பாரதி கண்ட “புதுமைப் பெண்” உயிர்த்தெழுகிறாள் - பழ. நெடுமாறன் |
![]() |
வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2022 11:33 |
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிலும் மாணவிகள் உயர்கல்வி கற்க மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்திருப்பதை தமிழக மக்கள் வரவேற்றுப் பாராட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை. நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் கல்வியறிவு நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக விளங்கும். ஆனால் பெண்களுக்கு வழங்கப்படும் கல்வி நாட்டின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல, அவரவர்கள் வீட்டின் முன்னேற்றத்தை முயல் வேகப் பாய்ச்சலில் கொண்டு செலுத்தும். தாயின் கல்வியறிவு அவள் பெற்றெடுத்த மக்களின் அறிவுப் பார்வையை அகலப்படுத்தத் துணை நிற்கும். வீட்டிற்குள் அடைப்பட்டு ஏதும் அறியாத பேதையராக வளர்ந்து ஆண்களின் அடிமைகளாக அல்லல்படும் பெண்களுக்கு விடிவு காலம் பிறக்க புதுமைப் பெண் திட்டம் உறுதியாக வழிகாட்டும்.பெண்கள் எவ்வாறு வளர்ந்தோங்க வேண்டும் என்பது குறித்து பாரதி கண்ட கனவு உறுதியாக நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. ÂÂ ÂÂ நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கு மஞ்சாத நெறிகளும், நிமிர்ந்த ஞானம் செருக்கு யிருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம் அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதய கன்னி யுரைப்பது கேட்டிரோ! உலக வாழ்க்கையி னுட்பங்கள் தேரவும் ஓது பற்பல நூல்வகை கற்கவும் இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே திலக வாணுத லார்தங்கள் பாரத தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம் விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப் பெண்கள் விரைவி லொழிப்பராம். சாத்தி ரங்கள் பலபல கற்பராம் சவுரி யங்கள் பலபல செய்வராம் மூத்த பொய் மைகள் யாவு மழிப்பராம் மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம் காத்து மானிடர் செய்கை யனைத்தையும் கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம் ஏந்தி யாண்மக்கள் போற்றிட வாழ்வராம் இளைய நங்கையி னெண்ணங்கள் கேட்டிரோ! பாரதி குறித்து “புதுநெறிக் காட்டிய புலவன் பாரதி” என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போற்றினார். அத்தகைய பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்கள் உருவாகி நிமிர்ந்த நடையுடனும், நேர்கொண்ட பார்வையுடனும், செயற்பட்டு புதிய தமிழகத்தைப் படைக்க முதலமைச்சரின் திட்டம் வழிவகுக்குமாக. |