தமிழ்நாடு அமைந்த நாளை மாற்றுவது வரலாற்றுத் திரிபு ஆகும்-பழ. நெடுமாறன் கண்டனம் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 02 நவம்பர் 2021 14:28

தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்கள் திருத்தியமைக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு, இம்மாநிலங்கள் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டட நாள் நவம்பர்-1 ஆகும். புதிய தமிழ்நாடு உருவாக்கப்படவேண்டும் என்பதற்காகப் போராடிய தலைவர் ம.பொ.சி. முதல் அனைத்துக் கட்சியினரும் நவம்பர் முதல் நாளை தமிழகம் அமைந்த நாளாகக் கொண்டாடி வருகின்றனர்.

 

 

கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களும் நவம்பர் முதல் தேதியை கொண்டாடுகின்றனர். சென்னை மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றவேண்டும் என்று அன்றைய முதலமைச்சர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றிய நாளே சூலை 18 ஆகும். தமிழ்நாடு பெயர் மாற்ற நாளாக அதைக் கொண்டாடுவதை விடுத்து, தமிழ்நாடு அமைந்த நாளாகக் கொண்டாடவேண்டும் என்று கூறுவது வரலாற்றுத் திரிபு ஆகும். இத்தனை ஆண்டுகளாக மக்களால் கொண்டாடப்பட்டு வந்த நாளை மாற்றுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.