தமிழீழத்தில் சீனர் நுழைவு - இந்தியாவிற்கு அபாய அறிவிப்பு அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2022 11:36

இந்தியாவிற்குள் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 15 இலங்கையர்கள் மீது இந்திய தேசியப் புலனாய்வுப் பிரிவு கடந்த சில நாட்களில் முன்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு புத்துயிரூட்ட முயற்சித்ததாகவும், சிறீலங்காவிற்கு எதிராக போரில் ஈடுபட்டதாகவும் கூறியே இவர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் இந்த ஆண்டு மார்ச் 25ஆம் நாள் அரபிக் கடலில் மீன் பிடிக் கப்பலில் ஒன்றிலிருந்து கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த கைது சம்பவத்தின் போது அவர்களிடமிருந்து பெருந்திரளான போதைப் பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் என்பனவும் கைப்பற்றப்பட்டிருந்ததாக கூறப்பட்டிருந்தது.

கஞ்சா கடத்தினார்கள், கசிப்புக் கடத்தினார்கள், புலிகளுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்ட முயன்றார்கள் என்று இந்தியா மீண்டும் மீண்டும் புலிப்பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கும் வேளையில்தான் கொல்லைப்புறம் வழியாக வந்து சீனா இந்தியாவை மிகவும் வெளிப்படையாக எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றிருக்கின்றது.

china

கடந்த வாரம் சீனாவின் சிறீலங்காவிற்கான தூதுவர் வடபகுதிக்கு மேற்கொண்ட இரண்டு நாள் பயணத்தை பத்தோடு பதினொன்றாக எடுத்துக்கொண்டு கடந்துவிட முடியாது. தென்னிலங்கையில் ஆழக்கால்களை ஊன்றிவிட்ட சீனா, வடக்கில் தனது கால்களை ஊன்றிவிடக் கூடாது என்பதற்காகவே யாழ்ப்பாணத்தில் தனது துணைத் தூதரகத்தை இந்தியா திறந்த வைத்துக் காவலிருக்கின்றது.

ஆனால், வரலாற்றில் முதல் தடவையாக ஒரு சீனத் தூதுவர் யாழ்குடாவில் இரண்டு நாள் தங்கியிருந்திருக்கின்றார் என்பது இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட அறைகூவலாகும். இந்தியா தனது இராசதந்திர மற்றும் அரசியல் செல்வாக்கை கொண்டிருக்கும் குடாநாட்டில் எந்த சீனத் தூதுவரும் ஓர் இரவு தங்கியிருந்து இவ்வளவு விரிவான முறையில் பகிரங்கமாக இராசதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடுவது இதுவே முதல் தடவை என்றும் இந்திய ஊடகங்களே புலம்பும் அளவிற்கு இந்தப் பயணம் அமைந்திருக்கின்றது.

ஆனால், சீனத்தூதுவர் கீ சென் ஹொங் அவர்களோ பருத்தித்துறை கடற்கரையில் நின்று இந்தியா எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்று வினவியதுடன், ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் இந்தியாவும் சீனாவும் எல்லைகளை நேரடியாகப் பகிர்ந்து கொள்வதாகவும் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் உள்ள தூரத்தைவிட, இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் அதிக தூரம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் உறவுகள் பலமாக இருப்பதாக இந்தியா இன்றும் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில்தான் சீனத் தூதுவர், எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோமென யாழ்ப்பாண பொது நூலகத்திற்குச் சென்று பார்வையிட்டு மடிக்கணினிகள் மற்றும் கணினிகளை அன்பளிப்பாக வழங்கியதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த அழைப்பை விடுத்திருக்கின்றார். இதனைவிட யாழ் நூலகத்தை இணையவழி நூலகமாக மாற்றுவதற்கு சீனாவின் உதவியை, மாநகர முதல்வர் கோரியபோது அதனைப் பரிசீலிப்பதாக தூதுவர் உறுதியளித்திருக்கின்றார்.

யாழ்ப்பாண மக்களுடனான உறவைப் பலப்படுத்த விரும்பும் சீனா, இந்த வாய்ப்பை நிச்சயமாக பயன்படுத்திக்கொண்டு நூலகத்தை இணைய வழியலாக மாற்ற உதவும் என்று உறுதியாக நம்பலாம்.

யாழ்ப்பாணத்தை ஒட்டியுள்ள நெடுந்தீவு, நயினா தீவு, அனலை தீவு ஆகிய 3 தீவுகளில் சூரிய மின்சக்தி திட்டங்களை நிறுவுவதற்கு சீன நிறுவனங்களுடன் கடந்த சனவரியில் சிறீலங்கா உடன்படிக்கை செய்துகொண்டது. ஆனால், வட பகுதியில் சீனாவின் பிரசன்னத்திற்கு கடும் எதிர்ப்பை இந்தியா வெளிப்படுத்திய நிலையில் அதில் இருந்து சீனா பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது அதற்குப்பதிலடியாக சீனா வடபகுதிக்கு நேரடியாக பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களுடனான உறவை வலுப்படுத்தி தனது எதிர்ப்பை வெளிக்காட்டியிருக்கின்றது.

