சிலந்தி வலையில் சிக்கிய சிறு பூச்சிகள் - பழ. நெடுமாறன் அச்சிடுக
திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022 10:50

1999ஆம் அண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க., தெலுங்கு தேசம், பிஜூ சனதாக் கட்சி, சிவசேனை, அகாலிதளம், அசாம் கணதந்திர பரீசத், திரிணாமுல் காங்கிரசு, ராஷ்டிரிய லோக்கள், காசுமீர் தேசிய மாநாடு, ம.தி.மு.க., பா.ம.க. போன்ற மாநிலக் கட்சிகளுடனும்,

சமதாக் கட்சி, ஐக்கிய சனதா தளம், இராம் விலாஸ் பஸ்வானின் லோக் சனசக்தி கட்சி, திருநாவுக்கரசரின் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. கட்சி, அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக்தளம் மற்றும் பல சிறு கட்சிகள் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து பா.ச.க. ஆட்சியைப் பிடித்தது.

சிறிதும் பெரிதுமான 23க்கு மேற்பட்ட கட்சிகளைக் கூட்டுச் சேர்த்துக்கொண்டு ஒன்றிய அரசை தலைமையமைச்சர் வாஜ்பாய் நடத்தி வந்தது கிட்டத்தட்ட சர்க்கஸ் வித்தைக்குச் சமமாகும்.

கூட்டணி ஆட்சியாக இருந்தாலும் மூத்த அண்ணாவின் போக்கில் பா.ச.க. நடந்து கொண்டது. அமைச்சரவையில் மிகப்பெரும்பாலான துறைகளை பா.ச.க. தன் வசம் வைத்துக்கொண்டது. கேபினட் அமைச்சர், பதவிகள் 31இல் 22 பதவிகள் பா.ச.க. வசம் இருந்தன. சுதந்திரமாகச் செயல்படும் அதிகாரத்துடன் கூடிய 7 இணை அமைச்சர்களில் நால்வர் பா.ச.க.வினர். 42 இணை அமைச்சர்களில் 32 பேர் பா.ச.க.வினர்.

தலைமையமைச்சர், துணைத் தலைமையமைச்சர், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் போன்ற முக்கிய பதவிகள் அனைத்தும் பா.ச.க.வசமே இருந்தன. பாதுகாப்புத் துறை, இரயில்வேத் துறை ஆகிய இரு முக்கியத் துறைகள் மட்டும் சமதாக் கட்சி வசம் இருந்தன.

மற்றொரு முக்கியத் துறையான வணிக-தொழில் துறை தி.மு.க.வுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அதன் அமைச்சர் முரசொலி மாறன் உடல்நலம் குன்றியதால் அந்தத் துறையும் பா.ச.க.வைச் சேர்ந்த அருண் ஜெட்லியிடம் அளிக்கப்பட்டு விட்டது.

அதிகாரம் உள்ள முக்கியத் துறைகள் அனைத்தையும் பா.ச.க. தன் வசமே வைத்துக் கொண்டது. பா.ச.க. அமைச்சர்களில் பலர் திறமையற்றவர்கள். ஆனாலும் முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டன.

கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த திறமைசாலிகள் பலருக்கு அதிகாரமற்ற துறைகள் ஒதுக்கப்பட்டன.

தேசிய சனநாயகக் கூட்டணியின் ஆட்சி என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் பா.ச.க. தான் ஆட்சி நடநத்தியது. கூட்டணிக் கட்சிகள் ஆட்சிப் பல்லக்கில் அமர்ந்திருக்கும் பா.ச.க.வை த் தூக்கிச் சுமக்கும் வேலையைத் தான் செய்தன.

தேசிய சனநாயக கூட்டணி வகுத்துள்ள வேலைத் திட்டத்தையும் கூட்டணித் தலைமையையும் தான் தாங்கள் பின்பற்றுவதாக தலைமையமைச்சர் வாஜ்பாயும், துணைத் தலைமையமைச்சர் அத்வானியும் அடிக்கடி கூறினர். ஆனால் அவர்களை உண்மையில் வழி நடத்தியது ஆர்.எஸ்.எஸ். தலைமையேயாகும்.

