைபெறும் மாணவர் சேர்க்கை முறைகேடுகளைத் தடுக்க மருத்துவ கவுன்சில் தவறிவிட்டது, எனவே, அந்த அமைப்பை மாற்றி, அதற்குப் பதிலாக புதிதாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கவும், அகில இந்திய அளவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தவும் அந்தக் குழு பரிந்துரைத்தது. ஆனால், தகுதித் தேர்வைப் பரிந்துரைக்கவில்லை.

இந்த அறிக்கையை ஆய்வுசெய்த துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக் குழு, விரிவான விசாரணை மேற்கொண்டு, அறிக்கை அளித்தது. அதன் 92-வது அறிக்கை நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் 2016, மார்ச் 8 அன்று வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் சுயநிதி மருத்துவக் கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் மிக அதிகக் கட்டணம், அதன் விளைவாகப் பணம் என்பது மட்டுமே தகுதி என்ற நிலை ஏற்பட்டு, தரமற்ற மருத்துவர்கள் உருவாக வழிசெய்கிறது என்பதை விளக்கிக் கூறி, தனியார் கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் நடைபெறும், பணத்தை மட்டுமே குறியாகக் கொண்ட மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்த, அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வை நடத்தவும், அத்தகைய நுழைவுத் தேர்வை ஏற்காத மாநிலங்களைத் தவிர்த்துவிட்டு, நுழைவுத் தேர்வை நடத்தவும் மிகத் தெளிவாகப் பரிந்துரைத்தது.

நாடாளுமன்ற நிலைக் குழுவின் 92-வது அறிக்கையை மாடர்ன் டென்டல் கல்லூரி வழக்கில் குறிப்பிட்டு, அதை நடைமுறைப்படுத்தப் பரிசீலிக்கும்படி இந்திய அரசுக்கு ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு 2016, மே 2 அன்று உத்தரவிட்டது. ஆக, வல்லுநர் குழுவாலோ, நாடாளுமன்ற நிலைக் குழுவாலோ, உச்ச நீதிமன்றத்தாலோ ‘நீட்’ பரிந்துரைக்கப்படவில்லை. மருத்துவக் கல்வி கட்டுக்கடங்காமல் வணிகமயம் ஆவதைத் தடுத்திடுவதே வல்லுநர் குழு, நாடாளுமன்ற நிலைக் குழு, உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் நோக்கம். இந்த நோக்கத்துக்கு நேர் எதிராக, நிதி ஆயோக் பரிந்துரை அமைந்திருந்தது.

தேசிய மருத்துவ ஆணையச் சட்ட மசோதாவுக்கு வடிவம் தந்த ‘நிதி ஆயோக்’, தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் கட்டணத்தை அரசு கட்டுப்படுத்த முயன்றால், தனியார் மருத்துவக் கல்லூரி திறக்க முன்வர மாட்டார்கள். அதனால், மருத்துவர் பற்றாக்குறை ஏற்படும் என்று எச்சரித்து, வேண்டுமானால் அதிகப்படியாக 40% இடங்களுக்கு மட்டும் (பின்னர் திருத்தப்பட்ட மசோதாவில் 50% இடங்கள் வரை) அரசு கட்டணத்தைக் கட்டுப்படுத்தலாம், மீதி இடங்களுக்குத் தனியார் கல்லூரி/பல்கலைக்கழகங்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என்று பரிந்துரைத்தது, மருத்துவர் மாணவர் சேர்க்கை ‘நீட்’ மூலம் நடத்த வேண்டும் என்றும் கூறியது.

தேவையான மருத்துவர்களை உருவாக்க வேண்டியது அரசுப் பொறுப்பு, அதை எவ்வாறு செய்வது என்பதை விவாதிக்க வேண்டிய இடம் நாடாளுமன்றம்/ சட்டமன்றம். இதைக் கருத்தில் எடுத்துக்கொள்ளாத நிதி ஆயோக், தனியார் முதலீட்டில்தான் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் திறக்க முடியும், எனவே, முதலீட்டாளர்களின் லாபத்துக்குப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முன்வந்ததன் ஒரு பகுதிதான் நீட்.