யாழ்குடாவிற்கு சென்றிருந்த இந்திய அமைச்சர்களோ, அதிகாரிகளோ தமது மேலாடைகளைக் களைந்துவிட்டு நல்லூர் ஆலயத்திற்குள் நுழைய விரும்பவில்லை. ஆனால், சீனத் தூதுவர்கள் குழு மேலாடைகளைக் களைந்து வேட்டிகட்டி ஆலயத்திற்குள் சென்று கந்தசாமியை வழிபட்டதின் மூலம் தமிழர்களின் மனங்களைக் கவர்வதற்கு முயன்றிருக்கின்றார்கள்.

வடக்கு தமிழ் மக்களுக்கும் சீனாவுக்குமான நட்புறவை பலப்படுத்திக் கொள்ளவே தாம் விரும்புவதாகவும், வடக்கிற்கான சகல உதவிகளையும் மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தாம் தயாராக இருப்பதாகவும் சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்திருக்கின்றார்.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற் தொழிலாளர்களுக்கு சீனாவினால் சுமார் 20 மில்லியன் ரூபாய் (200 கோடி) பெறுமதியான வாழ்வாதார உதவிகள் சீனத் தூதுவரின் இந்தப் பயணத்தின் போது வழங்கப்பட்டுள்ளன. இந்தியா வடபகுதித் தீவுகளில் இருந்து சீனாவைத் துரத்திவிட்டதாக எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில், சீனா, வடபகுதியை முழுமையான தமது ஆதரவிற்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கிவிட்டது என்பதையே சீனத் தூதுவரின் இரண்டு நாள் பயணங்கள் அப்பட்டமாக வெளிக்காட்டி நிற்கின்றன.

‘சீனர்களின் செல்வாக்கை வடக்கு-கிழக்கில் நாம் விரும்பவில்லை’ என்று தமிழர்களால் புறமொதுக்கப்பட்ட புல்லுருவிகள் புலம்புவதற்கும் சீனா சாட்டையடியாகப் பதிலடி கொடுத்திருக்கின்றது. தமிழ் அரசியல்வாதிகள் சீனாவால் இந்தியாவிற்கு ஆபத்து என தெரிவித்து அச்சத்தை உருவாக்க முயல்கின்றனர் என்றும் வடபகுதியில் சீனா முன்னெடுத்துள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளால் இந்தியாவிற்கு எந்த தீமையும் ஏற்படாது என்றும் கொழும்பு ஆங்கில ஊடகத்தின் ஊடாக சீனத்தூதர் இந்தப் பதிலடியைக் கொடுத்திருக்கின்றார்.

ஆனால், இப்போது தமிழர்கள் மத்தியில் எழும் கேள்வி தவிர்க்க முடியாதது. செய்து தருவோம் செய்து தருவோம் என்று ஏமாற்றி, காலத்தை இழுத்தடித்து, அழிவுகளை ஏற்படுத்திய இந்தியாவின் பக்கம் தமிழர்கள் தொடர்ந்தும் இருப்பதா? அல்லது செய்து தருவோம் என்று கூறிவிட்டால் அதனை நிறைவேற்றிக் காட்டும் சீனாவின் பக்கம் தமிழ் மக்கள் நின்று தங்கள் இலக்கை அடைவதுவா? என்பதுதான்.

இத்தனை தீங்குகளை இழைத்ததன் பின்னரும் இன்றுவரை இந்தியாவை விட்டு தமிழர்கள் விலகிப் போகாததற்கு ஒற்றைக்prabakarab s காரணம்தான் உண்டு. அது தமிழீழத் தேசியத் தலைவரின் உறுதி. தமிழீழத் தேசியத் தலைவர் நினைத்திருந்தால் இந்தியாவைக் கைவிட்டு இன்னொரு நாட்டின் ஆதரவைப் பெற்று தமிழீழம் என்னும் இலக்கை அடைந்திருக்க முடியும். ஆனால், இறுதிப் போரின் அழிவுக்குள் நின்று கொண்டும் அந்த முடிவைத் தமிழீழத் தேசியத் தலைவர் எடுக்கவில்லை. தொப்புள் கொடி உறவான இந்தியாவை ஒதுக்கிவிட்டு அந்நிய ஆதிக்க சக்திகளின் ஒத்துழைப்போடு நாட்டை அமைக்க அவர் ஒருபோதும் விரும்பியதில்லை. தமிழீழத் தேசியத் தலைவர் இறுதியாக ஆற்றிய மாவீரர் தின உரையில்கூட இந்தியாவை விட்டுக் கொடுக்கவில்லை.

‘எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும், எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்து விடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம்’ என்று தெரிவித்திருந்த தமிழீழத் தேசியத் தலைவர், ‘இந்தியப் பேரரசுடனான அறுந்து போன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம். அன்று இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத் தமிழருக்கும், அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன. இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப் பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்துவிட்டது. இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது. எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நம்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சனை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்’ என்று தெரிவித்ததன் மூலம் இந்தியாவுடனான உறவை கொஞ்சமும் அவர் விட்டுக்கொடுக்க தயாராக இருந்திருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.

தலைவரின் இந்த இறுக்கமான முடிவுதான் இன்றுவரை தமிழர்கள் சீனாவின் பக்கம் சாயாமல் இந்தியாவை இன்றும் நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்திருக்க வைத்துள்ளது.

இந்த நம்பிக்கையை இந்தியா தொடர்ந்தும் புறந்தள்ளினால்….

‘காலம் யாருக்காவும் காத்திருப்பதில்லை’ என்ற பதிலைத்தான் இங்கு சொல்ல முடியும்.

-நன்றி! – ஈழ முரசு – சனவரி -2022