இந்த உண்மை தெரிந்திருந்தாலும் எதிர்த்துப் பேசவோ கூட்டணியிலிருந்து விலகவோ எந்தக் கட்சியும் தயாராக இல்லை. கூட்டணிக் கட்சிகளின் இந்த பலவீனத்தைப் புரிந்துகொண்ட பா.ச.க. மேலும் மேலும் அந்தக் கட்சிகளை அலட்சியப்படுத்தியது. கூட்டணிக் கட்சிகளிடையே பிளவுகள் ஏற்படுத்தவும் முயற்சி செய்தது.

2004ஆம் ஆண்டு மே மாதம் தலைமையமைச்சர் வாஜ்பாய் தனது அமைச்சரவையை விரிவுபடுத்திய போது கூட்டணிக் கட்சிகள் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டன. திரிணாமுல் காங்கிரசுத் தலைவரான மம்தா பானர்ஜியை மீண்டும் அமைச்சராக்க தலைமையமைச்சர் முன் வந்தார். ஆனால் அதே வேளையில் மம்தாவின் கட்சியைச் சேர்ந்த சுதித் பந்தோபத்யா என்பவருக்கும் இணை அமைச்சர் பதவி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி கலந்தாலோசிக்கப்படவில்லை. இந்த விபரம் தெரிய வந்ததும் கொதித்துப் போன மம்தா அமைச்சர் பதவி ஏற்க மறுத்துவிட்டார். மம்தாவை மட்டம் தட்டவும், அவரது கட்சியைப் பிளவுபடுத்தவும் அத்வானி மேற்கொண்ட முயற்சியின் விளைவு தான் இது என்று கூறப்பட்டது.

கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களில் யாருக்குப் பதவி கொடுப்பது என்பதை அக்கட்சியின் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அதன்படி நடந்துகொள்வதுதான் கூட்டணி தர்மமாகும். ஆனால் இந்த தர்மத்தை பா.ச.க. கடைப்பிடிக்கவில்லை.

ஒரிசா மாநில முதல்வராக உள்ள நவீன் பட்நாயக்கிற்கு எதிராக அவரது பிஜூ சனதா தளம் கட்சியைச் சேர்ந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகி போர்க்கொடி உயர்த்தினார்கள். இதற்குப் பின்னணியில் பா.ச.க. இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.      

உத்தரப் பிரதேச அரசியலில் மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சியுடன் கூட்டுச் சேராவிட்டால் பா.ச.க.வுக்கு எதிர்காலம் இல்லை என்ற நிலை ஏற்பட்டவுடன் மாயாவதியுடன் கை குலுக்க பா.ச.க. கொஞ்சமும் தயங்கவில்லை. இந்தப் புதிய நட்புக்காகப் பழைய நட்பு பலியிடப்பட்டது.

தொடக்க முதல் பா.ச.க.வுடன் கூட்டுச் சேர்ந்திருந்த லோக் சனசக்தி கட்சித் தலைவர் இராம்விலாஸ் பஸ்வானின் வசமிருந்த முக்கியத் துறையான செய்தித் தொடர்புத் துறை பறிக்கப்பட்டு முக்கியமற்ற துறை அவருக்கு ஒதுக்கப்பட்டது. இவ்வாறு செய்தால் அவராகவே வெளியேறி விடுவார் என்பது பா.ச.க.வின் கணக்கு. அவ்விதம் பஸ்வானும் அமைச்சர் பதவியிலிருந்தும் கூட்டணியிலிருந்தும் விலகினார்.

இராஷ்டிரிய லோக்தளத்தின் தலைவரான அஜித்சிங்கிற்கும் இதே கதி ஏற்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் நடவடிக்கைகள் விளைவாக அதிருப்தி அடைந்திருக்கும் இராசபுத்திர சாதியினரைத் திருப்திப் படுத்த இராஜ்நாத் சிங்கை மீண்டும் அமைச்சராக்க பா.ச.க. முடிவு செய்தது. சில மாதங்களுக்கு முன்னால் அமைச்சர் பதவியிலிருந்து அவரை விடுவித்து, கட்சிப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக ஆக்கிய பாச.க. மறுபடியும் அவருக்கு அமைச்சர் பதவி தந்து மாயாவதியைக் கட்டுக் கோப்புக்குள் வைக்க முடிவு செய்தது. இந்தத் திட்டத்திற்கு அஜித் சிங் முட்டுக்கட்டையாக இருந்தார். அவர் வசம் இருந்த வேளாண்துறையை இராஜ்நாத் சிங்கிற்கு கொடுக்க வேண்டியிருந்தது. எனவே அஜித் சிங்கிற்கு வேறு துறை ஒதுக்க வாஜ்பாய் முன் வந்தார். எதிர்பார்த்தபடியே அதை ஏற்க மறுத்து அஜித் சிங் பதவியைவிட்டு வெளியேறினார். அவருடைய கட்சியையும் பா.ச.க. பிளவுபடுத்தி விட்டது. உத்தரப் பிரதேச சட்ட மன்றத்தில் இருந்த அவருடைய கட்சி உறுப்பினர்கள் சிலரை பா.ச.க. பிரித்து எடுத்தது.