அரசமைப்புச் சட்டத்தின் கூறு 246-ன் கீழ் 7-வது அட்டவணை, பட்டியல் இரண்டில் வரிசை 32-ல் பல்கலைக்கழகங்களை உருவாக்க, ஒழுங்குபடுத்த, கலைக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு. அதற்கான சட்டத்தை மாநில சட்டப் பேரவை உருவாக்க முடியும். மூன்றாவது பட்டியல் வரிசை 25-ல் உள்ள கல்வி என்பதில், ஒன்றிய அரசு, உயர் கல்வி மற்றும் உயர் ஆய்வுக் கல்வியில் தரத்தைத் தீர்மானித்து ஒருங்கிணைக்க மட்டுமே முடியும். இளநிலை மருத்துவப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையை ஒழுங்குபடுத்துதலானது பட்டியல் 3-ல் வராது, பட்டியல் 2-ல், வரிசை 32-ல்தான் வரும். மாணவர் சேர்க்கை, கட்டணம் முறைப்படுத்துதல் ஆகியவற்றில் மாநில அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. மாடர்ன் டென்டல் கல்லூரி வழக்கிலும் இவற்றை உச்ச நீதிமன்றம் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளது.

2020 ஜூலை கூட்டுறவுச் சங்கம் குறித்த வழக்குத் தீர்ப்பில், பட்டியல் 2 வரிசை 32-ல் மாநில அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மருத்துவக் கல்வியில் வணிகமயத்தை ஒழிப்பதற்காக என்று சொல்லப்பட்ட ‘நீட்’, மருத்துவக் கல்விக் கட்டணத்தைக் குறைக்கவில்லை. மாறாக இரட்டிப்பாக்கியுள்ளது. ‘நீட்’ தேர்வுக்கு முன்பு சட்டத்துக்குப் புறம்பாக வசூலிக்கப்பட்ட நன்கொடைத் தொகை, ‘நீட்’ நடைமுறைக்கு வந்த பின் சட்டப்படியான கட்டணமாக மாறிவிட்டது. பள்ளிக் கட்டணம், நீட் பயிற்சிக் கட்டணம், நீட்மதிப்பெண் அதிகரிக்க மீண்டும் மீண்டும் பயிற்சி எனப் பல லட்சம் ரூபாய் செலவுசெய்தால்தான் இன்று ஒரு மாணவரால் மருத்துவராக முடியும். நீட்டில் தேர்ச்சிபெற்று, அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள், சுயநிதிக் கல்லூரியில்/பல்கலைக்கழகத்தில் சேர வசதியில்லை என்பதால், போட்டியிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த மாணவர்களைவிடக் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர், பணம் கட்ட வசதி இருந்தால், அவருக்கு அந்த இடம் கிடைக்கும். ஆக, நீட்டால் தகுதியையும் உறுதிசெய்ய முடியவில்லை, வணிகமயத்தையும் ஒழிக்க முடியவில்லை.

தமிழ்நாடு அரசு முன்பு பின்பற்றிவந்த 2 மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையில் தகுதியுள்ளோருக்கு இவ்வாறு வாய்ப்புகள் மறுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் வலுவான பள்ளிக் கல்வி முறை உள்ளது, தரமான மாணவர்கள் உருவாகிறார்கள். இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தை விடவும் அதிக எண்ணிக்கையில் அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. சிறந்த பயிற்சி மூலம் தரமான மருத்துவர்கள் உருவாகிவருகிறார்கள். அத்தகைய மாநில அரசுக் கல்லூரிகளுக்கும், மாநில அரசுக்கு உரிய மருத்துவ இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிக்க தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றும் மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும்.

-நன்றி - ‘இந்து தமிழ் திசை நாளிதழ்’ – 07-09-2021