இதயமே, துடிப்பதை நிறுத்திவிடு - கோ. கலைவேந்தர் அச்சிடுக
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜூலை 2012 17:29
இதயமே! துடிப்பதை நிறுத்திவிடு!
இதுவரை துடித்ததும் போதும்
என்னினம் வடித்த குருதியிலே
என்னுயிர் மிதந்ததும் போதும்!
சிங்கள சீன ஓநாயொடு
இந்தியக் கழுகும் இணைந்துசெய்த
கொலைவெறித் தாக்கலால், என்னினத்துக்
குரல்வளங் கிழிந்ததுங் காணலையோ?
பெற்றதாய் தந்தை பிள்ளைகளைப்
பாதுகாப்பு வலயமென்னும்
புதைகளந் தன்னிற் குழுமச் செய்து
புதைத்தவர் இன்னமும் புதையலையே!
மரபுவழி வழாத இளம்புலிகள்
"கருணா' க்கள் செய்த இரண்டகத்தால்
அரக்கர்கைச் சிக்கி உருநசுங்கி
முடமாகித் துடித்ததுங் காணலையோ?
வான்படை பெய்த நச்சுமலையில்
வீழ்ந்துயிர் திணறிய தமிழ்மகளிர்
பாலியல் நிலப்படை தனிற்சிக்கிப்
பெண்மையை இழந்ததுங் காணலையோ?
விடுதலை இயக்க வரலாற்றினில்
கறையாய்ப் படிந்த சிங்களர்க்குச்
சுடுதலை பயிற்றிய இட்லர்களைச்
சிறையினில் தள்ளவும் முடியலையே!
ஐநா மனித உரிமையதன்
ஆணையம் என்னும் அமிழ்தினிலே
நடுநிலை கொன்ற இந்தியாவே
நஞ்செனும் உறுப்பைக் கலந்ததுவே!
இந்திய வல்லாண்மை அலுவலரும்
அவரடி ஒற்றிடும் ஆட்சியரும்
நடுநிலை பிறழ்ந்தே தமிழினத்து
நலத்தினை ஒடுக்குதல் காணலையோ!
பள்ளிகள், மருத்துவ நல்மனைகள்
உணவாடை, வீடுகள் மண்வளங்கள்
உரிமைகள் யாவும் இழந்தமையால்
ஓயாத குரலினைக் கேட்டிலையோ?
மனைவி மக்கள் வாழ்க்கை யெனும்
நீர்ச்சுழல் விடுத்தே மானமுடை
இனத்திற் காகவே தமைஈந்த
ஈகியர் முன்சூள் உரைத்தலையோ?