பா.ச.க.வுடன் கூட்டு சேர்ந்ததின் விளைவாக காசுமீர் முசுலீம்களின் ஆதரவை பாரூக் அப்துல்லா இழக்க நேரிட்டது. சட்டமன்ற தேர்தலிலும் அவர் கட்சி தோற்றுப் போனது. பாரூக் அப்துல்லாவிற்கு ஒன்றிய அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்ட போது தலைமையமைச்சர் அதை ஏற்றார். மூத்த தலைவரான பாரூக் அப்துல்லாவின் தகுதிக்கேற்ற முக்கியத் துறையை அரசால் ஒதுக்க முடியவில்லை. பா.ச.க. அமைச்சர்கள் யாரும் தங்கள் வசம் உள்ள துறைகளை விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டனர். எனவே பாரூக் அப்துல்லா பரிதாபகரமாக வெளியில் காத்திருந்து ஏமாந்தார்.

ம.தி.மு.க.வைச் சேர்ந்த நிதித்துறை இணையமைச்சரான செஞ்சி இராமச்சந்திரன் பதவியை விட்டு விலகுமாறு நிர்பந்தப்படுத்தப்பட்டார். அவருடைய உதவியாளராக இருந்த ஒருவர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதே காரணமாகும். பா.ச.க.வைச் சேர்ந்த முக்கிய அமைச்சர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோசி ஆகியோர் மீது பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் பதவி விலகுமாறு கேட்கப்படவில்லை. பா.ச.க. அமைச்சர்களுக்கு ஒரு தர்மம், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு மற்றொரு தர்மம் கடைப்பிடிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர், அண்ணா தி.மு.க.வின் தலைவரான திருநாவுக்கரசருக்கு அமைச்சர் பதவியளிக்க வேண்டும் என வற்புறுத்தப்பட்ட போது அவரது கட்சியைப் பா.ச.க.வில் இணைத்து விடவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. வேறு வழியின்றி அவரும் அதை ஏற்று பா.ச.க.வில் இணைந்து இணை அமைச்சர் பதவியை ஏற்றார்.

தேசிய சனநாயகக் கூட்டணியின் அமைப்பாளராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருக்கும் ஜார்ஜ் பெர்னாண்டசையும் பா.ச.க.விட்டு வைக்கவில்லை. அவரது கட்சியைச் சேர்ந்த இரயில்வே அமைச்சரான நிதிஷ் குமாருக்கும் அவருக்கும் மோதலை ஏற்படுத்தி இருவரையும் தனது கட்டுப்பாட்டிற்குள் பா.ச.க. கொண்டு வந்துள்ளது. வாஜ்பாய் பக்கம் பெர்னாண்டசும், அத்வானி பக்கம் நிதிஷ்குமாரும் இருப்பதாகக் கூறப்பட்டது.

கூட்டணியில் உள்ள மிகப்பெரிய கட்சியான தெலுங்கு தேசத்தைப் பகைத்துக் கொள்ள பா.ச.க.விற்குத் துணிவில்லை. தெலுங்கு தேசத்திடம் 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் நினைத்தால் உடனடியாக இந்த அரசை வீழ்த்த முடியும்.

இரண்டாவதாக பா.ச.க.வின் அமைச்சரவையில் இடம் பெறத் தெலுங்கு தேசம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. எனவே பா.ச.க.வின் தயவில் அது இருக்கவில்லை. பிரச்சனைகளின் அடிப்படையில் பா.ச.க. அரசுக்கு ஆதரவோ, எதிர்ப்போ தெரிவிக்க அது கொஞ்சமும் தயங்கவில்லை. எனவே தெலுங்கு தேசத்திடம் வாலாட்ட பா.ச.க. துணியவில்லை.

