வேதநெறி எதிர்ப்பாளர் வள்ளலார் -பழ. நெடுமாறன் |
![]() |
ஞாயிற்றுக்கிழமை, 02 ஜூலை 2023 11:19 |
“10ஆயிரம் ஆண்டுகள் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான், பல ரிஷிகளின் சாத்திரங்களைப் படித்தவன்.
வள்ளலாரின் நூல்களையும் படித்தபோது நான் மிகவும் பிரமிப்படைந்தேன்” என ஆளுநர் ரவி வடலூரில் நடைபெற்ற வள்ளலார் விழாவில் பேசும்போது கூறியுள்ளார். வழக்கம்போல தமிழர் பண்பாடு, வரலாறு ஆகிய எவற்றை பற்றியும், எத்தகைய புரிதலுமில்லாமல், உளறிக் கொட்டுவதையே வாடிக்கையாக ஆளுநர் ரவி கொண்டிருக்கிறார். சனாதன தர்மத்தின் ஆணி வேரை அடியோடு அறுப்பதற்காக வள்ளலார் கண்டது சமரச சுத்த சன்மார்க்க நெறி ஆகும். பிறப்பினால் மனிதர்களில் ஏற்றதாழ்வு உண்டு என்பது ஆரியரின் சனாதன தர்மமாகும். ஆனால், பிறப்பினால் ஏற்றதாழ்வு கிடையாது என்பது தமிழரின் அறமாகும். வள்ளுவர் முதல் திருமூலர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் போன்றோரின் திருமுறைகளிலும் பிற இலக்கியங்களைப் படைத்த புலவர்களும் தமது பாடல்களில் தமிழர்களின் இந்த அறத்தை வலியுறுத்தினார்கள். “பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்” என வள்ளுவர் கண்ட நெறியைப் பின்பற்றி வள்ளலார் சன்மார்க்க நெறியைப் பின்பற்றும்படி மக்களுக்கு அறிவுறுத்தினார். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் தோன்றிய திருமூலர், சாத்திர மோதும் சதுர்களை விட்டுநீர் மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின் பார்த்தஇப் பார்வை பசுமரத் தாணிபோல் ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே!” என்று கூறினார். இதே அறவுரையை கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர், “சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள் கோத்தி ரமுங்கு லமுங்கொண் டென்செய்வீர்? பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல் மாத்தி ரைக்குள் அருளுமாற் பெறரே” என வலியுறுத்தினார். இதே கருத்தினை கி.பி. 9ஆம் நூற்றாண்டில் தோன்றிய மாணிக்கவாசகர், “எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும் அப்பரி சதனால் ஆண்டுகொண்டருளியும்.” எனவரும் திருவாசக அடிகளில் ஆழமாகப் பதித்தார். “சாதி மத சமயச் சடங்குகளின் வேதாகமங்களான சாத்திரங்களில் வள்ளலார் ஒருமைப்பாடு காணவிரும்பவில்லை என்பதனையும் இவையெல்லாம் பொய்யாம் சழக்காம் என வெறுத்தார் என்பதனையும் கருதுக. சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுக நீதியியல் ஆச்சிரமம் நீட்டென்றும் - ஓதுகின்ற பேயாட்டம் எல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம் வாயாட்டம் தீர்ந்தனவே மற்று, வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர் வேதாக மத்தின் விளைவறியீர் -சூதாகச் சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை என்ன பயனோ இவை. வேதங்களையும், புராண சாத்திரங்களையும் வடமொழி வாயிலாகவே திறம்படக் கற்றவர் எனினும் பகுத்தறிவுக்கும் உலக வொற்றுமைக்கும் உயிர் நலத்துக்கும் ஒவ்வாதவற்றைக் கடுஞ் சொற்களால் இகழ்ந்துரைத்தவர் இராமலிங்கனார் போல் யாருமில்லை” எனப் போற்றினார் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார். வேதநெறி வழிபட்ட சனாதன தர்மம் தமிழரின் பண்பாட்டிற்கு ஒவ்வாதது. எனவேதான் வள்ளுவர் முதல் வள்ளலார் வரையிலும் அதற்கு எதிராக முழங்கினார்கள். சனாதன வலையில் தமிழ்ச் சமுதாயம் சிக்கிச் சீரழியக் கூடாது என்பதற்காகத் தொடர்ந்து தொண்டாற்றினார்கள். அவர்களைப் பின்பற்றிதான் பிற்காலத்தில் பெரியாரும், பாவேந்தரும் பாடுபட்டனர். Â சாதி வேறுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் கற்பித்து மக்களைப் பிளவுப்படுத்திய சனாதன தர்மம் என்னும் குப்பையைச் சுட்டெரிக்கும் பெரு நெருப்பாகத் தோன்றியவர் வள்ளலாரே. அவரை வைதிகச் சிமிழுக்குள் அடைக்கப் பார்க்கும் ஆளுநர் ரவியின் பகற் கனவு ஒருபோதும் நிறைவேறாது. |