சிறு சிறு மீன்களைப் பெரிய சுறாமீன் விழுங்குவதைப் போல கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறு கட்சிகளைப் பா.ச.க. விழுங்கியும் பிளவுபடுத்தியும் வந்தது.

இந்த உண்மையை உணர்ந்து கொண்டாலும் பா.ச.க.வின் பிடியிலிருந்து விடுபட முடியாமல் கூட்டணிக் கட்சிகள் தவித்தன.

முன்பு காங்கிரசுக் கட்சியும் மாநிலக் கட்சிகளைப் பிளவுபடுத்தி பலவீனமாக்கியும், மாறி மாறி அக்கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்தும் அரசியல் ஆதாயமடைந்து வந்தது.

தலைமையமைச்சர் இந்திரா தன் காலத்தில் உளவுத்துறையைப் பயன்படுத்தி மாநிலக் கட்சிகளில் பிளவுகளை உருவாக்கினார்.

தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். வெளியேறி அ.தி.மு.க.வை உருவாக்கியதற்குப் பின்னணியில் இந்திய உளவுத்துறையின் கைவண்ணம் இருந்தது. பிளவுபட்ட இரு தி.மு.க.வுடனும் காங்கிரசு மாறி மாறிக் கூட்டு வைத்துக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் இடங்களைப் பிடித்தது.

ஆந்திராவில் என்.டி.இராமாராவ் உயிருடன் இருந்த போதே அவரது தெலுங்கு தேசத்தைப் பிளவுபடுத்தி பாஸ்கரராவ் என்பவர் தலைமையில் போட்டித் தெலுங்கு தேசம் உருவாக்கப்பட்டது. என்.டி.ஆரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

பஞ்சாபில் காங்கிரசுக்கு வலிமை வாய்ந்த அறைகூவலாக விளங்கிய அகாலிதளத்திற்குப் போட்டியாக பிந்தரன்வாலேயை உருவாக்கி, வன்முறை பூதத்தை வளர்த்தது காங்கிரசுக் கட்சியேயாகும்.

அசாமில் அன்னிய மாநிலத்தவரின் ஆதிக்கத்தையும் குடியேற்றத்தையும் எதிர்த்து ஒன்றுபட்டுப் போராடி இந்திய அரசைப் பணிய வைத்த மாணவர்கள் அசாம் கண தந்திர பரீசத் என்ற கட்சியை உருவாக்கிக் காங்கிரசுக் கட்சியைப் படுதோல்வி அடையச் செய்தார்கள். ஆனால் அக்கட்சியைப் பிளவுபடுத்திப் போட்டிக் கட்சியை உருவாக்கிப் பலவீனமடையச் செய்தது காங்கிரசுக் கட்சி. அதன் விளைவாக அசாமில் காங்கிரசுக் கட்சி ஆட்சிக்கு வர முடிந்தது.

இங்ஙனம் பல்வேறு மாநிலங்களிலும் அந்தந்த மாநில மக்களின் மொழி, இன உணர்வை அடிப்படையாகக் கொண்டு எழுந்த மாநிலக் கட்சிகள் அந்தந்த மாநிலத்தில் காங்கிரசு உட்பட பல அகில இந்தியக் கட்சிகளை முறியடித்து ஆட்சிகளைப் பிடித்தன. மாநிலக் கட்சிகள் வலிமை பெறுமேயானால் ஏக இந்தியத்துவம் நொறுங்கிப் போகும் என அஞ்சிய காங்கிரசுக் கட்சி மாநிலக் கட்சிகளைப் பிளவுபடுத்தி அந்தந்த மாநில அரசியலைச் சீர்குலைப்பதையே தனது நோக்கமாகக் கொண்டிருந்தது. இன்னமும் கொண்டிருக்கிறது.

“பகையாளி குடியை உறவாடிக் கெடு” என்ற பழமொழிக்கேற்ப வலிமை வாய்ந்த மாநிலக் கட்சிகளுடன் தேர்தல் உறவு வைத்துப் பிறகு அவற்றைப் பிளவுபடுத்தி பலம் குன்றச் செய்யும் தந்திரத்தைக் காங்கிரசுக் கடைப்பிடித்தது என்பதை நமது கால இந்திய அரசியல் வரலாறு மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

வரலாறு கூறும் இந்த உண்மையை மறந்து அகில இந்தியக் கட்சியான பா.ச.க.வுடன் கூட்டுச் சேர்ந்த மாநிலக் கட்சிகள் அழிவுப் பாதையில் விரைந்து கொண்டிருக்கின்றன.

இந்தியத் தேசியம் பேசும் காங்கிரசுக் கட்சிக்கும் இந்து தேசியம் பேசும் பா.ச.க.வுக்கும் அடிப்படை வேறுபாடு எதுவுமில்லை. ஏக இந்தியா என்ற பெயரில் மொழிவழித் தேசிய இனங்களை அடக்கி வைப்பதில் இரண்டுக் கட்சிகளும், ஒரே வழி முறையைத்தான் பின்பற்றுகின்றன.

சிலந்தி பின்னும் வலையில் சிறு பூச்சிகள் சிக்கிச் சிலந்திக்கு இரையாவதைப் போல மாநிலக் கட்சிகள் பல பா.ச.க.வின் பிடியி்ல் சிக்கித் தவிக்கின்றன. இருக்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் திகைத்து நின்றன.

இந்திய அரசியலில் உருவாகியிருக்கும் இந்தச் சூழ்நிலை அந்தக் கட்சிகளைப் பாதிப்பதோடு நின்று விடுவதில்லை. மக்களையும் பெருமளவு பாதிக்கின்றது. நாடெங்கும் மதக் கலவரங்களும், சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பல்வேறு மாநில, மக்களின் மொழி, கலை, கலாச்சாரம் ஆகியவற்றை அழித்துச் சமற்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனியக் கலாச்சாரத்தை திணிக்கும் முயற்சி தீவிரமாகியுள்ளது.

ஆர்.எசு.எசு., விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள் போன்ற மதவெளி அமைப்புகள், இந்திய அரசியல் அமைப்புக்கும், நாட்டின் சட்ட திட்டங்களுக்கும் கொஞ்சமும் கட்டுப்படாது தான்தோன்றித்தனமான வகையில் செயல்படுகின்றன. தலைமையமைச்சர் உட்பட இந்திய அரசை ஆட்டிப் படைக்கவும் அவர்கள் கொஞ்சமும் தயங்கவில்லை.

செர்மனியில் இட்லரும் இத்தாலியில் முசோலினியும் எத்தகைய பாசிச பயங்கரவாத ஆட்சி நடத்தினார்களோ, அதைப்போல இந்தியாவில் பார்ப்பனிய பாசிச ஆட்சியை நிறுவுவதற்குத் திட்டமிட்டுச் செயல்படுத்துகிறார்கள். அவர்களின் இந்தத் தீய நோக்கத்துக்குத் தெரிந்தும், தெரியாமலும் பல மாநிலக் கட்சிகள் துணை போயிருக்கின்றன என்பது தான் வேதனைக்குரிய ஒன்றாகும்.

கொடிய பொடாச் சட்டம்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட கொண்டுவரப்பட்ட பொடாச் சட்டம் உண்மையில் முசுலீம்கள் மற்றும் சிறுபான்மை மக்களையும், தேசிய இன ஆதரவாளர்களையும் மிரட்டுவதற்காகக் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த உண்மையைப் புரிந்து கொண்டிருந்தாலும் பா.ச.க. அளித்த பதவி சுகத்தில் மயங்கியிருந்த மாநிலக் கட்சிகள் இச்சட்டத்தை எதிர்க்காமல் ஆதரவு அளித்து நிறைவேறச் செய்தன. அதேவேளையில் தனது அரசியல் எதிரிகளை அழிப்பதற்காக இந்தச் சட்டத்தை அ.தி.மு.க. அரசு தமிழ்நாட்டில் பயன்படுத்திய போது அதைத் தடுக்கவோ அல்லது தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவோ பா.ச.க. அரசு முன்வரவில்லை. பா.ச.க. கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ உட்பட அவரது கட்சியைச் சேர்ந்த 9பேர் பொடாச் சட்டத்தில் சிறை வைக்கப்பட்டனர். ஆனாலும் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி இதற்கு எதிராக எதுவும் செய்யவில்லை. அ.தி.மு.க.வோடு பா.ச.க. தேர்தல் உறவு கொள்ள மிக நெருங்கிவிட்டது என்பது அப்போதே புலனாயிற்று. மதமாற்றத் தடைச் சட்டத்தை அ.தி.மு.க. கொண்டு வந்த போது சங்கப் பரிவாரங்கள் அதற்கு வரவேற்பு தெரிவிக்கவும் பாராட்டவும் கொஞ்சமும் தயங்கவில்லை

மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்ததே அடிப்படையில் மிகப்பெரிய தவறாகும் என்ற கருத்தோட்டம் கொண்ட பா.ச.க.வுடன் மொழிவழித் தேசிய உணர்வு கொண்ட மாநிலக் கட்சிகள் உறவு கொண்டது என்பது முரணானது மட்டுமல்ல, பச்சை சந்தர்ப்பவாதமும் ஆகும்.

“பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு என்பது இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக உள்ளது” என்பதே பா.ச.க.வின் நிலைப்பாடாகும். மண்டல் பரிந்துரைகளுக்கு எதிராகச் சங்கப் பரிவாரங்கள் பெரும் போராட்டம் நடத்தின. அந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திய வி.பி. சிங் அரசைக் கவிழ்த்தன. ஆனால் அதே வேளையில் இட ஒதுக்கீட்டை மையமாகக் கொண்டு அரசியல் நடத்திய தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் மாறி மாறி பா.ச.க.வுக்குப் பல்லக்குத் தூக்கியது காலத்தின் கோலமாகும்.

தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த பா.ச.க.வுக்குக் கால் ஊன்றவும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் திராவிடக் கட்சிகள் இடமளித்தன. திராவிடக் கட்சிகள் ஒன்றையொன்று அழிக்கவேண்டும் என்ற வெறியினால் பா.ச.க.விற்கு இடமளித்துத் தமிழர் வாழ்வை அழிப்பதற்கு வழிவகுத்தன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

தங்கள் கட்சியினர் மீதுள்ள ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்கும் நோக்கத்துடனும், பதவி வெறியுடனும் பா.ச.க.வுடன் கூட்டு சேர்ந்த மாநிலக் கட்சிகளை எவ்வாறு அந்தக் கட்சி சிதைத்தது? என்பதை கடந்த கால வரலாறு நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. வரலாறு தந்த இந்த படிப்பினையை உணராதவர்கள் தங்களின் எதிர்காலத்திற்கும் மட்டுமல்ல, தங்களின் மாநில மக்களுக்கும் படுகுழியைத் தோண்டுகிறார்கள் என்பதில் ஐயமில்லை.

மொழியை காக்கவும், இன மீட்சிக்காகவும் தோன்றிய கட்சிகள் இந்த அடிப்படை கோட்பாட்டினை மறந்து அதற்கு நேர் எதிர்மாறான கொள்கையையும், திட்டத்தையும் கொண்ட பா.ச.க.வுடன் கூட்டு சேர்வது என்பது மன்னிக்க முடியாத வரலாற்றுப் பெருந்தவறாகும். அண்மையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பா.ச.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்த பிறகும் அவருக்கு என்ன நேர்ந்தது? என்பதையும், அதற்குப் பின்னால் அவர் பா.ச.க. கூட்டணியிலிருந்து விலகி மற்ற கட்சிகளுடன் ஆட்சி அமைக்க நேர்ந்தது என்பதையும், மகாராட்டிரத்தில் முந்திய தேர்தலில் பா.ச.க.வுடன் கூட்டணி சேர்ந்திருந்த சிவசேனைக் கட்சி அக்கூட்டணியிலிருந்து விலகி பிற கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து அமைத்த ஆட்சியை பா.ச.க. எவ்வாறு கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றியது என்பதும் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளாகும். இவற்றிலிருந்து மாநிலக் கட்சிகள் இனியாவது பாடத்தைக் கற்கவேண்டும். இல்லையேல் சிலந்தி வலையில் சிக்கிய சிறு பூச்சிகளை போல அழிய நேரிடும்.

(பழ. நெடுமாறன் எழுதிய “உருவாகாத இந்திய தேசியமும் – உருவான இந்து பாசிசமும்” என்ற நூலிலிருந்து சில பகுதிகள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டிலேயே எழுதப்பட்ட இக்கட்டுரை 2022ஆம் ஆண்டிலும் முற்றிலுமாகப் பொருந்தி வருகிறது.)